கடவுளின் பெயரால் ஒருபோதும் போர் புரிய முடியாது; எந்தவொரு போரும் புனிதமானதல்ல; அமைதி ஒன்றே புனிதமானது என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்ற அமைதிக்கான உலகளாவிய மாநாட்டின் நிறைவு நாளில் திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தியில் இக்கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். 1986-ஆம் ஆண்டு புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் தொடங்கப்பட்ட ‘அசிசியின் ஆன்மா’ கோட்பாட்டின் 40-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இம்மாநாடு நடைபெற்றது.
“அதிகாரக் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், வன்முறைக்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிப்பதை நாம் நிராகரிக்கவேண்டும். உலகிற்கு இன்று அமைதியும் உரையாடலுமே தேவைப்படுகின்றன. உலகின் அதிகார மையங்களுக்கு முன்னால் மன்றாட்டு வலிமையற்றதாகத் தோன்றலாம். ஆனால், அதுவே இறைநம்பிக்கையாளர்களின் பணிவான வலிமையாகும். உலக நாடுகளுக்கு இடையிலான வன்முறைச் சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவர மதத் தலைவர்கள் உரையாடலை வளர்க்கவேண்டும். நாம் அனைவரும் இறைவனின் அமைதிக்கான ஆயுதமற்ற கருவிகளாக மாற வேண்டும்”
என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.