news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு (08.11.2026) சாஞா 6:12-16; 1தெச 4:13-18; மத் 25:1-13 – (ஒளிதரும் விளக்கு! ஒளியேற்றும் எண்ணெய்!)

பத்துத் தோழியர் உவமை, இன்றைய நற்செய்தியின் பாடமாக அமைகின்றது. யூத முறைப்படி, திருமணச் சடங்குகளும், சமூக, கலாச்சார பழக்க முறைகளும், மணமகளின் இல்லத்தில் நடைபெறும், திருமணச் சடங்குகள் நிறைவேறிய பின், திருமணச் சடங்குகளில் பங்கெடுத்தவர், விருந்தினர், மணமக்களின் உறவினர், நண்பர் அனைவரும் மணமகனின் இல்லத்திற்கு விருந்து கொண்டாட பெருங்கூட்டமாகச் செல்வார்கள். யூத முறைமையின்படி மணமகளின் தோழிகள் (இளம் நங்கைகள்), இவ்விருந்தினர் கூட்டம் மணமகனின் இல்லத்தை அடைவதற்கு முன்பாகவே அங்குச் சென்று அவர்களுக்காகக் காத்திருப்பார்கள். மணமக்களை இத்தோழிகள் எதிர்கொண்டு வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றவுடன் மகிழ்ச்சியுடனும் பேரானந்தத்துடனும், திருமண விருந்து துவங்கும். அனைவரும் பெரும்களிப்புடனும், உற்சாகத்துடனும் திருமண விருந்தில் பங்கெடுப்பார்கள்.

இன்றைய நற்செய்தியில் பத்துத் தோழியரும், தங்களின் இல்லத்திலிருந்து, சிறிய விளக்குகளுடன் வெளியேறி, மணமகனை எதிர்கொள்ளச் செல்கிறார்கள். அவர்களின் கையில் ஏந்திச் செல்கின்ற சிறிய விளக்குகள், இறையாட்சியின் விளக்குகளாக பொருள் கொள்ளலாம். இருள் சூழ்ந்த பாதையை அவர்கள் கடந்து செல்லவேண்டும். இருப்பினும், அவர்களின் கரங்களில் இருந்த ஒளிவிளக்கு, அவர்களின் காலடிகளை, நடந்து செல்லும் பாதைகளை ஒளிர்விக்கின்றது, வழிநடத்துகின்றது. இச்சிறிய விளக்கு, இருளை அகற்றி, நம்பிக்கைப் பாதையை அவர்களுக்குக் காட்டுகின்றது. இச்சிறிய விளக்கினை விவிலியம் கூறும் சிறிய விதையாக, புளிக்காரமாக, விண்ணரசின் சின்னஞ்சிறிய செயல்பாடுகளாக உருவகப்படுத்தலாம். விவேகமுள்ள ஐந்து தோழியர் தங்களின் கரங்களில் விளக்கையும், சிறிய கலனில் எண்ணெய்யையும் எடுத்துச் செல்கின்றார்கள். ஐந்து விவேகமற்றத் தோழியர் தங்களின் கரங்களில் எரியும் விளக்கை மட்டும் கொண்டு செல்கின்றார்கள்.

காலம் தாழ்ந்த வருகையும், சோர்வான சூழ்நிலையும்: இருள்சூழ்ந்த நிலை, மணமகன் வர தாழ்ந்துதல், நீண்ட நேரம் காத்திருத்தல், மணமகனின் வீட்டை அடைய நீண்ட  நேரம் நடந்து வந்தக் களைப்பு, உடல் சோர்வு, இவற்றினால் பத்துத் தோழியரும் சற்றே தொய்வடைந்து, உறங்கி போகின்றார்கள். இதனை ஒரு மந்தமான சூழ்நிலையாகவே நற்செய்தியாளர் விளக்குகின்றார். திருமண விருந்து கொண்டாட வேண்டிய திருமணத்தோழியர், சோர்வினால் ஒரு குட்டி தூக்கத்திற்குக் கண்ணயர்ந்து விடுகின்றார்கள். மணமகனின் வருகையை எதிர்நோக்கி சோர்வடைந்துவிட்டார்கள். மணமகளின் உறவினரும், விருந்தினரும் மணமகனின் வீட்டை அடையும் நேரம் நீண்டுவிட்டது.

