news-details
சிறப்புக்கட்டுரை
கலாபக் காதல்

மும்பை திரையுலகில் ஷாருக்கான் மிக உயரம் பெற்ற நடிகர். ஷாருக் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்கிறார். கூட்டத்தில் ஒரு பெண் இரசிகை சத்தமாக, “ஷாருக், என் கணவரைவிட உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஐ லவ் யூ” என்கிறார்.

ஷாருக்கான் அப்பெண்மணியை அருகே அழைத்துப் புன்னகையோடு கூறுகிறார்: “நீங்கள் என்மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. உங்களுக்கு என்னைவிட உங்கள் கணவரைத்தான் பிடிக்க வேண்டும்; ஏனென்றால், உங்கள் துன்ப நேரத்தில் நான் உடன் இருக்கமாட்டேன்; உங்கள் பிள்ளைகளுக்குப் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளமாட்டேன்; உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லமாட்டேன்; நான் உங்களுக்கு  வீடு வாங்கித் தரமாட்டேன்; வீடு இல்லாவிடில் வீட்டு வாடகை தரமாட்டேன்... இதெல்லாம் தவறாமல் செய்கிற உங்கள் கணவரைக் காதலியுங்கள். உங்களோடு வாழ்க்கை முழுவதும் வாழப்போவது உங்கள் கணவர்தான்” என்ற உண்மையை நயம்பட, நாகரிகமாக ஷாருக் அறிவுரையாகத் தந்தார்.

கலாபம் என்பது, மயிலின் தோகை விரிந்தால் எப்படி அழகான தோற்றம் உருவாகுமோ, அது போன்ற  ஒரு மாயக்காதல் இன்று எங்கும் விரிந்து பரவுகிறது; அது அழகு சார்ந்த மயக்கும் போதை தருகிற காதல். கலாபக் காதல் என்பது பொதுவில் தவறான ஈர்ப்பு, கிறக்கம் என்பதே. அது மரபார்ந்த, மண் சார்ந்த, பண்பாட்டுத் தளங்களில் தூய்மையான காதல் இல்லை. அது தனிநபர் வழிபாட்டு முறையைச் சார்ந்த புதிய  நெறிமுறைகளை மீறிக்கொள்ளும் புதிய கலாச்சாரமாகும்.

அமெரிக்காவில் விசித்திரமான பிம்ப வழிபாட்டுக் கலாச்சாரத்தில் வாழும் ஒரு புதுவித மனநோயாளிகளைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்களான டொனால்ட் ஹார்டன், ரிச்சர்ட்வோல் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையை உளவியலின் முக்கியக் கூறுகளாக வெளியிட்டனர். அவர்களின் ‘துணைச் சமூகப் பிணைப்பு’ (Parasocial Bond) என்ற ஆய்வறிக்கை இவ்வாறாகக் கூறுகிறது: ‘ஒரு நபர் தனக்குத் தெரியாத, தன்னைப் பற்றித் துளியும் அறியாத ஒரு பிரபலத்துடன் தன்னை உணர்வுப்பூர்வமாகப் பிணைத்துக்கொள்ளுதல். அவரைத் தனது நெருங்கிய தோழர் மற்றும் தோழியாக மூளையில் பதித்துக்கொள்ளுதல் போன்ற  மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்; தனிப்பட்ட சமூக வாழ்வை மறுத்தல் என்பவை இக்குறை மனிதர்களின் அடையாளங்கள்.

மீண்டும் ஷாருக்கானிடம் வருகிறேன். மும்பை பாந்தரா மலை மாதா கோவில், அரபிக் கடலோரத்தில் 80 மீட்டர் மலைக்குன்றில் உள்ளது. மலைக் குன்றுக்குக் கீழே கடலைப் பார்த்தவாறு ஷாருக்கானின் வீடு உள்ளது.  ‘மன்னத்’ எனப்படும் ஷாருக்கானின் வீட்டின் முன்நின்று புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள். விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாகி, காவல்துறையினர் செல்லமாக அடிப்பதுபோல பாவனை காட்டி, ஷாருக்கானின் இரசிகர்களைக் கடற்கரை வரை விரட்டி விடுவர்.

நானும் மந்தை மனப்பான்மையில் ஷாருக் வீட்டு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என் நண்பர் ஒருவர் இது பற்றிக் கேட்டபோது,  ‘ஷாருக் என் நண்பர்’ என்றேன்.  ‘அவருக்கு உங்களைத் தெரியுமா?’ என்று கேட்டபோது, “அவருக்கு என்னைத் தெரிவதைவிட, எனக்கு அவரைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வது பிடிக்கிறது” என்றேன். இது விளையாட்டுத்தனமான நிகழ்வாக இருந்தாலும், மனித மனங்களில் நம்மால் செய்ய முடியாததைச் செய்கிற கதாநாயகப் பிம்ப ஈர்ப்பு இருக்கிறது.

