news-details
சிறப்புக்கட்டுரை
‘மகத்தான மானுடம்’ (Magnifica Humanitas) வலியுறுத்தும்... ஒருங்கிணைந்த மானுட வளர்ச்சி

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் எழுதிய முதல் திருத்தூது மடல் ‘மகத்தான மானுடம்’(Magnifica Humanitas) என்பதாகும். இச்சுற்று மடல் 15 மே, 2026 அன்று கையொப்பமிடப்பட்டு, 25 மே, 2026 அன்று ‘தொழிலாளர் நிலைமை’ (Rerum Novarum) (1891) என்ற ஏடு வெளியிடப்பட்டதன் 135-ஆம் ஆண்டு நினைவாக வெளியிடப்பட்டது. இச்சுற்றுமடல் செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இக்காலத்தில், மானுடத்தை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்ற சிந்தனையை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

இன்றைய உலகு மாற்றங்களின் உலகு - நேற்றுபோல் இன்று இல்லை; இன்றுபோல் நாளை இருக்கப்போவதில்லை. எண்மத் (Digital) தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இன்றைய மானுடத்தின் பல்வேறு தளங்களை மாற்றி அமைத்துள்ளன.

நாம் பணியாற்றும் முறை: முன்பெல்லாம் குறிப்பிட்டத் தரவுகளை ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டுமெனில், அந்தத் தரவுகளை எழுதி எடுத்துக்கொண்டு நேரடியாகச் சென்று வழங்க வேண்டும். ஆனால், தற்பொழுது நாம் இருக்கும் இடத்திலிருந்தே தரவுகளைக் கைப்பேசி வழியாகப் பதிவேற்றம் செய்து அனுப்பிவிடலாம்.

நாம் தொடர்புகொள்ளும் முறை: முன்பெல்லாம் தொலைதூரத்தில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு ‘நீண்டதூரத் தொலைப்பேசி அழைப்பு’ (Trunk Call) மூலம் முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது; இன்று, கைப்பேசி, இணையம், காணொளி அழைப்புகள் மூலம் உலகின் எந்தவொரு மூலையிலிருப்பவருடனும் உடனடியாகத் தொடர்புகொள்ள முடியும்.

நாம் கற்கும் முறை: முன்பெல்லாம் ஆசிரியரின் வகுப்பறை விளக்கங்களும், அச்சுப் புத்தகங்களுமே கற்றலின் முதன்மை ஆதாரங்களாக இருந்தன. இன்று இணையம், மின் நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியால் உலகின் எந்தப் பகுதியில் உள்ள அறிவையும் சில நொடிகளில் பெற்றுக்கொள்ள முடிகிறது.

உறவுகளைக் கட்டியெழுப்பும் முறை: முன்பெல்லாம் நேரடிச் சந்திப்புகள் வழியாகவோ, கடிதங்கள் வழியாகவோ உறவுகள் கட்டியெழுப்பப்பட்டன. இன்று குடும்ப உறுப்பினர்கள் ஐவர் ஐந்து கண்டங்களில் வாழ்ந்தாலும், காணொளி அழைப்பின் மூலம் உரையாடி உறவினை வளர்க்க முடியும்.

நாம் நம்மையே புரிந்துகொள்ளும் முறை: முன்பெல்லாம் ‘நான் யார்?’, ‘என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்ற வினாக்களுக்கு தியானம், ஆன்மிக வழிகாட்டிகளின் ஆலோசனைகள் மூலம் பதில் தேடினோம். இன்று சமூக வலைதளங்களில் கிடைக்கும் ‘விரும்பு’, ‘பகிர்’, ‘பின் தொடர்’ போன்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பலர் தங்களையே அளவிடுகின்றனர். இத்தகைய மாற்றங்களை எதிர்நோக்கும் போது நாம் உற்சாகம், பயம், ஆர்வம் அல்லது குழப்பம் போன்ற உணர்வுகளை உணரக்கூடும். இச்சூழலில், இறைநம்பிக்கையாளர்களாகிய நாம், இக்காலகட்டத்தை ஆய்ந்து அறிதல், நம்பிக்கை, பொறுப்புணர்வு போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு செயல்பட இச்சுற்றுமடல் அழைப்பு விடுக்கின்றது. மேலும், இச்சுற்றுமடல் இறைநம்பிக்கை, மானுட மாண்பு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை எடுத்துரைக்கின்றது. தவிர இறைவார்த்தை, திரு அவையின் சமூகப் போதனைகள், அன்றாட வாழ்வின் நடைமுறை அனுபவங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பயணத்தை இச்சுற்றுமடல் முன்வைக்கின்றது.

