news-details
சிறப்புக்கட்டுரை
நினைப்பதா? மறப்பதா? (மறக்கத் தெரியுமா? – 2)

நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். பல செய்திகளைச் சேகரிக்கின்றோம். எதை நினைவில் வைத்துக்கொள்வது? எதை மறப்பது?

வள்ளுவர் இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவாக ஒரு விடை சொல்லி வைத்திருக்கிறார்.

‘நன்றி மறப்பது நன்றன்று! நன்றல்லது

அன்றே மறப்பது நன்று’ (குறள் 108)

மற்றவர்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் ‘நன்றி மறவாமை’ எனும் அதிகாரத்தில் இந்தப் பாடல் வருகிறது. நாம் இங்கே நம்முடையை கேள்விக்குரிய நேரடியான பதிலாகவே இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

நல்லவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நல்லவை இல்லை என்றால் அவற்றை மறந்துவிட வேண்டும்.

சரி, அடுத்த கேள்வி எழுகிறது. ‘எது நல்லது? எது கெட்டது?’ நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படுபவற்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பயன்படாதவற்றை மறந்துவிட வேண்டும். இங்கேதான் நமது சிக்கல் தொடங்குகிறது. நாம் வழக்கமாக எவற்றை நினைவில் வைத்துக்கொள்கிறோம்? எவற்றை மறக்கிறோம்?

நமக்குத் தீமை விளைவிக்கக்கூடிய எண்ணங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அச்சடித்ததுபோல் நினைவில் வைத்துக்கொள்கிறோம். அடிக்கடி மறந்துவிடாமல் நினைவுபடுத்திக்கொள்கிறோம். மறக்க முடியாத நினைவுகளாலேயே கொதிக்கிறோம், கோபப்படுகிறோம், அழுகிறோம், புலம்புகிறோம், மிகையாகச் சாப்பிடுகிறோம் அல்லது பட்டினி கிடக்கிறோம், தூங்க மறுக்கிறோம்.

இப்படி மறக்கவேண்டிய நினைவுகளிலேயே மூழ்கிக்கிடக்கும் போது நினைவாற்றலை எப்படி வளர்த்துக்கொள்வது? நல்லவற்றை எப்படி மறக்காமல் இருப்பது? இதுதான் நம்முடைய சிக்கல். ஒவ்வொரு செய்தியை உள்வாங்கும்போதும் நாம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும் என்கிறார் வள்ளுவர். நன்றல்லது அன்றே அப்போதே உடனே மறந்துவிட வேண்டும்.

நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தராதவற்றை நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவற்றையே நினைத்துக் கொண்டிருக்கும் வரை, நல்லவற்றை நினைக்கவும் வழிபிறக்காது செயல்படவும் வாய்ப்பிருக்காது.