news-details
சிறப்புக்கட்டுரை
மனம் தரும் மனமாற்றம் (ஏற்றம் தரும் எண்ணங்கள் - 15)

ஒரு மாலை நேரம்; மழை பெய்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் ஒருவர் குடையுடன் நின்றுகொண்டிருந்தார். ‘மழை நின்று விடுமா?’ என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் மற்றொருவர் அதே மழையில் நனைந்துகொண்டே சிரித்தபடி நடந்து சென்றார்.

இருவரும் பார்த்தது ஒரே மழை; ஆனால், ஒருவருக்கு அது காத்திருப்பு, மற்றவருக்கு அது இரசிப்பு. நிகழ்வு ஒன்றுதான்; அதை அனுபவிக்கும் மனம் வேறு. இதுதான் மனத்தின் வித்தியாசமான சக்தி.

‘மனம்’ என்ற மூன்றெழுத்துச் சொல்லுக்குள் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. நாம் பார்க்கும் உலகம் ஒன்று; நம் மனம் காட்டும் உலகம் மற்றொன்று. ஒரே வார்த்தையை ஒருவர் பாராட்டாக எடுத்துக்கொள்ளலாம்; மற்றொருவர் அவமதிப்பாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு தோல்வியை ஒருவர் வாழ்க்கையின் முடிவாகக் கருதலாம்; மற்றொருவர் அதையே வாழ்க்கை கற்றுக்கொடுத்த ஒரு பாடமாகப் பார்க்கலாம். வெளியில் நடந்த நிகழ்வைவிட, அந்த நிகழ்வு நம் மனத்திற்குள் ஏற்படுத்தும் அர்த்தம்தான் நம்மை அதிகமாகப் பாதிக்கிறது.

சில நேரங்களில் ஒரு நிகழ்வு முடிந்துவிடுகிறது; ஆனால், அதன் தாக்கம் நம் மனத்தில் முடியாமல் தொடர்கிறது. ஒருவர் நம்மை விட்டுச் சென்று விடுகிறார்; ஆனால், அவரது நினைவுகள் நம்மை விட்டுச் செல்லாமல் இருக்கலாம். ஒரு வார்த்தை சில நொடிகளில் கூறப்பட்டு விடுகிறது; ஆனால், அது பல வருடங்கள் மனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கலாம். அதேபோல், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஒருவர் கூறிய ஒரு சிறிய ஊக்க வார்த்தை, நம்முடைய எதிர்காலத்தையே மாற்றிவிடலாம். வார்த்தைகளுக்குக் காலம் இல்லை; மனத்தில் பதிந்துவிட்டால் அவை காலத்தைக் கடந்தும் பயணிக்கும்.

மனத்தின் மற்றொரு விசித்திரம் ‘நான் தோல்வியடைந்தால்?’, ‘அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?’, ‘இந்த முயற்சி வெற்றி பெறவில்லையென்றால்...?’ என்று நடக்காத நிகழ்வுகளுக்கே மனம் முன்னதாகத் தீர்ப்பளிக்கத் தொடங்குகிறது. நாம் இன்னும் செல்லாத பாதையில் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது; நாம் இன்னும் சந்திக்காத பிரச்சினைகளுடன் மனம் போராடிக் கொண்டிருக்கிறது. நடக்காத நாளின் கவலை, நடந்துகொண்டிருக்கும் இன்றைய நாளைத் திருடிவிடுகிறது.

ஆனால், மனத்தின் அழகு என்ன தெரியுமா? நம்மை வீழ்த்தும் எண்ணத்தை உருவாக்கும் அதே மனம்தான், நம்மை மீண்டும் எழுப்பும் எண்ணத்தையும் உருவாக்க முடியும். ‘என்னால் முடியாது’ என்று கூறும் குரலும் நமக்குள்ளேதான் இருக்கிறது; ‘ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம்’ என்று கூறும் குரலும் நமக்குள்ளேதான் இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால், எந்தக் குரலுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதுதான்.

ஒரு பணியிடத்தில் மேலாளர் ஒருவர் நமது பணியில் சில குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம்; உடனே மனம், ‘அவர் என்னை மதிப்பதில்லை’ என்று கூறலாம். கோபம் வரலாம்; வருத்தம் வரலாம்; பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வரலாம். ஆனால், அந்த ஒரு நிமிடத்தில் நம்மை நாமே கேட்கலாம்: ‘அவர் கூறியதில் உண்மை ஏதேனும் இருக்கிறதா? நான் என்னை மேம்படுத்திக்கொள்ள இதில் ஏதாவது இருக்கிறதா?’ இந்த ஒரு கேள்வி போதும். நிகழ்வு மாறவில்லை; ஆனால், அதற்கான நமது பதில் மாறிவிட்டது. அந்த மாற்றம்தான் மனமாற்றம்.

