‘மாலை முழுவதும் விளையாட்டு’- பேச்சுப் போட்டிக்கான தலைப்பு இது. தலைப்பை வாசித்தவுடனே மனத்தில் ‘சில்’லென்று ஒரு சுகமான உணர்வு. மனம் இலயித்துப் போனது. ‘ஆகா! என்ன ஓர் அருமையான பாடல் வரி! இந்தப் பாடல் வரிக்கே இத்தனை மகிழ்ச்சியா? மாலை நேர விளையாட்டு அளவில்லா மகிழ்ச்சி தருமா?’ உடனே வடிந்தது மகிழ்ச்சி. காலைக்கும் மாலைக்கும் வித்தியாசம் அறியாத உலகில்தான் குழந்தைகளாகிய நாங்கள் வாழ்கிறோம்.
விடியற்காலை
ஐந்து மணியின் இருட்டான நேரத்தில் கண்விழித்து, கணக்குச் சிறப்பு வகுப்பிற்குப் போகவேண்டும். ஆறரை ஆகிவிட்டதா... எடுடா ஓட்டம்... இயற்பியல் வகுப்பிற்கு. ஏழு முப்பதிற்கு வீட்டிற்கு வருவதுதான் தெரியும்; எட்டு முப்பதிற்குப் பள்ளிக்கூட வாசலில் நிற்கவேண்டும். மாலை 5.30-க்கு வீடு திரும்புகையில் மீண்டும் சிறப்பு வகுப்புகள்.
‘போட்டியான உலகமடா! மகனே, மகளே... ஓடு ஓடு’ என்று துரத்தும் பெற்றோர். மாலை நேரம் மீண்டும் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்புகையில், காலையில் தூக்கக் கலக்கத்தில் பார்த்த வீட்டு உறுப்பினர்கள் மங்கலாகத் தெரிவர். அதே தூக்கக் கலக்கத்தோடு படுக்கையில் வீழ்ந்தால் மறுநாள் காலை 4.30-க்குக் கண் திறக்கும். இதுதான் இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலை.
குழந்தைப்
பருவ விளையாட்டுகளைத் தொலைத்து, மகிழ்ச்சியைப் புதைத்து, எங்களின் ஆளுமைப் பண்புகளை மறந்து, கட்டாயத்தின் பேரில் எங்களது ஆசைகளைத் துறந்த இளம் பருவத் துறவிகள்தாம் நாங்கள்.
இன்று
மட்டும் பாரதி தாத்தா இருந்திருந்தால் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்’
என்று மீண்டும் தலையிலடித்துப் பாடியிருப்பார். பேச்சுப் போட்டிக்கான கருத்தைச் சிந்திக்க ஆரம்பித்தேன்.
‘ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது
பாப்பா
கூடி
விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை
வையாதே பாப்பா!’
என்ற
பாடல் வரிகளைப் பாடிப் பார்த்தேன். எதற்காக பாரதி தாத்தா இப்படிப் பாடினார்?
ஓடி
விளையாடு - உன் உடல் ஆரோக்கியம் பெருகும். கூடி விளையாடு - நீ கற்றுக்கொள்ளும் செய்திகள் ஏராளம்
ஏராளம். குழந்தையை
வையாதே - விட்டுக்கொடு, வளைந்து கொடு என்று தனிப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் உடல் ஆரோக்கியமும், ஆளுமைப் பண்புகளும் விளையாட்டுகளில் உள்ளன என்பதை பாரதி தாத்தா நான்கு வரிகளில் கூறிவிட்டார். ஆனால், இன்றைய பெரியோர் இதை மறந்தும் மறுத்தும் போனார்கள்.
குழந்தைப்
பருவக் கனவுகளை,
மகிழ்ச்சியை எவ்வளவோ தொலைத்துவிட்டோமே என்று நினைக்கையில் கண்ணீர் பெருகியது. என் கண்ணீரை நான் துடைக்கும் முன், ஒரு கை வந்து கண்ணீரைத்
துடைத்தது. திரும்பிப் பார்த்தால் பாரதி தாத்தா. ‘தாத்தா’ என்று ஆரத் தழுவினேன். ‘வா என்னோடு’ என்று என்னைக் கூட்டிச்சென்றார். குதூகலமாய்ப் பிள்ளைகள் விளையாடும் ஒரு மைதானத்திற்குக் கூட்டிச்சென்றார். “போ, மாலை முழுவதும் விளையாடு; போய் விளையாடு”
என்றார் மீசையை முறுக்கியபடி.
