அன்று மாலை நல்ல மழை. பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. மழையிலிருந்து தப்பிக்க எல்லாரும் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள். சிலர் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் ‘பேருந்து வருகிறதா?’ என்று சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் மழையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக்
கூட்டத்தின் ஓரத்தில் வயதான ஒருவர் நின்றுகொண்டிருந்தார்; அவருடைய சட்டை முழுவதும் நனைந்திருந்தது. ஒரு கையில் பழைய பை. மற்றொரு கையில் ஊன்றுகோல். மழையிலிருந்து ஒதுங்குவதற்கு அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அருகில் நின்றவர்கள் அவரைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் நகரவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சிறுவன் தன் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான்.
“அம்மா,… அந்தத் தாத்தாவுக்கு இடம் கொடுக்கலாமே!” அம்மா திரும்பிப் பார்த்தார்.
அப்போதுதான்
அந்த முதியவரின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளை அவர் கவனித்தார். சிறுவன் கொஞ்சம் நகர்ந்து நின்றான். அந்த முதியவருக்கு இடம் கிடைத்தது. மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது. ஆனால், அந்தச் சிறிய இடத்தில் ஏதோ ஒன்று மாறியிருந்தது. அங்கே நின்றிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் கண்கள் இருந்தன. ஆனால், அந்த முதியவரின் துயரத்தை முதலில் பார்த்தது ஒரு குழந்தையின் இதயம்! நாம் உண்மையிலேயே பார்க்கிறோமா?
இன்றைய
மனிதனின் கண்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களைக் காண்கிறோம். கடலின் ஆழத்தை ஆராய்கிறோம். உலகின் மறுமுனையில் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த நொடியே பார்க்கிறோம். ஆனால், நம் அருகில் இருக்கும் மனிதனின் கண்ணீரை மட்டும் ஏன் பார்க்க முடியவில்லை?
சாலையோரத்தில்
பசியோடு அமர்ந்திருக்கும் ஒருவரைக் கடந்து செல்கிறோம். தனிமையில் வாழும் முதியவர்களைக் காண்கிறோம். பிறருடைய துன்பங்களைச் செய்திகளாகப் படிக்கிறோம். காணொளிகளாகப் பார்க்கிறோம். சில நேரங்களில் அதைப் பகிரவும் செய்கிறோம். பிறகு அடுத்த செய்திக்குச் சென்றுவிடுகிறோம்.
ஒரு
மனிதனின் துயரம் நமக்கு ஒரு நிமிடக் காட்சியாக மாறிவிட்டதா? ஒருவரின் கண்ணீர் நம்முடைய கைப்பேசித் திரையில் தோன்றி மறையும் மற்றொரு செய்தியாகிவிட்டதா?
‘பார்க்கும் திறன் வளர்ந்த அளவுக்கு, பரிதவிக்கும் மனம் வளர்ந்திருக்கிறதா?’ இந்தக் கேள்வி நம்மைச் சங்கடப்படுத்தலாம். ஆனால், சில கேள்விகள் நம்மைச் சங்கடப்படுத்துவதற்காகவே கேட்கப்படவேண்டும். காணாமல் போனது மனிதமா? ஒரு காலத்தில் அடுத்த வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால், நம் வீட்டிலும் கவலை இருக்கும். ஒரு வீட்டில் துக்கம் என்றால், தெருவே அமைதியாகும். ஒருவருக்குப் பிரச்சினை என்றால், உதவி கேட்பதற்கு முன்பே சில கரங்கள் நீளும்.
இன்று
நம்முடைய வீடுகளுக்கு உயரமான சுவர்கள் வந்துவிட்டன. கதவுகளுக்குப் பாதுகாப்புப் பூட்டுகள் வந்துவிட்டன. கைகளில் உலகையே இணைக்கும் கைப்பேசிகள் வந்துவிட்டன. ஆனால், இதயங்களுக்கிடையே ஏன் இவ்வளவு தூரம்? தொழில்நுட்பம் நம்மை இணைக்கிறது; ஆனால், அந்த இணைப்பு நம்மை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கியிருக்கிறதா? நூற்றுக்கணக்கான மனிதர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், நம்முடன் வாழும் ஒருவரின் மனவேதனையைக் கேட்க நேரமில்லாமல் போகிறது.
நாம்
அன்பற்றவர்களாக மாறிவிட்டோம் என்று கூறமுடியாது. இன்றும் எத்தனையோ மனிதர்கள் பிறருக்காக வாழ்கிறார்கள். தங்களுக்குத் தெரியாதவர்களுக்காக இரத்தம் கொடுக்கிறார்கள். பேரிடர்களில் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். ஏழைகளின் பசியைப் போக்குகிறார்கள்.
மனிதம்
முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆனால், சில நேரங்களில் அது நம்முடைய அவசரத்திற்குள்ளும் அலட்சியத்திற்குள்ளும் சுயநலத்திற்குள்ளும் மறைந்துகொள்கிறது. மனிதம் இறந்துவிடவில்லை; அதை வெளிப்படுத்த நாம் மறந்து விட்டோமோ?
