news-details
சிறப்புக்கட்டுரை
ஆனால்... சுவர்களுக்குப் பின்னே புதைந்துபோன உழைப்பு! (வாழ்வின் மறுபக்கம் – 6)

அதிகாலையில் பெரும்பாலான வீடுகளில் இன்னும் விளக்குகள் அணைந்திருக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால் உறக்கம் நீடிக்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் நாள் மட்டும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தன் குழந்தைகளுக்கும் கணவருக்கும் தேவையான உணவைத் தயார் செய்கிறார்; பின்னர் மற்றொரு வீட்டின் கதவைத் திறக்கிறார். அங்கே அவருக்காகக் காத்திருப்பவை பாத்திரங்கள், துணிகள், துடைப்பம், தரை, சமையலறை. அந்த வீட்டின் சுவர்களுக்குள் அவருடைய உழைப்பு முழு நாளும் தெரிகிறது.

ஒரு வீட்டின் விடியல், அடுக்களையில் இருந்து எழும்பும் பாத்திரங்களின் ஓசையோடுதான் தொடங்குகிறது. ஆனால், அந்த ஓசையை எழுப்பும் கரங்கள் யாருடையவை? தன் சொந்த வீட்டின் அடுப்பு எரிய வேண்டும் என்பதற்காக, அடுத்தவர் வீட்டு அழுக்குகளையும் சுமைதாங்கிபோலத் தாங்கும் பெண்களின் கதையை நாம் எப்போதாவது உற்றுநோக்கியிருக்கிறோமா?

சுவர்களுக்கு வண்ணம் பூசும் மனிதர் தங்களின் வசிப்பிடத்தை வண்ணமயமாக வைப்பதில்லை; தலையைப் பிளக்கும் வெயிலில் இளநீர் விற்கும் பெரியவர் தன் தாகத்திற்கு ஒரு சொட்டு இளநீரைக் குடிப்பதில்லை; தெருவோரத்தில் நின்று பிறரின் காலணிகளைத் தைக்கும் தாத்தா, தன் கால்களுக்கு ஒரு நல்ல செருப்பை அணிந்துகொள்வதில்லை. அதேபோல், பிறர் வீடுகளை மிளிரவைக்கும் பெண்களின் வாழ்க்கை, எப்போதும் நிழல் உலகத்திலேயே கழிந்துபோகிறது.

சமூகத்தின் கண்களுக்கு இவர்கள் வெறும் ‘வேலைக்காரி’ என்ற இழிவான சொல்லாலோ அல்லது ‘வேலைக்காரிகள்’ என்ற ஒற்றை வரையறைக்குள்ளோ சுருக்கப்பட்டு விடுகிறார்கள். ஆனால், இந்த அடைமொழிகளுக்குப் பின்னால், ஒரு பெருங் கடலெனக் கொந்தளிக்கும் கண்ணீரும் தியாகமும், சொல்ல முடியாத அவமானங்களும் மறைந்து கிடக்கின்றன. ‘வீட்டுப் பணியாளர்கள்’, ‘அகப்பணியாளர்கள்’ அல்லது ‘இல்லப் பராமரிப்பாளர்கள்’ என்ற மரியாதைக்குரிய மாற்றுப் பெயர்களால் இவர்களை அழைக்கும் பக்குவம் இன்னும் நம் சமூகத்திற்கு முழுமையாக வரவில்லையே!

விடியற்காலை ஐந்து மணிக்கே தன் பிள்ளைகளுக்குக் கஞ்சியோ பழையதோ ஊற்றிவிட்டு, அரக்கப்பரக்க ஓடும் இவர்களின் கால்களில் அவசரம் மட்டுமே இருப்பதில்லை; தன் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பும் உந்தித்தள்ளுகிறது. இவர்கள் பிறர் வீடுகளின் கதவுகளைத் தட்டும்போது, உண்மையில் வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கையின் கதவுகளையே தட்டுகிறார்கள்.

