மனித மூளை 8,600 கோடி நரம்பணுக்கள் (Neurons) கொண்டு, மின் சமிக்ஞைகள் மூலம் சிந்திக்கிறது, தகவல்களைச் சேமிக்கிறது, பரிமாறுகிறது, நினைவில் பதிந்துகொள்கிறது.
மனித
மூளைக்கு நிகர் தொழில்நுட்பங்கள் எதுவுமில்லை என்ற வலுத்த வாதம் இன்றும் உள்ளது. இன்று ‘ஏஐ’ தொழில்நுட்பம் மனித மூளையின் வேலையை இயந்திரங்கள் வழி செய்ய அடிகோலுகிறது. தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகிறது. தானியங்கிமயமாக்கலால் ‘ ஏஐ’ சுயமாகச் சிந்திக்கிறது. ஆனால், ‘ஏஐ’ அதிக மின்சாரத்தையும் தண்ணீரையும் உட்கொள்கிறது என்பதே குறைபாடு. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியில் மட்டுமே இயங்கக்கூடிய அளவிட முடியாத அறிவுச் சுரங்கமாய் அமைந்துள்ளது.
20-ஆம்
நூற்றாண்டில் விஞ்ஞானம், நாகரிகம், மனிதநேயம் வளர்ந்துள்ளன. இன்றைய ‘ஏஐ’ காலத்தில்
பின்னோக்கிக் கற்காலத்திற்கு நகர்த்தும் பழமைவாதிகளின் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலிக்கிறது. ஒரு காலத்தில் மனிதர்களின் மதநம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் மனுதர்மம் என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணங்கள், தேவதாசி முறை எனும் கொடிய சமூக அடக்குமுறைகள் மக்களை வாட்டி வதைத்தன. ஆங்கிலேய அரசு கடுமையான முறையில் சட்டம் இயற்றி மக்களை உரிமைக் குடிமக்களாக்கி வாழ வைத்தது.
பொது
சிவில் சட்டத்தை மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை
ஒன்றிய உள்துறை
அமைச்சர் அமித்ஷா முன்வைத்தார். மனுதர்மத்தை அடிநாதமாகக் கொண்ட பொது சிவில் சட்டத்தில் ஒழிக்கப்பட்ட சமூகக் கொடுமைகளைத் தனிமனித விருப்பம் இருந்தால் செய்து கொள்ளலாம் என விலக்கு
வழங்கப்படுகிறது.
தனி மனித உரிமையான வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது அதில் இழையோடும் முரணாகும்.
இந்திய
ஒன்றியத்தில் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்கள் மதமாற்றத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டன. மதம் மாறிய திருமணங்கள் சட்ட விதிகளின்படி கடுமையான தண்டனைக்குரியவை என்பதால் பா.ச.க.
அரசுகளின் மறைமுகச் செயல்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப்
பின் பா.ச.க.
என்ற வார்த்தையே தமிழ்நாட்டில் பேசப்படவில்லை. தமிழ்நாட்டில்
பாரதிய சனதா கட்சியானது அரசியல் தளத்தில் முழுவீச்சாகச் செயல்படவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். வழக்கம்போல் பின்வாசல் வழியாகத் தன் மனுதர்மத்தைத் தூக்கிப்பிடிக்கும் வேலையைத் தொடர்கிறது.
29-07-2026 அன்று ஏமி கார்மைக்கேல் எனும் மறைபரப்புப் பணியாளரின் 125-ஆம் ஆண்டிற்கான நினைவு நாள் டோனாவூரில் நடந்தது. இவ்விழாவில் பேசியவர்கள் முத்து லெட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் ‘தேவதாசி’ முறையைத்
துணிச்சலோடு எதிர்த்துப் போராடியதை நினைவுகூர்ந்தார்கள். கூடவே ஏமி கார்மைக்கேல் தேவதாசி முறையை எதிர்த்துப் போராடியதோடு, நூற்றுக்கணக்கான குழந்தைகளையும் அபலைப் பெண்களையும் மீட்டார் என்பது வரலாறு; இவரது வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என ஆதங்கப்பட்டுள்ளார்கள்.
இவ்விழா
நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின் 2026, செப்டம்பர் 19 அன்று சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி.
நகர் கவிக்கோ மன்றத்தில் ‘தெய்வ நாயகி’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. ‘தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது சரியா? தவறா?’ எனும் நூற்றாண்டு காலப் பெண் விடுதலை குறித்த புதிய கேள்விகளை மரபார்ந்த எதிர்முறையில் பேசினர். ‘தேவதாசியர் போற்றப் படத்தக்கவர்கள்; அதை ஒழித்து விட்டார்கள்’ என
இக்கருத்தரங்கில் பேசப்பட்டது. சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு சமூகக் கொடுமையினைத் தூக்கிப்பிடிக்கும் இவர்கள், காவி வண்ணம் பூசப்பட்ட சனாதனவாதிகள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
நாம்
தேவதாசி முறை
ஒழிப்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பங்களிப்பை இங்கு காண்போம்:
மூவலூர்
இராமாமிர்தம் அம்மையார் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரைத் தத்தெடுத்த ஆச்சிக்கண்ணு எனும் தேவரடியார் இவருக்கு ஆடல், பாடல், இசை ஆகியவற்றில் பயிற்சி அளித்தார். இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி வாழ்க்கையை வெறுத்தார், மறுத்தார். தேவதாசிப் பெண்களைச் சந்தித்து விழிப்புணர்வு தந்தார். அவர்கள் விடுதலை பெற உதவினார். விடுதலை பெற்றவர்களைப் பாதுகாத்தார்.
