news-details
சிறப்புக்கட்டுரை
இயேசுவின் இரண்டாம் இரத்த வியர்வை

‘பூமியில் பூத்த புதிய வேதம், மண்டிக்கிடந்த மானுட அழுக்குகளைச் சலவை செய்திடும்’ என்கிற நம்பிக்கையை வறியோரின் நெஞ்சத்தில் விதைத்தவர் இயேசு. ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் ஒன்று அமையவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, ‘இறையாட்சி’ என்று அதற்குப் பெயரும் தந்து, பூமிப்பந்தின் மத்திய கிழக்கில் அவர் ஏற்றி வைத்த நெருப்பு, உலகின் எல்லாத் திசைகள் நோக்கியும் பரவி எரியத் தொடங்கியது.

வாழ்வை இழந்தோரும், வலியோரால் வஞ்சிக்கப்பட்டோரும் ‘நாளை விடியும்’ என்கிற கனவோடு இந்த நெருப்பின் நிழலில் வந்து இணைந்தனர். அடிமைத்தனங்களும் ஆதிக்க அழுக்குகளும் இந்த நெருப்பில் சாம்பலானதோடு, சாமானியர்கள் தங்களைப் பிடித்திருந்த பீடைகள் கருகிட சரித்திரத்தைச் செதுக்கத் தொடங்கினார்கள். இயேசு ஏற்றி வைத்த இந்த இறையாட்சி நெருப்பு அணைந்துவிடாமல் தொடர்ந்து எரிந்திட, எண்ணெயை வார்க்கும் வேலையை முதன்மையாகக் கொண்டு செய்து வருகிறது இயேசுவின் மறையுடலான திரு அவை.

‘கடவுள் மனிதரைத் தமது சாயலில் படைத்தார்’ என்று வேதமணிகள் வீதியெங்கும் ஒலித்தாலும், மனிதப் படைப்பில் உயர்வு-தாழ்வு உண்டு என்பதை ஊரெல்லாம் ஊளையிட்டு நாசவிதைகளுக்கு நாற்றங்கால் அமைக்கும் கூட்டமும் இருந்தே வந்திருக்கிறது. இயேசு தம் பணி வாழ்வில் இந்தப் பாழாய்போன பாகுபாடுகளைக் கண்டார். வீட்டிற்கு வெளியே காலணிகளைக் கழற்றிப் போடுவதைப்போல ஊருக்கு வெளியே காலனிகளாக மாண்புமிக்க மனிதர்களை ஒதுக்கி வைத்துவிட்டுத் தங்களின் உயர்வு மனப்பான்மையை உலகிற்குக் கடவுளின் பெயரால் வேதமென்றே பக்தி பொங்க பரவசத்தோடு கூறினார்கள்.

இப்படி குப்பை மேடுகளாய் உயர்ந்தவர்கள் உருவாக்கிய தீண்டாமை நோய்க்கு இரையாகி இருந்த சமாரியச் சமூகத்தின் பெண்ணிடம் கிணற்றடியில் தண்ணீர் வாங்கிக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட இயேசு, தமது சமத்துவம் பேணும் மானுட அறத்தையும் அங்கே பதிவு செய்தார். அடிமைத்தனம் அப்பெண்ணின் ஆழ்மனத்திற்குள்ளே கோபுரம் கட்டிக் குடியிருந்தது. தன்னைத் தாழ்ந்த குலம் என்று மனிதப் போலிகள் எழுதி வைத்ததை வினாக்களுக்கு அப்பாற்பட்ட வேதம் என்றே அப்பெண் நினைத்து வந்தார். சமாரியப் பெண்ணின் அடிமைத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இயேசு, பேதங்களற்ற பெருவாழ்வு காண அழைப்பு விடுத்துச் சென்றார். 

மனிதர்கள் யாவரும் ஒரே இறைத் தந்தையின் பிள்ளைகள் எனும் சமத்துவக் கொள்கையைப் போதனையில் மட்டுமன்றி, செயல்வடிவிலும் வாழ்ந்து காட்டிய இயேசுவின் இயக்கத்தில், ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் தங்களை இணைத்துக்கொண்டு, தங்களின் மானிட அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டார்கள். சட்டங்களை உருவாக்கி சகமனிதர்களை உயர்ந்தோர்-தாழ்ந்தோர் எனப் பிளந்த பேதைகளின் வறட்டுச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்துப் போட்டதோடு, சமூக அழுக்குகளைத் துடைத்துத் தூய்மையாக்கினார்.

