1977-இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் உருவாக்கிய ‘ஆலிவுட்’ படம் ஒன்று வசூலில் சக்கைப் போடு போட்டது. படத்தின் பெயர் ‘STAR WARS.’
‘ஸ்டார் வார்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய அந்த நட்சத்திரப்போர் மூண்டால் இந்தப் பூமியின் கதி என்னவாகும் என்பதைப் படம் மிரள வைத்திருந்தது. படம் முடிந்து வெளியேறியவர்களுக்கெல்லாம் வெளிறிய முகம். குலை நடுக்கம். நிழல் கதையில் மட்டுமே பார்க்க முடிந்த நட்சத்திரப் போர் நிஜமாகவே மூண்டுவிட்டால்...? நினைக்கவே நெஞ்சம் பதறத்தான் செய்கிறது.
சரி,
நமது இதயங்களையெல்லாம் இறுக்கிப்பிழியும் அந்தக் கொடூரமான நட்சத்திரப் போர் என்பதுதான் என்ன? ஆகாயத்திலிருந்தபடியே பூமியைக் குறிபார்க்கும் நவீன அதேசமயம் அதிபயங்கர எமன் வடிவம்தான் நட்சத்திரப் போர்.
கண்டம்
விட்டுக் கண்டம் தாண்டி தாக்கக்கூடிய ஏவுகணைகளை (Intercontinental Weapons Ballistic
Missie) ஏவி
மோதிக்கொள்வதுதான் இப்போதுள்ள போர்முறைகளில் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதில் ஏவுகணை என்பது ஆயுதமல்ல; ஆயுதங்களைச் சுமந்து செல்லும் சவாரிக் குதிரை அவ்வளவுதான்.
ஏவுகணையின்
உடம்பில் ஏதாவது ஓர் இடத்தில் ஆயுதங்களைப் பொருத்த முடியும். அது சாதாரண ஆயுதமாக இருக்கலாம் அல்லது அணு ஆயுதமாகவும் இருக்கலாம். இலக்கு முடிவு செய்யப்பட்டு குண்டு வைக்கப்பட்ட ஏவுகணைக் குதிரையைத் தட்டினால், அடுத்த மணித்துளிகளில் இலக்கு வைக்கப்பட்ட இடம் ‘டமால்...’ சுற்றியுள்ள இடங்களும் ‘பணால்!’
நாடுகளின்
தொழில்நுட்பத் திறனுக்கு ஏற்பவும், பொருளாதார வசதிக்கு ஏற்பவும் அந்தந்த நாடுகள் வெவ்வேறு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்திருக்கின்றன. இதில் ஓர் உண்மையைச் சொன்னால் நீங்கள் பயப்படக்கூடாது. வல்லரசு நாடுகள் தவிர பல்வேறு உலக நாடுகளும் தன் எதிரி நாடுகளின் தாக்கவேண்டிய இலக்குகளைக் குறிபார்த்து ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இந்த நொடியில் நினைத்தாலும், அடுத்த சில விநாடிகளில் தகர்க்க வேண்டிய எதிரி நாடுகளின் இலக்குகள் அவுட்!
ஏவுகணைப்
போர் என்பது குதிரைப் பந்தயம் போன்றதுதான். தடை தாண்டிப் போய் இலக்குகளைத் தொட்டுவிடவும் முடியும்; தடைகளால் தடுக்கப்பட்டு நின்று போகவும் முடியும்.
வளைகுடாப்
போரின்போது ஈராக்கின் சஸ்கட் ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட்டுகள் இடையிலேயே வழிமறித்து குரல்வளையை நெரித்த கதைதான் நமக்குத் தெரியுமே!
இடைஞ்சல்
இல்லாமல் ஆயுதங்களை எப்படி அள்ளிவீச முடியும்? என்று வெகுகாலம் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். அப்போது அவர்களின் மூளைச் செல்களில் முளைத்த நாசகார விருட்சம்தான் நட்சத்திரப் போர் முறை. சீதையை மீட்க இராமன் முயன்ற இலங்கைப் போரில், இராவணனின் மைந்தன் மேகநாதன் மேகங்களில் நின்றுகொண்டு பூமியை நோக்கி அம்பு எய்ததாக இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதே...
