news-details
சிறப்புக்கட்டுரை
சிறார் புகட்டும் பெரிய பாடம் (நவம்பர் 20 - உலகக் குழந்தைகள் தினம்)

குழந்தைகள் இறைவனால் கொடுக்கப்பட்ட பெருமைக்குரிய கொடை! வெள்ளை மனமும், பிள்ளை குணமும் கொண்ட குழந்தைகளை அன்பு செலுத்தாதவர் உண்டோ? தாயின் கருவில் உருவாகிப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தாம். பெற்றோரின் வாழ்வு நெறிகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் வாழக் கற்றுக்கொள்கிறார்கள்.

• அன்பாக, நல்ல வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தல்;

• பிறரை மதித்து, பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம் என்று அறிவுறுத்தல்;

• தனிமைச் சூழலைத் தவிர்க்க பயத்தை நீக்கி, துணிவை மேற்கொள்ளல்;

• போட்டி, பொறாமை குணங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்து வாழ்தல்;

• வாழ்வில் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு, தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறுதல்...

மேற்கண்ட குணங்களைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அளிப்பதோடு, குழந்தைகளின் ஆர்வத்தையும் அனுபவத்தையும் ஆசைகளையும் அணுகுமுறைகளையும் மனநிலையையும் அறிந்து, அவர்களது கனவுகளை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளின் மனத்தில் விதைக்கும் விதைதான் வளர்ந்தபின் சிறந்த பயனைத் தரும். ஐ.நா.வின் ‘யுனிசெஃப்’ எனும் குழந்தைகள் நல அமைப்பு, நவம்பர் 20 ‘உலகக் குழந்தைகள் தினம்’ என அறிவித்துள்ளது. இந்தியாவின் மறைந்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குழந்தைகளின் மீது காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14-இல் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சாதி, பொருளாதாரம் அடிப்படையில் தாழ்நிலையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓரம்கட்டப்பட்டவர்கள் ஒரு விதத்தில் சிறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.

‘சிறியோரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லாரையும் வாழ்த்தும்’ என்கிறார் மகாகவி பாரதியார்.

‘என்ன சாதிக்குப் பிறந்தோம் என்பது மூடத்தனம்;

என்ன சாதிக்கப் போகிறோம் என்பதே மூலதனம்.

“நான் எதற்காகப் படைக்கப்பட்டேனோ அதையும், நான் எதற்காக உயிர் வாழ்கிறேனோ அதையும் செய்யத் தொடங்காமலிருக்க என்ன உரிமை இருக்கிறது?” என்றார் மார்க்ஸ் அவுரேலியஸ்.

சில குழந்தைகள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளிலும் முட்செடிகளுக்கிடையிலும் எறியப்பட்டு அநாதைகளாக ஆக்கப்படுகின்றனர். அநாதை இல்லங்களில் சேர்க்கப்பட்டு நல்லவிதமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் உண்டு; தெருவோரங்களில் தானாக வளரும் குழந்தைகளும் உண்டு. இவர்கள் வளரும்போது பிறப்பின் பெருமையை அறிந்து, நல்லவர்களாக வாழ்பவர்கள் சிலர்; பிறப்பின் பெருமையை அறியாமல் தீயவர்களாக வாழ்பவர் சிலர்.

உரோமாபுரி ஓவியர் ஒருவர் கள்ளங்கபடமற்ற முகத்தையுடைய ஒரு சிறுவனைக் கண்டறிந்து, அவனைப் படம் வரைந்து அதை விற்றுச் செல்வரானார். அப்படத்திற்கு எதிரான அயோக்கியனான ஒருவன் படத்தை வரைய எண்ணி, சிறைச்சாலைக்குச் சென்று தேடும்போது ஒருவன் முகத்தைத் தேர்ந்தெடுத்த பின், அவனிடம் முன்பு வரைந்த சிறுவன் படத்தைக் காட்டியபோது அவன், “இது நான்தான்; நான் அயோக்கியனாக மாறுவதற்கு தீய நண்பர்களின் சகவாசமே காரணம்” என்றான்.

பிறக்கும்போது எல்லாம் நன்மையாக இருக்க, அவன் தோற்றமும் தெய்வீகத் தோற்றமாகிறது. வளர வளர எண்ணங்கள் மாற்றம் பெற்று, அதற்கேற்ப வாழ்வும் தோற்றமும் பெற்றுக்கொள்கிறான்.

ஆல்ஃபிரட் நோபல் ஒரு வேதியர், பொறியாளர், நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். 1867-இல் டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். 1888-ஆம் ஆண்டில் இவரது சகோதரரின் மரணத்தை “மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்” என செய்தி ஊடகம் வெளியிட்டது. ‘போப்பர்சு’ என்ற பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு உரிமையாளரான ஆல்ஃபிரட் இதனால் மனம் வேதனையுற்று, மக்கள் மனத்தில் நல்ல இடம்பெற தன் சொத்துகளை விற்று உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசை உருவாக்கினார். இன்றும் அப்பரிசுகள் வழங்கப்பட்டு உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவராக அவர் அறியப்படுகிறார். நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்.

அதிகாரம் மிக்க பணம் படைத்தவர்களால் குழந்தைத் தொழிலாளிகள் உருவாகித் துன்பப்படுகின்றனர். மேலும், சுதந்திர இந்தியாவில் அநீதியினால் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகள் மனத்திடத்துடன் முயன்றால் முன்னேறலாம்.

பீத்தோவன் - கேட்கும் திறன் அற்றவர்; இசை மேதை.

மில்டன் - பார்வையிழந்தவர். ‘இழந்த சொர்க்கம்’ (LAST PARADISE) எனும் காவியத்தை எழுதியவர்.

இராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் – படைப்பாளர் (TREASURE ISLAND). நோயாளியாயிருந்த போது வெளியிட்டவர்.

மற்றவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மதித்து நடந்தால் உயர்வுகள் தானே வரும். திருவிவிலியத்தில் இயேசுவின் உள்ளத்தில் குழந்தைகளுக்குத் தனி இடம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறையாட்சி குழந்தைத்தன்மையுடையவருக்கே உரியதாகும். இயேசு “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது” என்றார் (மாற்கு 10:14).

குழந்தைகளிடம் ஆச்சரிய உணர்வும், பிறரை நம்பும் தன்மையும், எளிதில் மன்னிக்கும் குணமும் பணிவும் உண்டு. குழந்தைகளிடம் சுயநலம், சுய பெருமை கிடையாது. விண்ணரசை ஏற்றுக்கொள்வதற்கேற்ப மனநிலை குழந்தைகளிடம் உள்ளது. இயேசு நத்தனியேலைக் கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்கிறார். அவரும் இயேசுவைப் பார்த்து, “ரபீ, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்று கண்டு கொள்கிறார் (யோவா 1:47,49). 

எனவே, நாமும் குழந்தையின் மனம் உடையவர்களாக, கபடற்றவர்களாக வாழும்போது இறைவனை ‘அப்பா! தந்தாய்!’ என்று கூப்பிடும் குழந்தை போல இறையாட்சியில் இடம் பெறுவோம் என்பதே சிறியவர் நமக்குப் புகட்டும் பெரிய பாடம்.