news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 34 - ஆம் ஞாயிறு (22.11.2026) கிறிஸ்து அரசர் பெருவிழா - எசே 34:11-12, 15-17; 1 கொரி 15:20-26, 28; மத் 25:31-46 (இறைவனது உலகத்தில் நுழைந்திட ஏழைகளின் உலகத்தில் நுழைவோம்!)

நம் இறைத்தந்தை விண்ணகத்தில் இருக்கின்றார் என்று மறைக்கல்வி கூறுகின்றது. ஆனால், இறைத்தந்தையின் விண்ணகம் அவரின் குழந்தைகளாகிய ஏழை, வறியவர்களின் மத்தியில் உள்ளது. ஏழை எளியவர்களே அவரது உலகம். ஒருவர் இறைவன் வாழும் உலகத்தில் நுழைய விரும்பினால், ஏழைகளின் உலகத்தில் நுழையவேண்டும். ஏனென்றால், ஏழைகளும் எளியவர்களுமே அவரது இல்லிடத்தில் நுழைந்திருக்கும் அவரது விருப்ப இளவரசர்கள்- இளவரசிகள் (மத் 22:39).

இன்றைய நற்செய்தியில் இவ்வுலகின் இறுதி நீதித்தீர்ப்பின்பொழுது என்ன நடக்கும் என்பதை நற்செய்தியாளர் மத்தேயு 25-ஆம் அதிகாரத்தில் விவரிக்கின்றார். இவ்வதிகாரம் முழுவதும், இறுதித் தீர்ப்பு பற்றிய சிந்தனைகள் பரவிக்கிடக்கின்றன. திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, இறுதித் தீர்ப்பு பற்றிய சிந்தனைகளைத் தாங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது. ஆண்டின் இறுதியில் நம் வாழ்வின் தணிக்கை (Audit) அறிக்கையை இறைவன் ஆய்வு செய்கிறார்.

இறுதி நீதித்தீர்ப்பின்பொழுது, நம் வாழ்நாள் முழுவதையும் இறைவன் சல்லடையால் பிரித்து, ஆராய்ந்து நம்மைத் தீர்ப்பிடுவதில்லை; நமது இயலாமையைக் கொண்டு நம்மைத் தீர்ப்பிடுவதில்லை; மாறாக, இயன்றும் நம்மால் முடியக்கூடிய செயல்களைச் செய்யத் தவறிய செயல்களினாலே தீர்ப்பிடப்படுவோம். நன்மை செய்ய வாய்ப்பும் வசதியும் இருந்தும் தவறிய தருணங்களுக்காகவே தீர்ப்பிடப்படுவோம். நமது நற்செயல்களே அல்லது புறக்கணித்த தருணங்களே நமது இறுதித் தீர்ப்பின் வரிகளாக அமையும். அந்நாளில் இறைவன் நாம் யாருக்கேனும் உதவியையும் உடைமையையும் உணவையும் உடனிருப்பையும், உற்சாக நலம்தரும் வார்த்தைகளையும் வழங்கியபின் அவர் திருமுன் வந்திருக்கின்றோமா என்பதைக் காண்பார். நம் ஆண்டவர் நமது இயலாமையை, இல்லாமையை, பாவக்கறைகளைக் கண்டு மகிழ்வதில்லை. நம் வாழ்வில் அவை எங்கெல்லாம் நடந்தேறின எனத் தேடுவதில்லை; மாறாக, நமது நற்செயல்களைக் கண்டே மகிழ்கின்றார்.

“இறைவன் திருமுன் பலன்தராத வெற்றுக் கரங்கள் (ஏழைகளுக்கு இரங்கி, உதவி செய்ய விருப்பமின்றிப் புழுதியாக்க விரும்பாத கரங்கள்) இறைவனால் விண்ணரசிற்குள் வரவேற்கப்படுவதில்லை” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். தனது செயல்பாட்டில் ஏழைகளுக்கும், தேவையில் உழல்வோருக்கும் உதவிட நீட்டப்பட்ட கரங்களே இறைவனால் முத்தமிடப்பட்டு ஆசிர்வதிக்கப்படும்.