அந்த இலக்கியக் காட்சியினுடைய நவீன உருவாக்கச் சிந்தனையே நட்சத்திரப் போர் என்று கூடச் சொல்லலாம்.
உலகின்
பல்வேறு நாடுகளும் தற்போது வெவ்வேறு காரணங்களுக்காக விண்ணிலே செயற்கைக் கோள்களைச் செலுத்தியிருக்கின்றன. தொலைத் தொடர்பு இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், வானிலையை ஆராய்வதும், பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், எதிரி நாடுகளுடைய செயல்பாடுகளை உளவு பார்ப்பதுமே செயற்கைக்கோள்களின் வேலை. ‘இப்படிப்பட்ட செயற்கைக்கோள்களில் ஆயுதங்களை வைத்துப் பூமியின் தாக்கவேண்டிய இலக்குகளைக் குறிபார்த்து அடித்தாலென்ன?’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆசைப்பட்டதன் விளைவே நட்சத்திரப் போர் முயற்சி.
செயற்கைக்கோள்களில்
இரசாயன ஆயுதங்களை (Chemical weapons)
வைக்க முடியும்; உயிரி ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களையும் (Atomic weapons) பொருத்த முடியும். இரசாயன ஆயுதங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றில் மெத்தில் ஐசோ சயனைட் என்ற நஞ்சைக் கக்கும் கொடிய இரசாயன நாகப்பாம்புதான் அதிக ஆபத்தானது. போபாலில் ஒருமுறை விஷவாயுக் கசிவு தொழிற்சாலையில் ஏற்பட்டு, பல நூறு மக்கள்
மடிந்தார்களே... அதே நச்சுவகைப் புகைதான். மெத்தில் ஐசோ சயனைட் இரசாயன ஆயுதங்கள் வீசப்பட்ட இடத்தில் உயிரற்றக் கட்டடங்களுக்கு ஒன்றும் சேதம் வராது; உயிரினங்கள் மட்டுமே உருக்குலைந்து உயிர் மடிந்துவிடும்.
அணு
ஆயுதங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இரண்டாம் உலகப்போரின்போது வலிமை குறைந்த அணுகுண்டை அமெரிக்கா வீசியதற்கே, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் இன்றும் ஊனங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. இப்போதுள்ள நியூட்ரான் குண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்ற அணு ஆயுத வகைகள் முன்பிருந்தவைகளைவிட எத்தனையோ வலிமை வாய்ந்தவை!
அணுகுண்டு
வீசப்பட்ட இடத்தில் முதலில் அளவுக்கதிகமான வெப்பம் தோன்றும். தமிழ்நாடு முழுவதும் நிலக்கரியை நிரப்பி ஒரே நேரத்தில் எரியூட்டினால் எவ்வளவு வெப்பம் கிடைக்குமோ அதே அளவு வெப்பம் ஓர் அணுகுண்டு வெடித்தால் தோன்றுவதாகக் கூறுகிறார்கள். வெப்பத்தைத் தொடர்ந்து கதிரியக்கமும் ஏற்படுகின்றது. இக்கதிரியக்க வெளியேற்றம் பலநூறு ஆண்டுகள் தொடர்ந்துகொண்டே இருக்குமாம். இதனையும் மீறி பூமியில் நாம் உயிர் வாழமுடியுமா? சந்தேகம்தான்.