இவ்வாறாக, இச்சுற்றுமடல் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல; மாறாக, நம் காலத்தின் மாற்றங்களுக்கு மத்தியில் மனிதநேயத்தைப் பாதுகாக்க வலியுறுத்துகின்றது. அதாவது, கிறித்தவர்களாகிய நாம், இந்த எண்மக் காலத்திலும் ஒற்றுமையை உருவாக்குபவர்களாகவும், அமைதியைக் கட்டியெழுப்புவர்களாகவும், நம்பிக்கையின் மறைச்சாட்சியராகவும் இருக்க அழைப்பு விடுக்கின்றது.

‘பாபேல் கோபுரம்’ (தொநூ 11:1-9), ‘எருசலேம் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (நெகேமியா 1-4) எனும் திருவிவிலியத்தில் காணப்படும் இரண்டு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறது இச்சுற்றுமடல். ‘பாபேல் கோபுரம்’ அதிகாரம், தன்னலப்போக்கு, மனிதாபிமானமற்றத்தன்மை ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஓர் உலகை உருவாக்கும் ஆபத்தின் அடையாளமாகவும், ‘எருசலேம் மதில்களைக் கட்டியெழுப்புதல்’ என்பது செவிமடுத்தல், சகோதரத்துவம், நீதி, அடுத்தவர்மேல் அக்கறை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு அனைவரும் இணைந்து வாழும் ஒரு ‘புனித நகரத்தை’ கட்டியெழுப்புவதன் அடையாளமாகவும் உள்ளது. மானுடத்திற்கு முன்பாக இரண்டு வினாக்கள் உள்ளன: இறைவழியை மறந்து தன்முனைப்புக் கொண்ட தொழில்நுட்ப அதிகாரத்தால் இயங்கும் ஒரு புதிய ‘பாபேல் கோபுரத்தை’ கட்டியெழுப்புவதா? அல்லது இறைவனும் மனிதகுலமும் இணைந்து வாழும் புனித நகரைக் கட்டியெழுப்புவதா? என்பதேயாகும்.

ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் அது எந்தளவுக்கு மனிதரின் மாண்பினைப் பாதுகாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதைக் கொண்டே அளவிடப்படவேண்டும் என்றும், பிறருக்கு முன்பாக நமது உள்ளம் மூடப்பட்டிருந்தால், அங்கே உண்மையான முன்னேற்றம் எதுவுமில்லை என்றும் இச்சுற்றுமடல் எடுத்துரைக்கின்றது. மேலும், மனுக்குலத்தின் மறைபொருளை, வாக்கு மனிதரான இயேசுவின் மறைபொருள் மூலமே நாம் புரிந்துகொள்ள முடியும் என்றும், இயேசு கிறிஸ்துவில் உள்ள இந்த மாண்புடை மானுடமே, நமக்கு வழியாக, உண்மையாக, வாழ்வாக இருந்து நாம் ஒவ்வொருவரும் மனிதத்தின் நிறைவை நோக்கி வளர்வதற்கான பாதையைத் திறந்துவிடுகின்றது என இச்சுற்றுமடல் கூறுகின்றது. எனவே, ‘புறம்பாக்கப்பட்ட கற்கள்’ நமது சமூகத்தின் ‘மூலைக்கற்களாக’ மாறுவதை நாம் உறுதி செய்திடவேண்டும். அதற்கு நாம் நமது கைகளை அழுக்குப்படுத்த அழைப்பு விடுக்கும் இச்சுற்றுமடல், பெருகிவரும் தொழில்நுட்ப மாற்றங்களும், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் உள்ள இக்காலத்தில், மனுக்குலத்தை வழிநடத்தத் தேவையான ஓர் ‘உயிருள்ள ஞானமாக’ (Living Wisdom) திரு அவையின் சமூகப் போதனைகளை முன்வைக்கின்றது.

