சென்ற இதழ் தொடர்ச்சி
பத்தாவது
உலக ஏழைகள் தினத்திற்கான அழைப்பு வெறுமனே இறையியல் சிந்தனையாக இதனைக் கடைப்பிடித்துக் கடந்து போவதற்காக அல்ல; மாறாக, இது ஒவ்வொரு தனிமனிதனின் மனமாற்றத்திற்காக விடுக்கப்பட்டிருக்கிற அழைப்பு. கிறித்தவர்கள் தங்களுக்காக மட்டுமே கடவுளிடம் அடைக்கலம் தேடுபவர்களாக இல்லாமல், ஏழைகளுக்கு அடைக்கலமாகவும் அவர்கள் மாறவேண்டும் என்று திருத்தந்தை லியோ வலியுறுத்துகிறார். திருத்தந்தை
கிறித்தவ அழைப்பாக முன்னிறுத்துகிற இவ்விரு தூண்களும், கிறித்தவ வாழ்க்கை என்பது பெறுவதும்-கொடுப்பதும் இணைந்த ஒரு பயணம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விரு தூண்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை:
1. நமது அடைக்கலத்தைக் கண்டடைவது:
இது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அமைதியான ஆழத்தில் தொடங்குகிறது. இங்கு இறைவனின் மாறாத இரக்கத்திலும் பாதுகாப்பிலும் நம்பிக்கை கொண்டு, நமது சுமைகளை ஒப்படைத்து அவரிடம் தஞ்சம் அடைகிறோம்.
2. நாமே அடைக்கலமாக மாறுவது:
இறை நம்பிக்கை என்பது நமது உள்ளத்திற்குள் அல்லது பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் மட்டும் ஒளிந்திருக்கக்கூடாது; நாம் இறைவனிடமிருந்து பெற்ற அருள் நம்மை மற்றவர்களை நோக்கி உந்தித் தள்ளவேண்டும். அமைதியான இறை நம்பிக்கை செயல்மிக்க நீதியாக, துணிச்சலான அன்பாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு உண்மையான பாதுகாப்பாக உருமாற்றம் அடைய வேண்டும்.
நவீனச்
சமூகமானது தங்களைச் சுற்றி தாங்களே எழுப்பிக்கொண்ட சுவர்களுக்கு நடுவில் பத்திரமாக அமர்ந்து கொண்டிருக்கிறபோது, கதவுகளுக்கு வெளியே ஏக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிற மக்களை உலகக் கிறித்தவச் சமூகம் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. பணக்காரரும் - இலாசருவும் பற்றிய நற்செய்தி உவமையைக் குறித்த புனித அகுஸ்தினாரின் பாரம்பரிய விளக்கத்தை நினைவுகூர்ந்து, ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரும் தமது தனிப்பட்ட முன்னுரிமைகள், செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை ஆராய திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.
ஏழைகளாக ஏழைகளுடன்
நடப்போம்
திருத்தந்தை
லியோ தனது திருத்தூது அறிவுரை மடலான ‘Dilexi te’-வை
மேற்கோள்காட்டி, ‘ஏழைகளுக்கு எப்போதும் கடவுள் முன்னுரிமை அளிக்கிறார்’ என்ற
கத்தோலிக்கத் திரு அவையின் அடிப்படையான சமூகப் போதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். எனவே, திரு அவை உண்மையாகவே இயேசுவின் மலைப்பொழிவில் குறிப்பிடப்படும் ‘பேறுபெற்றோரின் திரு அவையாக’ இருக்கவேண்டும். சிறியவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடம் கொடுக்கிற ‘ஏழைகளுடன் ஏழைகளாக நடக்கிற’ திரு அவையாக அது இருக்கவேண்டும். செயலற்ற அனுதாபத்திலிருந்து உண்மையான கிறித்தவ அன்பிற்கு நாம் நகரவேண்டும். இதற்காகத் திருத்தந்தை லியோ தனிப்பட்ட விதத்திலும் சமூகமாகவும் சிந்திக்க
வேண்டிய 6 கேள்விகளை முன்வைக்கிறார்:
1. ஏழைகளுக்கு
அடைக்கலமாக, கடவுளின் அடையாளமாக நாம் இருக்கிறோமா?