விழிப்புற்றும் குரல்: திருமண விருந்தினர் மற்றும் மணமக்களின் பவனி அவர்களின் வீட்டை நெருங்கிய தருணத்தில் மணமகனின் வருகைக்காகத் தயாரிக்கும்படி விழிப்புற்றும் குரல் எழுப்பப்படுகின்றது. பத்துத் தோழியரும் தங்களின் விளக்குகளை உற்றுநோக்குகின்றனர். அவர்கள் சோர்வுற்ற நிலையில் இருந்தாலும், துரிதமாகச் செயல்படுகின்றார்கள். விவேகமற்ற ஐந்து கன்னியர்களின் விளக்குகளில் எண்ணெய் தீர்ந்துவிடவே, விவேகமுடைய ஐந்து தோழியரிடம் எண்ணெய் கடனாகக் கேட்கின்றார்கள் (தேர்வு எழுதும் பொழுது, பேனாவினுடைய மை தீர்ந்துவிட்டால், நாம் அருகிலிருக்கும் நமது நண்பர்களிடம் கொஞ்சம் மையைக் கடனாகப் பெற்றுத் தேர்வு எழுதி முடித்தது போன்று). ஆனால், விவேகமுள்ள ஐந்து தோழியரின் பதில் உதவ மனமில்லாதது போன்று அமைந்திருந்தது. ‘எங்களுக்கும் எண்ணெய் குறைந்து, உங்களுக்கும் எண்ணெய் குறைந்து பயனின்றி அமைந்துவிடும்; எனவே, நீங்களே வெளியே கடைக்குச் சென்று எண்ணெயைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ எனக்கூறும் ஐந்து விவேகமுள்ள கன்னியர்களின் பதில் ஏற்றுக்கொள்ள இயலாத மனிதாபிமானமற்ற பதிலாகத் தோன்றலாம் (இரவு நேரத்தில் எந்த எண்ணெய் கடைத் திறந்திருக்கும்? சோர்வாக இருக்கும் உடலால், உடனே வெளியே எண்ணெய் வாங்க முடியுமா?)

எண்ணெய் என்பது பொறுப்புணர்வு: எரியும் விளக்குகளில் உள்ள எண்ணெய் எது என்பதை இயேசு உவமையில் குறிப்பிடவில்லை. எண்ணெய் என்பது ஒரு விளக்கு பிரகாசமாய் எரிய உதவும் ஒரு முக்கியக் காரணி. இவ்வுவமையில் ‘எண்ணெய்’ என்பது நமது கிறித்தவ வாழ்வின் பொறுப்புணர்வு. எனது பொறுப்புணர்வு என்பது என்னுள் எனக்குள் வளர்வது; நான் இந்தப் பொறுப்புணர்வை மற்றவர்களிடமிருந்துப் பெற்றுக்கொள்ள முடியாது. பிறரின் பொறுப்புணர்வு மிகுந்த வாழ்வு என்பது தனிப்பட்ட கிறித்தவப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள உதவுமே தவிர, மற்றவர்களின் பொறுப்புணர்வை, எனது பொறுப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவிலும், முயற்சியிலும், பயிற்சியிலும், தியாகத்திலும் உருவாகும் செயல்பாடு.

எண்ணெய் என்பது ஆற்றல்: இவ்வுவமையின் எண்ணெய் என்பது ஒருவரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியும், அணையா ஆர்வம். ஒருவரின் வாழ்வு சிறப்புடன் அமைந்திட உள்ளாந்த ஆர்வமும், சிறப்புக் கவனமும் தேவை. நமது உடலின், உள்ளத்தின், எண்ணங்களின் வெளிப்படும் எண்ணெய்யாக உருவகப்படுத்துகிறது. அதனை ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்வில் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதை மற்றவர்களுக்குக் கடனாகத் தர இயலாது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் திருமுழுக்கின் வழியாக அது ஆழமாக ஊற்றப்பட்டுள்ளது.

எண்ணெய் என்பது செயல்பாடுகள்: “உங்களின் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக, உங்களின் நற்செயல்கள் மக்கள் கண்டு இறைத்தந்தையைப் போற்றி புகழ்வார்கள்” (மத் 5:16). எண்ணெய் என்பது, ஒருவரின் நற்செயல்களும், வாழ்வு தரும் செயல்பாடுகளும். நம்பிக்கை சாட்சிகளாய் ஒவ்வொருவரும் தங்களின் கரங்களில், வாழ்வுதரும் செயல்பாடுகளைச் சுமந்து செல்லவேண்டும். ஒருவரின் கருணை கொண்ட செயல்களும் உதவிகளும் புண்ணியங்களும் மற்றவர்களிடமிருந்து கடனாகப் பெறப்படுவதில்லை. ஏழை இலாசர்-செல்வந்தன் உவமையில், ஒரு சொட்டுத் தண்ணீர் தனது நாவில் விழக் கெஞ்சிக் கேட்டும், பணக்காரனின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவரவரின் செயல்களே, அவர்களுக்குத் தீர்ப்பாய் அமைகின்றது. ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என அழைப்பவர் எல்லாம் விண்ணரசில் நுழைவதில்லை. இவ்வுலக வாழ்வைச் செயல்மிகு, ஒளிர்விடும் விளக்குகளாக மாற்றுவோம். இவ்வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, சாட்சியச் செயல்பாடுகளால் நிறைத்து, ஒளிவீசும் விளக்குகளைக் கையிலேந்திச் சென்றால், இறைவனால் வரவேற்கப்பட்டு, அவரின் திருமண விருந்தில் பங்கெடுப்போம்.