ஆயுதம் ஏந்திய மோதல்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றியும், அமைதிக்கான தேடல் குறித்தும் பேசும் இம்மடல், மானிடரிடம் மட்டும் நிலைத்திருக்க வேண்டிய முதன்மையான முடிவுகளை, இயந்திரங்களிடம் ஒப்படைக்கும் ஆபத்தான மனப்பாங்கிற்கு எதிரான சிந்தனையை வழங்குகின்றது. இன்றைய எண்மக் காலத்திற்கு ஏற்றவாறு ஒரு கிறித்தவ வாழ்க்கைப் பாதையை முன்மொழியும் இச்சுற்றுமடல், நாம் அனைவரும் இறைவன் வாழும் மனிதகுலத்தின் அழகிய சாட்சியங்களாய் விளங்கி, இக்காலகட்டத்தை ஒரு ‘மீட்பின் வரலாறாக’ உருமாற்றவேண்டும் என்பதை உயரிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுமடல் விடுக்கும் அறைகூவல்கள்

1. நான் எனது தனிப்பட்ட ‘பாபேல் கோபுரத்திற்காக’ (வெற்றி, அதிகாரம், கௌரவம், பெருமை, செல்வாக்கு) பணியாற்றுகின்றேனா? அல்லது யாவருக்கும் வாய்ப்பு நல்கும்  புனித நகரத்திற்காகப் பணியாற்றுகின்றேனா? எனச் சிந்திக்கவேண்டும். இச்சுற்றுமடல் இறைவனை மையப்படுத்திச் செயல்படவும், நம் செயல்பாடுகள் மனித மாண்பினை உயர்த்தும் ஒன்றாக இருக்கவும், நம் பணி மனிதரிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதாகவும், அவை அன்பு, இரக்கம், நீதி போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைய அழைப்பு விடுக்கின்றது.

2. தொழில்நுட்ப வளர்ச்சியையும், செயற்கை நுண்ணறிவையும் நான் பயத்துடன் அணுகுகின்றேனா? அல்லது அவற்றை எனது நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகக் காண்கின்றேனா? எனச் சிந்திக்கவேண்டும். இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் இக்காலகட்டத்தை ஆய்ந்து அறியவும், நம்பிக்கை, பொறுப்புணர்வு போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு செயல்படவும் இச்சுற்றுமடல் அழைப்பு விடுக்கின்றது.

3. எவ்வாறு அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றைப் பெற மனிதருக்கு உரிமை உள்ளதோ, அவ்வாறே இந்தத் தொழில்நுட்பக் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெறுவதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. எனவே,  தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை (Digital Literacy) அனைவரும் பெற முன்முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். மாறியுள்ள தொழில்நுட்பச் சூழலில் இன்று பெரும்பாலான முதியோரும், தொழில்நுட்ப வசதிகளைப் பெற இயலாத ஆள்களும்தான் ‘புறக்கணிக்கப்பட்ட கற்கள்.’ அவர்களை எப்படி ‘புனித நகரைக் கட்டியெழுப்பும்’ முயற்சியில் ஈடுபடுத்த முடியும் என்று சிந்திக்கவேண்டும்.

4. மனிதரை இன்று ஒரு பொருளாகக் காணும் போக்கு உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஒரு நோயுற்றோரை ஒரு ‘case’ என்றுதான் அழைக்கின்றோம். அவரை மாண்புள்ள மனிதராகக் காண வேண்டும்.

5. செயற்கை நுண்ணறிவு ஒருநாளும் மனிதரை இடமாற்றம் செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு நோயுற்றோரின் வினாக்களுக்குப் பதில் தரும். ஆனால், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு ஆறுதல் தரமுடியுமா? அது மனிதரால் மட்டுமே இயலும் என்பதை நாம் உணரவேண்டும்.

6. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மாந்தரிடையே உறவை வளர்க்கும் ஒன்றாக உள்ளதா? தனிநபரின் விருப்பங்களை நிறைவுசெய்து அவர்களை ஏனைய மாந்தரிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றதா? எனச் சிந்திக்க வேண்டும். இவ்வகையில் மனிதனின் ‘வரம்பு’ என்பது மனிதர் ஏனைய மாந்தருடன் உறவுகொள்ள கடவுள் வழங்கும் ஒரு புனிதமான வாய்ப்பு.

7. ‘பல்வேறு நிறுவனங்களில் மேல்நிலையில் பணியாற்றுவோர் எவ்வாறு பல்வேறு படிநிலைகளில் பணியாற்றுவோரின் அதிகாரத்தை மதிக்கின்றனர்?’ என்ற வினாவை இச்சுற்றுமடல் முன்வைக்கின்றது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வோர் அமைப்பிற்கும் உள்ள அதிகாரத்தை மதித்து, பிறருடன் கூட்டொருமையுடன் பணியாற்றிட இம்மடல் அழைப்பு விடுக்கின்றது.

