news-details
சிறப்புக்கட்டுரை
அரசியல் பூகம்பம்

‘நீட்’ தேர்வு முறைக்கேட்டிற்கு எதிராகப் போராடி ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக்கிய அதே வீரமிகு இளையோர் அணி, அக்டோபர் 2-இல் மும்பையில் தொடங்கி, அக்டோபர் 10 முதல் தலைநகர் டெல்லியையே கதி கலங்கச் செய்துள்ளது.

தலைநகர் டெல்லி ஒருபோதும் இப்படி முடங்கியதில்லை என்பது பலரது கருத்தாகும். எப்பொழுதும் இல்லாத ஓர் அசாதாரண நிலை, பலத்த பாதுகாப்பு, எங்கு நோக்கினும் காவல்துறையினர், ஆயிரக்கணக்கான துப்பாக்கி ஏந்திய துணை இராணுவ வீரர்கள் எனப் பல்வேறு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, மாறுவேடத்தில் அடியாள்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பல முக்கியச் சாலைகளை அடைப்பது, ஐம்பதிற்கும் மேற்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் மூடல், பல முக்கிய நகரங்களில் வரும் இரயில் சேவைகள் புறப்படும் இடத்திலேயே இரத்து, இரவோடு இரவாகப் பல இளைஞர்கள் வீட்டில் வைத்துக் கைது, அபிஜித் தீப்கே விமானத்திற்குள்ளேயே கைது, இணையச் சேவைகள் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு முற்றிலும் நிறுத்தம், பல தலைவர்கள் கைது... என்று அரசின் அதிரடி நடவடிக்கைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்...

ஏன் அரசுக்கு இவ்வளவு பயம்? அச்சம்? அத்தனை பாதுகாப்பையும் உடைத்தெறிந்து, ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த முடியாவிட்டாலும், ஆங்காங்கே இளையோர் ஒன்று கூடி போராட்டத்தை நடத்தியுள்ளனர். சனநாயக உரிமைக்கான வேட்கை இங்கு தீப்பிழம்பாய் பரவியிருக்கிறது. அத்தனை காவலர்களுக்கும், துணை இராணுவ வீரர்களுக்கும் அஞ்சாமல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய தருணம், இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருக்கிறது. இதைப் பார்த்த பல சமூக ஆர்வலர்கள், இது இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கான தொடக்கம் என்று கூறுகின்றனர்.

ஏன் இவ்வளவு உணர்வுப்பூர்வமான எதிர்ப்பு? எந்தச் சக்தி இந்த இளையோரை இயக்க வைத்தது? சாதி, மதம், பாலினம் என்று பாராமல் அவர்களை இணைத்தது எது? என்று கேட்கும்பொழுது, கிடைக்கின்ற ஒரே பதில்: ‘ஒன்றிய அரசின் சர்வாதிகார முறை, அநீதியும், ஊழலும் நிறைந்த ஆட்சிமுறை, அதிகாரத்திற்காக அனைத்து மனித மதிப்புகளையும், உரிமைகளையும் சிதைக்கின்ற  அரசியல் ஆட்சிமுறை.’

நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், சனநாயக உரிமைகளையும் கடந்த 14 ஆண்டுகளாகச் சிறிது சிறிதாக நசுக்கி, சனநாயக விழுமியங்களைச் சாகடித்த இந்த ஆட்சி அகற்றப்பட்டே ஆகவேண்டும் என்று உறுதியுடன் வந்த இளையோர் படைதான் இவர்கள்! கொண்ட கொள்கையை உறுதியுடன் மனத்தில் ஏந்தி, கோரிக்கை நிறைவேறும்வரை போராடத் தலைநகர் வந்தவர்கள்தான் இவர்கள்!

இது ஒரு தீப்பிழம்பு; இது நாடு முழுவதும் பரவிக்  கொண்டிருக்கிறது.

இந்திய அரசியல் சாசனம்தான் இந்தியாவின் இதயம். அதுதான் நாட்டின் ஆட்சி முறைக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டி; அது என்ன சொல்கிறதோ அதன்படிதான் குடியரசுத் தலைவர் தொடங்கி, எல்லாருமே செயல்படவேண்டும். இதைத்தான் ‘சட்டத்தின் ஆட்சிமுறை’ என்கிறோம்.