இயேசு
கூறிய நல்ல சமாரியர் உவமையை நினைத்துப் பார்ப்போம் (லூக்கா 10:25-37). ஒரு மனிதன் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வழியோரத்தில் குற்றுயிராகக் கிடந்தான். அந்த வழியாக ஒரு குரு வந்தார்; அவரைப் பார்த்தார்; கடந்து சென்றார். பிறகு ஒரு லேவியர் வந்தார்; அவரும் பார்த்தார்; கடந்து சென்றார். இறுதியாக ஒரு சமாரியர் வந்தார்; அவரும் அந்த மனிதனைப் பார்த்தார்; ஆனால், அவர் மட்டும் கடந்து செல்லவில்லை. அருகில் சென்றார், காயங்களைக் கவனித்தார், உதவி செய்தார். மூவருக்கும் கண்கள் இருந்தன. மூவரும் காயமடைந்த மனிதனைப் பார்த்தார்கள். ஆனால், ஒருவருடைய பார்வை மட்டுமே இரக்கமாக மாறியது. இயேசு இந்த உவமையில் நமக்குக் கூறும் உண்மை எவ்வளவு ஆழமானது!
ஒருவரின்
துயரத்தைப் பார்ப்பது மட்டும் மனிதமல்ல; அந்தத் துயரத்தைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்வதுதான் மனிதம். அந்தச் சமாரியர் காயமடைந்த மனிதனின் பெயரைக் கேட்கவில்லை. அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று விசாரிக்கவில்லை. அவனுடைய மதம் என்ன என்று ஆராயவில்லை. அவனுக்குத் தேவை உதவி என்பதை மட்டும் உணர்ந்தார். அந்த உணர்வே அவரை நல்ல சமாரியராக மாற்றியது. மனிதம் பெரிய செயல்களில் மட்டுமா இருக்கிறது?
சில
நேரங்களில் மனிதநேயம் என்றவுடன் பெரிய உதவிகளை நினைக்கிறோம். ஏழைகளுக்குப் பணம் கொடுப்பது, நோயாளிகளுக்கு உதவுவது, சமூக சேவை செய்வது என்று எண்ணுகிறோம். ஆனால், மனிதம் அதைவிட எளிமையான இடங்களிலும் இருக்கிறது. பேருந்தில் வயதானவருக்கு இருக்கை கொடுப்பதில் இருக்கிறது; மருத்துவமனையில் பயத்துடன் நிற்கும் ஒருவருக்கு வழிகாட்டுவதில் இருக்கிறது; வேலை செய்யும் ஒருவரிடம் மரியாதையாகப் பேசுவதில் இருக்கிறது; தனிமையில் இருக்கும் ஒருவரிடம், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று உண்மையான அக்கறையோடு கேட்பதில் இருக்கிறது; ஒருவர் பேசும்போது கைப்பேசியை ஒதுக்கிவைத்துக் கேட்பதில்கூட இருக்கிறது.
எல்லாராலும்
எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது; ஆனால், ஒருவருடைய பிரச்சினையை இன்னும் பெரிதாக்காமல் இருக்க முடியும். எல்லாருடைய கண்ணீரையும் துடைக்க முடியாது; ஆனால், ஒருவருடைய கண்ணீரைக் கண்டும் காணாதவராகக் கடந்து செல்லாமல் இருக்க முடியும். இதற்குப் பெரிய செல்வம் தேவையில்லை, பெரிய பதவி தேவையில்லை, பெரிய அறிவும் தேவையில்லை. கொஞ்சம் இதயம் இருந்தால் போதும்.
இன்னும்
அந்த மழை பெய்துகொண்டிருக்கிறது. மீண்டும் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வருவோம். அந்த முதியவருக்கு இடம் கொடுத்த சிறுவன் எந்தப் பெரிய சாதனையையும் செய்யவில்லை. அவன் மழையை நிறுத்தவில்லை. அந்த முதியவரின் வறுமையைப் போக்கவில்லை. அவருடைய வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. அவன் செய்ததெல்லாம் கொஞ்சம் நகர்ந்து நின்றதுதான். ஆனால், அந்தச் சிறிய செயலுக்குள் ஒரு பெரிய மனிதம் இருந்தது. சில நேரங்களில் பிறருக்கு இடம் கொடுப்பதற்காக நாம் நம்முடைய இடத்திலிருந்து கொஞ்சம் நகர வேண்டியிருக்கிறது.
நம்முடைய
வசதியிலிருந்து,… அவசரத்திலிருந்து,… சுயநலத்திலிருந்து, அலட்சியத்திலிருந்து நாம் விலகி வரும்போதுதான் மற்றவர்களின் வலிக்கு நம்முடைய இதயத்தில் இடம் கிடைக்கிறது.
இன்றும்
உலகின் பல இடங்களில் மழை
பெய்துகொண்டுதான் இருக்கிறது. சிலருக்கு அது வறுமையின் மழை; சிலருக்கு நோயின் மழை; சிலருக்குத் தனிமையின் மழை; சிலருக்கு நிராகரிப்பின் மழை. அந்த மழையில் நனையும் மனிதர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்காக நம்மால் ஒரு பெரிய கூரையாக மாற முடியாவிட்டாலும், ஒரு சிறிய குடையாகவாவது மாற முடியாதா?
கண்கள்
இருப்பது உலகத்தைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல; மற்றொருவரின் கண்ணீரையும் காண்பதற்காகத்தான். ஏனெனில், மனிதம் தொலைந்துவிடவில்லை; அது இன்னும் நம்முடைய கண்களிலிருந்து இதயத்திற்குச் செல்லும் வழியைத் தேடிக் கொண்டிருக்கிறது!