“எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சுதந்திரமான பத்திரிகையையும் பேச்சுச் சுதந்திரத்தையும் நாம் உயர்த்திப் பிடிக்கவேண்டும்; ஏனெனில், பொய்களாலும் போலிச் செய்திகளாலும் ஒருபோதும் உண்மையை வெல்ல முடியாது.” அமெரிக்காவின் மேனாள் அதிபர் பாரக் ஒபாமாவின் இவ்வார்த்தைகள்தான் இவ்வேளையில் என் நினைவிற்கு வருகின்றன. ஒரு சுதந்திரமான ஊடகத்தின் ஆன்மா, அந்நாட்டின் பன்முக வளர்ச்சியில் மட்டுமே மையம் கொண்டிருக்கும். அவ்வூடகத்திற்கு அரசும் மக்களும் இரு கண்களாகவே போற்றப்படும்.
இந்திய
சனநாயகம் தனது 1966-ஆம் ஆண்டின் இந்திய பத்திரிகைக் குழுவின் (Press Council of India - PCI) தோற்றத்தைக் கொண்டாடும் விதமாக, நவம்பர் 16 அன்று ‘தேசியப் பத்திரிகையாளர் தினத்தை’ (National Press Day) கடைப்பிடிக்கிறது. கடந்த ஆண்டு இந்நாளுக்கான கருப்பொருளாக, ‘பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ எனச் சிந்திக்க அழைப்பும் விடப்பட்டிருந்தது. ஆனால்,
இத்தகைய கொண்டாட்டங்களுக்கும் உன்னதமான கோட்பாடுகளுக்கும் நடுவே, உண்மை உலகில் இன்றைய பத்திரிகைச் சுதந்திரத்தின் நிலை என்ன? அது எதிர்கொள்ளும் அரசியல் நெருக்குதல்கள், சட்டம் மற்றும் வன்முறை சார்ந்த அச்சுறுத்தல்கள் யாவை?
பத்திரிகைச்
சுதந்திரம் என்பது ஏதோ நவீன அரசியல்வாதிகள் நமக்களித்த சலுகை அல்ல; அது மனித உரிமைகளின் அடிப்படைத் தூண். கி.பி. 1695-இல்
பிரித்தானியாவில் நிலவிய ‘பத்திரிகை உரிமைச் சட்டம்’ திரும்பப் பெறப்பட்டதன் மூலம் ஐரோப்பாவில் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான முதல் வித்து தூவப்பட்டது. தொடர்ந்து 1766-ஆம் ஆண்டில் சுவீடன் நாடு உலகின் முதல் சட்டப்பூர்வ பத்திரிகைச் சுதந்திரச் சட்டத்தை இயற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
அவ்வாறே,
ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 19, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்விதத் தலையீடுமின்றி கருத்துகளைக் கொண்டிருக்கவும், எல்லைகளைக் கடந்து எந்தவோர் ஊடகத்தின் வாயிலாகவும் தகவல்களையும் சிந்தனைகளையும் தேடவும் பெறவும் பரப்பவும் உரிமை உண்டு’ எனப் பிரகடனம் செய்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்ற
வார்த்தை நேரடியாக இடம்பெறவில்லை என்றாலும், பிரிவு 19(1)(a) வழங்கும் ‘பேச்சு
மற்றும் கருத்துச் சுதந்திரத்தின்’ கீழ்
இஃது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய
ஊடக வரலாற்றில் “ரோமேஷ் தாப்பர் - மெட்ராஸ் மாநில அரசு (1950)” வழக்கு மிக முக்கியமானது. இவ்வழக்கில்தான், ‘அனைத்து சனநாயக அமைப்புகளுக்கும் சுதந்திரமான ஊடகமே முதன்மையான அடித்தளம்’
என்பதை உச்ச நீதிமன்றம் முதன் முறையாகத் தெளிவுபடுத்தியது. அதேபோல், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் - இந்திய ஒன்றியம்’
வழக்கின் தீர்ப்பில், “இன்றைய சுதந்திரமான உலகில், பத்திரிகைச் சுதந்திரமே சமூக மற்றும் அரசியல் உரையாடல்களின் இதயத்துடிப்பாகும்; குறிப்பாக, தொலைக்காட்சி மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்துச் சமூகத்தினருக்கும் சென்றடையாத வளரும் நாடுகளில், மக்களுக்கான கல்வியைப் புகட்டும் ஆசானாக ஊடகங்களே செயல்படுகின்றன; அரசுகளுக்குக் கசப்பான உண்மைகளை வெளிக்கொணர்வதே பத்திரிகைகளின் தலையாயக் கடமையாகும்” என்று
சுட்டிக்காட்டியுள்ளார்
உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடராமையா.
