திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை கலந்த உரையாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. தனது உரையாடலில் கூறுவார்: “பொய் சொல்லலாம்; ஆனால், ஏக்கர் கணக்கிலெல்லாம் சொல்லக்கூடாது.” இந்த வசனம் இன்றைய ஒன்றிய அரசின் சொற்களுக்கும் செயல்களுக்கும் மிகப் பொருத்தமாக உள்ளன.
அறம்
இழிந்த அரசியலுக்குச் சொந்தக்காரர்களான இவர்கள், தம் பேச்சினில் இந்தியப் பண்பினைக் காக்கப் புறப்பட்ட புனிதர் போல் பேசுகின்றனர். தாம் வகிக்கும் பதவிக்கு எந்தவித மதிப்பும் தராத வகையில் இவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அமைகின்றன. மோடி ஆட்சியேற்றவுடனேயே இவரின் சொல், செயலுக்கான முரண்பாட்டைக் கண்டு கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அவர்கள், பிரதமர் மோடியை “Paradoxical
Prime Minister” என்று
வர்ணித்தார்; இப்பெயரில் ஒரு நூலும் எழுதினார். இன்றும் இவர்கள்தம் நாடகம் முற்றுப்பெறாமல், நாடகத்தின் அனைத்துக் கூறுகளும் நிறம் மாறாமல் அரங்கேறி வருவதை நாடறியும்.
டெல்லியில்
‘இந்தியா’ கூட்டணியின்
தலைவர்களும், புதிதாகத் திரண்டெழுந்துள்ள ‘காக்ரோச் சனதா’வின் கிளைக் கூட்டமும் முன்னெடுத்துள்ள முழக்கம் என்ன? இம்முழக்கத்துள்ளான உள்ளுறை என்ன? ‘சனநாயகத்தைக் காப்போம்! அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்!’
இவ்விருவகை
முழக்கங்களும் வெவ்வேறானவை அல்ல; சனநாயகம் கேலி செய்யப் பெறுகையில், சனநாயகத்தைக் காக்கப் பெறவேண்டிய அரசமைப்புச் சட்டம் திட்டமிட்டு சிதைக்கப்படுகையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய நிறுவனங்கள் அனைத்தும் தம் இருப்பை இழந்து போகையில், இந்தியப் பெருநாடு சந்திக்கவிருக்கும் பேரிடரை முன்னுணர்ந்த சனநாயகச் சக்திகள் இன்று திரண்டெழுந்துள்ளன.
இப்போராட்டக்
குழுவினர் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் எவ்விதத் தார்மிகக் கோரிக்கைகளுக்கும் விளக்கம் (accountable) தரவேண்டிய மோடி, அமித்ஷா பரிவாரங்கள், நியாயமான எந்தப் பதிலும் தராமல், ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் திசை திருப்பும் வகையில், பொருத்தமற்றப் பதில்களைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
அறிவார்ந்த
நிலையில் கேள்வி எழுப்புவோரை இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் ‘நக்சல்’ என்று அழைத்தனர்; ‘தீவிரவாதிகள்’ என்று
முத்திரை குத்தினர். ஆட்சிக்கு வந்தபின் கேள்வி எழுப்பி வருவோரை ‘நகர்புற நக்சல்’ (Urban Naxal) என்றனர். அறிவுக்குப் புறம்பான மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வருவோரைத் தட்டியெழுப்பும் அறிவுடையோரை இன்று ‘திமாகி நக்சல்’
(அறிவுசார் நக்சல்) என்று கேலி செய்கின்றனர். சனநாயகத்தின் மையப் புள்ளியாம் தேர்தலை, அந்தத் தேர்தல் தரும் வாக்குரிமையைத் திருடியவரை, திருடப்பெற்ற முறையை முன்வைத்துப் போராடுவோரை ‘இந்திய வளர்ச்சியைத் தடுப்பவர்’
(Obstructionist) என்று முத்திரை குத்தி பிரச்சினையைத் திசை திருப்புகிறார்கள்.
இன்று
டெல்லியில் நடத்தப்பெறும் போராட்டம் முழுக்க முழுக்க சனநாயகத்தைக் காக்கவும், அரசமைப்புச் சட்டத்தைப் பேணவுமே என்றிருக்க, இக்கோரிக்கைகளை முன்வைத்து இடைவிடாது போராடுவோரை, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகளாகச் சித்தரிப்பது எவ்வளவு கேவலம்!
