news-details
தலையங்கம்
மத்திய-மாநில உறவும் மாநிலச் சுயாட்சியும்: உயர்நிலைக் குழு கலைப்பும் வரலாற்றுப் பின்னடைவும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவாகத் திகழும் ‘கூட்டாட்சித் தத்துவம்’ (Federalism) மற்றும் ‘மாநில சுயாட்சி’(State Autonomy) ஆகிய கோட்பாடுகள் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கின்றன.  மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மத்திய அரசின் அதிகாரக் குவிப்பைத் தடுக்கவும் தமிழ்நாட்டின் முந்தைய தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு தற்போதைய த.வெ.க. அரசால் கடந்த நவம்பர் 6 அன்று கலைக்கப்பட்டிருப்பது அரசியல் களத்திலும் அரசமைப்புச் சட்ட அறிஞர்கள் தளத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெறும், ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ (Union of States) என்ற வாசகம் வெறும் அலங்காரச் சொல் அல்ல; ‘வலிமையான மாநிலங்கள் இன்றி வலிமையான ஒன்றியம் அமைய முடியாது’ என்பதன் ஆழமான அறிவிப்பாகும். அந்த வகையில், 1969-ஆம் ஆண்டு நீதியரசர் பி.வி. இராஜமன்னார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்குப் பிறகு, அரை நூற்றாண்டு காலத்தில் மத்திய-மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் சவால்களையும் நுணுக்கமாக ஆய்வு செய்ய 2025, ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டதே இந்த நீதியரசர் குரியன் ஜோசப் குழு.

உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர் கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் பேராசிரியர் எம். நாகநாதன் ஆகியோரை உள்ளடக்கிய இம்மூவர் குழு, ஒரு சாதாரண நிர்வாகக் குழுவல்ல; மாறாக, அஃது இந்திய சனநாயகத்தின் கூட்டாட்சிச் சமநிலையை மீட்டெடுக்கும் அறிவுசார் ஆய்வகமாகத் திகழ்ந்தது.

2026, பிப்ரவரி 16-ஆம் தேதி இக்குழு சமர்ப்பித்து, பிப்ரவரி 18 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தொகுதி அறிக்கை, இந்தியாவின் அரசமைப்பு வரலாற்றில் ஒரு மைல் கல்லாகப் போற்றப்பட்டது. ‘மெல்ல மெல்லப் படரும் அதிகாரக் குவிப்பு’  என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டி, மத்திய-மாநில உறவுகளில் ‘ஒரு கட்டமைப்பு மறுசீரமைப்பு அவசியம்’ என இவ்வறிக்கை அறைகூவல் விடுத்தது. இவ்வறிக்கையின் ஆழத்தையும் அறிவுசார் நேர்மையையும் கண்ட இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுநர்களும் அரசியல் ஆளுமைகளும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இராஜீவ் தவான், “இதற்கு முன்பு வெளிவந்த பல கூட்டாட்சி அறிக்கைகளைவிட இது மிகச்சிறந்த, கூர்மையான அறிக்கை. அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமேடைகளின் அடிப்படை ஆவணமாக இது திகழவேண்டும்” எனப் புகழாரம் சூட்டினார். அவ்வாறே, இந்தியாவின் மேனாள் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணு கோபால், “ஆளுநர் பதவி குறித்து 5-வது பிரிவில் இடம்பெற்றுள்ள விவாதங்கள், தற்போதைய சிக்கல்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அர்த்தமுள்ள தீர்வுகளை முன்வைக்கின்றன” எனப் பாராட்டினார்.

மேலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “மத்திய அரசு வழங்கும் சலுகைகளுக்காக மாநிலங்கள் மௌனமாக நன்றி பாராட்டவேண்டும் என எதிர்பார்க்கப்படும் காலகட்டத்தில், இத்தகைய அரசமைப்பு ரீதியான உரிமை முழக்கத்தை முன்னெடுத்தமைக்காக தமிழ்நாடு பாராட்டப்படவேண்டியது; இதுவே ஒரு மகத்தான பொதுச்சேவை” எனக் குறிப்பிட்டார். அதன் நீட்சியாக, “இந்தியாவின் பரப்பளவிற்கும் பன்முகத் தன்மைக்கும் கூட்டாட்சி முறை ஆட்சியே அவசியம் என்பதை இவ்வறிக்கை அழுத்தமாக நிறுவுகிறது; இதனைப் புறக்கணிப்பது ஆபத்தானது” என ‘தி இந்து’ நாளிதழ் தனது தலையங்கத்தில் (21.02.2026) எச்சரித்திருந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், நீதியரசர் குரியன் ஜோசப் குழுவின் முதல் தொகுதி அறிக்கை, மாநிலங்களின் கைகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளன என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது. குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடுவதைத் தடுக்க, 15 நாள்களுக்குள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்; தவறினால் மசோதா தானாகவே ஒப்புதல் பெற்றதாகக் கருதப்படவேண்டும் என வலியுறுத்தியது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப் பிறகு மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிதிக்காக ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை மாற்றி, நிதிப் பகிர்வில் நியாயமான உரிமையை உறுதி செய்த இவ்வறிக்கை, மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் மூலம் ‘நீட்’ (NEET) போன்ற திணிப்புகளைத் தவிர்த்து, மாநிலங்களின் சமூக நீதியைப் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 3-இன் கீழ் மாநிலங்களின் பெயரையோ, எல்லைகளையோ மாற்ற சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முழு ஒப்புதலைக் கட்டாயமாக்குதல் மற்றும் முக்கிய அரசமைப்புத் திருத்தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுதல்வேண்டும் என்றும், ஒற்றைமொழித் திணிப்பைத் தவிர்த்து, ஆங்கிலத்துடன் தமிழ் உள்ளிட்ட உயர்நிலை அங்கீகாரம் கொண்ட மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்துதல்வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இக்குழுவின் இரண்டாம் மற்றும் இறுதி தொகுதி அறிக்கை 2027, மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் ‘இக்குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு (Statutory Body)  அல்ல’ என்றும், ‘ஆகஸ்டு 7 அன்று மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையத்தின் பணிகளும் இக்குழுவின் பணிகளும் ஒத்திருக்கின்றன’ என்றும் காரணம் காட்டி, தற்போதைய முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இக்குழுவைக் கலைத்து ஆணையிட்டுள்ளது.

