பொருள் சேர்ப்பின் அடிப்படையில் இறைவனின் தீர்ப்பு அமைவதில்லை; பொறுப்புணர்வு மிக்க செயல்பாட்டினைக் கொண்டே இறைவன் அளவிடுகின்றார். நெடும்பயணம் மேற்கொள்ள விரும்பிய செல்வந்தர், தனது பணியாளர்களை, நண்பர்களாக மாற்ற விரும்பி, தாலந்துகள் பரிசை மூன்று பணியாளர்களுக்கு வழங்குகின்றார். தனது செல்வத்தைத் தனது பணியாளர்களுக்கு வழங்குவது, செல்வந்தர் தனது பணியாளர்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. இவ்வுலகில் இறைவன் வழங்கிய தாலந்துகளையும் இயற்கையின் ஆற்றலையும், பாதுகாக்கும், பங்காளர்களே, இறைவனின் படைப்பாகிய நாம்.
தாலந்துகள்
எல்லாருக்கும் (மூவருக்கும்) வழங்கப்பட்டன. எல்லாருமே திறமைசாலிகள். முயற்சி ஒன்றே நம்மை உயர்த்தும். எல்லாருக்கும் சமமான தாலந்துகள் வழங்கப்படவில்லை; ஆனால், அவற்றை வளர்ப்பதற்கும் இரட்டிப்பாக்குவதற்கும் வாய்ப்புகளும் வழிமுறைகளும் வழங்கப்படாமல் இல்லை. தாலந்துகளைப் பெற்றுக்கொண்ட நாம், பயத்தைக் களைந்து செயல்படவே இன்றைய நற்செய்தி அழைப்பு விடுகின்றது.
மூன்றாவது
பணியாளர் தனது தலைவரைப் பற்றிய தவறான புரிதல் கொண்டிருந்ததால், அவரால் இயல்பாகச் செயல்பட முடியவில்லை. பயமும், ‘தலைவர் தன்னைத் தண்டித்து விடுவார்’
என்ற எண்ணமும் அவரது உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், அவரால் ஆக்கப்பூர்வமாகவும் செயலாற்றும் திறனுடனும் கற்பனை வளத்துடனும் செயல்பட இயலவில்லை. இதனால், அவரது ஆற்றல் குன்றி விடுகிறது. தனது தலைவரைப் பற்றி இவ்வாறான புரிதலை வெளிப்படுத்துகின்றார்:
“நீர் கடின உள்ளத்தினர், விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர், நீர் தூவாத இடத்தில் விளைச்சலைச் சேகரிப்பவர்.”
கடவுளைப்
பற்றிய நமது தவறான புரிதல் நமது வாழ்வைச் சீர்குலைத்துவிடும். நம் ஆற்றல்மீது கொண்ட தவறான புரிதல் நம்மைச் சோர்வடையச் செய்யும். முதல் இரண்டு பணியாளர்கள், தங்களது தலைவர் தங்களை அன்பு செய்கின்றார், மதிக்கின்றார், இன்னும் நாம் வளர்ச்சி பெற உதவுகின்றார் என்பதை உணர்ந்ததால் தங்களின் தாலந்தை இரட்டிப்பாக்கினார்கள். மூன்றாம் நபரின் வீழ்ச்சிக்கு அவரின் பயமும், இறைவனைப் பற்றியும், தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் கொண்டிருந்த தவறான புரிதலுமே காரணமாக அமைந்திருந்தன.
ஒருவர்
தாம் அன்பு செய்யப்படுவதாகவும் மதிக்கப்படுவதாகவும் உணர்ந்தால் மட்டுமே அவரின் மனத்தில் புதைந்துள்ள அனைத்து ஆற்றல்களும் திறமைகளும் சிறப்பாக வெளிப்படும். குடும்பங்களில், கணவர், மனைவி, பிள்ளைகள் மத்தியிலும், குருக்கள், துறவியர் மத்தியிலும், எவர் ஒருவர் தான் பிறரால் அன்பு செய்யப்படுவதாகவும் மதிக்கப்படுவதாகவும் உணரும் தருணமே, அவருடைய ஆற்றல், பங்களிப்பு, செயல்படும் திறன், பொதுநன்மைக்கான செயல்பாடுகள் இவையெல்லாம் பன்மடங்கு அதிகமாகும். மதிக்கப்படாத, அன்பு செய்யப்படாத இடங்களில், ஆற்றலும் தாலந்துகளும் திறமைகளும் வெளிக்காட்டப்படாமலேயே மறைந்துவிடும்.