இந்திய அரசியல் சாசனம், இந்தியாவைச் சனநாயகக் குடியரசு நாடாக அறிவித்திருக்கிறது. சமயச்சார்பற்ற சோசலிச உணர்வுடன் எல்லாரும் இணைந்து வாழ வழிவகுத்திருக்கின்றது. சமத்துவம், நீதி, சகோதரத்துவ உணர்வு போன்றவை இந்தியச் சமூகத்தின் அடிநாதமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் ஆட்சியை வலியுறுத்தும் இந்த அரசியல் சாசனம் மக்கள்தான் அதிகாரம், அவர்களுக்காகத்தான் அரசும், அரசின் செயல்பாடுகளும் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. அவரவருக்குரிய அல்லது அந்தந்த அமைப்புகளுக்குரிய அதிகாரத்தைப் பகிர்ந்து, சனநாயக முறையில் ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது. ஒன்றிய அரசுக்குச் சில அதிகாரங்கள், மாநில அரசுக்குச் சில அதிகாரங்கள், பஞ்சாயத்து மற்றும் ஊராட்சிக்கு ஒருசில அதிகாரங்கள் என்று அதிகாரங்களைப் பகிர்ந்து நிர்வாகம் செய்ய வழிவகுத்துள்ளது.

சட்டம் இயற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரம், அதைச் செயல்முறைப்படுத்த அரசு இயந்திரங்களுக்கு அதிகாரம், இதில் தவறுகள் நடக்கும்பொழுது, அதனைச் சீர்திருத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் என அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அமைப்புகளில் ஊழல் இல்லா நல்லாட்சி அமையும் என்பது இந்திய அரசியல் சாசனம் தரும்  நம்பிக்கை. அதிகாரக் குவிப்பு என்பது மன்னராட்சி; அதிகாரப் பகிர்வே மக்களாட்சி.

இன்றைய ஒன்றிய அரசின் அனைத்துச் செயல்பாடுகளும், இந்திய அரசியல் சாசனத்திற்குச் சார்பாக இருக்கின்றனவா?  எதிராக இருக்கின்றனவா? இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக என்ன நடக்கின்றது? அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் வைத்துக்கொண்டு, சனநாயகக் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறது. ஆளுநர்களை வைத்து, மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுத்து, தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

நிதியை நிறுத்திவைப்பது, ‘எங்கள் கொள்கையைப் பின்பற்றினால்தான் நிதி’ என்று மாநில அரசைச் செயல்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு ஒரு நீதி, அல்லாதவர்களுக்கு மற்றொரு நீதி என்று பாகுபடுத்திச் செயல்படுவது, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரிடையே மோதலை உருவாக்குதல், மதச்சண்டைகள், கலவரங்கள் என்று உருவாக்கி, ஒன்றும் அறியாததுபோல் நடந்துகொள்ளுதல், தன்னிச்சையாகச் செயல்படவேண்டிய நிறுவனங்களான தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள், தேசிய மற்றும் மாநில மகளிர், குழந்தைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையங்கள் போன்றவை அரசின் அங்கங்களாக மாறி, தத்தமது தனித்தன்மையை இழந்து, பட்ட மரமாக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றன.

இதுபோன்று தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய ஆணையம்தான் தேசிய தேர்தல் ஆணையம். அந்த ஆணையத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, அரசு சொல்வதுபோல் செயல்படத் தூண்டி, மக்களின் வாக்குரிமைகளைத் திருடி, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த அநீதியை எதிர்த்த போராட்டம்தான் இந்த இளையோரின் போராட்டம்.  13 கோடி வாக்காளர்களின் பெயர்களை SIR மூலம் நீக்கி, அவர்களது குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கிய தன் கோபக்கனல்தான் இந்தப் போராட்டம். மக்களை மதம், சாதி, இனம், மொழி, மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் பிரித்து ஆட்சி செய்த, அந்த ஆட்சிக்கு எதிரான நீதித் தீப்பிழம்புதான் இந்தப் போராட்டம்.

இந்தத் தீ - சனநாயகத் தீ! சுதந்திரத் தீ! உரிமைக்கான தீ! நீதி நியாயத்திற்கான தீ! இது இளையோர்  உள்ளத்திலிருந்து இயற்கையாக உதித்த இளமைக்கனல்! இந்தத் தீ, நேகா போராவின் முகத்தில் பிரகாசமாகத் தெரிகிறது. அவளது உயிர்த்துடிப்பை யாராலும் அணைக்கவும் அடக்கவும் முடியாது.

