ஒரு விவசாயியும், அவரது மனைவியும் வீட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பலத்த மழை பெய்தது. வழிப்போக்கர் இருவர் அம்மழையில் நன்றாக நனைந்து கொண்டிருந்தனர். உடனடியாக விவசாயி தனது வீட்டின் கதவுகளைத் திறந்து, வழிப்போக்கர்களைத் வீட்டிற்குள் வர அழைத்தார். உடனே அவரது மனைவி, “நான்கு பேர் இவ்வீட்டில் எப்படி உறங்க முடியும்? நமக்கே போதுமான இடமில்லையே!” என்று கூறினாள். உடனே விவசாயி, “நாம் படுத்திருப்பதற்குப் பதிலாக அமர்ந்துகொண்டால், நால்வரும் இவ்வீட்டில் உள்ளேயே இருந்து கொள்ளலாம்” என்று கூறி, வழிப்போக்கரை வீட்டின் உள்ளே அமரச் சொன்னார். சிறிது நேரம் கழித்து மேலும் இரண்டு வழிப்போக்கர்கள் அவ்வீட்டை மழையில் நனைந்தபடியே கடந்து சென்றார்கள். அவர்களையும் வீட்டிற்குள் வருமாறு விவசாயி அழைத்தார். உடனே எரிச்சலடைந்த அவரது மனைவி, “ஆறு பேர் இவ்வீட்டில் எவ்வாறு தங்க முடியும்? நீங்கள் செய்வது சரிதானா?” என்று கேட்டார். உடனே விவசாயி, “நாம் அமர்ந்து இவ்விரவைக் கழிப்பதற்குப் பதிலாக, நின்றுகொண்டே இருந்தால், ஆறு பேரும் இவ்வீட்டில் தங்கி மழையிலிருந்து காப்பற்றப்படுவோம்” என்று கூறினார். இரண்டு பேரும் பொழுது விடியும் வரை நின்றுகொண்டே இருந்தார்கள்.
“ஒரு மனிதனின் இதயத்தை அன்பைவிட வேறொன்றும் அதிகமாகத் தொடுவதில்லை” என்பார் புனித பிரான்சிஸ் அசிசியார். இன்றைய காலச்சூழலில் அன்பு வியாபாரமாகிவிட்டது. பொருள்கள்மீது அன்பு செலுத்தி மனிதரைப் பயன்படுத்தும் காலமாக மலிந்துவிட்டது.
புனித அகுஸ்தின் அன்பைப் பற்றிக் கூறும்பொழுது, “முதலில் ஒருவரை அன்பு செய்யுங்கள்; பிறகு மற்ற காரியங்களைச் செய்யுங்கள்” என்கிறார்.
சிறந்த அன்புக் கட்டளை: இன்றைய நற்செய்தியில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் சிறந்த கட்டளை எது?” என்று கேட்கின்றார். அவரின் ஒற்றைக் கேள்விக்கு, அன்புச் செயலாக நமது வாழ்வு மாறுவதே சிறந்த கட்டளை என்று இயேசு பதிலளிக்கிறார்.
இறைவனை அன்பு செய் - முதல் அன்பு நிலை: இறைவனை முழுமையாக அன்பு செய்ய மூன்று அளவு நிலைகளை இயேசு வழங்குகின்றார். ஆண்டவரை அளவில்லாமல் அன்பு செய்வதே அன்பின் அளவுகோல். அ) முழு இதய அன்பு, ஆ) முழு உள்ள அன்பு, இ) முழு மன அன்பு. “இஸ்ரயேலே செவிகொடு!” (இச 6:5). நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!” இதுவே இஸ்ரயேல் மக்களின் அன்றாடச் செபமாக இருந்தது. ஒருவரை முழு இதயத்தோடு அன்பு செய்ய முற்படும்பொழுது நம் உள்ளம் புத்திசாலித்தனமாக மாறும்; இதயத்தில் அவரை அன்பு செய்யவேண்டும் என்னும் எண்ணங்கள் மட்டுமே நிரம்பி இருக்கும். முழு உள்ளத்தோடு அன்பு செய்வதால் அத்தகைய அன்பு ஆழமான அன்பாக மாற்றம் பெறும். முழு ஆற்றலோடு அன்பு செய்வதால் தடைகளை, தொய்வுகளை, சோர்வுகளைத் தாண்டி நம்மால் அன்பு செய்ய முடியும். “அன்பு அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்” (1கொரி 13:17). கடவுளை அன்பு செய்யும் முதன்மையான கட்டளை இங்கிருந்து தொடங்குகின்றது.