“இந்தியா விடுதலை பெற்ற பின்பு, 1950, நவம்பர்
26-ஆம் நாள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டபோது, அடையாளப்பூர்வமாக இரண்டு சமூக உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. இவை இனி வரும் காலங்களில் அதிகாரத்தைக் கைக்கொள்ளும் அரசு பற்றியவை. அரசுகள் எவையாயினும் இவ்வாட்சி முறை ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மட்டுமே செயல்படவேண்டும்; அதிகாரத்திலிருப்போர் தாம் அனுபவிக்கும் அதிகாரங்களைத் தாம் விரும்பியபடியெல்லாம் அனுபவிக்க அரசமைப்புப் பல தடைகளை விதித்தது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளை விரிவாகத் தந்திருந்த அரசமைப்புச் சட்டங்கள் குடிமக்களின் காவலரணாக அமைந்தன. நிறுவப்பட்ட நிறுவனங்கள் அரசுகளின் கட்டுப்பாடற்ற அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் தடுப்பணைகளாக அமைந்தன.
இரண்டாவது
உடன்படிக்கை, இந்திய அரசமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் சமூகம். இச்சமூகம் ஏற்கெனவே சில மதிப்பீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், சட்டமன்றங்கள், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை, குடிமைச் சமூகம் இவைகளுக்கெல்லாம் மேலாக அடிப்படை உரிமைகள் உள்ளடக்கிய அரசியல் பழக்க வழக்கங்களைச் சமமாக அனுபவித்தல் - இந்த அடிப்படை மதிப்பீடுகளை மறுப்பது சனநாயகத்தையே மறுப்பதாகும்.”
-
Neera Chandloke, ‘The violence in our bones’ – P. 69,70.
‘சனநாயகம் உள்ளடக்கிய அனைத்துப் பொதுவான அறங்களையும் காப்போம்’
என உறுதியேற்றுவிட்டு, அம்மதிப்பீட்டை மீறுவது மிகப் பெரிய சனநாயக உரிமை மீறலாகும். இம்மீறலை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய கடப்பாட்டை ஏற்று நடத்திவரும் கட்சிகளை, இளைஞர் கூட்டத்தை, அறிவுசீவிகளை இன்றைய ஆளும் கட்சி எப்படிப் பார்க்கிறது?
அண்மையில்
பாரதிய சனதா கட்சி ஒரு கிலோ மீட்டர் தொலைவிலான நீண்ட பயணம் ஒன்றை முன்னெடுத்தது. இப்பயணத்தில் முன்னெடுக்கப்பட்ட முழக்கம்தான் இங்கு கவனிக்கத்தக்கது:
“சனநாயகத்தைக்
காப்போம்!
(Save
Democracy);
அராஜகத்தை
அகற்றுவோம்
(Remove
Anarchy)”
எம்மாதிரியான
கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்படுகிறதோ, அதே முழக்கங்களை ‘சனநாயகத்தைப் பாதுகாக்கவும், அராஜகத்தை அகற்றவும்’
என்று கோரிக்கை வைப்பவர்கள் யார் என்று பாருங்கள்!
சனநாயகத்தில்
கிஞ்சித்தும் நம்பிக்கையற்ற ஒரு கட்சி, சனநாயகப் பண்பே இல்லாத ஒரு கட்சி, சனநாயகம் தரும் தேர்தல் வழி கட்டமைக்கப்பட்ட ஆட்சியை ஓர் அராஜக ஆட்சியாக ஓர் எதேச்சதிகார ஆட்சியாக மாற்றி வரும் கட்சி, சனநாயகத்தைக் காக்கப் போராடப் போகின்றதாம்! என்ன வேடிக்கை!
“பாரதிய சனதா தொண்டர்களும், தேசிய சனநாயக முன்னணியின் தொண்டர்களும் உறுதியாக ஊடுருவல்காரர்களை விரட்டியடிப்பதை உறுதி செய்வார்கள்; இந்நாட்டின் குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் ஊடுருவலாளர்களை அனுமதியோம்” (‘தி
இந்து’ - நவம்பர்,
2026).
பாரதிய
சனதாவின் கொடிகளைக் கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்ற அக்கட்சியினர் ‘பொய்யரசியலை நிறுத்துவோம்’ (Politics
of lies), ‘சனநாயகத்தைச்
சிதைக்கும் ஊடுருவலாளரை ஒழித்து சனநாயகத்தைக் காப்போம்!’, ‘மோடி எங்கும் காணாமல் போய்விடார்” இவையெல்லாம்
இவர்களின் முழக்கங்கள்.