நமது
கடவுள் ஆச்சரியமிக்கவர்! ஆச்சரியமான காரியங்களைச் செய்பவர். அவரின் அன்றாடப் புதுமைகளைக் காண நமது கண்களைத் திறக்க வேண்டும். முதல் இரண்டு பணியாளர்கள்களும் தங்களது ஆற்றலையும் பொறுப்பினையும் உருவாக்கும் திறனையும் படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் முயற்சியையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தியதால், இறைவன் அவர்களின் தாலந்துகளை இரட்டிப்பாக்குகின்றார். மீண்டும் புதிய ஆற்றலோடு அவர்கள் உழைத்திட உந்தித் தள்ளுகின்றார். தாலந்துகளை இரட்டிப்பாக்கி, பல மடங்கு இறைவனுக்கே
திருப்பித்தருவதற்காக
அவர் அவற்றை நமக்குத் தரவில்லை; மாறாக, சில சிறப்புக் காரணங்களுக்காகத் தாலந்துகள் நமக்குத் தரப்படுகின்றன.
இவ்வுலகை
இன்னும் அழகானதாக, இரக்கம் மிகுந்ததாக மாற்றிடவே, இறைவன் நம்பிக்கையோடு நம்மிடம் தாலந்துகளை ஒப்படைக்கின்றார். இவ்வுலகத்தையும் அதன் வளங்களையும் நமது கரங்களில் வழங்கியிருக்கின்றார். இயற்கை வளத்தைச் சூறையாட அல்ல; மாறாக, இவ்வுலகை இன்னும் பசுமையாக மாற்ற தாலந்துகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இறைவனின் மதிப்பீட்டு அளவு நம் தாலந்து கொண்டு எவ்வளவு பொருள் சேர்த்தோம் என்பதில் அமைவதில்லை. மாறாக, எப்படிப் பொறுப்புடன் பணியாற்றினோம், எவ்வளவு உழைத்திருக்கின்றோம், எத்தகைய கருணைமிகு செயல்களால் இவ்வுலகை நிரப்பியிருக்கின்றோம் என்பதில் அடங்கியுள்ளது.
மூன்று
பணியாளர்களில் நான் யாருடன் என்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறேன்?
முதல் இருவரா? அல்லது மூன்றாம் நபரா? இவ்வுலகம் இன்னும் அழகாய் வளர்வதற்கு, எனது முயற்சிகள் எவை? மூன்றாம் பணியாளரின் உள்ளத்தில் உழைக்க மனமில்லா விருப்பமின்மையே மிகுந்திருந்தது. விருப்பமில்லா வாழ்வும் செயலும் எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை. விருப்பமில்லா இடத்தில் ஆர்வமின்மையும், சோர்வும் மலிந்து கிடக்கும். மூன்றாம் பணியாளரின் கரங்களில் ஆற்றலும் திறமையும் கைவசம் இருந்தும், ‘பயன்படுத்தப்படாத கத்தி பாழாய் போகும்’ என்பதற்கிணங்க, அவரின் குறுகிய மனநிலை (இறைவனைப் பற்றியும், தன்னைப் பற்றியும், தன் சூழலைப் பற்றியும் தவறான மனநிலை) அவரது செயல்பாடுகளை முடக்கியது. அவரைத் துடிப்பில்லா வாழ்விற்குத் தள்ளியது.
இன்றைய
முதல் வாசகம், உழைப்பிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் பெண்ணைப் பற்றி எடுத்துரைக்கின்றது. அவள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, கைகளால் உழைத்து, ஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்து வறியவர்களுக்கு தனது கரத்தை நீட்டி உதவுகின்றார். அப்பெண்ணின் சிறப்பினை ‘அவள் அழகு நிறைந்தவளாக இருக்கின்றாள்’ என
எடுத்துரைக்கவில்லை; அவளின் வெளிப்புறத் தோற்றத்தினால், அவளை மதிப்பிடவில்லை; மாறாக, அவளுடைய உழைப்பு, பொறுப்புள்ள, இரக்கமுள்ள செயல்கள், பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கை இவற்றின் அடிப்படையில்தான் அவள் மதிப்பிடப்படுகின்றார். நம் திறமைகள், செல்வம், நேரம் இவையெல்லாம் நம்மைப் பெருமைப்படுத்துவதற்கே. நம்மை நாம் உயர்த்திக் கொள்வதற்காக மட்டும் நமக்கு இவை வழங்கப்படவில்லை. அவை அனைத்தும் பிறருடைய வாழ்வை உயர்த்துவதற்காக நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள கொடை.