பிறரை அன்பு செய் - இரண்டாம் அன்பு நிலை: “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” (லேவி 19:18). அன்பு செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அன்பை மேல்வரிச்சட்டமாக வாழும் ஒவ்வொருவரும் அடுத்தவரை நேசிக்காமல் இறைவனை அன்பு செய்ய இயலாது. அடுத்திருப்பவர் கடவுளுக்குச் சமமானவர்; அவர்கள்தான் கடவுளின் முகத்தைத் தாங்கி கடவுளின் நீட்சியாக அருகிலேயே இருப்பவர்கள். கண்முன் உள்ள சகோதர-சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.
உன்னை நீ அன்பு செய் - மூன்றாம் அன்பு நிலை: இரண்டாவது கட்டளைக்குள் (பிறரை அன்பு செய்) மூன்றாவதாக ஒரு கட்டளையும் மறைந்துள்ளது: ‘உன்னை நீ அன்பு செய்.’ நாம் கடவுளின் கரங்களில் மணிமகுடமாய் திகழ்பவர்கள். என்னை முதலில் அன்பு செய்யாமல், என் நிறைகளை, திறமைகளை, நற்செயல்களை நான் நினையாமல், பிறரை அன்பு செய்ய முடியாது.
பிறரின்
நிறைகளை, திறமைகளை, நற்செயல்களை நம்மால் காண இயலாது. தன்னை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதரால், பிறரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது குறைகளை, கறைகளை, குற்றங்களை ஏற்றுக்கொள்பவரே பிறரையும் குறைகளோடு, குற்றங்களோடு ஏற்றுக்கொள்ள முடியும். முதலில் எனது
உள்ளத்திற்கு நான் அமைதியையும் மதிப்பையும் மன்னிப்பையும் நீதியையும் வழங்கிட வேண்டும். பிறகுதான் அவற்றையெல்லாம் நான் மற்றவருக்கு வழங்கிட முடியும்.
அன்பு உணர்ச்சி நிலை அல்ல, பொறுப்புணர்வு: இன்றைய முதல் வாசகத்தில் இறைவன், இஸ்ரயேல் மக்களின் கடந்தகாலத் துயர நிலையை அந்நியராய் எகிப்தில் அவதியுற்ற வாழ்வினை நினைவுகூர்ந்து ஒருபொழுதும் அவர்களின் வாழ்வில் ஏழையர், கைம்பெண்கள், கைவிடப்பட்டோரில் அதிகாரத்தையும் அடக்குமுறையையும் வெளிப்படுத்தாமல், அன்புடன் நடந்துகொள்ளும்படி அறிவுறுத்துகின்றார். பலவீனர்களின், பாதிக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நிற்பதே அன்பின் வெளிப்பாடு.
‘நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியர்களாய் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்று இறைவன் இஸ்ரயேல் மக்களை நினைவுபடுத்துகின்றார். நமது தொடக்கமும், எளிமையுமான, சவால் நிறைந்த, துன்பம் நிறைந்த கடந்த வாழ்வும் ஏழைகளின், கைம்பெண்களின், அந்நியர்களின், வாழ்வினைப் புரிந்து, துன்பங்களை அறிந்து, அவர்கள் சார்பாக நிற்க உதவவேண்டும் என விரும்புகின்றார்.
கடந்து வந்த கடினமான சூழல்களை மறந்து செயல்படுபவர்கள் கடின உள்ளத்தினராக மாறுகின்றனர்; மாறாக, அச்சூழலை நினைவில்கொண்டு வேதனையில் உழல்வோரைப் புரிந்து செயல்படுபவர்கள் இரக்கமுள்ளவர்களாக மாறுகின்றார்கள். கடந்த காலத்தில் நாம் அந்நியராய் இருந்தபொழுது பிறரால் நாம் அரவணைக்கப்பட்டோம். இன்றைய காலச்சூழலில் அந்நியர்களை வரவேற்போம், ஏற்றுக்கொள்வோம். கடந்த காலத்தில் நாம் பலவீனமாய் பிறரின் கருணைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்தோம்; இன்று பிறர் நமது கருணைக்காகவும் உதவிக்காகவும் காத்திருக்க அனுமதியோம். நம்மைவிட பலவீனமான ஒருவரிடம் நமது அதிகாரத்தை அடக்கி ஆள அல்ல; மாறாக, அன்பு செய்ய, உதவி செய்யப் பயன்படுத்துவதே சிறந்த செயல்பாடு. நமக்குக் கடந்த காலங்களில் கிடைத்திட்ட இரக்கத்தை, உதவியை, ஆறுதலை, மன்னிப்பை மறந்துவிடவேண்டாம் என்பதே முதல் வாசகத்தின் செய்தியாக அமைந்திருக்கின்றது.
