போர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இடம்பெயரும் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பன்னாட்டுக் கத்தோலிக்கக் குடியேற்ற ஆணையத்திற்குத் திருத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். உரோமையில் நவம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற பன்னாட்டுக் கத்தோலிக்கக் குடியேற்ற ஆணையத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்திற்குத் திருத்தந்தை லியோ காணொளி வாயிலாக அனுப்பிய செய்தியில், “புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சொந்த நாட்டிற்குத் திரும்புவோரை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து ஒருங்கிணைக்கும் உன்னதப் பணியைத் திரு அவை தொடர்ந்து ஆற்றவேண்டும். புலம்பெயரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவேண்டும். அவர்கள் பயணிக்கும் நாடுகளிலும் சென்றடையும் இடங்களிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். நிராகரிக்கப்படும் ஒவ்வோர் அகதியரிலும் இயேசு கிறிஸ்துவே நமது கதவைத் தட்டுகிறார் என்பதை நினைவில் கொண்டு, இரக்கத்துடன் செயல்படவேண்டும்” என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.