எனது இன்றைய செயல்களுக்காக நாளை நான் எப்படித் தீர்ப்பிடப்படுவேன்? ஏழைகளையும், தேவையில் உள்ளோரையும் நான் இன்று எப்படி அணுகுகின்றேனோ, அவ்வாறே இறைவனும் என்னை அணுகுகின்றார். நான் அவர்களுக்காக நேரம் ஒதுக்கிச் செயல்படும் தருணங்கள் மீண்டும் எனக்கே ஆசிராகத் திரும்பும் (தீதும் நன்றும் பிறர்தர வாரா). நாளைய விண்ணக வாழ்வு என்பது, இன்று உதவிட மனமில்லாதோருக்கு எட்டாக்கனியாகிவிடும்.

புதுமைகள் செய்ய அல்ல, புத்தாக்கம் வழங்கிட...

• நான் புதுமைகள் செய்ய அழைக்கப்படவில்லை; மாறாக, எளியவர்களை, கைவிடப்பட்டோரைப் பராமரிக்க அழைக்கப்பட்டிருக்கிறேன்.

• நான் நோயுற்றோரைக் குணமாக்க அழைக்கப்படவில்லை; மாறாக, அவர்களைச் சந்தித்து உடனிருக்க அழைக்கப்பட்டிருக்கின்றேன்.

• ஆச்சரியமான செயல்களைச் செய்திட அழைக்கப்படவில்லை; மாறாக, அமைதியுடன் மாற்றுத்திறனாளிகளையும் மனநலம் குன்றியவர்களையும் பாதுகாக்க அழைக்கப்பட்டிருக்கிறேன்.

• பிரச்சினைகளைத் தீர்க்கும், தீர்ப்பு சொல்லும் நீதிபதியாகச் செயல்பட அழைக்கப்படவில்லை; மாறாக, நெருக்கடியான சூழ்நிலையில் வாழும் தம்பதியர்களுடன் உடனிருக்க, அவர்களின் முணுமுணுப்பையும் அங்கலாய்ப்பையும் சற்றே குறைத்திட அழைக்கப்பட்டிருக்கிறேன்.

• என்னுடன் இணக்கம் இல்லாத அடுத்திருப்பவரை முற்றிலும் ஒதுக்கிவிட அழைக்கப்படவில்லை; மாறாக, அனுசரித்துச் செல்ல அழைக்கப்பட்டிருக்கிறேன்.

• என் சகோதர-சகோதரிகளிடத்தில் நான் காட்டுகின்ற அக்கறையும் உடனிருப்பும், அவருக்கு நான் வழங்குகின்ற உடையும் உணவும் எனது முடிவில்லா வாழ்வின் படிக்கட்டுகள். அவையே இறைவன் பிரசன்னத்தில் நான் அமர்ந்து, முடிவில்லாப் பேரின்பத்தின் இடத்தைப் பெறும் முன்பதிவு.

• நமது சிறிய உதவிக்கரம், ஒரு குவளை நீர், ஒரு வேளை உணவு, சில மணித்துளிகள் உடனிருப்பு இவையெல்லாம் இன்றி நமக்கு மீட்பு இல்லை. இவையே நமது மீட்பின் வைப்பு நிதி.

இறைவன் நமது சுதந்திரத்தை எப்பொழுதும் மதிக்கின்றார். நன்மையான  காரியங்களைச் செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகள், சூழல்கள் நமக்குத் தரப்படுகின்றன. அச்சூழல்கள் உதவி வழங்கிடும் நேரங்களில் இறைவன் நுழைந்து நம் சுதந்திரத்தைப் பறிப்பதில்லை. நாம் அனைவரும் இயல்பாகச் செயல்பட அனுமதிக்கின்றார். உதவியையும் செய்ய நமக்குச் சுதந்திரம் உண்டு. உதவி கோரும் ஏழை, எளியவர்களை உதாசினம் செய்திடவும் புறக்கணிக்கவும் நமக்குச் சுதந்திரம் உண்டு, நாம் எதைத் தேர்வு செய்கின்றோம்?