இதனால்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அம்மையார் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது கூந்தல் அறுக்கப்பட்டது. அவருக்குப் பாலில் நஞ்சு கொடுத்து கொலை செய்ய முயற்சி நடந்தது. 1936 -ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ எனும் நூல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்நூல் தேவதாசிப் பெண்களின் வாழ்வு, அவர்களைச் சுற்றிய புரவலர் சார்ந்த பொருளாதாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மூவலூர்
இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராகத் தெருக்களில் இறங்கிப் போராடினார். அதேகாலத்தில், முத்து லெட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை எதிர்த்துப் போராடினார். இவர் தேவதாசி சமூக
மரபில் வந்தவர். தன் வீட்டிலேயே தேவதாசி முறைக் கொடுமைகளை அறிந்தவர். கடும் எதிர்ப்பிற்கு இடையே புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் புதுக்கோட்டை சனாதனவாதிகளின் எதிர்ப்பை மீறி, 1947-இல் தேவதாசி முறை ஒழிப்பு சட்டமானது.
சமூகத்தில்
ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை என்ன? என்பதைப் புதிய தலைமுறையினருக்கு விளக்குதல் நம் அடிப்படைத் தார்மீகக் கடமையாகும். தேவ+தாசி என்பது
கடவுளுக்குச் சேவை செய்ய சிறுவயதிலேயே பெண் குழந்தைகளைக் கோவிலுக்கு அர்ப்பணிப்பதாகும். இவர்கள் இயல், இசை, நாடகம் வழியாக இறைத் தொண்டாற்றுவார்கள். இவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதியில்லை. இவர்கள் அரசர்கள், ஜமீன்தாரர்கள், பெரும் நிலக்கிழார்கள், செல்வந்தர்கள், கோவில் பூசாரிகள். கோவில் பணியாளர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது கொடுமையாகும். சில தேவதாசிகள் வறுமையில் வாடியதாகவும் வரலாறு கூறுகிறது.
தேவதாசி
முறையில் ‘பொட்டுக் கட்டுதல்’
என்பது அடிப்படைச் சடங்காகும். சடங்குகள் ஊர் எல்லையில் உள்ள கோவிலில் நடக்கும். 8 முதல் 12 வயதுள்ள பெண்ணைத் தெய்வத்திற்கு ‘திருமணம் செய்து வைப்பதாக’
சடங்குகள் அமையும். கோவில் பூசாரி அந்தப் பெண்ணுக்குத் தாலி, பொட்டு, மஞ்சள் கயிறு, வளையல் என வரிசையாக அணிவிப்பார்.
அன்றிலிருந்து அந்தப் பெண் ‘தெய்வத்தின் மனைவி!’ அவள் இனி சாதாரண மனிதனைத் திருமணம் செய்ய முடியாது என்பது ஐதிகம்.
தேவதாசிகள்
பொட்டுக் கட்டிய பின் வறுமை காரணமாகவோ, சமூக அழுத்தம் காரணமாகவோ தவறான பாதைக்குச் சென்றது தேவதாசி முறையின்
பரிதாபமான மறுபக்கமாகும். பொட்டுக் கட்டினால் 3-5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என அரசு
இயற்றிய சட்டங்கள் கூறுகின்றன.
இன்று
தமிழ்நாட்டில் ‘தேவதாசி முறை’ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க ஒரு மேல் சாதியினரின் சமூகக்
குரல்கள் சென்னையில் எழுந்ததாலேயே இக்கட்டுரை எழுதப்பட்டது.
கர்நாடக
அரசின் 2022-ஆம்
ஆண்டுக் கணக்குப்படி 70,000 பொட்டுக் கட்டப்பட்ட பெண்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டிலும் சில மடங்கள், சில சமூகக் குழுக்களிடம், சில கிராமங்களில்... அதாவது, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொட்டுக் கட்டுதல் இன்றும் உள்ளது எனச் சில உறுதிப்படுத்தப்படாத
தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டு
மக்களாகிய நாம் தமிழ்ச் சமூக வரலாற்றிலிருந்தே
பாடம் கற்போம். தனிமனித உரிமைகளை மறுக்கிற எல்லாத் தடைகளையும் உடைப்போம். அறிவுசார் தமிழ்ச் சமூகமாக மீள்வோம்.