திரைப்படங்கள், அதன் கதாநாயக பிம்பம் குறித்து தமிழ்நாட்டின் உச்சபட்ச நடிகர்களை வைத்துப் படமெடுத்த இயக்குநரிடம் ஒரு தொடர் வண்டி சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தோம். இரயில் நின்று வேகமெடுத்துப் புறப்பட்ட நிலையில், ஒரு தின்பண்ட விற்பனையாளர் இறங்கி மெல்ல ஓடி வந்து நின்றார். அருகில் இருந்த இயக்குநர் எம்மிடம் கூறினார்: “தன் குடும்பத்திற்காக ஒவ்வோர் இரயிலிலும் உயிரைப் பணயம் வைத்து, கையில் உள்ள பொருள் சிதறாமல் பாடுபடுகிறாரே... இவர்கள்தான் உண்மையான கதாநாயகன்கள்.”

நாம் விடாமல் கேட்டோம்: “உங்கள் கதாநாயகர்கள் பற்றிச் சொல்லுங்கள்” என்றோம். திரைப்பட இயக்குநர் தன் கதாநாயகர்களில் இருவரைக் குறிப்பிட்டு, “சண்டைக் காட்சி உள்பட எந்தக் காட்சிகளிலும் டூப் வேண்டாம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் கோடிகளில் பணம் வாங்கிவிட்டு டூப் கேட்பவர்கள்தான் அதிகம்”என்றார். என் நண்பர் பெயரைக் குறிப்பிட்டு, “அவர் இணை இயக்குநர்தானே; அவரே சண்டைக் காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளரையும், நடனக் காட்சிகளில் நடன இயக்குநரையும் வைத்துப் படம் எடுத்து விடுவார். நான் அந்தப் பக்கமே போவதில்லை” என்றார்.

ஒருமுறை ஒரு பாடல் காட்சி மூன்று நாள்கள் படமாக்கப்பட்டதைப் பார்த்தோம். என் நண்பர் அந்தக் கதாநாயகன் குறித்துச்சொன்னார்: “இவுங்க அப்பன், சித்தப்பன், மாமன், மச்சான்னு சிபாரிசு பிடித்து, மக்குப் பசங்க  கதாநாயகன் ஆகிவிடுகிறார்கள்; இவங்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை” என்றார். அருகிலிருந்த எமது உறவினர் தயாரிப்பு மேலாளர் சொல்கிறார்: “இந்தக் கதாநாயகன் நடித்த படங்கள் இயக்குநரின் திறமையால் ஓடிவிட்டால் இவர்கள் மாறிவிடுகிறார்கள். மது, மாது, சூது, போதை எனச் சமூக விரோதச் செயல்களின் ஊற்றுக் கண்களாக மாறிவிடுகிறார்கள்” என்றார்.

கதாநாயக நடிகர்கள் தனிப்பட்ட வாழ்வில் எவ்வாறு இருந்தாலும், அவர்களை வைத்துப் படமெடுத்து 500, 1000 கோடிகள் என முதல் இழந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் தெருவில் கையேந்துவது வேதனையின் மறுபக்கம்.

வாருங்கள்... இரசிக மனப்பான்மையில் சீரழிந்த ஒரு தேசத்தைப்  பார்ப்போம்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நகைச்சுவை நடிகர். ஜெலன்ஸ்கி ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் உக்ரைன் நாட்டின் அதிபராக நடித்தார். தொலைக்காட்சிக் காட்சிகளை உண்மையென நம்பிய உக்ரைன் மக்கள், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட ஜெலன்ஸ்கியை உண்மையான உக்ரைன் அதிபராகத் தேர்வு செய்தனர்.

ஜெலன்ஸ்கி நேச நாடுகளின் கூட்டமைப்பில் சேர்வது குறித்து முடிவு எடுக்கிறார். அமெரிக்கா இது குறித்து எச்சரிக்கையாக, இரஷ்யா படையெடுக்க சாத்தியங்கள் உள்ளன என்றது. ஜெலன்ஸ்கி தன் வெளியுறவுக் கொள்கை சார்ந்த முடிவுகளை இரகசியமாக வைத்தார். இரஷ்யா-உக்ரைன் யுத்தம் தொடங்கியது, உக்ரைனில் போர் பதற்றத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை  பாதித்தது. ஜெலன்ஸ்கி தன் தவறுகளை நியாயப்படுத்தி ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி அவரது மாய பிம்பத்தைச் சிதைத்தது. அவரது திருந்தாத கதாநாயகப் பிம்பத்தை வெளிக்காட்டியது.

உக்ரைன் உலகிலேயே அதிகமாக கோதுமை உற்பத்தி ஏற்றுமதி செய்யும் நாடு. தொடர் இரஷ்ய குண்டுவீச்சால் விவசாயம் நடைபெறுவது  இல்லை. மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை. குளிரைத் துரத்தும் வெப்பமூட்டும் வசதிகள் இல்லை. இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து திறந்தவெளிகளில் வாழ்கிறார்கள். எந்த நேரத்திலும் பறந்து வரும் டிரோன், ஏவுகணைத் தாக்குதலால் நொடிக்கு நொடி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

உக்ரைன் உதாரணம், குறைந்த எண்ணிக்கையிலுள்ள பொறுப்பற்ற மனிதர்களின் வாக்குகளால், அவர்களின் தனிமனித கதாநாயக வழிபாட்டால், ஒரு தேசம் எப்படி மண்மேடானது என்பதே அண்மைக்கால உலக அடையாளம்.