இந்த
நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒரு நாடு நட்சத்திரப் போருக்குத் தயாரானால், மற்ற வலிமையுள்ள நாடுகளும் போட்டிக்காகவாவது அதே போருக்குத் தயாராகும் நிலை உருவாகும். அப்போது செயற்கைக்கோள்கள் ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளும் பயங்கரம் விண்ணிலே ஏற்படும். செயற்கைக் கோள்களில் வைக்கப்பட்ட ஆயுதங்கள் வெடித்துச் சிதறும். அண்டவெளி அதிரும், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் பாதிக்கப்படும். ஆயுத வெடிப்பின் விளைவால் காற்று மண்டலத்திலுள்ள ஆக்சிஜன் அளவு குறையும். சுவாசிப்பதற்குக் காற்று பற்றாமல், பூமியின் உயிரினங்களுக்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படும். சூரியனின் வெப்பத்திலிருந்து நம்மைப் போர்வை போல் மூடிப் பாதுகாக்கும் ஓசோன் படலம் உடைந்து சிதறும். எனவே, சூரியனின் வெப்பம் பூமியை நேரடியாகத் தாக்கும் பயங்கரம் நிகழும். பூமியின் உயிரினங்கள் வெந்து மடியும். திடீர் வெப்பத்தின் அதிகரிப்பால் ஆர்ட்டிக், அண்டார்டிக் பனிக் கடல்கள் உருகும். 21 விழுக்காடு நிலம்,
79 விழுக்காடு கடல்
என்ற பூமியின் நிலவமைப்பு மாறுபடும். கடல் நீரின் வயிற்றிற்குள் பூமியின் பல பகுதிகள் புகுந்துவிடும்.
மொத்தத்தில், அண்டவெளியின் உயிர்க்கோளமே இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
நட்சத்திரப்
போரினால் இவ்வளவு பெரிய அழிவு உண்டாகும் எனத் தெரிந்திருந்தும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அதற்கு ஆதரவாகவே செயல்பட்டார். அமெரிக்க விஞ்ஞானிகள் நட்சத்திரப் போர் திட்டத்தை வெளியிட்ட நேரத்தில், ரீகனே வலிமைமிக்க அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்தார்.
இந்த
ஆகாயவழிப் போருக்கு அமெரிக்கா தன்னை முழுவீச்சில் அர்ப்பணித்துக்கொள்ளவே, அன்றைய பிரஷ்னேவின் தலைமையில் இயங்கிய ஒன்றுபட்ட இரஷ்யாவும் நட்சத்திரப் போருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமாயிற்று. ஆனால், நட்சத்திரப் போரைச் செயல்படுத்த மிகப்பெரிய நிதி ஆதாரம் தேவைப்படவே அமெரிக்காவும் இரஷ்யாவும் மற்ற உலக நாடுகளுக்கெல்லாம் தந்திரமாக ஆசை வார்த்தை ஒன்றைக் காட்டின. நட்சத்திரப் போர் திட்டத்திற்கு நிதி உதவி செய்யும் நாடுகள் அந்தக் திட்டத்தால் எந்தச் சூழ்நிலையிலும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்பதே அந்த ஆசை வார்த்தை.
நட்சத்திரப்
போரின் விளைவுகளை நினைவில் கொண்டதாலோ என்னவோ எந்த நாடும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. திருத்தந்தையர் முதற்கொண்டு சமாதானத்தை விரும்பும் பல்வேறு சமூக நல அமைப்புகளும் இந்தப்
போர்முறைக்கு அன்று பலத்த எதிர்ப்பையே காட்டின. அத்தோடுதான் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
திட்டத்தைக்
கிடப்பில் போட்டாலும், அழிவுத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து விட்டவர்கள் என்றைக்காவது ஒருநாள் அதை ஆகாயத்திலிருந்து செயல்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிற பீதி நம்மையெல்லாம் அச்சுறுத்திக் கொண்டுதானே இருக்கிறது?
ஒரு
பக்கம், எல்லாத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம்; மறுபக்கம், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலக வெப்பமயமாதல் மற்றும் இவை போன்ற நாசகாரப் போர் பயமுறுத்தல்கள். இச்சூழலில் நாளைய உலகம் என்னவாகும்? உலகைப் படைத்த இறைவன்தான் இவற்றிற்கெல்லாம் விடை சொல்லவேண்டும்?