news-details
வத்திக்கான் செய்திகள்
“அனைத்துச் சூழல்களிலும் அமைதியை வளர்ப்பதில் சோர்ந்துவிடக் கூடாது”- திருத்தந்தை லியோ

வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் அன்புக்கும் அமைதிக்கும் முதலிடம் அளித்து, தீமையையும் பேராசையையும் வீழ்த்துவதே புனிதத்துவத்தின் உண்மையான பொருள் எனத் திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவையொட்டி ஆற்றிய மறையுரையில், “புனிதத்துவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே உரிய சலுகை அல்ல; அது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு கத்தோலிக்கருக்கும் வழங்கப்பட்ட பொதுவான அழைப்பு. மாபெரும் உலக நிகழ்வுகள் முதல் அன்றாட வாழ்வின் எளிய சூழல்கள் வரை, அமைதியை விதைக்கும் நற்பணியில் நாம் ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது” என்று அழைப்பு விடுத்தார்.

திரு அவையால் முறைப்படி புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, உலகறியாமல் பிறருக்கு அன்புப் பணியாற்றிய எண்ணற்ற மறைமுகப் புனிதர்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “ஆவியில் எளிமையுடையோர், நீதிக்காகப் பசிதாகமுடையோர், இரக்கமுடையோர் மற்றும் அமைதியை உருவாக்குவோரே இறைவனின் வழியில் நடக்கும் உண்மையான புனிதர்கள்” எனச் சுட்டிக்காட்டினார்.