news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (04.10.2026) எசே 5:1-7; பிலிப் 4:6-9; மத் 21:33-43

திருப்பலி முன்னுரை

“என் அருள் உனக்குப் போதும்” என்று மொழிந்த இறைவனின் அருள்வரங்களைப் பெற, ஆவலோடு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்போடு இந்த ஞாயிறு திருப்பலிக்கு வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் தன் தோட்டத்தைப் பராமரிக்கும் பணியைப் பொறுப்பான வேலைக்காரரிடம் ஒப்படைக்கிறார். ஆனால், அவர்களோ நன்றிகெட்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும் செயல்பட்டு, அனுப்பப்பட்ட பணியாளர்களையும் இறுதியாக உரிமையாளரின் ஒரே மகனையும் கொன்றுவிட்டார்கள். இதற்குக் காரணம் பொறாமை என்ற அரக்கன்.

“பொறாமை கொண்டவன் ஒருபோதும் மன அமைதியையோ, ஆன்மிக விழிப்புணர்வையோ அடைய முடியாது” என்கிறார் புத்தர். திராட்சைத் தோட்டம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்துள்ள ஆன்மிகக் கொடைகள் மற்றும் கடமைகளைக் குறிக்கிறது. நாம் அனைவரும் அதற்குப் பொறுப்பான தோட்டக்காரர்கள். தகுந்த காலத்தில் நாம் கடவுளுக்கு நற்செயல்களாகிய கனிகளைக் கொடுக்க வேண்டும். நற்செயல்களாலேயே இறைவனின் அழைப்பிற்கு நாம் தகுதியுள்ளவராகிறோம். நாம் அனைவருமே இந்த உலகிற்கு வந்துள்ள விருந்தினர்கள். எனவே, எதன்மீதும் பேராசை கொள்ளாமல்  வாழ்க்கை என்ற தோட்டத்தில் அன்பு, இரக்கம், பொருமை, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, நீதி, நேர்மை, அமைதி என்ற மதிப்புமிக்கக் கனிகளை இந்த உலகிற்கும் உறவுகளுக்கும் கொடுத்து வாழ்வோம். புனித பிரான்சிஸ் அசிசியார் கூறுவது போன்று, பகையுள்ள இடத்தில் பாசத்தையும், அவநம்பிக்கையுள்ள இடத்தில் நம்பிக்கையையும், இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும், துயரம் நிறைந்த உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் கொடுத்து, அனைத்திலும் இறைவனைக் கண்டு மகிழ்வோடு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம், கடவுளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையேயான உறவை ஒரு திராட்சைத் தோட்ட உவமையின் வழியாக அழகாக எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்களைக் கடவுள் கண்மணிபோல் பாதுகாத்தார். அளவற்ற அன்புகாட்டி பாதுகாத்த இறைனுக்கு, இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். அன்றாடம் கடவுளின் அன்பைச் சுவைக்கும் நாம், நற்கனிகளைக் கொடுத்து வாழ அழைக்கும் இறைவார்த்தைக்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

வாழ்க்கையில் கவலைகளும், நாளைய பற்றிய பயங்களும் நம்மை ஆட்கொள்ளும்போது கலங்காமல் நன்றியுணர்வோடு இறைவனிடம் செபிக்குமாறு பவுல் நமக்கு அழைப்பு விடுக்கிறார். உண்மை, நீதி, தூய்மை, கண்ணியம்,  நேர்மை போன்ற மதிப்பீடுகளை ஒவ்வொரு நாளும் நாடித் தேடிடவும், இறைநம்பிக்கையில் வேரூன்றிடவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இறைநம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! உமது திராட்சைத் தோட்டமாகிய திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் நற்பொறுப்பாளர்களாகச் செயல்பட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் இறைவா! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தாமல், ஏழை எளிய மக்களின் நலனிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தத் தேவையான ஞானத்தைத் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! புனித பிரான்சிஸ்கு அசிசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அப்புனிதரைப் போன்று இயற்கையிலும், ஏழை மக்களிலும் உமது முகத்தைக் காணவும், ஆண்டவரைச் சுவைப்பதில் அலாதி இன்பம் கொண்டு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வழிகாட்டும் நாயகனே எம் இறைவா! எம் இளையோர் இணையதளத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடாமல், தகவல்தொடர்பு சாதனங்களை நல்ல முறையில் பயன்படுத்திடவும், கடவுளை அறிவதில் ஆர்வம் கொண்டு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.