news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“மருத்துவத்துறையில் ஏ.ஐ., டிஜிட்டல் மருத்துவம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நாம் வல்லுநர்களாகத் திகழவேண்டும். மாணவர்கள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மனிதர்களின் நல்வாழ்விற்கான கருவியாகத் தொழில்நுட்பம் பயன்படவேண்டும். எனினும், மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான உறவுக்கு மாற்றாகத் தொழில்நுட்ப முன்னேற்றம் வரமுடியாது. நவீனத் தொழில்நுட்பம் அதிகரித்தாலும், நாம் மனிதாபிமானத்தைக் கைவிடக்கூடாது. நோயாளிகளிடம் நாம் கருணையுடன் நடந்து கொள்ளவேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மருத்துவர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.”

மேமிகு. சி. பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

“நாடு முழுவதும் நடத்தப்படும் SIR பணிகள் நிறுத்தப்படவேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அனைத்துச் சட்டசபைத் தேர்தல்களையும் இரத்து செய்யவேண்டும். இனி வரும் காலங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையையே பின்பற்றவேண்டும். RSS மற்றும் பா.ச.க.-வின் கொள்கைகள் நாட்டில் பிளவுகளை அதிகரிக்கின்றன. இந்தச் சூழலில், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க மக்கள் ஒன்றுபடவேண்டும். மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்படுவதையும் தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து மக்கள் போராடவேண்டும். மத நம்பிக்கை மக்களை ஒன்றிணைக்கவேண்டுமே தவிர பிரிக்கக்கூடாது.”

உயர்திரு. மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

“பள்ளிகளில் மாணவர்கள் மீது சாதி ரீதியாகத் தாக்குதல் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இத்தகைய செயல்பாடுகளில் தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் உடல் நலத்திற்கு உடற்கல்வி வகுப்புகள் உள்ளதுபோல், மனநலம் குறித்து எடுத்துரைக்க ஆசிரியர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இலக்குகளை நிர்ணயிக்கவேண்டும். தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரத்தைக் காவல்துறை தீவிரமாக அணுகுகிறது. நகரங்களில் உள்ளது போலவே கிராமங்களிலும் சி.சி.டி.வி. அமைக்கக் காவல்துறை அறிவுறுத்துகிறது.”

உயர்திரு. ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்