“உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மக்களிடம் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் உறுதிப்பாடு. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைச் சிலர் சிதைத்துவிட்டுத் தப்புவதை எளிதாக விட்டுவிட முடியாது. என்ன நடந்தாலும் சரி, அரசியல் ரீதியான எதிர்ப்பும் மக்களின் எதிர்ப்பும் தொடரும். இந்த விவகாரத்தில் மோடி, அமித்ஷா, ஞானேஷ்குமார் உள்ளிட்டோர் மீதான பிடி இறுகி வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.”
திருமிகு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
“தமது நாட்டு எல்லைக்குள் அல்லது தங்கள் நாட்டைச் சேர்ந்த குடிமக்களால் நிகழ்த் தப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் பெரும் தாக்குதல்களுக்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பேற்று, தேசியச் சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அதற்கான தண்டனைகள் வழங்கவும் நடைமுறையில் உள்ள உலகளாவியச் சட்டங்களே போதுமானவை. இருப்பினும், இதற்குப் புதிய சட்டங்கள் இயற்றும் பட்சத்தில், அவை ஏற்கெனவே உள்ள சட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமே தவிர, அதை அப்படியே பிரதிபலிக்கும் மற்றொரு நகலாக இருக்கக்கூடாது. பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களின் பாதிப்பை உணர்ந்து, அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகச் சேர்க்கப்படவேண்டும். இத்தகைய குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மண்டல அதிகார வரம்போ அல்லது தேசிய அதிகார வரம்போ எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.”
திருமிகு. ஆர். மைதிலி, ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியத் தூதர்
“சமுதாயத்தில் அதிக மரியாதை கொண்ட மருத்துவத் தொழிலை அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கற்கவேண்டும். கல்வி சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் அதேநேரம் இலக்கியம், சமூகம் சார்ந்த நூல்களையும் விரும்பிப் படிக்கவேண்டும். நாட்டு நடப்பு குறித்த அறிவைப் பெருக்குவதற்குச் செய்தித்தாள்களைக் கட்டாயம் வாசிக்கவேண்டும். படிக்கும் காலத்திலேயே விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு உடல் நலத்தையும் பேணிக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும்.”
திருமிகு. அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு