மகிழ்ச்சியை விற்பனைப் பொருளாக்கி, ஆசைகளைத் தேவைகளாக மாற்றி, கொண்டாட்டங்களைக் கடன் சுமையாக மாற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் அரசியலை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய நேரம் இது.
ஒரு
விவசாயி தனது கிணற்றில் ஒரு பெரிய பாலாடைக் கட்டியைப் போட்டார். அதன் வாசனையால் ஈர்க்கப்பட்ட எலிகள் கூட்டங்கூட்டமாகக் கிணற்றுக்குள் குதித்து, உணவைப் பகிர்ந்து உண்ணத் தொடங்கின. உழைப்பின்றி உணவு கிடைத்த மகிழ்ச்சியில் அவை திளைத்தன. உணவு தீர்ந்துபோகும், வெளியேற முடியாமல் தவிக்க நேரிடும் என்பதை அவை சிந்திக்கவில்லை. நாள்கள் கடந்தன. உணவு தீர்ந்தது. கிணற்றின் வழவழப்பான சுவர்களில் ஏறி வெளியேற முடியவில்லை. அவைகளுக்குப் பசி என்பது மிகக் கொடுமையானது. உயிர் வாழ்வதற்காக எலிகள் ஒன்றையொன்று தாக்கத் தொடங்கின. பலவீனமானவை வலிமையானவற்றிற்கு இரையாகின. இறுதியில் மற்ற எலிகளை அழித்துத் தின்ற ஒரே ஓர் எலி மட்டும் எஞ்சியது. விவசாயி அதைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துவிட்டார். ஆனால், அங்கே உயிர் வாழ்வதற்காகக் கற்றுக்கொண்ட வன்முறையை அந்த எலி வெளியுலகிலும் தொடர்ந்தது. இது ஒரு கற்பனைக் கதையாக இருக்கலாம். ஆனால், அதன் குறியீட்டு அர்த்தம் ஆழமானது.
எளிதில்
கிடைக்கும் இன்பத்தின் பின்னால் மறைந்திருக்கும் பொறியை உணரத் தவறினால், ஒரு கட்டத்தில் நாம் நம்மைச் சார்ந்தவர்களாலேயே
அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம். இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கும் சமூக உளவியலைப் புரிந்துகொள்ள இந்தக் கதை நமக்கு ஓர் உருவகமாக அமைகிறது.
திருவிழாக்கள்
மனிதர்களை இணைக்க வேண்டியவை. ஆனால், நுகர்வுக் கலாச்சாரம் அவற்றைச் சந்தையின் விற்பனைக் காலங்களாக மாற்றிவருகிறது. தீபாவளி நெருங்கினால் போதும், ஆடை விளம்பரங்கள், நகைக்கடைச் சலுகைகள், பட்டாசு விற்பனைகள், மின்னணுப் பொருள்களின் தள்ளுபடிகள் எனச் சந்தை முழு வீச்சில் இயங்கத் தொடங்குகிறது. “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!”, “இரண்டு வாங்கினால் மூன்று!”, “இந்தத் தீபாவளிக்கு நீங்கள் வாங்கியே ஆகவேண்டும்!”, “புதிய ஆடையின்றித் தீபாவளியா?” - இவை வெறும் விற்பனை வாசகங்கள் அல்ல; மக்களின் ஆசைகளைத் தூண்டி, அவர்களுடைய மனநிலையை நுகர்வை நோக்கித் திருப்பும் உளவியல் உத்திகள்.
ஒரு
பொருள் தேவையா? என்பதைவிட, அதை வாங்காவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது. நமது வருமானம் எவ்வளவு என்பதைவிட, அடுத்த வீட்டினர் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்ற ஒப்பீடு முன்னிலைக்கு வருகிறது. சந்தை முதலில் ஆசையை உருவாக்குகிறது; பின்னர் அந்த ஆசையைத் தேவையாக உணரச்செய்கிறது; இறுதியில், அதை நிறைவேற்றுவதே மகிழ்ச்சி என்று நம்ப வைக்கிறது. இதுவே நுகர்வுக் கலாச்சாரத்தின் நுட்பமான அதிகாரம்.
அன்றாடக்
கூலியை நம்பி வாழும் தொழிலாளி, குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் பெண், கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயி, மாதச் சம்பளத்தில் வீட்டு வாடகையையும், குழந்தைகளின் கல்விச் செலவையும் சமாளிக்கும் நடுத்தரக் குடும்பம் எனப் பலரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே வாழ்கிறார்கள். இவர்களிடம் சந்தை கூறுவது ஒன்றுதான்: ‘இன்னும் வாங்குங்கள்; இன்னும் செலவழியுங்கள்; அப்போதுதான் உங்கள் விழா முழுமையடையும்!’ சிலர் தங்களின் சக்திக்கு மீறிச் செலவழிக்கிறார்கள். கையில் பணமில்லாதபோது கடன் வாங்குகிறார்கள், கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள் (Credit Cards). தவணை முறைகளில் பொருள்களை வாங்குகிறார்கள் (EMI).
விழா முடிந்துவிடுகிறது; கடன் தொடர்கிறது; பட்டாசுகளின் ஒலி அடங்கிவிடுகிறது. ஆனால், பொருளாதார நெருக்கடியின் ஒலி குடும்பத்திற்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
இங்கே
ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவேண்டும். வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கின்றன. நுகர்வோர் தங்கள் செலவுகளை அதிகரிக்கிறார்கள். ஆனால், அந்தச் செலவுகளின் நீண்டகால விளைவுகளைச் சுமப்பது பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களே.
