இன்றைய கணினி உலகம், இமை சிமிட்டும் நேரத்தில் இமயத்தையே சுற்றிவரும் வேகத்தில் விரைவாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. நேற்றைய பயன்பாட்டு முறைகள் இன்று பயனற்றுப்போயின. எண்மத் தொழில்நுட்ப உலகில் புதியன நாளும் புகுந்துகொண்டே இருக்கின்றன. இணையவழி வாழ்வுமுறை, இன்று செயற்கை நுண்ணறிவின் உச்சம் தொட்டு, ஒவ்வொரு நொடிப்பொழுதும் வியப்பிற்குமேல் வியப்பளிப்பதாக அமைந்துள்ளது.
இத்தகைய
இணையவழி வாழ்வியல் முறையில், உலகின் பல்வேறு நாடுகள் சிறாரின் இணையப் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ‘ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்’
என்ற அமைப்பு தொடுத்த வழக்கில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா
மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘18 வயதிற்குட்பட்ட சிறாரின் இணையச் சேவைப் பயன்பாடு என்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 19(1)(a)
(பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றின் கீழ் அது அடிப்படை உரிமை’ எனத் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, “குழந்தைகளை டிஜிட்டல் உலகத்திலிருந்து அடியோடு விலக்கி வைப்பது என்பது, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகக் கருதுவதற்கு ஒப்பானது. தீர்வு என்பது டிஜிட்டல் கதவுகளைப் பூட்டுவதில் இல்லை; மாறாக, அக்கதவுகளுக்குப் பின்னால் உள்ள அறையைச் சிறாருக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதிலேயே உள்ளது” எனத் தீர்ப்பு எழுதியுள்ளது.
உச்ச
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நவீன டிஜிட்டல் உலகில் சிறார்களின் இணையப் பயன்பாடு குறித்த ஒரு புதிய விவாதத்தை மக்கள் மன்றத்தில் எழுப்பியிருக்கிறது. அணைபோடப்படாத இணையவழிப் பயன்பாடு, சிறாரின் அறநெறிச் சிந்தனை, மனநலம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்துப் பெற்றோர், ஆசிரியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பல கேள்விகளை
எழுப்புகின்றனர்.
‘கோவிட்-19’ பெருந்தொற்றுக் காலம், மனிதகுலத்தின் கல்விச்சூழலை அடியோடு மாற்றியமைத்துவிட்டது. உலகெங்கும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களின் கல்விக்கான ஒரே மாற்றாக அறிதிறன்பேசிகளும் இணையமும் உருவெடுத்தன. இந்நிலையே சமூகத்தில் ‘டிஜிட்டல் பாகுபாட்டை’ வெளிச்சம்
போட்டுக் காட்டியது. வசதி படைத்த குடும்பத்துக் குழந்தைகள் அதிவேக இணையவழியில் கல்வியைத் தொடர்ந்தபோது, பொருளாதாரத்தில் பின்தங்கிய எளிய குடும்பத்துக் குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.
பன்னாட்டுத்
தொலைத்தொடர்புக் குழுமத்தின் (ITU) தரவுகளின்படி
ஹாங்காங், சீனா, ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 90% முதல் 100%
வரையிலான சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்திய வேளையில் இந்தோனேசியா, பெரு போன்ற வளரும் நாடுகளில் பயன்பாடு 22% முதல் 43%
ஆக மட்டுமே இருந்தது.
இந்தியாவில்
பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழலில், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக இல்லாமல், விளிம்புநிலை மற்றும் கிராமப்புறச் சிறாரின் உயர்கல்வி, வேலைவாய்ப்புக் கனவுகள் மற்றும் தகவல் அறிவுக்கான முதன்மை நுழைவாயிலாகவும் மாறியுள்ளது என்பதும் மறுப்பதிற்கில்லை. ஆனால், மறுபுறம், இணையத்திற்கு அடிமையாதல், கவனச்சிதறல், மன அழுத்தம், இணையவழித்
தொந்தரவு மற்றும் பாலியல் சுரண்டல் போன்றவையும் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிலிருந்து சிறாரைப் பாதுகாக்க உலக நாடுகள் பலவும் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
16 வயதிற்குட்பட்ட
சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த ஆஸ்திரேலியா (டிசம்பர் 2025) ‘உலகிலேயே முதன்முறையாகச் சட்டம் இயற்றிய நாடு’ என்ற பெருமைக்குரியது. அவ்வாறே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரேசில் 13 வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளங்களில் கணக்குத் தொடங்குவதற்குத் தடையும், பெற்றோர் கண்காணிப்பு மற்றும் வயது சரிபார்ப்பு முறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. இங்கு, மார்ச்
2026 அன்று கர்நாடக அரசு தனது பட்ஜெட்டில் 16 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக வலைதளத் தடை விதிக்கத் தீர்மானித்தது. ஆனால், இந்திய உச்ச நீதிமன்றம் இத்தகைய ‘முழுமையான தடைகளை’ நிராகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
‘அனுராதா பாசின் - இந்திய ஒன்றியம் (2020)’ மற்றும் ‘பிரக்யா பசுன் - இந்திய ஒன்றியம் (2025)’ எனும் வழக்குகளின் முன்முடிவுகளை மேற்கோள்காட்டிய நீதிமன்றம், ‘ஆபத்துகள் இருக்கின்றன என்பதற்காக உரிமைகளையே மறுப்பது பொருத்தமற்ற நடவடிக்கை’
என்று சுட்டிக்காட்டியுள்ளது.