இந்த இளையோர் கற்றுத் தந்த பாடம்

1. ஆங்கிலேயரின் அடக்குமுறைதான் சாதி, மதத்தால், மொழியால் பிரிந்து கிடந்த இந்தியர்களைத் தட்டியெழுப்பி, ஒன்றிணைத்துப் போராடத் தூண்டியது; சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது. அதுதான் இன்று மறுவடிவத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது. பிரித்து, பிளவுபடுத்தி நடத்தும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது, சர்வாதிகாரம் ஒருபோதும் நிலைத்து நிற்க முடியாது என்பதற்கான முன்னெடுப்புதான் இந்தப் போராட்டம். மக்கள் அதிகாரம் முன் எந்த சர்வாதிகாரமும் வென்றதாக வரலாறு இல்லவேயில்லை.

2. ‘ஓட்டுத் திருட்டு’ என்பது ஒரு மனிதரின் தேர்ந்தெடுக்கும் சுதந்திர உரிமையைத் திருடுவதாகும். இது மாபெரும் அரசியல் குற்றமாகும். இது தூய்மைப்படுத்தப்படவேண்டும். மீண்டும் நேர்மையான, நியாயமான வாக்குச்சீட்டு முறை கொண்டுவரப்படவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

3. இந்திய அரசியல் சாசனம், ஓர் அற்புதமான அரசியல், சமூக, சட்ட வழிகாட்டி. அதனை ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டும்; உள்வாங்க வேண்டும்; அதனை வாழ்வாக்க வேண்டும். இதுதான் இன்று ஒன்றாய் - ஒருமுகமாய் ஒன்றிணைத்துப் போராடத் தூண்டியுள்ளது. இதனைக் கண்டு பதறிய அதிகார அமைப்பு அடக்குமுறையையும் அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆனால், இளையோர் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை முறையையும், இந்திய அரசியல் சாசனம் தந்திருக்கின்ற மனித உரிமை விதிமுறைகளையும் பின்பற்றுகின்றது. அரசு பொய்யை மறைக்க முயல்கிறது. இளையோர் உண்மையை உரக்கச் சொல்கிறார்கள். அரசு பிரிவினைவாதத்தைப் பயன்படுத்திப் பிரித்தாள, போராட்டத்தை நீர்த்துப்போக வைக்க  முயல்கிறது. இளையோரோ அனைத்துச் சனநாயகச் சக்திகளும் ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுக்கிறார்கள். இதில் எது சரியான, நேர்மையான, நீதிக்குரிய வழிமுறை? எது மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் வழிமுறை? உண்மையை உணர்ந்து, உடன் நின்று போராட வேண்டிய தருணமிது.

4. வீட்டில், பள்ளியில், வழிபாட்டுக்கூடங்களில் இந்திய அரசியல் சாசனம் வாசிக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு குடிமகனையும் குடிமகளையும் பாதுகாக்கும் அரண்.  இந்தியாவை இணைக்கின்ற ஒருவர் ஒருவரையும், ஒவ்வொரு மதத்தினரையும், சமூகக் குழுவினரையும் மதிக்கின்ற மாபெரும் சாசனமாகவும், இந்தியாவின் ஆன்மாவாகவும் திகழ்கிற அரசியல் சாசனத்தை ஒன்றிய அரசு, அழிக்கத் தொடங்கியது. அதன் விளைவு, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்தான் இந்த இளையோரின் போராட்டம். இதுதான் இன்று மாபெரும் அரசியல் பூகம்பமாக வெடித்திருக்கிறது.

அநீதிக்கும், மனித உரிமைகளுக்கும், சனநாயகத்திற்கு எதிரான கொள்கைகளுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டியது இந்தியர்களாகப் பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவரின் அறநெறிக் கடமையாகும்.

இதற்குக் கிறித்தவர்களும் விதி விலக்கல்லர். எதிர்ப்பைப் பதிவு செய்வோம். எதிர்காலத்தை நம் எல்லாருக்கும் நலமும் வளமும் அன்பும் அமைதியும் சமத்துவமும் மகிழ்ச்சியும் நிரம்பியதாக மாற்றியமைப்போம்.