‘இலவசத்தை இழந்துவிடுவோமோ?’ என்ற அச்சம், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை, உடனடி மகிழ்ச்சிக்கான விருப்பம் ஆகியவற்றை வணிகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. தேவையற்றப் பொருளைக்கூட தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வாங்குகிறோம். விலை குறைந்திருக்கிறது என்பதற்காகச் செலவழிப்பதைச் சேமிப்பு என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். ஆனால், தேவையற்றப் பொருளை வாங்கும்போது கிடைக்கும் தள்ளுபடி நமக்கான ஆதாயமல்ல; செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை இழப்பதற்கான வேறொரு வழி!
திருவிழாக்கள்
உறவுகளைப் புதுப்பிக்க வேண்டியவை. ஆனால், இன்று பல இடங்களில் உறவுகளின்
மதிப்பைக்கூடப் பொருள்களின் விலை நிர்ணயிக்கத் தொடங்கியுள்ளது. யார் அதிக விலையுள்ள ஆடைகளை அணிகிறார்கள்? யார் அதிகமான பரிசுகளை வழங்குகிறார்கள்? யாருடைய வீடு அதிகமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது?
இந்தக் கேள்விகள் மனிதர்களுக்கிடையே தேவையற்ற ஒப்பீட்டை உருவாக்குகின்றன. அன்பை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, செலவழித்த பணத்தின் அளவைக் காட்டவேண்டிய கட்டாயம் உருவாகிறது. மகிழ்ச்சியை அளவிடுவதற்கான அளவுகோலாகப் பொருள்கள் மாறும்போது, நம்மிடம் இருப்பதை அனுபவிப்பதற்கான திறனை இழக்கிறோம். அன்பை அனுபவிப்பதற்குப் பதிலாகப் பரிசுகளைப் பற்றி எண்ணுகிறோம். உறவுகளைப் பேணுவதற்குப் பதிலாகச் செலவுகளை ஒப்பிடுகிறோம்.
திருத்தந்தை
லியோ, “மனித மாண்பு என்பது ஒருவருடைய திறமைகள், செல்வம் அல்லது வாழ்வில் அவர் வகிக்கும் நிலை ஆகியவற்றையோ, அவர் எடுக்கும் சரியான அல்லது தவறான முடிவுகளையோ சார்ந்ததல்ல; மாறாக, அது ஒவ்வொரு மனிதருக்கும் முன்கூட்டியே வழங்கப்பட்டு, அவருடைய எல்லைகளையும் தாண்டி நிலைத்திருக்கும் ஓர் இறைக்கொடை. இது இறைவன் தமது என்றும் மாறாத அன்பின் வெளிப்பாடாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கிய கொடையாகும்” (Magnifica Humanitas, 50) என்கிறார்.
பொருள்களை
வாங்குவதால் கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சியை நிரந்தரமான மகிழ்ச்சியாக நம்புகிறோம். வருமானம் குறைந்தாலும் செலவுகளைத் தொடர்கிறோம். கடன் அதிகரித்தாலும் நுகர்வைக் குறைக்கத் தயங்குகிறோம். இறுதியில், பொருளாதார நெருக்கடி உருவானதும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டத் தொடங்குகிறோம். இங்கு பிரச்சினையைத் தனிநபர்களின் ஆசைகளில் மட்டும் சுருக்கிவிட முடியாது. குறைந்த வருமானம், விலைவாசி உயர்வு, நிலையற்ற வேலைவாய்ப்பு, சமூக அழுத்தம், விளம்பரங்களின் தாக்கம் எனப் பல காரணிகள் ஒன்றோடொன்று
பின்னிப் பிணைந்துள்ளன.
கொண்டாட்டங்களை
மறுப்பது நமது நோக்கமல்ல; கொண்டாட்டங்களின் பெயரால் உருவாக்கப்படும் பொருளாதாரக் கட்டாயத்தைக் கேள்விக்குள்ளாக்குவதே நம் நோக்கம். நமது வருமானத்திற்கு ஏற்ற வகையில் விழாவைக் கொண்டாடலாம். தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். குழந்தைகளுடன் நேரம் செலவிடலாம். அண்டை வீட்டாருடன் உணவைப் பகிரலாம். உதவி தேவைப்படும் குடும்பங்களுடன் நமது மகிழ்ச்சியையும் வளங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.
சந்தை
உருவாக்கும் தேவையற்ற ஆசைகளிலிருந்து விடுபட்டு, நமது மகிழ்ச்சியை நாமே வரையறுக்கக் கற்றுக்கொள்வோம். தீபாவளி வீடுகளை மட்டுமல்ல, சிந்தனைகளையும் ஒளிரச் செய்யட்டும். உறவுகளை இணைக்கட்டும்; அன்பைப் பெருக்கட்டும்; பகிர்வை வளர்க்கட்டும். தீபத்தின் ஒளி பணக்காரர்களின் கடைகளில் மட்டும் பிரகாசிக்காமல், ஏழைகளின் இல்லங்களிலும் ஒளிரட்டும். அதுவே உண்மையான தீபாவளி!