உச்ச
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அரசமைப்பு ரீதியாகச் சரியானது என்றாலும், கட்டுப்பாடற்ற இணையப் பயன்பாடுகள் சிறாரின் ஆளுமை வளர்ச்சிக்கான அறநெறி இடையூறுகளுக்குத் தீர்வு என்ன? என்பது விளக்கப்படாத கேள்வியே!
இணையத்தில்
பலுகிப் பெருகும் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த காட்சிகள் மற்றும் வயதுவந்தோருக்கான ஆபாச உள்ளடக்கங்கள், வளரும் பருவத்தினரின் பிஞ்சு மனங்களில் தவறான எண்ணங்களை விதைத்து, அவர்களின் அறநெறி ஒழுக்கத்தைச் சீர்குலைக்கின்றன. மேலும், சமூக ஊடகங்களின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அல்காரிதம்கள் சிறார்களைத் தொடர் பயன்பாட்டிற்கு அடிமையாக்குகின்றன. இது அவர்களின் கற்றல் திறன், சுய சிந்தனை மற்றும் கவனத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவ்வாறே, இணையவழித் தொடர்பும் நட்பும் காணொளிகள் மீதான விருப்பமும், அதனால்
கிடைக்கும் அங்கீகாரமும் சிறார்களிடையே சுயமோகத்தை உருவாக்கி, மாய உலகில் வாழவைத்து, உண்மை மனித உறவுகளிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.
இத்தகைய
சூழலில், சிறாரைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் பெற்றோர் மீதோ அல்லது ஆசிரியர் மீதோ மட்டுமே சுமத்த முடியாது; மாறாக, அடிப்படையில் மென்பொருள் பெருநிறுவனங்கள் தங்களின் தள வடிவமைப்பில் மாற்றங்களைக்
கொண்டு வரவேண்டும். குறிப்பாக, இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023 (பிரிவு 9) மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் பற்றிய புரிதலும் அதைக் கடைப்பிடிப்பதற்கான தெளிவான வழிமுறைகளையும் நாம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, 18 வயதிற்குட்பட்ட சிறாரின் தரவுகளைச் சேகரிக்கும் முன், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும், சிறாரை இலக்கு வைத்து நடத்தப்படும் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்பதும் சட்டமாக்கப்பட வேண்டும். மேலும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செய்திகள் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.
மத்திய
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இது குறித்த தெளிவான, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலும், வகுக்கப்படும் ஒழுங்குமுறைகள் எதிர்வரும் காலங்களில் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளையில்,
இன்றைய இணையச் சாலையிலும் வேகத்தடை மட்டுமே தீர்வாகாது; மாறாக, சுயக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிகளே அவசியமாகின்றன. பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு இணையப் பயன்பாட்டில் முன்மாதிரியாகத் திகழவேண்டும். அன்பும் பரஸ்பர உரையாடலும் நிலவும் குடும்பச் சூழலே, சிறாரை இணையவழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழும்.
உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்பு சுட்டிக்காட்டுவது போல, இணையம் என்பது சிறார்களின் அறிவை விரிவுபடுத்தும் ஒரு மாபெரும் விண்வெளி. அதை அடைத்துவைப்பது அவர்களின் எதிர்காலத்தையே முடக்குவதற்குச் சமம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தியலாக இருந்தாலும், அதை நெறிப்படுத்தும் சில வழிமுறைகள் அவசியம் என்பதையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.
இத்தகைய
நெறிகாட்டும் வழிமுறையில் அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள், பள்ளிகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகிய யாவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் அல்காரிதம் அமைப்புகளைச் சிறார்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற சட்டப்பூர்வத் தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும். பள்ளிகளில் இணையப் பாதுகாப்புப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறார் பாலியல் வன்கொடுமைப் படங்களை இணையத்திலிருந்து உடனடியாகக் கண்டறிந்து நீக்க ஒன்றிய அரசு நாடுதழுவிய தரவுத்தளத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இறுதியாக,
சாலையில் விபத்துகள் நடக்கும் என்பதற்காக யாரும் பயணங்களை நிறுத்துவதில்லை; சாலை விதிகளை உருவாக்கிப் பாதுகாப்பாகப் பயணிக்கிறோம். அதுபோலவே, இணையச் சாலையிலும் சிறார்களுக்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, அவர்களின் அறநெறியையும், ஆளுமை வளர்ச்சியையும் பாதுகாப்பதே ஒரு முற்போக்கான சமூகத்தின் கடமையாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்