மனமாற்றம் என்றால் எப்போதும் நம் எண்ணங்களை மாற்றுவது மட்டுமல்ல; சில நேரங்களில் நம் எண்ணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் முறையையே மாற்றுவது. கோபம் வந்தால், ‘நான் கோபமாக இருக்கிறேன்’ என்பதற்குப் பதிலாக, ‘எனக்குள் கோபம் உருவாகிறது... ஏன்?’ என்று கேட்பது. பயம் வந்தால் ‘நான் பயப்படுகிறேன்’ என் பதற்குப் பதிலாக, ‘இந்தப் பயம் என்னை எதிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறது?’ என்று புரிந்துகொள்வது. வருத்தம் வந்தால் அதை விரட்ட முயற்சிக்காமல், ‘இந்த வலி எனக்கு என்ன சொல்ல வருகிறது?’ என்று கேட்பது.

மனத்தை வெல்வது என்பது அதன் குரலை அடக்குவது அல்ல; அதன் குரலைப் புரிந்துகொள்வது. நம்முடைய வாழ்க்கையில் நாம் பலரை மன்னித்திருக்கலாம். ஆனால், ஒருவரை மட்டும் மன்னிக்காமல் இருக்கலாம். ‘அன்று நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது’, ‘அந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது’, ‘அந்த வாய்ப்பை நான் தவறவிட்டு விட்டேன் என்று கடந்த காலத்தில் இருந்த நம்மை நாமே இன்றும் தண்டித்துக்கொண்டிருக்கலாம்.

வாழ்க்கையில் சில கதவுகள் நமக்காகத் திறக்கப்படும்; சில கதவுகள் நமக்கு முன்பாகவே மூடப்படும். சிலர் நம்முடன் பயணிப்பார்கள்; சிலர் ஒரு கட்டத்தில் பிரிந்து செல்வார்கள்.

சில கனவுகள் நிறைவேறும்; சில கனவுகள் நிறைவேறாமல் போகலாம். அப்போது நாம் கேட்கும் கேள்வி, ‘ஏன் இது எனக்கு நடந்தது?’ என்பதாக இருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிகழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘அது நடந்ததால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன்’ என்று புரிந்துகொள்ளலாம்.

காலம் சில நிகழ்வுகளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாது; ஆனால், அவற்றின் அர்த்தத்தை மாற்றிவிடும். அதனால்தான் மனமாற்றம் என்பது வாழ்க்கையிலிருந்து பிரச்சினைகளை அகற்றுவது அல்ல; பிரச்சினைகளுக்கு நடுவிலும் நம்மை நாம் இழக்காமல் இருப்பது.

மனம் அமைதியாக இருந்தால், வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லாமல் போய்விடாது. ஆனால், அந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் நமது திறன் அதிகரிக்கும்.

சூழ்நிலை மாறாமல் இருக்கலாம்; அதை நோக்கும் நமது பார்வை மாறலாம். மனிதர்கள் மாறாமல் இருக்கலாம்; அவர்களைப் பற்றிய நமது எதிர்பார்ப்பு மாறலாம். கடந்த காலம் மாறாது; ஆனால், அதன்மீது நாம் வைத்திருக்கும் பாரம் குறையலாம்.

மனமாற்றம் என்பது ஒரே நாளில் நிகழும் மாற்றமல்ல; அது ஒரு பயணம். நேற்று இருந்த நம்மைவிட இன்று கொஞ்சம் தெளிவாகவும், இன்று இருந்த நம்மைவிட நாளை கொஞ்சம் பக்குவமாகவும் மாறிக்கொண்டே இருப்பதே மனமாற்றம்.

‘வாழ்க்கை நமக்கு என்ன கொடுத்தது?’ என்று மட்டும் எண்ணாமல், அது நம்மை என்னவாக மாற்றியது என்றும் சிந்திப்போம். நம்மைக் காயப்படுத்தியவர்கள் நமக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுத்திருக்கலாம். நம்மை விட்டுச் சென்றவர்கள் பற்றுதலின் அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்திருக்கலாம்.

தோல்விகள் நமக்கு முயற்சியின் மதிப்பைக் கற்றுக்கொடுத்திருக்கலாம். தனிமை நம்முடன் நாமே பேசக் கற்றுக்கொடுத்திருக்கலாம். ஒவ்வோர் அனுபவமும் நம் வாழ்க்கையில் ஒரு தடம் விட்டுச் செல்கிறது. அந்தத் தடங்களை நாம் காயங்களாகப் பார்க்கிறோமா? அல்லது பாடங்களாகப் பார்க்கிறோமா? என்பதில்தான் மனமாற்றம் தொடங்குகிறது.

இறுதியில், வாழ்க்கையை மாற்றுவதற்கு எல்லா சூழ்நிலைகளும் மாறவேண்டியதில்லை. சில நேரங்களில் மாறவேண்டியது ஒன்றே ஒன்று; நம் மனம்! மனம் மாறினால் எண்ணங்கள் மாறும்; எண்ணங்கள் மாறினால் பார்வை மாறும்; பார்வை மாறினால் பாதை மாறும்; பாதை மாறினால் வாழ்க்கையே மாறும். அதுதான் ‘மனம் தரும் மனமாற்றம்.’

‘வாழ்க்கை மாறுவதற்காகக் காத்திருக்காதீர்கள். உங்கள் மனம் மாறும் தருணத்திலேயே, உங்கள் வாழ்க்கையும் மாறத் தொடங்குகிறது!’