இயேசுவின் கொள்கைகளையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் நேரில் கண்டு நிறைவு கண்டவர்கள் தங்களை இயேசுவின் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள். அடக்குமுறைகளை எதிர்கொண்ட தொடக்ககாலத் திரு அவையில் வஞ்சிக்கப்பட்ட வறியவர்கள் வரிசையாக வந்து இணைந்து கொண்டார்கள். திருத்தூதர்களின் தலைமையில் பயணம் நடத்திய தொடக்ககாலத் திரு அவையில் தங்களை இணைத்துக் கொண்ட பின்னும், ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டபோது திருத்தூதர் பவுலடியார் அந்தச் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், இயேசுவில் நம்பிக்கை கொண்டோரிடையே உயர்வு-தாழ்வு பாராட்டக்கூடாது என்பதைத் திடமாகச் சொன்னார். ஆண்டான்-அடிமை இல்லாத சமூகமே இயேசுவின் திரு அவை என்பதில் பவுல் உறுதி கொண்டிருந்ததைத் திருத்தூதர் பணிகள் ஏட்டிலும், அவர் எழுதிய திருத்தூதுக் கடிதங்களிலும் காணலாம்.

பூமியின் பரப்புகளை இயேசுவின் வேதம் நிறைத்து வந்த வேளையில், இந்தக் கொள்கை கோட்பாடே அடிப்படையாய் அமைந்திருந்தது. இந்த வழிமுறையின்படி, மானுடப் பட்டியலில் சேர்க்கப்படாமல், விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்காவின் குடிகளை இயேசுவின் திரு அவை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டது. அது போலவே உலகில் ஒடுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்ட, முகவரியற்ற மனிதர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு இயேசுவின் விடுதலைச் செய்தி நற்செய்தியாகப் போதிக்கப்பட்டது. அவனியெங்கும் அன்பு, சமரசமற்ற சமத்துவம், இனம், மொழி, நிறம், பிறப்புகளைக் கடந்த மானுடநேயம் இயேசுவின் வேதமாய் பூமியின் எத்திசையிலும் எதிரொலித்தது. 

சாதியென்னும் சகதிக்குள் அகப்பட்டுக் கொண்டு, மனிதர்களை உயர்ந்தவர்-தாழ்ந்தவர், தீண்டத்தகாதவர் என அழுக்குகளை அறமாகப் போதித்து, அதுவும் கடவுளின் பெயரால் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்பளிப்பு செய்து, உழைக்கும் மக்களை இரக்கமற்றவர்கள் காலடியில் அமிழ்த்தி வைத்து, சனாதன உபதேசம் செய்து கொண்டிருந்த இந்தியாவில் இயேசுவின் சீடர்கள் ஏற்றத்தாழ்வற்ற புதிய வாழ்வியலைக் கொண்டு வந்து நம்பிக்கை விளக்கேற்றி ஒளிர வைத்தார்கள். சாதியச் சகதிகளிலிருந்து மக்களைக் கழுவ முயன்றார்கள். வறுமையை ஒழித்து வாழ்வு தந்தார்கள். கல்வியைத் தந்து ஏற்றம் காண வைத்தார்கள். ஆனால், இந்தியாவில் ஏனோ திரு அவையினர் சாதிகளைச் சலவை செய்திட பயன்படுத்திய சலவைச் சோப்புகள் வேலை செய்திடவில்லை. கல்வி, பொருளாதாரம் என நீள்கிற வாழ்வின் தளங்களை வலுப்படுத்திய திரு அவையால் சாதியப் படிநிலைகளை உடைத்திட முடியவில்லை.