ஞானநூல் புத்தகத்திலிருந்து வழங்கப்பட்ட முதல் வாசகம் ஞானத்தை ஒளியாகவும், அதைத் தேடுபவர்களுக்கு எளிதில் கிடைக்கப்பெறும் கொடையாகவும் ஒப்பிடப்படுகிறது. ஞானத்தைத் தேடுபவர்கள் அதனைத் கண்டடைகிறார்கள். விழிப்புடன் இருப்பவர்கள் அதனால் வழிநடத்தப்படுகிறார்கள். இறைவனைத் தேடி, அவரின் ஆவியின் கனிகளைப் பெற்று வாழ்வதும், அவரது உறவில் நிலைத்திருப்பதுமே நம் வாழ்வை ஒளிரச் செய்யும் எண்ணெய். இறைவனையும், அவருக்குரிய திட்டத்தையும் தேடி, அறிந்து வாழ்வதே ஒளி நிறைந்த வாழ்வு என்கிறது இன்றையத் திருப்பாடல்.

நம்முடைய கிறித்தவ வாழ்வு, இவ்வுலகிற்கான வாழ்வு மட்டுமல்ல; அது, நிறைவாழ்விற்குத் தயாராகும் பயண வாழ்வு. எனவே, நமது வாழ்வின் முடிவுகள், உறவுகள், பணிப்பொறுப்பு ஆகியவை இந்த நம்பிக்கையின் ஒளியில் அமைந்திடவேண்டும். துயரத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவது, மனம் உடைந்தவருக்கு நம்பிக்கைத் தருவது, தனிமையில் இருப்பவருடன் நேரம் செலவழிப்பது, தோல்வியின் விளிம்பில் உள்ளவரை மீண்டும் உற்சாகத்துடன் எழச்செய்வது ஆகிய அனைத்தும் கிறித்தவப் பொறுப்பின் வெளிப்பாடுகள்.

நமது வாழ்வு, பத்துத் தோழியரைப் போன்று, இருள் சூழ்ந்து இருந்தாலும், புதிய வாழ்விற்கான குரலும், புதிய வாழ்விற்கான அழைப்பும் வழங்கப்படும்பொழுது, நமது சோர்வு, பயம், பலமின்மை யாவும் விலகி புதியத் துவக்கம் மலர்கிறது. நமது பெற்றோர், ஆசிரியர், ஞானப்பெற்றோர் இவர்களின் வழியாக நமது கரங்களில் எரியும் விளக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்விளக்கு தொடர் பிரகாசித்த எரியவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. நமது நற்செயல்களும் கிறித்தவ பொறுப்புணர்வும், சாட்சியச் செயல்பாடுகளும் அவ்விளக்கை அணையாமல் காக்கும் நமது சிறிய சிறிய எண்ணெய் குப்பிகளே! நமது நல்ல எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்.

மூன்று கேள்விகள்

1. இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்புகளை நான் உண்மையாக நிறைவேற்றுகின்றேனா?

2. என் ஆன்மிக, சமூக, குடும்ப வாழ்வின் விளக்கை எரியச் செய்வதற்குத் தேவையான, செபம், இறைவார்த்தை, அன்புச் செயல்கள் என்னிடம் இருக்கின்றனவா?

3. இன்று வாழ்வை இருளாக்குகின்ற வறுமை, தனிமை, புறக்கணிப்பு, ஏற்றத்தாழ்வுகள், நம்பிக்கையின்மை எதிர்காலக் குழப்பங்கள், முதியோரின் புறக்கணிப்பு ஆகிய சூழலை - ஒளிரச் செய்ய என் சமூக, திரு அவை குடும்ப, சகோதரத்துவ பங்களிப்பு என்ன?