‘நாலு வீட்ல வேலை செய்கிறாங்க; நல்ல சம்பளம் கிடைக்குதே!’ என்று சிலர் நினைக்கலாம். ஆனால், மற்றொரு கேள்வியை நாம் கேட்க வேண்டும்.  ஆனால், இவர்கள் மிக வசதியானவர்களாக, பொருளாதார நிறைவு உள்ளவராக இருந்தால் அடுத்தவர் வீட்டு எச்சில் பாத்திரங்களைக் கழுவவும், அழுக்குத் துணிகளைத் துவைக்கவும் ஏன் வரப்போகிறார்கள்? இவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆனால், ஏன் வேலை செய்கிறார்கள்? என்பதைப் பார்க்கிறோமா? வறுமையும் குடும்பச்சூழலும், வேறு வழியற்ற நிர்ப்பந்தமுமே இவர்களை இந்த வேலைக்குத் தள்ளுகின்றன என்பதைச் சமூகம் உணர மறுக்கிறது.

‘உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்’ என்பது நவீனப் பொருளாதாரத்தின் கோட்பாடு. ஆனால், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்த உலகளாவிய கோட்பாடு முற்றிலும் மறுக்கப்படுகிறது. நாளின் பெரும் பகுதியை அடுத்தவர் வீட்டில் கூட்டி, பெருக்கி, பாத்திரம் கழுவி, துணி துவைத்து, சமைத்துக் கழிக்கும் ஒரு பெண் பெறுகின்ற மாத ஊதியம் அவர்களின் அடிப்படை மருத்துவச் செலவிற்குக் கூடப் போதாதது என்பதுதான் உண்மை. தன் உடலின் ஒவ்வொரு நரம்பும் வலிக்கும் வரை உழைத்துவிட்டு, மாலை நேரத்தில் சோர்வோடு திரும்பும் அந்தப் பெண்ணுக்கு, தன் சொந்தக் குடும்பத்திற்குச் செலவழிக்க எஞ்சியிருப்பது மன அழுத்தமும், தீராத உடல் நோய்களும் மட்டுமே.

‘நாங்கள் உழுவோம்; நாங்கள் விதைப்போம்;

பசி மட்டும் எங்களுக்கா?

நாங்கள் கட்டுவோம்; நாங்கள் செப்பனிடுவோம்;

இருள் மட்டும் எங்களுக்கா?’

- அடுத்தவர் வீடுகளை மிளிர வைக்கும் இல்லப் பணியாளர்களின் சொந்த வாழ்க்கை இருளிலேயே கழிவதை கவிஞர் இன்குலாப் தனது கவிதை வரிகளில் உணர்ச்சிப்பெருக்குடன் பதிவு செய்கிறார்.

சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உரித்தானது. ஆனால், வீட்டுப் பணியாளர்களின் உழைப்பும் நேர்மையும் காலங்காலமாகச் சந்தேகிக்கப்படுவதும், ஒரு பொருள் காணாமல் போனால் முதல் குற்றவாளியாகப் பார்க்கப்படுவதும் அவர்களின் சுயமரியாதையைச் சிதைக்கின்றன. எத்தனை ஆண்டுகள் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்திருந்தாலும், ஒரே ஒரு கணத்தில் அவர்கள் அந்நியப்பட்டுப் போகிறார்கள். மனிதர்களாகக்கூட மதிக்கப்படாமல், இழிவையும் அவமானத்தையும் தாங்கி அவர்கள் சிந்தும் கண்ணீருக்கு விலை கிடையாது. தன் நேர்மையும் கற்பும் சந்தேகிக்கப்படும் போது, அவர்கள் விழுங்கும் கண்ணீர்த்துளிகளை எந்த அளவையாலும் அளக்க முடியுமோ?

அண்மையில் ஒரு வசதியான வீட்டில் வேலை பார்க்கும் ஓர் அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் கூறிய ஒரு வார்த்தை கண் கலங்கச் செய்தது: “நான் வேலை செய்யுற வீடுகள்ல பிரியாணியோ, நல்ல சாப்பாடோ கொடுத்தாகூட அங்கே வச்சு சாப்பிடவே மாட்டேன்; ஏன்னா, நான் இங்கே உட்கார்ந்து பிரியாணி சாப்பிடும்போது, என் பிள்ளைக வீட்ல பழைய சோறு சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. என் பிள்ளைக பட்டினியா இருக்கும் போது, என்னால மட்டும் எப்படி இங்கே வயிறாரச் சாப்பிட முடியும்?” என்றார். இதுவே தாய்மையின் மகத்தான வெளிப்பாடு! ஆழமான வலிகள்!

