news-details
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் = 10

கி.பி. 20 முதல் 50 வரை இந்தோ - பார்த்தியாவை அரசாட்சி செய்த அரசனான கொண்டோபரஸ் குறித்தோ, அவனது மரபுவழிப் பட்டியல் பற்றியோ எந்தச் செய்தியும் இந்திய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. ‘தோமாவின் பணிகள்’ என்ற நூலில் மட்டுமே அம்மன்னனைப் பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே, இச்செய்திகள் கற்பனையானவையே என்று வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கவில்லை. எனினும், கி.பி. 1930-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் சிந்துவெளி நாகரிகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததுடன், ‘தோமாவின் பணிகள்’ நூல் குறிப்பிட்ட செய்திகளையும் உண்மையாக்கின. முந்தைய கண்டுபிடிப்புகளும் உறுதி செய்யப்பட்டன.

இந்த அகழ்வாய்வின்போது சர். ஜான் மார்ஷல் என்ற வரலாற்று ஆய்வாளர் கி.பி. 50-இல் வெளியிடப்பட்ட கொண்டோபரசின் நாணயங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தார். இதன் பிறகு கொண்டோபரஸ் மன்னனுடைய ஆட்சி உறுதிப்பட்டது. இந்த நாணயங்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன இதன் அடிப்படையில் கொண்டோபரஸ் மன்னனுடன் இணைத்துப் பேசப்பட்ட தோமா பற்றிய செய்திகள் உண்மைச் செய்திகளே என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கி.பி. 40-ஆம் ஆண்டில் தோமா, பாரசீகம் மற்றும் வட இந்தியப் பகுதிகளுக்கு வந்தது பற்றிய செவிவழிச் செய்திகள் பல நம்புவதற்குரியதாகவும், சில கதைகளாகவும் உள்ளன. சிரியா நாட்டு ஆவணங்களின் அடிப்படையில் ஹப்பான் என்ற வணிகன், தோமாவை இந்தியாவிற்கு அழைத்து வந்தான் என்பதை அறிய முடிகிறது. தோமாவின் வருகைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 44-இல் கிரேக்க தத்துவஞானி அப்பலோனியஸ், தட்சசீலத்தில் கொண்டோபரஸ் அரசவைக்கு வருகை தந்தது குறித்தும், தலைநகர் தட்சசீலம் கிரேக்க நகர அமைப்பில் இருந்ததாகவும், அரசன் கிரேக்க மொழியைச் சரளமாகப் பேசியதாகவும் குறிப்பிடுகிறார்.

தோமா காலத்தில் உரோம், பாலஸ்தீனம், அரேபியா, இந்தியா குறிப்பாக, தமிழ்நாடு இவற்றிற்கிடையே தடையற்ற வணிகமும், போக்குவரத்தும் நடைபெற்றன என்பதைப் பற்பல நாடுகளில் கிடைக்கப்பெற்ற பன்னாட்டு நாணயங்களைக் கொண்டு அறிய வந்தது. தோமா காலத்து உரோம் நகரத்துக் காசுகள் கொண்டோபரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலும் கிடைத்துள்ளன.

கி.மு. 30 முதல் கி.பி. 70 வரையிலும் அதாவது 100 ஆண்டுகால அளவிலான பொன், வெள்ளி நாணயங்கள் கேரளத்தில் கிடைத்துள்ளன. கி.பி. 1857-ஆம் ஆண்டில் கோட்டயம் பகுதியில் உரோம் நாட்டை அரசாண்ட அகுஸ்துஸ் சீசர், திபேரியஸ், கிளாடியஸ், நீரோ போன்ற மன்னர்களின் நாணயங்கள் இந்தியப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோமாவும் இந்த நாணயங்களைப் பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

வட இந்தியப் பகுதிகளில் தோமா போதித்த காலத்தில் அங்கே பிராமண சமயம், சமண, புத்த சமயங்கள் வேரூன்றி இருந்ததாக வரலாற்றறிஞர் ம.சோ. விக்டர் குறிப்பிடுகிறார். பார்த்தியா நாட்டின் அரசன் கொண்டோபரஸ் பாரசீக நாட்டு வழிமரபினன் என்பதால் நெருப்பை வழிபடும் பார்சி சமயத்தைக் கடைப்பிடித்தான். தோமாவால் அவன் மனம்மாறி கிறித்தவ மதத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பிற சமயச் சார்புள்ள மக்களும் கிறித்தவத்திற்கு மாறினர். இன்றும்கூட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழும் சில மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்களை இஸ்ரேல் நாட்டுடன் இணைத்துப் பேசி வருவதாகவும், இவர்களின் முன்னோர் தோமாவால் மதமாற்றம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், அவர் குறிப்பிடுவதாவது: பிற்காலத்தில் கேரள நாட்டில் தோமாவின் வட இந்திய மறைபரப்புப் பணிகள் செவிவழிச் செய்திகளாக அறியப்பட்டன என்றும், இதை தோமாவே அம்மக்களுக்கு அறிவித்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. தோமாவின் வடபுலத்துச் செயல்பாடுகள் பற்றி பின்னர் அறிந்த இயேசு சபைக் குருக்கள் சிலர் ஒரு குழுவாக டெல்லியில் மொகலாயப் பேரரசரைச் சந்திக்கச் சென்றபோது, அவரின் அனுமதி பெற்று இந்துகுஷ் மலைப்பகுதிகளில் தோமாவினால் மதமாற்றம் செய்யப்பட்ட கிறித்தவர்களைத் தேடிச் சென்றனர்.