சனநாயகம்
சமூகத்தின் எத்தரப்பினரையும் ஒதுக்காது; சனநாயகம் அனைவரையும் உள்ளடக்கும். ஒதுக்கலை அரசியல் கொள்கையாகக் கொண்ட சங்கப் பரிவாரங்கள், ஒதுக்கலைச் சனநாயகப் பண்பாகக் கொள்கிறது. சனநாயகக் காப்பைக் கொள்கையாகக் கொண்ட எவரும் குடிமக்களை மத அடிப்படையில் ஒடுக்குபவர்களை
ஏற்கமாட்டார்கள். சங்கப் பரிவாரங்களின் ஒடுக்கும் கொள்கை பாசிச வடிவை ஒத்தது. ஜெர்மனியின் நாசிசத்திற்கும், அந்த நாசிசம் யூதர்களை முன்வைத்து நடத்திய அரசியல் அராஜகத்திற்கும், இன்று இந்தியாவில் ‘சனநாயகக் காப்பு’ என்ற பெயரில் இசுலாமியரை ஊடுருவலாளராகத் திட்டமிட்டுச் சித்தரித்து ஒடுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது அராஜகமானது; அயோக்கியத்தனமானது; அசிங்கமானதும்கூட!
எவரையும்
பாகுபடுத்தாத சனநாயகத்தைப் பாகுபடுத்தலே ‘சனநாயகம்’
என்று பா.ச.க.
வலிந்து கூறுவது அரசியல் அநாகரிகம். இசுலாமியர் என்று பெயர் சொல்லாமலே அவர்களை ‘ஊடுருவலாளர்’ என்று
அழைத்து, வெறுப்பை வளர்த்து, அரசியல் நடத்திவந்த பரிவாரங்கள், SIR மூலம்
மிக நேர்த்தியாக அவர்களை ஒதுக்கிவிட்டனர்; வாக்குத் திருட்டின் மூலம் களவாடப்பட்ட இசுலாமியர் இருப்பு, இவர்களின் புதிய சனநாயக விளக்கத்தின் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் எப்போதுமே கண்டிராத ஒரு பெரிய சனநாயகப் படுகொலை இது.
SIR என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தச் சீர்திருத்த நடவடிக்கை 13 கோடி பேரைக் காவு கொண்டுள்ளது. அகற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட இவர்கள் இந்தியக் குடிமக்கள். ஏனெனில், பன்மைச் சமூகத்தின் குடிமக்கள் ஒற்றை அடையாளம் கொண்டோராகவே இருக்க முடியாதாம். பன்முக அடையாளத்துள் ஒரு சமயம் சார்ந்த அடையாளத்தை ஏற்றோர் என்பதாலேயே இவர்கள் ஒதுக்கப்பட்டதோடு, அப்படி ஒதுக்கப்பட்டோர் ‘ஊடுருவலாளர்’ என்றும்
இகழ்ச்சியாகக் கட்டம் கட்டப்பட்டுள்ளனர்.
“இந்நாட்டின் 140 கோடி மக்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை; நீங்கள் யாரை நம்புகின்றீர்கள்? நீங்கள் மூன்று கோடி ஊடுருவலாளரை நம்புகின்றீர்கள். உங்களுடைய உண்மையான நம்பிக்கைதான் என்ன?” - இவ்வாறு மொழிந்தவர் பாரதிய சனதா கட்சியின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான நிதின் நபின். இவர் மேற்கண்ட நடைபயணத்தின்போது வாக்குத் திருட்டை மக்களிடம் வேகமாகக் கொண்டு செலுத்தலில் வெற்றி பெற்ற இராகுலை நோக்கி எழுப்பிய கேள்வி; அல்ல... அல்ல.... அவதூறு!
நாடு
முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் வாக்குத் திருட்டு, இத்திருட்டு மூலம் களவாடப்பட்டிருப்பது வெறும் வாக்குகள் மட்டுமல்ல, சனநாயகமே களவாடப்பட்டுவிட்டது. இப்படிக் களவாடியோர் தேசத்துரோகிகள்; அந்தக் களவை நியாயப்படுத்தியோர் துரோகிகள். இத்துரோகத்தை நிகழ்த்தி வருவோரைத் துரத்தி, சனநாயகத்தைக் காக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அப்பணியைச்
சனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யட்டும். ஆதிக்கவாதிகள் அப்போது அடிபணிவது நிச்சயம்.