கிறித்தவம் என்னும் புதிய ஆடையை அணிந்தால், தங்களின் இழியடையாளங்கள் அகலும் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக் கனவு, இந்திய ஒன்றியப் பரப்பில் கானல் நீராகவே போய் விட்டது என்பதை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொள்ளத்தான்வேண்டும். சாதிப் பாகுபாடற்றச் சமத்துவ வாழ்க்கை முறையை அமைப்பதில் கிறித்தவம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறதே தவிர, அதில் வெற்றி காணவில்லை. கிறித்தவ மறையைத் தழுவுவதற்கு முன் தங்களின்மீது ஆளுமை பதிந்த சாதிக்கறைகள் தேகத்தில் படிந்த தேமலைப்போல் தடம் மாறாமலே இருக்கிறது என்பதுதான் வேதனை.

இன்று இந்திய ஒன்றியத்தில் இயேசுவின் பிள்ளைகளாக இருக்கிறவர்கள் சாதிப் போர்வைகளைப் போர்த்திக்கொள்வதையும், நடைமுறையில் சாதிக்கெனத் தனிக் கோவில்கள், கல்லறைகள், தெருக்கள், சங்கங்கள் எனத் தொடரும் அழுக்கு அட்டவணையைப் பார்த்துக் கண்டிப்பாக இரண்டாம் முறையும் இரத்தமே அவருக்கு வியர்வையாய் வடியும் என்றுதான் கருத வேண்டியுள்ளது. உண்மைநிலை இப்படி இருப்பதையும், சமத்துவம் பேசும் கிறித்தவத் திரு அவையில் இணைந்த பின்னும் தங்கள் இழிநிலை மாறாமல் இன்னமும் ஒடுக்கப்பட்ட கிறித்தவர்கள் அல்லலுறுவதையும் அறியாமல் சட்டம் வகுப்பவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தராசு முள்ளாய் நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளாமலும் அல்லது புரிந்தும் ஒடுக்கப்பட்டவர்கள் திருமறையைத் தழுவிக் கொண்டார்கள் என்கிற வெறுப்புணர்விலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்.

சமூக விடுதலைப் போராளி அண்ணல் அம்பேத்கர் அரசியல் சாசனக் குழுவில் பொறுப்பேற்றிருந்தாலும், அதில் இடம்பெற்றிருந்த சனாதன சக்திகள் கிறித்தவச் சமயத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பட்டியலின உரிமைகள் பெறுவதைத் தடுத்துவிட்டன. அன்றைய குடியரசுத் தலைவரின் ஆணை இந்து சமயத்தைச் சார்ந்த தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட ‘பட்டியல் இனத்தவர்’ எனும் நிலை மற்றும் இடஒதுக்கீட்டு சலுகைகள், அதே சமூக, பொருளாதார நிலையில் தொடரும் மதம் மாறிய கிறித்தவ மற்றும் இசுலாமிய தலித்துகளுக்கு மறுக்கப்பட்டது.

நீண்ட அரசியல் அழுத்தங்களால் 1956-இல் சீக்கிய மதத்திற்கு மாறிய தலித்துகளும், 1990-இல் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளும் பட்டியலின உரிமை மற்றும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளையும் பெறத் தொடங்கினர். ஆனால், அதே சமூகப் பொருளாதார நிலையில் இருக்கும் கிறித்தவச் சமயத்திற்கு மாறிய தலித் மக்கள், அரசின் எவ்விதப் பட்டியலினச் சலுகைளையும் பெறாமல் நாளுக்கு நாள் நலிவு கண்டு வருகின்றனர்.

எத்தனையோ பெருந்திரள் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் மேற்கொண்டும் தலித் கிறித்தவர்களின் நியாயமான கோரிக்கை நீருக்குள் புதைந்த கல்லாகவே இருக்கிறது. ஆகஸ்டு 10-ஆம் நாளை வருடந்தோறும் கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, தங்கள் உரிமைக் குரலைத் தலித் கிறித்தவர்கள் எழுப்பி வந்தாலும், மதவெறியும் காழ்ப்புணர்வும் கொண்ட அரசுகள் செவிகொடாமலேயே இருந்து வருகின்றன. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர் நித்திரையில் இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாதிக்கப்பட்ட தலித் கிறித்தவ மக்கள் நீதிமன்றங்களை நாடி, தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும் போதெல்லாம், நீதி தேவதையின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டியவர்கள் சனாதன வெறிகொண்டு தங்கள் பேனாக்களில் வெறுப்புமையை நிரப்பி நியாயத்திற்கு எதிராகத் தீர்ப்பெழுதுகிறார்கள்.

