உரோமையில் உள்ள பலாஸோ சான் கலிஸ்டோவில் நடைபெற்று வரும் ‘மதங்களும் அரசுமுறைப் பேச்சுவார்த்தைகளும்’ என்ற மாநாட்டில், கிறித்தவ ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான வத்திக்கான் அமைப்பின் தலைவரான கர்தினால் கர்ட் கூக் உரையாற்றினார். “முதலில் நாம் திரு அவைக்குள்ளும், அனைத்துத் திரு அவைகளுக்கிடையேயும் அமைதியைக் கண்டறியவேண்டும்; பன்முகத்தன்மைக்கு மத்தியில் சமநிலையோடு வாழ ‘எக்குமேனிசம்’ (சபைகளின் ஒற்றுமை) நமக்கு உதவுகிறது. கிறித்தவர்கள் சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமானால், முதலில் திரு அவைகளுக்கு இடையே அமைதியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“ஐரோப்பாவின் எதிர்காலம் அதன் வரலாற்று, ஆன்மிக மற்றும் பண்பாட்டு வேர்களில் உள்ளது. கடவுள் மீதான நம்பிக்கை, மனித கண்ணியம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய கொள்கைகளை ஐரோப்பா அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும்” என்றார். அரசியல் மற்றும் அரசுமுறைப் பேச்சுவார்த்தை முயற்சிகள் சவால்களைச் சந்திக்கும் இவ்வேளையில், கிறித்தவச் சபைகளுக்கிடையேயான இந்த ஒற்றுமைப் பயணம், சமுதாயத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தப் பெரும் முன்மாதிரியாகத் திகழும் என்று கர்தினால் கூக் வலியுறுத்தினார்.