news-details
சிறப்புக்கட்டுரை
மதமாற்றம் எனும் பொய்மை

‘வங்காளத்தின் பாஸ்கிம் மெட்னிபுர் மாவட்டத்தில் மதவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது’(‘தி இந்து’ - அக்டோபர் 25, 2026).

என்ன நடந்தது?

மூன்று குடும்பங்கள் (ஒரு குழந்தை உள்பட) அச்சுறுத்தப்பட்டனர். பாலியல் வன்புணர்வு செய்து விடுவோம் என்றும், கொலை செய்துவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை இக்குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டனர்.

நடந்தவைகளை விவரித்த திரு. முல்லிக், தனது குடும்பத்தினர் ஏற்றிருந்த குறிப்பிட்ட சமய நம்பிக்கைக்காகவே தாக்கப்பட்டோம் என்றார். கடந்த சில மாதங்களில் இம்மாதிரியான 15 நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளன என்ற அவர் மேலும் கூறியதாவது....

“மதவாதிகள் குழுமி நின்ற மக்கள் முன்பே எங்களைக் கட்டாயப்படுத்தி நீராட வைத்தனர். இந்நீராடலைப் புனிதப்படுத்தும் சடங்கு என்று சொல்லிக்கொண்டனர். என்னுடைய உடைகளைக் கட்டாயப்படுத்தி என் அனுமதியின்றியே அவிழ்த்தனர். என் விருப்பத்திற்கு எதிராக என்னை இச்சடங்கில் ஈடுபடச் செய்தனர். எங்களைக் கட்டாயமாகப் பக்கத்தில் இருக்கும் துர்கா பூசை பந்தலுக்குள் இழுத்துச் சென்றனர். பந்தலினுள் இந்துமதச் சடங்குகளைச் செய்ய எங்களைக் கட்டாயப்படுத்தினர். என் 16 வயது மகளைத் தகாத வார்த்தைகளால் வசைபாடியதோடு, அவள்மீது பாலியல் வன்முறை நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தினர்.”

மேலே குறிப்பிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த இச்செய்தி கிறித்தவர்களுக்குப் புதிய செய்தி அல்ல; அதிர்ச்சியூட்டும் செய்தியும் அல்ல; முதல்முறையாக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியேற்ற பாரதிய சனதாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிச் செய்தியாக, மதவாத அரசியலுக்குக் கிடைத்த பரிசாகக்கூட இதைப் பார்க்க முடியும்.

இச்செய்தியில் நமக்குக் கிடைத்த தகவல்களில் புதுமை என்னவெனில், வங்காள மாநிலத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்த கிறித்தவக் குடும்பம் ஒன்றைக் குறிவைத்துத் தாக்கியதுடன், ‘சுத்தப்படுத்துதல்’ என்ற பெயரில் நீராடச் செய்து, இந்துக் கோவில் ஒன்றிற்கு இழுத்துச் சென்று அக்கோவிலுள் வைக்கப்பட்டிருந்த தெய்வங்களை வழிபடவும் செய்த கொடுமைதான்! இது நாம் அடிக்கடிக் கேள்விப்படாத நிலை. ‘இத்திருப்பணியை’ செய்தோர் சங்கப் பரிவாரங்களின் மிகத் தீவிர அமைப்பான பஜ்ரங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவில் தொழுநோய் மருத்துவரான கிரகாம் ஸ்டெய்ன்ஸ் அவர்களையும், அவர்தம் இரண்டு குழந்தைகளையும் இரக்கமின்றிக் கொன்ற கூட்டத்தின் ஒரு பகுதியினர்தாம் இந்தப் பஜ்ரங்கள் அமைப்பினர்.

இன்று இந்தியா முழுமைக்கும் பல வகையிலான வன்முறைத் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன. இத்தாக்குதல்களில் குறிப்பாக, மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களே அதிகம்.

வழிபாட்டுத்தலங்கள் சிதைக்கப்படுகின்றன; வழிபாட்டு முறைமைகள் கேலிசெய்யப்படுகின்றன; புதிய ஆலயங்கள் நிறுவப்பெற அனுமதி மறுக்கப்படுகின்றன.