அடுத்தவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு அன்போடு பாலூட்டி, உணவூட்டி, அவர்களைத் தாலாட்டி வளர்க்கும் வீட்டுப் பணிப்பெண்கள், தன் சொந்தப் பிள்ளைகள் பசியோடு தூங்குவதைக் கண்டு இரவில் கலங்குவது எத்தனை பெரிய கொடுமை? வளர்ப்பு நாய்க்கு அன்போடு அளிக்கப்படும் எஞ்சிய பிரியாணி உணவைக்கூட, தன் வீட்டிலிருக்கும் பசிதாங்கும் பிள்ளைகளுக்குக் கொண்டுபோக முடியாத கொடுமையான தண்டனையை என்னவென்று சொல்வது? தாயுள்ளம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான்; ஆனால், வறுமை அந்தத் தாயுள்ளத்திற்கு எல்லைகளையும் தடைகளையும் விதித்துவிடுகிறது.

அதேவேளையில், நாணயத்தில் மற்றொரு பக்கம் இருப்பதுபோல, சில வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களைத் தன் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே கருதி, மிகுந்த மரியாதையுடனும் அன்போடும் நடத்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அம்மா வாங்க, உட்காருங்க’ என்று அன்போடு உபசரித்து, அவர்களின் குடும்பத் துயரங்களில் தோள் கொடுக்கும் அந்தச் சில நல் உள்ளங்களால்தான் இந்தச் சமூகத்தில் இன்னும் மனித நேயம் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் அணியும் சுத்தமான ஆடைகளுக்குப் பின்னாலும், நாம் வாழும் தூய்மையான வீடுகளுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் இந்த முகமற்ற மனிதர்களின் கண்ணீர்த்துளிகளை நாம் அங்கீகரிக்கவேண்டும். அவர்கள் கோருவது பிச்சையையோ, பரிதாபத்தையோ அல்ல; தங்கள் உழைப்பிற்கான நியாயமான மரியாதையையும், மனிதத்தன்மையோடு கூடிய அணுகுமுறையையும் மட்டுமே.

வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் மிகப்பெரிய பாடம் ஒன்றுதான்: மனிதரை அவர்களின் தொழிலால் மதிப்பிடாதீர்கள்; அவர்களின் உழைப்பால் மதியுங்கள். பிறர் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை இழிவாகப் பார்ப்பதும் நாகரிகச் சமூகத்தின் அடையாளம் அல்ல; வீட்டுப் பணியாளர் நம்மைவிடக் குறைந்தவர் அல்லர்; அவர் வேறு ஒரு பொருளாதார நிலையில் வாழும் மனிதர். தொழில் ஒருவரின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை. ஒரு மனிதர் செய்யும் வேலை சிறியதாக இருக்கலாம்; அந்த மனிதர் ஒருபோதும் சிறியவர் அல்லர்; இதை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். வீட்டுப் பணியை ‘பெண்களின் வேலை’ என்று கூறாமல், ‘வீட்டின் பொறுப்பு’ என்று கூறவேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை, பணியையும் மனிதரையும் வேறுபடுத்திப் பார்க்கும்.

வீட்டுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தருவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை மரியாதையுடன் நடத்துவது, அவர்களின் உடல்நிலை, சோர்வு மற்றும் தனியுரிமையைக் கவனத்தில் கொள்வதுடன், அவர்களின் குழந்தைகளையும் அன்போடு அணுகுவதே உண்மையான மனித நேயமாகும். நாம் வாழும் வீடு தூய்மையாக இருப்பது போலவே, நம் மனமும் கருணையால் தூய்மையாக இருக்கவேண்டும். உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இந்த எளிய மனிதர்களின் துயரத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குரிய சம உரிமையையும் தகுந்த மரியாதையையும் நாம் வழங்கும் நாளில்தான் நமது பண்பாடும் நாகரிகமும் முழுமை பெறுகின்றன.