திருப்பலி முன்னுரை
அன்பிற்குரிய
இறைமக்களே! திருவழிபாட்டு ஆண்டின் 34-ஆம் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறான இன்று, நம் தாய்த் திரு அவை அகில உலகின் அரசரும் ஆண்டவருமான கிறிஸ்து அரசர் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் நன்றியுணர்வோடும் கொண்டாட நம்மை அழைக்கிறது. பொதுவாக அரசர் என்றால் அதிகாரம், ஆடம்பரம், படைபலம், செல்வம், அரியணை ஆகியவையே நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவின் அரசாட்சி இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது அரசியல் அதிகாரத்தையோ, இராணுவ பலத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, அன்பு, பணிவு, மன்னிப்பு, நீதி, இரக்கம், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக அரசாட்சியாகும். இன்றைய நற்செய்தியின் வழியாக, பசியால் வாடும் ஏழையின் முகத்திலும், ஆதரவற்றோரின் கண்ணீரிலும், நோயுற்றோரின் வேதனையிலும், சிறையில் வாடும் மனிதரின் தனிமையிலும் இயேசுவைக் கண்டு ஆசிபெற்ற மக்களாக வாழ அழைப்புவிடுக்கிறார்.
அன்பு
இறைமக்களே, கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், பிறருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய அன்புச் செயலும் கிறிஸ்து அரசருக்குச் செலுத்தும் பணிவிடையாகும் என்பதில் நாம் மகிழ்வுகொள்வோம். இயேசுவை நம் உதடுகளால் மட்டுமல்ல, நம் இதயங்களாலும் செயல்களாலும் அரசராக ஏற்றுக்கொள்வோம். நமது உள்ளங்களிலும் குடும்பங்களிலும் சமூகத்திலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் ஆட்சிசெய்ய அருள்வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.
முதல் வாசகம்
முன்னுரை
தமது
மந்தையின்மீது கொண்ட அளவற்ற அன்பினால், அவற்றைத் தேடிவரும் நல்ல ஆயனான இறைவன் சிதறுண்டு போனவர்களை ஒன்றிணைத்து, வழிதவறியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, காயமுற்றவர்களின் காயங்களைக் கட்டி, நலிவுற்றவர்களுக்கு வலிமையூட்டும் இரக்கத்தின் இறைவனாகத் திகழ்கிறார். ஒருவரையும் கைவிடாத இறைவனின் பராமரிப்பையும் நீதியையும் உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், சாவை வென்று உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே புதிய வாழ்வின் ஊற்றாகவும், நம் நம்பிக்கையின் அடித்தளமாகவும் திகழ்கிறார் என்பதைப் புனித பவுல் எடுத்துரைக்கிறார். உலகின் அதிகாரங்களும் ஆட்சிகளும் வலிமைகளும் அனைத்தும் ஒருநாள் ஒழிக்கப்பட்டு, கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார். இவ்வாறு அன்பாலும் நீதியாலும் ஆட்சிசெய்து, சாவையும் தீமையையும் வெல்லும் கிறிஸ்துவின் நிலையான அரசாட்சியில் பங்குபெற நம்மை அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
அரசரே எம் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் நல்ல ஆயர்களாகத் திகழ்ந்து, அன்பாலும் சேவையாலும் இறைமந்தைகளை நல்வழியில் வழிநடத்திடத் தேவையான ஞானத்தைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின்
தெய்வமே எம் இறைவா! இவ்வுலகை ஆட்சி செய்யும் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கிறிஸ்து அரசரை முன்மாதிரியாகக் கொண்டு வாழவும், மக்களின் நலனையும் அமைதியையும் முன்னிறுத்தும் நல்லாட்சியை வழங்கிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின்
அரசரே இறைவா, எம் இளையோர், மாணவர்கள் தங்கள் திறமைகளையும் ஆற்றல்களையும் நன்மைக்காகப் பயன்படுத்தி, அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பின்
இறைவா, இன்றைய திருப்பலியில் பங்கேற்போர் உண்மை, நீதி, நேர்மை, இரக்கம் போன்ற பண்புகளில் வேரூன்றி, இறையாட்சிக்குச் சான்று பகரும் இல்லங்களாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.