பிறப்பிற்கு
ஒரு காலம்
உண்டு;
இறப்பிற்கு
ஒரு காலம்
உண்டு!
நவம்பர்
மாதம் என்ற உடனே நமது நினைவிற்கு வருவது இரண்டாம் நாள் அன்று கொண்டாடப்படும் கல்லறைத் திருநாள்தான். அன்றைய நாளில்தான் நமது குடும்பங்களில் இறந்த பெற்றோர், உற்றார் உறவினர், உடன் பிறப்புகள், தாத்தா, பாட்டி என அனைவரையும் நினைவுகூர்கின்றோம்.
ஆம், அன்றுதான் அவர்களது கல்லறைகளைத் தூய்மை செய்து, மலர்களால் அலங்கரித்து, நறுமணப் பொருள்களையும் மெழுகுதிரிகளையும் ஏற்றி, அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கின்றோம். இவற்றோடு பல ஊர்களில் வெடி
வெடித்து இந்நாளைத் திருவிழா போலக் கொண்டாடுவதை நம்மால் காண முடிகிறது.
ஆங்கில
நாடகத் தந்தை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் மனித வாழ்வைப் பற்றிக் கூறும்போது, “இவ்வுலகம் ஒரு நாடக மேடை; அதில் ஆண்கள்-பெண்கள் அனைவரும் வெறும் நடிகர்கள்; அவர்கள் வந்து போகும் வழிகளும் உண்டு; ஒருவர் தன் வாழ்வில் பல வேடங்களில் நடிக்கிறார்” என்று
கூறினார்.
ஆம்,
நிலையற்ற உலகத்தை நிலையானது என நினைத்து, நாம்
அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். மனிதர்களின் உண்மையான பிறப்பு என்பது விண்ணகப் பிறப்புதான். இவ்வுலகில் மனிதன் ஒருவன் பிறந்து, வாழ்ந்து, இறந்தவுடன் சராசரியாக ஒரு வாரத்திற்குப் பின் குடும்பமும் உறவுகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதைக் காண முடிகிறது. ஆண்டுகள் பல கடந்த பின்பு
நாம் தடம் தெரியாமல் மறைந்து விடுகின்றோம். இதுதான் மறுக்கப்பட முடியாத உண்மை.
நினைவு
நாள் அன்று மட்டும் நாம் நமது வீட்டில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தால் போதாது; மாறாக, நாம் செபிக்கும்போது அவர்களுக்காகவும் செபிக்கவேண்டும். இவ்வுலகை விட்டுச் சென்ற ஆன்மாக்களால் எளிதாக விண்ணக வீட்டில் நுழைய முடியாது. ஆம், அவர்களுக்காகப் பிறர் செபிக்கும்போதுதான் அவர்களால் உள்நுழைய முடிகிறது. அவர்களுக்கு நமது செப உதவி தேவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக, திருப்பலியில் நற்கருணை வழிபாட்டின்போது, இழப்பீட்டுப் பலியில் குருவானவர் அப்பத்தையும் இரசக் கிண்ணத்தையும் உயர்த்தும்போது, ‘எவராவது நமக்காகச் செபிக்கமாட்டார்களா?’ என்று யாரும் நினையாத ஆன்மாக்களும், உத்தரிக்கும் நிலையில் இருக்கின்ற ஆன்மாக்களும் அனுதினமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இறந்த, நினைவில் வாழ்கின்ற ஆன்மாக்களுக்காகச் செபிக்கும்போது அவர்கள் விண்ணக வீட்டை அடைவார்கள். நாமும் அவர்களோடு சேர்க்கப்படும்போது, நமக்காக நம்மைச் சுற்றியுள்ளவர்கள் செபிப்பார்கள்.
இதுவரை
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இந்த நவம்பர் மாதம் முழுவதும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும், உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காகவும் தினமும் செபிப்பதோடு, திருப்பலியின்போதும், நற்கருணை வழிபாட்டின்போதும் அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிப்போம்.