ஆனால், அரசமைப்புச் சட்டப் பார்வையில் இக்காரணங்கள் ஏற்புடையதாகத் தெரியவில்லை. மாநிலச் சட்ட ஆணையம் என்பது மாநிலத்திற்குள் நடைமுறையில் உள்ள பழைய சட்டங்களைச் சீரமைக்கவும், நிறுவனக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் உருவாக்கப்படும் ஒரு வழக்கமான நிர்வாக அமைப்பாகும். மாறாக, மத்திய-மாநில உறவுகள் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்போடு தொடர்புடைய, தேசிய அளவிலான கொள்கை மற்றும் அரசியல் பரிமாணம் கொண்ட செயலாகும்.

இக்குழு தனது இறுதி அறிக்கையை நிறைவு செய்யும் தருவாயில் கலைக்கப்பட்டிருப்பது, அரைகுறையாக நிறுத்தப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமாகவே பார்க்கப்படுகிறது.

இக்குழுவின் கலைப்பு தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் பல விவாதங்களைத் தூண்டியுள்ளது. மேனாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், “மாநில உரிமைக்கு இடமில்லை; திரையரங்கு உரிமைக்கு இடமுண்டு” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், “மாநிலச் சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி இக்குழுவை ரத்து செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம்; மாநில உரிமைகளைப் பாதுகாக்க இவர்களிடம் உள்ள மாற்றுத்திட்டம் என்ன?” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு என்பது இந்தியாவில் மாநில சுயாட்சி முழக்கத்தின் பிறப்பிடமாகும். அறிஞர் அண்ணா முதல் கலைஞர் கருணாநிதி வரை வளர்த்தெடுத்த கூட்டாட்சித் தத்துவம், எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடி உரிமையாகும். ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது முந்தைய அரசின் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது நிர்வாக நடைமுறையாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவின் கூட்டாட்சி எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் ஒரு நடுநிலையான, அறிவுசார் உயர்மட்டக் குழுவைக் கலைப்பது, மாநில உரிமைகளுக்கான குரலை நாமே பலவீனப்படுத்திக் கொள்வதற்குச் சமமாகும்.

நிறைவாக, ‘துணைநிலைத் தத்துவம்’ கூறுவது போல, மக்களுக்கு மிக அருகில் இருக்கும் மாநில அரசுகளால் மட்டுமே உள்ளூர் பிரச்சினைகளுக்குச் சிறப்பான தீர்வு காணமுடியும் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்தாகவேண்டும். நீதியரசர் குரியன் ஜோசப் குழு என்பது எந்தவொரு கட்சிக்கும் எதிரானதோ அல்லது ஆதரவானதோ அல்ல; மாறாக, அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும் அரணாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு தனது முடிவைத் திறந்த மனத்துடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நீதியரசர் குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு தனது இறுதி அறிக்கையை முழுமையாகவும் சுதந்திரமாகவும் நிறைவு செய்து சமர்ப்பிக்க அனுமதிப்பதே தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமைக்கும் சனநாயக மாண்பிற்கும் செய்யப்படும் உண்மையான மரியாதையாக அமையும். அவ்வாறு இல்லையேல், இன்றைய ஆட்சியாளர்களின் நிலை கண்டு...

‘கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதிரண்டும் இல்லாதாள் ஏக்கழுத்தலும் செய்தலும், இல்லாதான்

ஒல்லாப் பொருளிலார்க்(கு) ஈத்தறியான் என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை’ (சிறுபஞ்சமூலம் 3)

என்று கல்லாதான் நுட்பம் அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும் எனக் குறிப்பிடும் இந்தப் பாடல் வரிகள்தான் நம் நினைவிற்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்