ஒரே தாயின் கருவறையைப் பகிர்ந்துகொண்டு, ஒரே குருதியின் துடிப்பில் உயிர்த்தெழும் உடன்பிறப்புகளின் பந்தம் இந்த அகிலத்தில் ஆகப்பெரும் வரம்! குழந்தைப் பருவத்தின் பொன்னான நாள்களில் ஒரு சிறு மிட்டாயின் சுவையை இரு நாவுகளிலும் பகிர்ந்து, ஒருவரின் அழுகைக்கு மற்றவரின் விழிநீரே துடைப்பானாக மாறி, சிறு கோபங்களும் கணநேரச் சிரிப்பில் கரைந்து போகும் அந்தப் பாசத்தின் ஆழத்தை எந்த அளவுகோலினாலும் அளவிட முடியுமோ!
தோளோடு
தோள் நின்று உலகையே வென்றுவிடும் மிடுக்கையும், யாதோர் எதிர்பார்ப்புமற்ற தூய நேசத்தையும் ஊட்டி வளர்க்கும் உடன்பிறந்தாரின் பிணைப்பு, இறைவனின் ஆகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று. ஆனால், அதே உடன்பிறப்புகள் வளர்ந்து ஆளாகி, காலத்தின் பெருவெளியில் தத்தமது பாதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தத் தூய அன்பின்மீது சுயநலத்தின் கறை படியத் தொடங்குகிறது. குறிப்பாக, ‘மண்’ என்றும் ‘சொத்து’ என்றும் வரும்போது, பல தசாப்தங்களாக ஆழமாக
வேரூன்றியிருந்த பாசத்தின் விழுதுகள் அறுந்து விழுகின்றன. ஒரே பாயில் சுருண்டு படுத்து, கதைகள் பேசித் தூங்கிய அண்ணனும் தம்பியும், தங்களோடு பிறந்த சகோதரிகளும் இன்று ஒரு கைப்பிடி மண்ணுக்காகவும் சீதனக் கணக்குகளுக்காகவும் நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் எதிரிகளாக நின்று முறைத்துப் பார்க்கும் அவலம் நெஞ்சைப் பிளக்கிறது.
‘சொத்துப் பங்கீடு’ என்பது சட்டப்படி இயல்பான ஒன்று. பெற்றோரின் சொத்துகள் பிள்ளைகளுக்குப் பகிரப்படுவதும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால், சில குடும்பங்களில் பிரிக்கப்படுவது நிலம் மட்டும் அல்ல; நினைவுகளும் அன்பும்தாம். சகோதரத்துவம் கணக்குப் புத்தகத்தின் ஒரு வரியாக மாறுகிறது. நேற்று வரை ‘அண்ணா’ என்று பாசத்தோடு அழைத்தவன், இன்று ‘அவருடைய பங்கு எவ்வளவு?’ என்று தனிநபராகப் பேசப்படும் சூழல் உருவாகிறது.
சொத்து
என்பது வெறும் நிலமோ, வீடோ, பணமோ அல்ல; அது ஒரு குடும்பத்தின் தலைமுறைகளின் உழைப்பு. பிள்ளைகள் எந்தக் குறையுமின்றி வாழவேண்டும் என்பதற்காகத் தங்கள் ஆசைகளையெல்லாம் புதைத்து விட்டுப் பெற்றோர் செதுக்கிய அந்தச் சொத்தே, இன்று அதே பிள்ளைகளைப் பிளவுபடுத்தும் கூர்மையான ஆயுதமாக மாறுகிறது. ‘அவனுக்கு முன் மனை, எனக்குப் பின் மனை; அவனுக்கு அதிகப் பங்கு, எனக்குக் குறைந்த பரப்பு; சகோதரிக்கு ஏன் சொத்தில் பங்கு தரவேண்டும்?’ என்ற கணக்கீடுகளில், சிறுவயதில் பகிர்ந்து கொண்ட அந்தப் பேரன்பு சுக்குநூறாக நொறுங்கிப்போகிறது.
‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம்
எனினே தப்புந பலவே’
(பாடல் 189)
என்று
புறநானூற்றில் நக்கீரனார் சுட்டிக்காட்டுவது போல, நாம் சேர்க்கும் செல்வத்தின் உண்மையான பயனே அதனை உடன்பிறந்தோருடனும் பிறருடனும் பகிர்ந்து உண்பதுதான்.
ஒரு
காலத்தில் அண்ணனின் நிழலாக வாழ்ந்த தம்பியோ, தம்பியின் முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்பட்ட அண்ணனோ, தங்கள் துணைகளின் நுட்பமான தூண்டுதலாலும், ‘நமக்கான உரிமையை விட்டுத் தரக்கூடாது’ என்ற
சுயநலப் போட்டியினாலும் தங்களுக்குள் கோடுகளை வரைந்துகொள்கிறார்கள். ‘அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?’ என்ற ஒற்றை நச்சுக்கேள்வி, பல வருட உடன்பிறந்தாரின்
பிணைப்பை அறுத்தெறியும் கூர்மையான கத்தியாக மாறிவிடுகிறது. தன்னுடைய குடும்பம், தன்னுடைய எதிர்காலம் என்ற குறுகிய சுயநல வட்டத்திற்குள் மனிதன் சுருங்கும்போது, கூடப் பிறந்தவனின் கண்ணீரும், உடன்பிறந்த அக்கா - தங்கையின் ஏக்கமும் வெறும் பழைய கதைகளாக மறைந்துபோகின்றன.
இதன்
நடுவே, தம் வாழ்நாளையெல்லாம் பிள்ளைகளுக்காகத் தாரைவார்த்த வயதான பெற்றோரின் நிலை விவரிக்க முடியாத மன உளைச்சலானது. பிள்ளைகள்
கையேந்தக்கூடாது என்பதற்காகத் தங்கள் சொத்துகளை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்த மறு கணமே, பெற்றோர் சொந்த வீட்டிலேயே அகதிகளாக மாற்றப்படுகிறார்கள்.
இன்று
‘யார் வீட்டில் அப்பா இருப்பது? அம்மாவுக்குச் சோறு போடும் பொறுப்பு யாருடையது?’ என்று சொத்துப் பங்கீட்டில் போட்டியிடும் பிள்ளைகள், பெற்றோரைக் கைவிடுவதில் ஒன்றுபடும் காட்சி மிகக் கொடூரமானது. தன் கண் முன்னேயே பிள்ளைகள் பாசத்தை இழந்து பிளவுபட்டு நிற்பதைக் காணும் பெற்றோர், நெஞ்சம் நொறுங்கி, மனத்திற்குள்ளேயே அழுது, வாழ்வின் இறுதி நாள்களைத் தவிப்போடு கடத்துவது இந்தச் சமூகத்தின் கசப்பான மறுபக்கம்.
‘ஆறு மாதம் நீ பார், ஆறு
மாதம் நான் பார்க்கிறேன்’ என்று
பெற்றெடுத்த தாய்-தந்தையரை அன்போடு அரவணைப்பதற்குப் பதிலாக, மைதானத்தில் காலால் உதைக்கப்படும் கால்பந்தைப் போல அங்கும் இங்கும் உதைக்கும் அவலம் சமூகத்தின் பேரவலம். தம்மையே உருக்கித் தனக்கு வெளிச்சம் தந்த மெழுகுவர்த்திகளான பெற்றோர், இறுதிக் காலத்தில் சொந்தப் பிள்ளைகளின் வீடுகளிலேயே ‘தற்காலிக விருந்தினர்களாக’ வாழ்வதும்,
மாதக் கணக்கு முடிந்ததும் மூட்டை முடிச்சுகளோடு அடுத்தப் பிள்ளையின் வாசலுக்கு நகர்வதும் எத்தனை கொடுமையான உளவியல் வதை!
ஒரு
வயதான தந்தைக்கு மிகப்பெரிய வலி பணம் இல்லாதது அல்ல; தன் பிள்ளைகளிடம் பேசுவதற்கு ஒரு மனம் இல்லாமல் போவது. ஒரு வயதான தாய்க்கு மிகப்பெரிய துயரம் வீடு இல்லாதது அல்ல; தன்னைப் பெற்ற பிள்ளைகளின் வீட்டில் தான் ஒரு பாரமாக உணரப்படுவது. திருவள்ளுவர் தன் குறளில்,
‘அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி
நீர்நிறைந் தற்று’
(குறள் 523)
என்று
எச்சரிப்பதைப் போல, உடன்பிறந்தாரோடும் சுற்றத்தாரோடும் அன்போடு கலந்து பழகாத ஒருவனின் வாழ்க்கை, கரையில்லாத குளத்திலே நீர் நிரம்பினாற்போலப் பயனற்றதாகும்.
