news-details
தலையங்கம்
பெருகி வரும் இணையவழிக் குற்றங்கள்: தேவை விவேகமும் விழிப்புணர்வும்!

இளையோரின் திறமைகளுக்கும் படைப்பாற்றலுக்கும் புதிய கதவுகளைத் திறந்து, உலகளவில் பல தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, மனித வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஓர் அற்புதப் புரட்சி, எண்மத் தொழில்நுட்ப உலகின் இணையவழிப் புரட்சியென்றால் அது மிகையல்ல.

நெடுந்தூரங்களை அழித்து, உலகளவில் வாழும் மனிதர்களை நொடிப்பொழுதில் ஒன்று சேர்க்கும் பாலமாக அமைந்து, ‘யாதும் டிஜிட்டல் மயம்’ என்று டிஜிட்டல் உலகம் இன்று யாவற்றையும் மாற்றி அமைத்திருக்கின்றது.

மனிதகுலத்தின் அன்றாட வாழ்வியலை எளிமையாக்கி, உலகை விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்துள்ள இந்த இணையம் என்னும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அதே வேகத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் உருவெடுத்து நிற்கிறது. அறிவியல் நமக்கு அளித்த கருவிகளை நல்வழிப் பாதையில் பயன்படுத்துவோருக்கு இணையம் ஒரு பெருங்கொடை; ஆனால், அதையே குறுக்கு வழியிலும் தவறான பாதையிலும் பயன்படுத்தத் துடிக்கும் சமூக விரோதிகளுக்கு அதுவொரு பேராபத்து.

அண்மைக்காலமாக, செய்தித்தாள்களையும் காட்சி ஊடகங்களையும் திறந்தாலே இணையவழி ஏமாற்று வேலைகளும், கணினிவழி நிதிச் சூறையாடல்களும்தான் தலைப்புச் செய்திகளாக ஆக்கிரமிக்கின்றன. ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, முகமே தெரியாத நபர்களின் வாழ்நாள் சேமிப்பை நொடிப்பொழுதில் சுருட்டிச் செல்லும் ‘இணையவழிக் குற்றங்கள்’(Cybercrimes), நவீன சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாகவே மாறியுள்ளன.  தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை அறியாத மக்களின் ‘டிஜிட்டல் அறியாமையை’ தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்யும் இந்த அநீதிக்கு எதிராக, மக்கள் விவேகமும் விழிப்புணர்வும் கொண்டிருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

கணினி வலைப்பின்னலையும், கைப்பேசி போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஒன்று, தொழில்நுட்பச் சாதனங்களை இலக்காகக் கொண்டு ‘கணினி நச்சுயிரிகளை’ (Viruses) அனுப்பி, அமைப்புகளை முடக்குவது அல்லது தரவுகளை அழிப்பது; மற்றொன்று, தொழில்நுட்பச் சாதனங்களைக் கொண்டு குற்றங்களை நடத்துவது. அதாவது, இணையத்தைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்வது, போலியான தகவல்களைப் பரப்புவது மற்றும் பிறரின் அடையாளங்களைத் திருடுவது.

தொடக்கக் காலத்தில் ‘ஹாக்கர்ஸ்’ எனப்படும் தனிப்பட்ட சில கணினி வல்லுநர்களால் விளையாட்டாகத் தொடங்கப்பட்ட இச்செயல்கள், இன்று பன்னாட்டு அளவில் பில்லியன் கணக்கில் பணத்தைச் சூறையாடும் மிகப்பெரிய நிழல் உலகக் கூட்டமைப்பாக, ஒரு ‘மாஃபியா’ வாக உருவெடுத்து நிற்பது அதிர்ச்சியளிக்கின்றது.

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் இணையவழிக் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் எல்லைகளைக் கடந்து, நாளுக்கு நாள் அதிநவீன நுட்பங்களைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கணினிகளுக்குள்  ‘மால்வேர்’ எனப்படும் தீம்பொருள்களைப் புகுத்தி, தரவுகளைப் பிணைக்கைதிகளாகப் பூட்டிவைத்துவிட்டு, அவற்றைத் திறக்க பெருந்தொகையைப் பிணையப் பணமாகக் கேட்பது. இதற்குச் சான்றாக 2017-ஆம் ஆண்டில் உலகளவில் 150 நாடுகளைச் சேர்ந்த 23,00,000 கணினிகளை முடக்கி, 4 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய ‘வான்னாக்ரை’ (Wannacry) தாக்குதலே நம் நினைவிற்கு வருகின்றது.

மேலும், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்தி மூலம் பிரபல வங்கிகள் அல்லது அரசு அமைப்புகள் பேசுவது போலப் போலியான தொடர்புகளை ஏற்படுத்தி, கடவுச்சொற்கள் (உள்ளீட்டு குறியீடு), வங்கிக்கணக்கு எண்களைத் திருடுவதும், அதுபோலவே, குறுஞ்செய்திகள் மற்றும் போலித் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி, ஆசை வார்த்தைகள் காட்டி பணத்தைப் பறிப்பதும் சமூகத்தில் இன்று பெருகி வருகின்றன.

அண்மைக்காலமாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமக்கு நெருக்கமானவர்களின் குரலை அல்லது உருவத்தை அப்படியே போலி செய்து, ஆபத்தில் இருப்பது போலக் காட்டிப் பணம் பறிக்கும் அதிர்ச்சி தரும் குற்றங்களும் நாளுக்குநாள் அரங்கேறி வருகின்றன.