முன்மாதிரியான வாழ்வு - அன்பு நிறைந்த வாழ்வு: புனித பவுல் தெசலோனிக்க மக்களை, அவர்களின் நம்பிக்கை நிறைந்த வாழ்வினைக் குறித்துப் பாராட்டுகிறார். அவர்களின் வாழ்வு நற்செய்தியைக் கேட்பதோடு நின்றுவிடாமல், நம்பிக்கை, அன்பு, பொறுமை ஆகியவற்றால் நிறைந்த முன்மாதிரியான வாழ்வாக அமைந்திருந்தது. கிறித்தவ அன்பு செவிவழிச் செய்தியல்ல; மாறாக, செயல்பாட்டில் மலரும் வாழ்வு முறை. நற்செய்தியை வாழ்வாக்குவதே முன்மாதிரியான வாழ்வு. கிறித்தவ வாழ்வின் பெருமை எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்பதில் அல்ல; எவ்வளவு அன்புச் செயல்களால் நம் வாழ்வை நிறைந்திருக்கின்றோம் என்பதில் அடங்கியுள்ளது.
கிறிஸ்துவின் அன்பு புனிதமானது: இயேசு அன்பு செய்தது போல், நாம் அன்பு செய்யவேண்டும். இயேசுவே அன்பின் மொத்த உருவம். சீடர்களின் பாதங்களைக் கழுவிய அன்பு; தமது நண்பர் இலாசர் இறந்த பொழுது, அவரின் சகோதரிகளின் இல்லத்திற்குச் சென்று, உடனிருந்து இலாசருக்காக, அவரது குடும்பத்திற்காக அழுத அன்பு; தமது காலடிகளைக் கழுவிய பெண்ணிற்கு, அமைதியை வழங்கி அவரை ஏற்றுக்கொண்ட அன்பு;
தம்மை ஏளனம் செய்தவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்காகவும் செபித்த அன்பு; குழந்தைகளிடமும் நோயாளிகளிடமும் அணுகிச் சென்று உடனிருந்த அன்பு; எல்லாரிடமும் உரையாடிய அன்பு; வழிதவறிச் சென்றவர்களை மீண்டும் மீண்டும் தேடிச் சென்ற அன்பு...!
இயேசுவின் அன்பு எண்ணிக்கையினால் அளவிடப் படுவதில்லை; மாறாக, அணுகுமுறையினால், எண்ணங்களினால், நிலைப்பாட்டினால், பிறருக்கு வழங்கும் முன்னுரிமையினால் அளவிடப்படுகிறது. நம் உலகிற்கும் நமக்கும் எதிர்காலம் உண்டு என்பதை நாம் உறுதிப்படுத்த விரும்பினால் அன்பு செய்வோம். அன்பிற்கும் எல்லை இல்லை; அன்பு செய்வோருக்கும் எல்லைகள் இல்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அன்பு செய்வது கட்டளை அல்ல - சுவாசம்: அன்பு செய்வதைக் கட்டளை என்று நினைத்தால், அது உத்தரவுகளை நிறைவேற்றும் மேம்போக்கான செயலாகவே அமையும். அன்பு சுவாசத்தைப் போன்றது. அது நமது இதயத்திலிருந்து ஆக்சிஜன் நிரம்பிய இரத்தத்தைச் சுமந்துசெல்லும் தமனிகள் போன்றது. உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று, உறுப்புகளை இயக்குவது. நாம் அறிந்தும் அறியாமலும், உணர்ந்தும் உணராமலும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். நமது உடலுக்கு, உயிருக்குச் சுவாசம் எவ்வளவு அவசியமோ, அது போன்றே அன்பே நமது வாழ்வின் சுவாசம்.
அன்பை நமக்கும் பிறருக்கும் வழங்கிக்கொண்டே இருப்போம். நாமும் வாழ்ந்து, நம்மைச் சுற்றி இருப்போரையும் வாழவைப்போம், இயங்க வைப்போம். இறைவன் நமது கேடயமாக, பலமாக, ஆற்றலாக இருப்பது போன்று பலவீனர்களுக்கும் கடைநிலையினருக்கும் ஆற்றலாக, சார்பாக, கேடயமாக நாமும் மாறுவோம்.