திருப்பலி முன்னுரை
அன்பிற்குரிய
இறை மக்களே! பொதுக்காலம் 33 - ஆம் ஞாயிறான
இன்று, பத்தாவது உலக ஏழையர் நாளைக் கொண்டாடுகின்றோம். இந்நாளில் ‘ஆண்டவரே ஏழையரின் அடைக்கலம்’
என்ற மையச் சிந்தனையில் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய
நற்செய்தியில் இயேசு கூறும் தாலந்து உவமையும், இந்த ஏழையர் தினக் கொண்டாட்டமும் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்துள்ளன. இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப தாலந்துகளை வழங்கியுள்ளார். அவை வெறும் பணம், பொருள் அல்லது தனிப்பட்ட திறமைகள் மட்டுமல்ல; அன்பு, இரக்கம், மன்னிப்பு, பொறுமை, பகிர்வு, சேவை போன்ற இறைவன் நமக்கு அளித்த கொடைகள் ஆகும். இந்தத் தாலந்துகளை நமக்குள்ளேயே புதைத்து வைக்காமல் ஏழையர், எளியவர், ஆதரவற்றோர், நோயுற்றோர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைக்கப் பயன்படுத்த வேண்டும். நம்மிடம் உள்ளதைப் பகிர்வதும், துன்பப்படுவோருக்கு ஆறுதல் அளிப்பதும், ஆதரவற்றோருக்கு ஆதரவாக நிற்பதும் இறைவன் அளித்த தாலந்துகளைப் பெருக்குவதற்கான சிறந்த வழிகளாகும். எனவே, இறைவன் நமக்கு வழங்கிய தாலந்துகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏழையர் மற்றும் எளிய மக்களின் நலனுக்காகப் பயன்படுத்திடவும், அவர்களுடைய துயரங்களை உணர்ந்து அவர்களுக்கு அன்பின் கரங்களாகவும், நம்பிக்கையின் ஒளியாகவும், அடைக்கலத்தின் நிழலாகவும் விளங்கிடவும் தேவையான அருள் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஒரு
பெண்ணின் உண்மையான அழகு அவரது வெளித்தோற்றத்தில் அல்ல; அவருடைய நற்பண்புகள், உழைப்பு, அன்பு, இரக்கம் மற்றும் இறைநம்பிக்கையில்தான் அடங்கியுள்ளது என்பதை எடுத்துரைக்கிறது இன்றைய முதல் வாசகம். நாமும் நற்பண்புகளால் இறைவனுக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் மனிதராக வாழ அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆண்டவரின்
வருகையை எதிர்நோக்கி வாழும் நாம் எப்போதும் விழிப்புடனும் இறைநம்பிக்கையுடனும் இருக்கவேண்டும். தீமைகளைத் தவிர்த்து நன்மைகளைச் செய்வதில் நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இறைவனின் வருகைக்குத் தயாராக நம்பிக்கை, அன்பு, விழிப்புணர்வு நிறைந்த வாழ்வை வாழ்ந்திட அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. நலன்களுக்கெல்லாம்
ஊற்றான எம் இறைவா! திரு அவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவரும் ஏழைகளின் அடைக்கலமாகத் திகழவும், இயேசுவின் இரக்கத்தையும் அன்பையும் உலகெங்கும் எடுத்துரைக்கும் உயிருள்ள சாட்சியாக விளங்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒளியின்
மக்களாக எம்மை வாழ அழைக்கும் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நல்ல திட்டங்களைச் செயல்படுத்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தாராள
உள்ளம் கொண்ட இறைவா, நாங்கள் அனைவரும் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள தாலந்துகளை அன்பு, இரக்கம், சேவை, பகிர்வு மற்றும் தியாகத்தின் வழியாகப் பெருக்கிடவும், சமூகத்தில் நன்மைகளை உருவாக்கும் கருவிகளாக மாறிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஏழைகளின்
அடைக்கலமே எம் இறைவா! வறுமை,
பசி, நோய், வேலையின்மை, ஆதரவின்மை மற்றும் பல்வேறு துன்பங்களால் வாடும் எளிய மக்களின் வாழ்வில் நீர் நம்பிக்கையின் ஒளியை ஏற்றவும், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் மலரச் செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.