மக்களின் ‘டிஜிட்டல் அறியாமை’ மற்றும் ‘உளவியல் பலவீனங்களை’ இணையக் குற்றவாளிகள் மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதுதான் மிகவும் கவலைக்குரிய செய்தி. இவ்வகையில், சாதாரண மக்கள் மட்டுமன்றி, கணினி வல்லுநர்கள், வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள், உயர்கல்வி கற்ற அறிஞர்கள் கூட இந்த இணைய மோசடிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்பதுதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் நடத்திய அண்மைக்கால ஆய்வு தரும் அதிர்ச்சி நிறைந்த செய்தி. இதற்கு முக்கியக் காரணம், குற்றவாளிகள் மக்களின் மனத்தில் உருவாக்கும் செயற்கையான மூளை முடக்கமே!

அச்சம், பதற்றம், அவசரம், பேராசை போன்ற மனித உணர்ச்சிகளை இக்குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ‘உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது’, ‘மின்சாரக் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்’, ‘உங்கள் மீது டிஜிட்டல் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று அச்சுறுத்தும்போது, மக்களின் பகுத்தறியும் திறன் தற்காலிகமாக முடங்கி விடுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவர்களின் பணத்தை இவர்கள் சூறையாடி விடுகின்றனர்.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் செய்யும் சிறு திருட்டு அல்ல; மாறாக,  உலகளாவிய அளவில் செயல்படும் மாஃபியாக் கும்பல்களின் செயல்பாடே! இவர்கள் போலி அழைப்பு மையங்கள், போலி வங்கிக் கணக்குகள் மற்றும் இணையவழிச் சூதாட்டக் கணக்குகள் மூலம் பணத்தை நொடிப்பொழுதில் பல்வேறு நாடுகளுக்குக் கடத்தி விடுகின்றனர். பதியப்படும் ஒரு சிறு புகாரின் பின்னணியில், பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடியும், நூற்றுக்கணக்கான போலிக் கணக்குகளும் இணைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணைகளில் இன்று தெரியவருகின்றன.

ஆயினும், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், மனித மனத்தின் விவேகமும் விழிப்புணர்வுமே இதற்கான முதன்மைத் தடுப்பு அரணாகச் செயல்பட முடியும். குறிப்பாக, முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஓர் இணையத் தொடுப்பிலும் உடனடியாக இணையக்கூடாது என்றும், அவசரப்படுத்தும் எந்த ஓர் அழைப்பையும் உடனே நம்பிவிடாமல், நிதானமாகச் செயல்படவேண்டும்; வங்கிச் சான்றுகள், கடவுச் சொற்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), ஆதார் விவரங்கள் போன்றவற்றைத் தொலைப்பேசியிலோ அல்லது இணையத்திலோ யாருடனும் பகிரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறோம். எந்தவோர் அதிகாரப்பூர்வ வங்கியோ அல்லது அரசு அமைப்போ தொலைப்பேசியில் OTP கேட்காது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும், நமது டிஜிட்டல் கணக்குகளுக்குச் சிக்கலான கடவுச்சொற்களைப் (Complex Passwords) பயன்படுத்துவதோடு, இருமுறை சரிபார்ப்பு முறையைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும், அவ்வாறே அதிகாரப்பூர்வமற்ற இடங்களிலிருந்து எவ்விதக் கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறோம்.

இத்தகைய சூழலில், இணையவழிக் குற்றத் தடுப்பு என்பது தனிநபர் விழிப்புணர்வோடு முடிந்து விடுவதன்று; மாறாக, அரசு, சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதொரு கூட்டுப்பொறுப்பாகும்.

குறிப்பாக, பள்ளிப் பாடத்திட்டங்களில் ‘டிஜிட்டல் பாதுகாப்பு’ குறித்த பாடங்களைக் கட்டாயமாக்குவதோடு, பள்ளிகளில் ‘இணையப் பாதுகாப்பு மன்றங்களை’ உருவாக்கி, மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்கவேண்டும். மேலும், வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.

‘அவசரப்படாதே, யோசி, சரிபார்!’ என்ற விழிப்புணர்வுத் தாரக மந்திரத்தை மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்கவேண்டும். அவ்வாறே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விழிப்புணர்வுப் பட்டறைகளை அமைத்து, முதியோர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு இணையத்தின் ஆபத்துகள் குறித்துக் கற்பிப்பதுடன், 1930 என்ற அவசர உதவி எண்ணை உடனே அழைத்தால், திருடப்பட்ட பணத்தை முடக்கி மீட்டெடுக்க அதிக வாய்ப்புள்ளது என்பதையும் தெரியப்படுத்திடவேண்டும்.

இறுதியாக, ‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதைப்போல, நாம் ஒவ்வொருவரும் வளர்த்தெடுக்கும் சிறு விழிப்புணர்வுதான், மிகப்பெரிய டிஜிட்டல் குற்ற அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும். அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கே தவிர, நம்மை அழிப்பதற்கல்ல என்பதை நாம் புரிந்திடவேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அச்சம் தேவையில்லை; மாறாக, அளப்பரிய விவேகமும் விழிப்புணர்வும் மிக மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்திடவேண்டும்; பிறருக்கு உணர்த்திடவேண்டும்.

ஆகவே, டிஜிட்டல் அறியாமையை அகற்றி, நாம் விழிப்புணர்வுச் சுடரை ஏந்திச் செயல்பட்டால், இணையவழிக் குற்றவாளிகளின் கரங்களில் இருந்து நம்மையும், நம் எதிர்காலத் தலைமுறையையும் உறுதியாக நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். விழித்திருப்போம்! விவேகம் கொண்டிருப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்