2. நம்முடைய
சொந்த வறுமையை நாம் உணர்கிறோமா? அநியாயமாகப் பெறப்படும் செல்வத்தை விட, அந்த வறுமையை நாம் விரும்புகிறோமா?
3. ஏழைகள்
வாழும் இடங்களுக்குச் சென்று, அவர்கள் அனுபவிக்கும் புறக்கணிப்பில் நாமும் பங்கு கொள்கிறோமா?
4. அவர்களின்
விண்ணப்பங்களுக்குச் செவிகொடுத்து, அவர்களது நம்பிக்கையில் பங்கு கொள்கிறோமா?
5. அவர்களின்
பெயர்களை அன்போடும் இரக்கத்தோடும் நாம் உச்சரிக்கிறோமா?
6. நமது
அன்புச் சேவை அவர்களுக்குள் நீதி மற்றும் மனித மாண்பிற்கான விருப்பத்தை எழுப்பி, அதைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறதா?
இந்தக்
கேள்விகளின் மூலம், வெறுமனே தொலைவில் இருந்துகொண்டு ஏழைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப்பார்த்து, அவர்களது குரலை நேரடியாகக் கேட்பதில் கிடைக்கும் ஆழமான மகிழ்ச்சியை அனுபவிக்க திருத்தந்தை இறைநம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
உலக ஏழைகளின்
வாரம்:
பிரான்சிஸ்கன்
நூற்
றாண்டுக்கான
ஒரு
முன்னெடுப்பு
நவம்பர்
9 முதல் 15 வரை ‘உலக ஏழைகள் வாரத்தை’ பிரான்சிஸ்கன் குடும்பம் உலகளாவிய அளவில் ஏற்பாடு செய்கிறது. 2026-ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாருடைய இறப்பின் 800-ஆம் ஆண்டு நினைவு (1226 - 2026) என்பதால், இந்த முயற்சி வரலாற்றிலும் ஆன்மிகத்திலும் சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறது. சேவை, இறைவேண்டல் மற்றும் செவிமடுத்தல் ஆகியவற்றைக் கொண்ட இந்த வாரம், திருத்தந்தையின் செய்தியை நடைமுறைப்படுத்த விரும்பும் சமூகங்களுக்கு ஒரு பயனுள்ள வழிகாட்டியாக அமைகிறது.
1. ஏழைகள் வாழும் இடங்களை
நோக்கி:
உண்மையான அன்பு நம்மைச் செயல்படவும், நேரடியாக மக்களைச் சந்திக்கவும் அழைக்கிறது. வெளிப்படையாகத் தெரியும் வறுமையையும், மறைந்திருக்கும் வறுமையையும் எதிர்கொள்வதே இதன் நோக்கம். இதற்காக நமது நிறுவனமயமாக்கப்பட்ட நமது வசதியான சூழல்களின் பாதுகாப்பை விட்டு வெளியே வர வேண்டும். தற்காலிகமான,
ஒரே இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதற்குப் பதிலாக, ஏழைகள் வாழும் இடங்களுக்கே நாம் நேரடியாகச் செல்லவேண்டும்.
2. செவிமடுத்தல் - ஏழைகள் பேசட்டும்:
இந்த வாரத்தின் முக்கிய அணுகுமுறை உயிரோட்டமுள்ள செவிமடுத்தல்
ஆகும். ஏழைகளைப் பற்றிக் கல்வியாளர்களோ அல்லது நல்லெண்ணம் கொண்ட உதவியாளர்களோ மட்டும் பேசுவதற்குப் பதிலாக ஏழைகளுக்கே அந்த வாய்ப்பு முதன்மையாகத் தரப்படவேண்டும். அவர்கள் தங்களுடைய வாழ்வைத் தாங்களே கூறவும், தங்களுடைய கனவுகளைப் பகிரவும், தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கவும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும். இந்த ஆழமான செவிமடுத்தலின் மூலம் பெறப்படும் கருத்துகள் மற்றும் அனுபவங்கள் தொகுக்கப்படவேண்டும். இந்தப் பணியின் முடிவில் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களால் அவர்கள் பகிர்ந்த இந்த உறுதியான சாட்சியங்களை, அந்த வட்டார அரசு அமைப்புகளுக்கும் திரு அவைத் தலைமைக்கும் வழங்கவேண்டும்.