ஏழைகளை விட்டு ஒதுங்கி இருப்பவர்கள், இறைவனை விட்டே ஒதுங்கி இருக்கின்றார்கள். பிறரின் (நிறை) வாழ்விற்கு என்றுமே விருப்பம் கொள்ளும் (யோவா 3:16) இறை ஆயனை விட்டு தள்ளிச் செல்கின்றார்கள். அவரது பிரசன்னத்தை இழக்கின்றார்கள். இத்தகையோருக்கு வாழ்வும் விலகிச்செல்லும்.

இன்றைய நற்செய்தி எல்லாருக்கும் அழைப்புத் தருகின்றது. திருமுழுக்குப் பெற்றவர், பெறாதவர், பிற மதத்தினர், இயேசுவைச் சார்ந்திராதவர்கள் என அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறது. இறைவனை ஆலயத்தில் மட்டுமல்ல, நமது வீதிகளில் துன்புறும் ஏழை சகோதர, சகோதரிகளிடத்தில் காண்பதே நமது பணி.

இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர், இறைவனைத் தமது ஆடுகளைத் தேடிச்சென்று, வழிதவறியவற்றை மீண்டும் அழைத்து வரும் ஆயனாக அறிமுகப்படுத்துகின்றார். எசேக்கியேல் இறைவாக்கினரின் காலத்தில், இஸ்ரயேல் மக்களின் அரசர்களும் தலைவர்களும் அவர்களை வழிநடத்தும் பொறுப்பிலிருந்து தவறிச் சென்று, மக்களைச் சுரண்டி அழித்தனர். எனவே, இறைவனே அவர்களைத் தேடிச்சென்று பராமரிக்க முன்வருகின்றார். வழிதவறியவர்களைத் தேடிச் செல்கின்றார். உடல், உள்ள காயமுற்றவர்களைக் குணப்படுத்துகின்றார். இதுவே இறையாட்சி.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்து சாவை வென்று, மனித இனத்தின் புதிய வாழ்வின் நம்பிக்கையாக மாறுகின்றார்; பழைய மனித அடையாளமாகிய பாவத்தையும் சாவினையும் வெல்கின்றார். கிறிஸ்துவின் இறையாட்சி என்பது வாழ்வை முன்னிறுத்துகின்றது. நம்பிக்கையை வளர்க்கின்றது. பசியில், வறுமையில், துன்பத்தில் வாடுபவர்களின் நம்பிக்கையாக, வாழ்வாக மாறுவதே இயேசுவின் இறையாட்சியில் பங்கேற்பதற்கான வாய்க்கால்கள்.

இறுதியாக,

அன்பு செய்வதற்கான வாய்ப்பு உள்ளபோதே அதை நிறைவேற்றவேண்டும். மீண்டும் அதே வாய்ப்பும் சூழ்நிலையும் நமக்கு அமைவதில்லை. இறைவன் இறுதி நாளின்மீது, தம்மை முன்னிலைப்படுத்தி தீர்ப்பு வழங்குவதில்லை; மாறாக, தம் முகமாக, சாயலாக, நீட்சியாக இருக்கின்ற ஏழைகள், தேவையில் உள்ளோர், புறக்கணிக்கப்பட்டோர், விளிம்புநிலையில் வாழ்வோர் இவர்களை முன்னிறுத்தியே தீர்ப்பு வழங்குகின்றார்.  இவர்களே நம்மை இறைவன் முன் அழைத்துச் செல்லும், நிலைவாழ்வின் உபசரிப்பாளர்கள் / வரவேற்பாளர்கள்.

இறுதி நாளில் இறைவன் நம்மைப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றிப் பார்க்கின்றார். நம்மை விண்ணகத்திற்கு அழைத்து வரும் வரவேற்பாளர்களைக் காண்கின்றார். அவர்களின் நிறைவும் மகிழ்வும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர்களின் வெறுமையும் புறக்கணிப்பும் பசியும் பட்டினியும் வேதனையும் இறைவனின் கோபமாக மாறுகின்றது. ஏனென்றால், “சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25:40).

கிறிஸ்து அரசரே வாழ்க!

நலிந்தவர்களுக்கான உமது அரசு வருக!