“வாங்க டாக்டர் சகாதேவன், உட்காருங்க” என்று வரவேற்றார் இஸ்மாயில்.
சகாதேவன்
உள்ளே வந்து உட்கார்ந்தான். துடிப்போடு வேலை செய்யும் சகாதேவன் சோர்வுடன் வந்ததைப் பார்த்து யோசித்தார் டாக்டர் இஸ்மாயில்.
“டாக்டர், நான் இங்கே பல வருசமாய் உங்களோட
நல்லா வேலை பார்க்க முடிந்தது. நான் நரம்பியல் டாக்டரானாலும் எல்லா பேஷண்டுகளையும் பார்க்க முடிந்தது. எனக்கு நிறைய அனுபவம் இங்கே நல்லா கிடைத்தது, அதேபோல் நல்ல பேரும் கிடைத்தது”
என்றான் சகாதேவன்.
“ரியலி, நீங்க நல்லா ஒர்க் பண்ணுனீங்க. அதனால் நல்ல பேர் பெருமை கிடைத்தது. இது பாராட்டிற்குரியது சகாதேவன்”
என்றார் இஸ்மாயில்.
“ஆமாம் டாக்டர், உங்கள்ட்டே சொல்றதுக்கென்ன... எங்க வீட்லே திருமணம் பண்ணனும்னு தீவிரமாய் இருந்தாங்க. ஆனால், எனக்குப் பிடித்த பெண் வந்து கேக்கலை” என்றான் சகாதேவன்
“காலப்போக்கிலேதான் எதுவும் நடக்கும். எனக்குப் பெண் பார்த்தபோது, பல பெண்கள் எனக்குப்
பிடிக்கலே. திடீர்னு பாத்திமா வீட்லே இருந்து எங்க வீட்லே வந்து என்னை விசாரிச்சாங்க. நானே எதிர்பார்க்கலே. என் மாமனார் பெரிய தோல் வியாபாரி, தொழிலதிபர். எனக்குப் பெண் கொடுக்க சம்மதிச்சு ஒத்துக்கிட்டார். கல்யாணம் சிறப்பாக முடிஞ்சதோட, இந்த ஆஸ்பத்திரி தொடங்க பெரிய கட்டடத்தையும் கட்டிக் கொடுத்தார். இது ஒரு மிராக்கிள் மாதிரி என் வாழ்வில் நடந்தது” என்றார் இஸ்மாயில்.
“உண்மைதான் டாக்டர். இந்தத் திருமணத்தால் உங்க வாழ்க்கை உயர்ந்திருச்சு. உங்க மனைவியும் இங்கே வேலை செய்றாங்க. இது யாரும் எதிர்பார்க்காததுதான். நீங்களும் இங்கே நல்லா உழைச்சு முன்னேறி வர்றீங்கல்ல” என்றான்
சகாதேவன்.
“ஆமா சகாதேவன், உங்களோட விசயம் என்ன?” என்றார் இஸ்மாயில்.
“நான் இங்கே இருந்து வெளியே போறேன் டாக்டர். சாலிக்கிராமத்திலே என்னோட உறவினர் ஓர் ஆஸ்பத்திரி நடத்துகிறார். அதைப் பார்த்து நிர்வாகம் பண்ண சரியான டாக்டர் இல்லையாம். என்னைக் கேட்டுக்கிட்டே இருக்காக. இப்பத்தான் அங்கே போக முடிவெடுத்தேன்” என்றான்
சகாதேவன்.
“வெரிகுட்! எங்கே பணிசெய்தாலும் நீங்க நல்லா இருப்பீங்க. கவலைப்படாமல் போங்க” என்றார் இஸ்மாயில்.
“இதுதான் என்னோட வெளியேறும் கடிதம். அதோட இது என்னோட கல்யாணப் பத்திரிகை. இங்கே வேலை செய்த மலர்விழிக்கும் எனக்கும் கல்யாணம்”
என்று கல்யாணப் பத்திரிகையை நீட்டினான்” சகாதேவன்.
“மிகவும் நல்லது சகாதேவன். இப்ப உங்க கல்யாணம் நடக்கிறது பொருத்தமானது. கட்டாயம் நான் பாத்திமாவுடன் வருவேன். மலர்விழி நல்ல
செட்டிக்காரப் பொண்ணு. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க. அல்லா துணை புரிவார்”
என்றார் டாக்டர் இஸ்மாயில்..
“தேங்க்ஸ் டாக்டர், மத்தவங்களுக்குப் பத்திரிகை கொடுத்திட்டு நான் கிளம்புறேன்” என்றார்
சகாதேவன்.
“உங்களோட பேமெண்டைக் கணக்குப் பார்த்துக் கொடுக்கச் சொல்றேன். செக்கை வாங்கிட்டுப் போயிருங்க” என்று அனுப்பி வைத்தார் இஸ்மாயில்.
(தொடரும்)