வாழ்க்கையின்
இறுதியில் நமக்குச் சொந்தமாக இருப்பது எவ்வளவு நிலம் என்பதல்ல; நம்மை நினைத்து அழும் மனிதர் எத்தனை பேர் என்பதுதான். பங்கீடு தவறல்ல; உரிமை கேட்பதும் தவறல்ல. ஆனால், உரிமைக்காக உறவை அழிப்பதும், சொத்துக்காகப் பெற்றோரைக் கைவிடுவதும்தான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பாகி விடக் கூடும். ஒரு நிலத்தைச் சுற்றி எல்லைக்கல் வைக்கலாம், வீட்டை ஆவணத்தில் பங்கிடலாம். ஆனால், ஒரு தாயின் இதயத்தை எப்படிப் பிரிப்பது? தாய்க்கு அண்ணன் ஒரு பக்கம், தம்பி ஒரு பக்கம் அல்லர்; எல்லாரும் ஒரே பிள்ளைகள்தாம்.
ஒருநாள்
பெற்றோர் இல்லாமல் போய்விடுவார்கள். அப்போது அவர்கள் விட்டுச்சென்ற வீடு யாருக்கு? நிலம் யாருக்கு? நகை யாருக்கு? என்ற கேள்விகள் தீர்ந்துவிடலாம். ஆனால், அதற்குப் பிறகு மற்றொரு கேள்வி மட்டும் நம்மைத் தொடர்ந்து வரும்: ‘நம்முடைய பெற்றோர் உயிரோடு இருந்தபோது, நாம் அவர்களுக்கு என்னவாக இருந்தோம்?’ இந்தக் கேள்விதான் மிகவும் கடினமானது.
வாழ்க்கை
நமக்குக் கற்பிக்கும் மிகச்சிறந்த பாடம் இதுதான்: நாம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லவேண்டிய மிகப்பெரிய சொத்து வங்கியில் இருக்கும் பணமோ, நிலமோ அல்ல; பகிர்ந்து வாழும் பண்பாடும், பெற்றோரைப் பேணும் அன்பும்தாம்!
இன்று
நாம் நம் பெற்றோருக்கு என்ன செய்கிறோமோ, அதைத்தான் நாளை நம் பிள்ளைகளும் நமக்குச் செய்யப்போகிறார்கள். சொத்து பங்கிடப்படட்டும், பொறுப்புகள் பகிரப்படட்டும், உரிமைகள் பாதுகாக்கப்படட்டும்... ஆனால், அன்பு மட்டும் கணக்கிடப்படாமல் இருக்கட்டும்! பெற்றோர் வாழும் காலத்திலேயே அவர்களைக் கொண்டாடுவோம்; உடன்பிறந்தாரின் பாசத்தைக் காப்போம்.
ஏனெனில்,
ஒரு குடும்பத்தின் உண்மையான செல்வம் அதன் நிலத்தின் அளவில் இல்லை. அந்த நிலத்தைப் பகிர்ந்த பிறகும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்கும் இதயங்களின் எண்ணிக்கையிலும், பெற்றோரைக் காக்கும் கருணையிலும்தாம் இருக்கிறது. ஒருநாள் நாம் எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டியவர்கள்தாம். வீடு, நிலம், பணம் எல்லாம் போகும். ஆனால், நம்முடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு, ‘நாம் சகோதரர்கள்; நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய சொத்து இந்த அன்பும் பண்பாடும்தான்’ என்று
சொல்லும் நாள்தான் நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி!
பங்கீட்டில்
சொத்து மட்டும் பிரியட்டும்; ஆனால்... பாசமும் பெற்றோர் மீதான மதிப்பும் ஒருபோதும் பிரியாதிருக்கட்டும்!