8. நாம் பணியாற்றும் பணித்தளங்களில் அனைவரும் செயலூக்கமுள்ள வகையில் பங்கேற்கின்றனரா? பணியில் வெளிப்படைத்தன்மை உள்ளதா? என ஆய்வு செய்ய சுற்றுமடல் அழைக்கின்றது.

9. நிரலாக்கப்பட்ட முடிவெடுக்கும் வழிமுறைகள் (Algorithms) ஏற்படுத்தும் தாக்கங்களை நான் ஆய்வு நோக்கில் அணுகுகின்றேனா? அல்லது அப்படியே அதை உள்வாங்குகின்றேனா? என்று சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பம் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்து விடக்கூடாது எனச் சுற்றுமடல் எச்சரிக்கின்றது.

10. இன்று பரப்பப்படும் பல செய்திகள் தனிநபர் நலன் சார்ந்தவையாகவோ, குறிப்பிட்ட ஒரு குழு சார்ந்தவையாகவோ உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையும் மறைக்கப்படுகின்றது. நாம் ஒரு செய்தியை அல்லது காணொளியைப் பிறருக்குப் பகிரும்முன் அதன் உண்மைத்தன்மையினைச் சரிபார்க்கின்றோமா? எனக் காணவேண்டும்.

11. சில வேளைகளிலாவது தொழில்நுட்பக் கருவிகள் எதுவுமின்றி என்னால் பிறருடன் நேரத்தைச் செலவிட முடிகின்றதா? அல்லது குறைந்தபட்சம் தொழில்நுட்பக் கருவிகளை விவேகத்துடனும் சுதந்திரத்துடனும் பயன்படுத்தும் வாழ்வியல் நெறியைப் பின்பற்றுகின்றேனா? எனச் சிந்திக்க வேண்டும்.

12. சூழலியல் மனமாற்றம் என்பது வெறுமனே மரம் நடுதல், நெகிழிப் பயன்பாடு குறைத்தல் மட்டுமன்று; இன்று தொழில்நுட்பக் கருவிகள், மின்னணுக் கருவிகள் ஆகியவை எவ்வாறு மறு சுழற்சி செய்யப்படுகின்றன? தேவைக்கு ஏற்ப நான் தொழில்நுட்பக் கருவிகள், மின்னணுக் கருவிகள் ஆகியவற்றை வாங்குகின்றேனா? என ஆய்வு செய்யவேண்டும்.

13. இன்று தனிநபர்களின் குறிப்பாக, ஏழைகளின் தரவுகள் சுரண்டப்பட்டு, செல்வந்தர் பயன்பெறும் வகையில் அவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சூழலில், தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இக்காலத்தில் தனிநபர் தரவுகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய முன்முயற்சி எடுக்கின்றோமா? எனச் சிந்திக்க வேண்டும்.

14. தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவரும் இக்காலத்தில் பலரும் தங்கள் வேலையினை இழந்து வருகின்றனர். தொழில்நுட்பம் இன்று மனிதரை இடமாற்றம் செய்து வருகின்றது. இச்சூழலில் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்குப் புதிய திறன்களைப் பெறும் வகையில் மறுபயிற்சி (Retraining) வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

15. இன்று ஆயுதம் ஏந்திய மோதல்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகம் உள்ளதை இம்மடல் சுட்டிக்காட்டுகின்றது. அதேவேளையில், இந்த எண்மக் காலத்தில் மனிதர் பிறரைத் தாக்க வார்த்தையை ஆயுதமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதாவது, தனக்கு எதிராகச் சிந்திப்பவர்களை வார்த்தைப் போர் மூலம் தாக்கும் நிலை காணப்படுகின்றது. இச்சூழலில், நாம் பிறருக்குப் பதிலளிக்கும்போது அது உறவைக் கட்டியெழுப்பக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டுமென இச்சுற்றுமடல் கூறுகின்றது. தவிர, நேரடி உரையாடல் மானிட உறவை எளிதில் சீர்செய்யும் என்கின்றது இம்மடல்.

16. இன்று காணொளி விளையாட்டுகளில் அதிகமான விளையாட்டுகள் வன்முறையைத் தூண்டுவனவாகவே உள்ளன. இத்தகைய காணொளிகளைத் தவிர்த்து, உறவுகளைக் கட்டியெழுப்பும் காணொளிகளை அதிகம் பரப்பிடவேண்டும்.