இருப்பினும்,
அரசமைப்பின் பிரிவு 19(2)-இன் கீழ் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அவதூறு வழக்குகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நியாயமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அரசமைப்புச்
சட்டம் அளித்துள்ள பாதுகாப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் களத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தினமும் தங்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பணயம் வைத்தே உண்மையை வெளிக்கொணர்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன. பெங்களூருவில் தனது இல்லத்தின் முன் படுகொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (2017), தனது ‘கவுரி லங்கேஷ் பத்திரிகே’
நாளிதழ் வழியே தீவிரவாதச் சிந்தனைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் எழுதியதற்காகப் பலியானார். பீகார் மாநிலத்தில் மணல் மாஃபியா மற்றும் கள்ளச் சாராயக் கும்பல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செய்தி சேகரித்து வந்த நிருபர் சுபாஷ் குமார் மஹதோ (2022) சுட்டுக் கொல்லப்பட்டார். ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழின் தெற்காசியப் பிரிவுத் தலைவரான டேனியல் பேர்ள் (2002), பயங்கரவாதக் குழுக்களின் பின்னணியை ஆய்வு செய்ய முயன்றபோது கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2017 முதல் 2021 வரையிலான
ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 138 தாக்குதல் வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு, 48 பேர் தாக்கப்பட்ட நிலவரம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பின்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பத்திரிகைத்
துறைக்கு வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்கள் ஒருபுறமென்றால், துறைக்குள்ளேயே உருவாகியுள்ள ‘வணிகமயமாக்கல்’ மற்றும்
‘அரசியல் சார்பு நிலை’ ஊடகச் சுதந்திரத்தை உள்ளிருந்தே சீர்குலைத்து வருகின்றன.
போதிய
ஊதியமில்லாத சூழலைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட அரசியல்வாதிகள் அல்லது குற்றப் பின்னணி கொண்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு போலி பிம்பங்களை உருவாக்கும் ‘கட்டணச் செய்திகள்’
சனநாயகத்தின் நம்பிக்கையைச் சீரழிக்கின்றன.
தேர்தல்கள்
மற்றும் முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது,பெரு நிறுவனங்கள் மற்றும் ஆளுங் கட்சியின் தயவை நாடிச் செய்திகளைத் திரித்து வெளியிடும் சாய்வுநிலைப் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், இன்றைய எண்மத் தொழில்நுட்ப யுகத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’
ஊடகத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ‘டீப்ஃபேக்’
(Deepfake) தொழில்நுட்பமும், தானியங்கி அல்காரிதம்களும் போலிச்செய்திகளை உண்மை போலத் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஓர் இயந்திரத்தால் மனிதனின் அறவுணர்வையும் இரக்கக் குணத்தையும் ஈடுசெய்ய முடியாது என்பதே கசப்பான உண்மையாகும்.
சமூக
நீதியையும் மனித மாண்பையும் மையமாகக் கொண்ட ஒரு சில பத்திரிகைகள் மட்டுமே சமூகப் போதனைகள், பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் உண்மையை வெளிக்கொணரும் ஊடகங்களின் கடமையைப் பெரிதும் வலியுறுத்துகின்றன.
அண்மையில்
திருத்தந்தை லியோ அவர்கள் தனது ‘மகத்தான மானுடம்’ (Magnifica
Humanitas) எனும் சுற்றுமடலில் குறிப்பிட்டதுபோல, “ஊடகங்களும் தொழில்நுட்பங்களும் மனிதகுலத்தின் ஒன்றிணைப்பிற்கும், ஏழை எளிய மக்களின் குரலை எதிரொலிப்பதற்குமே பயன்படவேண்டுமே தவிர, அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கான கருவிகளாக அவை மாறக்கூடாது.”
அடிமைப்பட்ட
மக்களின் குரலாய் ஒலிப்பதும், ஆள்வோரை நோக்கி நேர்மையான கேள்விகளைக் கேட்பதுமே ஒரு சமூக அக்கறையுள்ள இதழியலின் முதன்மைக் குறிக்கோளாகும். தாமஸ் ஜெஃபர்சன் குறிப்பிட்டதுபோல, “அனைவருக்குமான ஒரே பாதுகாப்பு ஒரு சுதந்திரமான பத்திரிகையில் மட்டுமே உள்ளது.”
ஆகவே,
பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஏதோ பத்திரிகையாளர்களுக்கு மட்டும் உரித்தான தனிப்பட்ட சுதந்திரம் அல்ல; அது இந்நாட்டின் சாதாரணக் குடிமகன் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும், அரசுக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்குமான மக்களின் சுதந்திரக் களம்!
இவ்வேளையில்,
அரசு மற்றும் நீதித்துறை சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. குறிப்பாக, களத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள் மற்றும் பொய் வழக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தனித்துவமான ‘பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம்’ (Journalists
Protection Act) இயற்றப்படவேண்டும். கட்டணச் செய்திகள் மற்றும் போலிச் செய்திகளைத் தடுக்கும் வகையில் இந்தியப் பத்திரிகைக் குழுமத்திற்கு (Press Council of India) கூடுதல் அதிகாரங்களை வழங்கவேண்டும். அவ்வாறே, ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மையையும், கட்டாய அறநெறிகளையும் பின்பற்றச் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும்.
இறுதியாக,
உண்மையைப் பேசுபவர்களின் குரல்கள் வன்முறையாலும், அதிகாரத்தின் சட்டங்களாலும் நசுக்கப்படுமேயானால், அது சனநாயகத்தின் நான்காம் தூண்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சனநாயகக் கட்டமைப்பையுமே வீழ்த்தி விடும். எனவே, அச்சமற்ற, நேர்மையான பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதிசெய்வோம்; மக்களின்
நலமான, வளமான வாழ்வுதனை உறுதிசெய்வோம்!
முதன்மை ஆசிரியர்