3. கல்விசார் நிகழ்வுகள்:
நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகக் கோபத்தையும், அநீதியின் மீதான அதிருப்தியையும் பயனுள்ள நம்பிக்கையாக மாற்றுகிற விதமாக, கல்விசார் நிகழ்ச்சிகளும் கருத்தமர்வுகளும் நடத்தப்படும். இன்றைய வறுமைக்கான சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களும் ஆராயப்படும். இத்தகைய கல்விக் கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதன் வழியாக, இளம் தலைமுறையினருக்கு வரலாற்றுப் பார்வையையும், சமூக விழிப்புணர்வையும் வழங்க ஏற்பாட்டாளர்கள் முயற்சி செய்வார்கள்.
4. இறைவேண்டல்: இறைவேண்டலில்லாத செயல் வெறும்
சமூகப் பணியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, பணிக்குழுக்கள் தினமும் ஒன்று கூடுவதற்காக நிரந்தரமான இறைவேண்டலுக்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். செபமும், மக்களிடையே நேரடியாகச் செய்யப்படும் பணியும் இணைந்திருக்கும்போதுதான் நாம் செய்கிற உதவிப் பணிகள் அனைத்தும் நற்செய்தியில் வேரூன்றியதாக இருக்கும்.
5. இணைந்த செயல்பாடு:
அனைவரையும் உள்ளடக்கும் பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தை வெளிப்படுத்தும் வகையில் துறவியர், அருள்சகோதரிகள், பொது நிலையினர், கத்தோலிக்கர்கள், பிற கிறித்தவ மற்றும் பிற சமயங்களைச் சேர்ந்தவர்கள், சமயச் சார்பற்ற சமூக அமைப்புகள் ஆகியோர் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள். தனித்துச் செயல்படாமல், பொது நலனுக்காக அர்ப்பணிக்கிற பரந்துபட்ட மனித ஒற்றுமையை இந்த வாரம் ஊக்குவிக்கிறது.
6. இறைவாக்கினரின் அடையாளம்:
வாரம் முழுவதும் நடத்தப்பட்ட செவிமடுத்தல் அனுபவங்களிலிருந்து, ஒவ்வொரு சமூகத்தின்
தேவைக்கேற்ப இந்தப் பணிகள் உருவாக்கப்படவேண்டும். இது வெறும் ஒரு செயல் திட்டம் அல்ல; மாறாக, வாரம் முழுவதும் நாம் கேட்ட மக்களின் குரல்களுக்கும் இதயங்களுக்கும் நேரடியாக வழங்கப்படும் பதில். அந்தந்தப் பகுதி மக்களின் உண்மையான தேவைகளிலிருந்து உருவாகும் இந்தப் பணிகள், திரு அவைக்கும் நமது அயலாருக்கும் வழங்கப்படும் ஓர் உயிரோட்டமுள்ள வாக்குறுதியாக இருக்கும்.
பேறுபெற்றோரைக்
கண்டறிதல்
பொருளாதார
அமைப்புகள் மனித மாண்பைவிட செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில், டிஜிட்டல் வலைப்பின்னல்கள் பரிவைவிட பிரிவினையை அதிகமாக வளர்க்கும் இக்காலத்தில், 10-ஆவது ஆண்டு உலக ஏழைகள் தினம் ஒரு மாறாத உண்மையை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு நாகரிகம் உண்மையில் எவ்வளவு உயர்ந்தது என்பதை அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் வைத்தே அளக்க முடியும்.
மறக்கப்பட்டவர்களின்
முகங்களில் கிறிஸ்துவைக் காண நாம் கற்றுக்கொள்ளவேண்டும். செயலற்ற அனுதாபத்தைச் செயல்மிக்க உடனிருப்பாக மாற்றுவோம். ஓரங்கட்டப்பட்ட மக்களின் மாண்பு, குரல் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்போம். ஒவ்வொரு மனிதரும் யாரும் மறுக்கமுடியாத மாண்பைக் கொண்ட கடவுளின் குழந்தை என்பதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவோம்.