news-details
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை (குறள் 15)

குறள் விளக்கம்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாகி அவர்களைக் காக்க வல்லதும் மழையாகும்.

சிந்தனை: தேவையான நேரத்தில் பெய்யும்போது மழையைப் போற்றுகிறோம். அறுவடை நேரத்தில் மழை அதிகம் பெய்தால் விளைந்த பயிர்கள் அழிந்துவிடுகின்றன. அச்சமயத்தில் மழையைத் தூற்றுகின்றோம். கோடையில் மழை பெய்தால், வறண்ட நிலங்கள் சிரிக்கும். அளவுக்கு அதிகமாக மழைக்காலங்களில் மழை பெய்தால், வெள்ளம் கரைபுரண்டோடி தொல்லை ஏற்படுத்தும். நீர் ஆற்றல் மின்சாரம் தயாரிக்க உதவும். ஆற்றங்கரை அளவில்லா வெள்ள நீரின் ஆற்றல் மக்களை அடித்துச் செல்லும்போது அது துயரத்தை விளைவிக்கின்றது.

தொடர்ந்து மழை பெய்தால் எரிச்சல் அடைகின்றோம். மழை காரணமாக விடுமுறை எனில் மகிழ்கின்றோம். கிரிக்கெட் போட்டி நடக்கும் போது மழை காரணமாகத் தடைபட்டால் ‘மழை வேண்டாம்’ என மன்றாடுகின்றோம்.

டான்டலஸ் என்கின்ற மன்னன் ஜூபிடர் மற்றும் இதரத் தேவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான். அவர்கள் விருந்து நடக்கும்போதெல்லாம் அவனை அனுமதித்தனர். அவனும் ஒருமுறை அவர்களைத் தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தான். அவர்களுடைய தெய்வீக சக்தியை அறியும் பொருட்டு அதைப் பரிசோதிக்கும் ஆசையில் தன்னுடைய மகனின் மாமிசத்தையே விருந்தில்  மிருக மாமிசம் போல் பரிமாறினான். தேவர்கள் வெகுண்டனர்; அவன் மகனை உயிர்ப்பித்தனர்.

டான்டலஸ் கொல்லப்பட்டான். பாதாள உலகிற்கு மரணத்திற்குப் பிறகு அனுப்பப்பட்ட அவனை ‘டார்ட்டரஸ்’ வசம் அனுப்பினர். அதீதமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர் டார்ட்டரஸ் வசமே அனுப்பப்படுவர். டான்டலஸ் நிரந்தர விரக்தியுடன் கழுத்துவரை நிற்கும் தண்ணீரில் நிறுத்தப்பட்டான். அவனுக்குத் தாகம் எடுக்கும். குடிக்கக் குனிந்தால் நீர் மட்டம் கீழே செல்லும். பக்கத்திலேயே காய்த்துக் குலுங்கும் மரங்கள் இருக்கும். பறிக்கக் கைகளை நீட்டினால் அவை விலகிச் செல்லும். எனவே, அருகில் ஆசையைத் தூண்டும் கனியும் நீரும் கனிந்திருந்தாலும், பசி தணியாமலிருப்பது அவனுக்குரிய தண்டனை.

அளவுக்கு அதிகமான கடல்நீர் இருந்தும் அதனால் பயனில்லை. நன்னீரின் பயனே அதிகம். தன்னைச் சுற்றி நீரிருந்தும் தன் தாகத்தைத் தணிக்க இயலாது என்றால், அதனால் பயனில்லை என்பதனை மேலே கூறப்பட்ட நிகழ்வு நன்கு விளக்குகிறது.

“ஆனால், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடைய விருக்கும் நாடு மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு: வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு”(இச 11:11).

நீர் இருந்தால் அந்த இடம் செழுமையாயிருக்கும். செழுமை என்பது இறைவனின் ஆசிர்வாதத்தைக் குறிக்கும் சொல். அளவுக்கு மீறும்போது அது அழிவைத் தருகிறது.

‘அவ்வப்போது பூமியை நிராகரிக்கும் மழை; ஒருபோதும் மழையை நிராகரித்ததில்லை பூமி’ 

என்கிறார் கவிஞர் தாமிரா. ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஊற்றான மழைக்காக வேண்டுவோம். மழைநீரைச் சேகரிப்போம்; பாதுகாப்போம்; பயன்படுத்துவோம்.