வாழும் நாட்டிலும், சார்ந்திருக்கும் சமய அமைப்புகளிலும் தலித் கிறித்தவர்கள் தங்களின் உரிமைகளை இழந்து நிற்கும்போது, அதனை மீட்டெடுத்துத் தரவேண்டிய நீதிமன்றங்கள் சாதி மதவெறியுடன் இயங்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். சமயத்தை முதலீடாகக் கொண்டு இயங்கும் ஒன்றிய அரசு மட்டும் இந்தப் பழிபாவத்திற்கு அப்பாற்பட்டதல்ல. இந்தியக் குடியரசுக் கட்டமைக்கப்பட்டபின் ஆட்சிக்கு வந்த நேரு மாமா, அவரது மகள் அன்னை இந்திரா, அவரைத் தொடர்ந்து வந்து ‘மதச்சார்பற்ற அரசு’ என்று சொல்லியே ஆட்சியில் அமர்ந்தவர்களும் துரோகம் இழைத்தே வருகின்றனர்.

தேர்தலின்போது கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித் மக்களை நம்பவைத்து ஏமாற்றும் அனைத்து அரசுகளும் கண்டனத்திற்கு உரியவை. சமயச் சுதந்திரம் பற்றி உலக அரங்கில் பாசாங்கு உரை நிகழ்த்தி கைத்தட்டல்கள் வாங்கும் இந்திய ஒன்றியப் போலித்தலைவர்கள் மதச்சார்பற்ற இந்திய ஒன்றியத்தில் மதத்தின் பெயரால் தலித் மக்களின் உரிமைகளைப் பறிப்பது என்ன நியாயம்?

கடன் திருநாள்களைத் தவறாமல் கடைப்பிடிக்கத் தரப்படும் கட்டளைகளைப் போலவே தலித் கிறித்தவர்களின் உரிமைகளுக்குப் போராடுவது தலித் அல்லாத கிறித்தவர்களின் கடமையாகும். அரசிடம் அசராமல் போராடுவதுபோல, திரு அவையில் இணைந்து இயேசுவின் மறையுடலின் அங்கமான நம் சகோதர-சகோதரிகளான ஒடுக்கப்பட்டக் கிறித்தவர்கள் மாண்பும் மகத்துவமும் திரு அவையில் பெறவும், அவர்களை இயேசுவைப் போன்று சமத்துவத்துடன் நடத்திடவும் வேண்டியது நமது கடமை என்பதை உணர்வோம். நவம்பர் 8-ஆம் தேதி திரு அவை கடைப்பிடிக்கும் ‘தலித் விடுதலை ஞாயிறு’ தினத்தில் சமூக நீதிக்காக உறுதி ஏற்று, காயப்பட்ட மக்களுக்காகக் களமாடுவோம். நாம் அனைவரும் இயேசுவில் ஒன்றே என்பது உண்மையென்றால், கிறித்தவத் திருமறையில் சாதியைக் கொண்டு சக மனிதர்களைத் தாழ்வாக நடத்துவதை நிறுத்திட புதிய நம்பிக்கை அறிக்கையை உருவாக்கவேண்டும்.

ஒரே கடவுளை நம்புவதற்கு ஞாயிறுதோறும் திருப்பலியில் உறுதியேற்கும் கிறித்தவர்கள், அந்த ஒரே கடவுளின் குழந்தைகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதைப் பாவம் எனக் கொள்வோம். இந்திய ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்ட இக்கிறித்தவர்கள் உரிமையோடு வாழ்க்கை நடத்திட, சகமனிதர்களைப்போலத் தலை நிமிர்ந்திட, அரசு தரும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற, இவர்களும் தகுதியானவர்களே என்பதை நிலைநிறுத்திடத் தொடர்ந்து போராடுவோம். சமூக நீதியை வென்றெடுப்போம்.