news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு (08.11.2026) சாஞா 6:12-16; 1தெச 4:13-18; மத் 25:1-13

திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு விழிப்போடும் இறைநம்பிக்கையோடும் வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பத்து கன்னியர்களைப் பற்றிய உவமையை இயேசு நமக்குக் கூறுகிறார். அவர்களில் ஐந்து பேர் முன் மதியுடையோராகவும், ஐந்து பேர் அறிவிலிகளாகவும் இருந்தனர். முன்மதியுடையோர், மணமகனை எதிர்கொள்ள விளக்குகளையும் எண்ணெயையும் தயாராக வைத்திருந்தார்கள். அறிவிலிகள், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டார்கள். இந்த உவமையின் வழியாக இறைமகன் இயேசுவைச் சந்திப்பதற்கு எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

‘விழிப்புடன் இருப்பது’ என்பது உறக்கமின்றி இருப்பதல்ல; மாறாக, இறைவனைச் சந்திக்கத் தயாரான உள்ளத்தோடு வாழ்வதாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போதும் நமது நம்பிக்கையின் விளக்கு அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதே உண்மையான ஆன்மிக விழிப்புணர்வு. அறிவிலிகள் போன்று நமது அலட்சியப்போக்கினால் அவசியமானதை இழந்துவிடாமல் விவேகத்தோடு வாழ்வோம். எல்லாம் தெரிந்தும் அலட்சியப் போக்கினால் ஆண்டவரின் அருளை இழந்து சோர்ந்து போகாமல், எப்பொழும் அவரைச் சந்திக்க ஆயத்தமாக இருப்போம்.  நம்மைப் பார்த்து இயேசு ‘உங்களை எனக்குத் தெரியாது’ என்று கூறாதபடி விழிப்போடும் முன்மதியோடும் இருப்போம். கிறிஸ்து வெற்றிகரமாக மீண்டும் வரும் நாளும் நாழிகையும் நாம் அறியாத நிலையில், எப்போதும் தயார் நிலையில் இருந்து இயேசுவைக் கண்டு மகிழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இறைவன் அளிக்கும் ஞானம் விலைமதிப்பற்றது; அது நம்மை இறைவனின் பாதையில் வழிநடத்தி, வாழ்வில் சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாம் ஞானத்தைத் தேடுவதற்கு முன்பே ஞானம் நம்மைத் தேடிவருகிறது என்று கூறி, இறைவன் தரும் ஞானத்தை நம் வாழ்வில் பெற்று விவேகத்தோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நாம் இறப்பைக் கண்டு நம்பிக்கையற்றவர்களைப் போன்று துயரப்படக் கூடாது. ஆண்டவர் மீண்டும் வரும்போது, அவரோடு என்றென்றும் வாழும் பேறு நமக்குக் கிடைக்கும் என்பதை பவுலடியார் இன்றைய வாசகத்தின் வழியாக எடுத்துரைக்கிறார். நம்பிக்கையோடு இருந்து ஆண்டவரை எதிர்கொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஞானமுள்ள கன்னியர்களைப் போல ஆன்மிக விழிப்புடன் செயல்பட்டு, உண்மையுடன் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்கள் என்ற சொத்தைப் பாதுகாத்திடவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவும், நாட்டின் வளங்களைப் பாதுகாத்திடவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் உலகக் கவர்ச்சிகளால் தங்கள் நம்பிக்கையை இழக்காமல், தங்கள் வாழ்வை இறைவனுக்கேற்ற முறையில் அமைத்துக்கொள்ளவும், தங்கள் ஆற்றல்களை இறையாட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாசமுள்ள ஆண்டவரே! எம் நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைத் தந்து காத்திடவும், உயிர்க் கொல்லி நோய்கள் அனைத்திலுமிருந்து எம்மையும் எம் நாட்டு மக்களையும் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.