இடைக்காலம் (கி.பி. 1000) வரையிலும் கிறித்தவர்களாயிகுந்த அம்மக்கள் பல்வேறு சூழல்களாலும், வழிகாட்டிட சமயக் குருமார்கள் இல்லாமையாலும் தாங்கள் தழுவிய கிறித்தவ மதத்தைக் கைவிட்டது தெரிய வந்தது. ஆனால், இன்றும் சில கிறித்தவக் குழுக்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்தம் முன்னோர் எந்த நாட்டிலிருந்தும் குடியேறவில்லை என்றும், காலங் காலமாக அந்த மண்ணின் மக்களே என்றும் கூறி வருகின்றனர். வட பகுதிகளில் சென்று தேடிய இயேசு சபையினர் கிறித்தவர்கள் எவரையும் அங்கே காணவில்லை என்று தங்கள் சபையின் குறிப்புகளில் பதிவு செய்துள்ளனர் என்று ம.சோ. விக்டர் விளக்கியுள்ளார்.

இவ்வாறு தோமாவின் முதல் இந்தியப் பயணத்தின் தாக்கம் காலப்போக்கில் அருகிப் போனது. தொடர் அந்நியப் படையெடுப்புகள், அதனால் மக்களின் இடம்பெயர்தல், பிற சமயங்களின் ஆதிக்கப்போக்கு, அவை ஏற்படுத்திய சமய நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமை, இவற்றிற்கெல்லாம் தாக்குப்பிடித்து வழிநடத்த வேண்டிய சரியான வழிகாட்டிகள் நிலைக்காமல் போனது போன்ற காரணங்களால் தோமா விதைத்த விதையின் விளைச்சல் அப்போது மிகுதியாகப் பலன் தரவில்லை.

ஒரு யூதராக அரமாயிக் மொழி மட்டுமே அறிந்திருந்த தோமாவுக்கு மொழியறியாத நாடுகளில் அவரின் பணி என்பது இன்னல் நிறைந்த பணியாகவே இருந்தது. பார்த்தியா நாட்டில் பார்சி மொழியைக் கற்ற தோமா, அறவே அம்மக்களிடம் அவர்கள் மொழியிலேயே பேசினார். இயேசுவின் கொள்கைகளை எங்குப் போதிக்கச் சென்றாலும் அப்பகுதி மொழியை விரைவில் கற்றுக்கொள்ளும் திறமை கொண்டிருந்தார். பிந்தைய நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்து இயேசுவின் நற்செய்தியைப் போதித்த ஐரோப்பியப் பெருமக்களான இராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர், ஜி.யூ. போப், கால்டுவெல் போன்றோருக்கு முன்னோடியாக விளங்கியவர் தோமா என்றால் அது மிகையாகாது.

இயேசுவிற்காக எல்லா இடர்களையும் தாங்கிக் கொள்ளக்கூடிய உண்மைச் சீடராகவே தோமா விளங்கினார். மொழி, உணவுமுறை, உடையணிதல் போன்ற மாறுபட்டக் கலாச்சாரச் சூழல்களில் இயேசுவின் சீடர் என்ற தனித்தன்மையை இழக்காதவராகவே நடந்தார். துணிவையும் நம்பிக்கையையும் வியப்பூட்டும் விதத்தில் கொண்டிருத்தார். மறையுரையாற்றுவதில் வல்லவரான அவர், தனது கருத்துகளை மக்கள்முன் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தார். கடிதங்கள் எழுதுவதிலும் திறன் மிக்கவராக விளங்கினார்.

‘இவரா இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார்?’ என்று வியக்கும் அளவிற்கு தோமா என்றால் ‘சந்தேகம்’ என்ற சொல்லைத் தன் நம்பிக்கையால் மாற்றிக்காட்டினார். கள்ளங்கபடமற்ற, ஒளிவு மறைவு இலலாத, துணிவு மிக்க கேள்வியால், காணாமல் நம்பிக்கை கொள்ளக் கற்றுக்கொடுத்தார்.

தோமாவைப் போலவே மற்றத் திருத்தூதர்களும் உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில் உள்ள இடர்களைத் துணிவோடு எதிர்கொண்டு பற்பல நாடுகளில் தங்கள் மறைபரப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். திருத்தூதர்களின் போதனையைக் கேட்டு வியப்படைந்த மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு இயேசுவில் இணைந்தனர். பலர் அவர்களை மனநலம் இல்லாதர்கள் என்றும், இனிய மதுவைக் குடித்துவிட்டு (தி ப  2:13) உளறுகிறார்கள் என்றும் கேலியும் கிண்டலும் செய்தனர்.

இயேசுவைப் பின்பற்றக்கூடிய மாற்றங்கள் எந்த அளவிற்கு உருவானதோ, அதைக் காட்டிலும் அதிகமாக எதிர்ப்புகளும் பெருகின. மொத்தத்தில், புதிய கிறித்தவச் சமுதாயம் படைப்பது குழப்பமும் கொந்தளிப்பும் எதிர்ப்புகளும் புதுமைகளும் மறு பிறப்புகளாகவுமே அமைந்தன.

(தொடரும்)