நொண்டி
விளையாடும் இடத்திற்குச் சென்றேன். ஒரு காலில் நின்றுகொண்டு நொண்டி, நொண்டி பிறரைத் தொட்டு வெளியேற்ற வேண்டும். உடல் வியர்க்க விளையாடித் திரும்பும் போது ‘பூப்பறிக்க வருகிறோம்’
என்ற குரல்கள் என்னைக் கவர்ந்தன. பாரதி தாத்தாவைத் திரும்பிப் பார்த்தேன். “ம்... போய் விளையாடு”
என்று தலையாட்டினார். பூக்களின் பெயர் கூறி, கேள்விகள் கேட்டு பலப்பரீட்சை விளையாட்டாய் விளையாடித் திரும்புகையில்
கண்ணாமூச்சி, ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, பாண்டி, தாயம், பல்லாங்குழி என விளையாடிக் களைத்துப்போய்
பாரதி தாத்தா கரங்களைப் பிடித்தபோது, “ஆசை தீர விளையாடினாயா?” என்று கேட்டார். மூச்சு வாங்க “ஆமாம் தாத்தா” என்று மகிழ்ச்சியாய்க் கூறினேன்.
“ஒவ்வொரு விளையாட்டிலும் நீ என்ன கற்றுக்கொண்டாய்
சொல்?” என்று கேட்டார்.
“நொண்டி விளையாட்டில் ஒரு காலை இழந்த மனிதர்களை நினைத்தேன்; ஆனாலும், இழந்ததை நினைக்காது, இருப்பதில் சாதிக்கலாமே என்ற மனவலிமை வந்தது. ‘பூப்பறிக்க வருகிறோம்’
குழு ஒற்றுமையையும் நம் உடல் உறுதியையும் உணர்த்தியது.‘கண்ணாமூச்சி’குறிக்கோளை
அடையும் விவேகத்தையும், ‘ஒரு குடம் தண்ணீர் ஊற்றி’ விளையாட்டுச் சுறுசுறுப்பையும், ஆடு புலி ஆட்டம் என்னைத் தற்காத்துக்கொள்ளும் பயிற்சியையும், பல்லாங்குழி, ‘ஒத்தையா? இரட்டையா?’ விளையாட்டுகள் மனத்தால் கணக்கிடும் அறிவுக் கூர்மையையும் வளர்க்கின்றன” என்றேன்.
“இப்படி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பண்புகளையும் கற்றுத் தருவதால்தான் மாலை முழுவதும் விளையாட்டைப் பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என்று பாடினேன்”
என்றார் பாரதி தாத்தா. இறுதியில் “நீ தற்போது கற்கும்
கல்வி இதையெல்லாம் கற்றுத் தருகின்றதா?” என்று கேட்டார்.
“தாத்தா,
இந்தக் கேள்வியை நீங்கள் எங்கள் சமுதாயப் பெரியவர்களிடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றேன். அவரும் சிரித்துக்கொண்டே என்னைத் தட்டிக்கொடுத்தபடி விடைபெற்றார்.
பாரதி
தாத்தா சென்ற பிறகு சிந்தித்தேன். இன்றைய கல்வித் திட்டத்தில் விளையாட்டிற்கான நேர ஒதுக்கீடு மிகக் குறைவே. விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளும் வாழ்க்கை மதிப்பீடுகள் ஏராளம். ஆனால், இன்று அதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் இன்றைய குழந்தைகள் மின்னணு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டும் கெடுவதில்லை; சிந்தனையைச் சிதைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குழந்தைகளுக்கே உரிய குழந்தைத்தனத்தை, குழந்தைப் பருவத்திற்குரிய விளையாட்டுகளை, மகிழ்ச்சியைத் தொலைத்ததால்தான் இன்றைய குற்றவியல் சீர்திருத்தப் பள்ளிகளில் பல குழந்தைகள் கைதிகளாய்
உருவாகும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஆம்,
இன்று மாலை நேர விளையாட்டுகள் சாலைகளிலும் இல்லை, பள்ளிகளிலும் இல்லை. இன்றைய கல்விக்கு ஒரே ஓர் இலக்கு மட்டுமே - அது
மதிப்பெண்! கடிவாளமிட்ட பந்தயக் குதிரைகளாகக் குழந்தைகளைக் கல்வித்திட்டம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மன
இறுக்கத்தைக் களைந்து, உடல்-உள்ள ஆரோக்கியத்தைத் தந்து, சகோதரத்துவத்தையும் மனவுறுதியையும் அறிவையும் வளர்க்கும் மாலை நேர விளையாட்டைக் குழந்தைகளின் நல் வாழ்விற்காக, சமுதாய மேன்மைக்காகக் கல்வித் துறையும் பெரியவர்களும் பொறுப்பேற்று ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என்ற பாரதி தாத்தாவின் வரிகளுக்கு மதிப்பளிப்பதே குழந்தைகள் நலனில் நாம் செலுத்தும் உண்மையான அக்கறை.
குழந்தைகளைக்
குழந்தைகளாய் பார்ப்போம். அப்பருவத்திற்கே உரிய தன்மைக்கு மதிப்பளிப்போம்; நாளைய நாட்டின் நல்ல தலைவர்களாய் குழந்தைகள் வலம்வர, இன்று
அதற்கான மதிப்பீடுகளை விளையாட்டின் வழி கற்றுக்கொடுக்க உறுதி
கொள்வோம்.