இன்றையப்
பதிலுரைப்பாடல் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு அஞ்சி அவருடைய வழியில் நடந்து பேறுபெற்றவர்களாய் மாறவும், உழைப்பினால், முயற்சியினால், செல்வத்தைப் பெருக்குவதை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் அன்பையும் ஒற்றுமையையும் இரக்கத்தையும் பெற அழைக்கின்றது.
புனித
பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், விழிப்புடன் செயல்படவும், ஒளியின் மக்களாய் வாழவும் அழைப்பு விடுக்கின்றார். சோம்பலைத் தவிர்த்து, உறக்கநிலை போன்ற மந்த வாழ்வைத் தவிர்த்து, விழிப்புடனும், தெளிந்த உள்ளத்துடனும், இறைவன் நமக்குத் தந்த வாழ்நாள்களைப் பயனுள்ளதாக மாற்றுவதே நமது அழைப்பு. ஒளியின் மக்களாய் வாழ்பவர்கள், பிறருக்கு நன்மை செய்யும் வாய்ப்பினைத் தவறவிடுவதில்லை. அவர்களின் நன்மையான செயல்பாடுகள் பிறரை ஒளிர்விக்கும்.
மூன்றாம்
பணியாளரின் தோல்வி பயம், தலைவரைப் பற்றிய தவறான புரிதல், செயல்படத் தயங்கிய மனநிலை, அவரைச் செயலற்றவராக்கின. சில நேரங்களில் நாம் தீமை செய்வதன் மூலம் மட்டுமல்ல; இறைநம்பிக்கை இருந்தும், துன்பப்படுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்காமல் இருப்பது (யூதா 1:22); அறிவும் ஞானமும் நிறைந்திருந்தும், அதனைப் பிறருக்கு வழங்கிட விருப்பமின்மை, செல்வமும் பணமும் இருந்தும், ஏழைகளின் துன்பங்களைத் துடைத்திட மனநிலையின்றி வாழ்வது, நீதியான வழிமுறைகளை அறிந்திருந்தும், அநீதிகளைக் கண்டும் மௌனமாயிருத்தல் போன்ற செயல்கள் மூலமாகவும் நன்மை செய்யாமல் இருப்பதன் மூலமாகவும் தவறிழைக்கின்றோம்.
நாம்
ஒளியின் மக்களாய் வாழ்ந்து, பிறருக்கு, நன்மை செய்யும் தருணங்களை இறைவன் நமக்கு தரும் வாய்ப்பாகவும், பொறுப்புணர்வின் செயல்பாடுகளையும் கருதி, அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்துவோம்.
மூன்று கேள்விகள்
1. இறைவன்
எனக்குக் கொடுத்த தாலந்துகள் எவை? எவற்றை நான் பயன்படுத்துகின்றேன்? எவற்றைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றேன்?
2. எனது
தாலந்துகளைப் பெருக்குவதற்கு எனது முயற்சிகள், உழைப்பின் பங்களிப்பு என்ன?
3. எனது
தாலந்துகள் யாருக்குப் பயனளிக்கின்றன?
நமது
கரங்களில் தாலந்துகளாகிய சிறிய
கடுகு விதையும், புளிக்காரமும், விளைநிலமும், புதையலும், வலையும் முத்துகளும் (இயேசு இறையாட்சியாக உருவகப்படுத்தியவைகள்) உண்டு. இவற்றைக் கொண்டு, திறந்த மனநிலையோடு, அறநெறி வாழ்வு முறைகளைப் பின்பற்றி, கிறித்தவ விழுமியங்களை இவ்வுலகில் விதைத்திடுவோம்.
இறைவன்
நமக்குத் தந்துள்ள திறமைகளும், செல்வம், அறிவு, நம்பிக்கை, அன்பு ஆகியவை நமக்கானது மட்டுமல்ல; அவற்றைப் பயன்படுத்தி இறையாட்சியைக் கட்டியெழுப்பவும், பிறருடைய வாழ்வை வளப்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம்.