இசுலாமியர் மீதான தாக்குதல்களும், கிறித்தவம் மீதான தாக்குதல்களும் ஒரே வகையிலானவை அல்ல; இசுலாமியர் மீதான தாக்குதலில் மிகப்பெரிய அரசியல் நோக்கம் உண்டு. இந்திய அரசு ஓர்மையை (Polarise) மையப்படுத்தும் அரசு என்பதால், பன்மைத்தன்மை மிக்க இந்து மதப்போக்கை முழுமையாகச் சிதைக்கும் வகையில் ‘ஒருமை’ பேசி பொய்யான ஒற்றுமை (Unity) என்ற முழக்கத்தை முன்வைத்து, இசுலாமியரை ‘தீவிரவாதிகள்’ என்றும், ‘பிரிவினைவாதிகள்’ என்றும், ‘ஊடுருவலாளர்’ என்றும் பொய்யான நாமகரணம் சூட்டி, அவர்களைத் தேசத்தின் எதிரிகளாக (Demonise)  வலுவாகச் சித்தரித்து, ஒரு பெரிய தனித்த அடையாளமுடைய வலுவாக இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு சமய சமூகத்தை இந்திய அரசியல் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதில் (Alonate) இந்துத்துவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர்.

வகுப்புவாதக் கருத்தியலின் உள்ளடக்கம், எதிரியல்லாத எதிரியைக் பொய்யாகக் கட்டமைப்பதுதான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இசுலாமியர் இந்நாட்டை 800 வருடங்கள் ஆண்டனர்; இந்துகளின் கோவில்களை இடித்தனர்; கோவில் செல்வங்களைக் கொள்ளையடித்தனர்... என்பது போன்ற பெரிய குற்றச்சாட்டுகளை இசுலாமியர்மீது இந்து தீவிரவாதிகள் முன்வைத்து பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வந்தாலும், ‘மதமாற்றம்’ என்ற சொல் கிறித்தவர்மீதே அதிகமாக வைக்கப்படுகிறது.

கிறித்தவம் தன் முழுநேரப் பணியாக ‘மதமாற்றம்’ என்ற நோக்கில் செயல்படுவதாக ஓர் அப்பட்டமான பொய் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிறித்தவம் சார்ந்த சபைகள் நடத்தும் அனைத்து நிகழ்வுகளும் மதமாற்றும் நிகழ்வுகளாகவே கொச்சைப்படுத்தப்படுகின்றன. அண்மையில் மராட்டிய மாநிலக் கத்தோலிக்க ஆலயங்களில் நாளும் நடைபெறும் திருப்பலிகளைக் கூட மதமாற்றக் கூடுகையாகச் சித்தரித்து, அக்கூடுகை கலைக்கப்பட்ட செய்திகளைப் பார்த்தோம்.

நம் கிறித்தவச் சகோதர சபைகளின் செயல் கூடுகை அனைத்தும் இவர்களைப் பொறுத்தவரை மதமாற்ற நிகழ்வுகளே! மிகச்சிறிய அளவில் கட்டப்படும் ஆலயங்கள் அனைத்தும் மதமாற்றத்திற்கே! ஆலயம் கட்டுதற்கான அனுமதியை மறுப்பதற்கான காரணமும் மதமாற்றமாகத்தான் என்று சொல்லி அனுமதி மறுக்கப்படல் அல்லது காலந்தாழ்த்துதல், ஆலயத்தில் நடத்தப்பெறும் மறையுரைகள், ஆலயத்தினுள் அல்லது வெளியே வைக்கப்பெறும் ஒலிபெருக்கிகள் எல்லாம் மதமாற்றத்திற்கே...

சங்கப் பரிவாரங்களின் இப்போக்கு இப்படியே நீடித்தால், இனி தனிநபராக ஓரிடத்தில் அமர்ந்து நாம் தியானம் கூட செய்ய முடியாது. கிறித்தவம் ஒரு மறைபரப்பும் மார்க்கம்; நற்செய்தி அறிவிப்பு என்பது இதன் அடிநாதமாயிருக்க, கிறித்தவன் வாயைத் திறந்தாலே மதமாற்றத்திற்குத்தான் என்று ஏவிவிடப்படும் அவதூறுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஒற்றைத் தேசத்தை உருவாக்கும் நோக்கில், அத்தேசம் இந்து தேசமாகத்தான் இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் கோல்வால்கர் தன் ‘Bunch of thought’ என்ற நூலில் இசுலாம், கிறித்தவம், கம்யூனிசம் என்ற மூன்று அமைப்புகளையும் இந்நாட்டின் உள்நாட்டு எதிரிகளாக (Internal Enemies) அடையாளம் காட்டுகிறார். இன்றைய இந்து மதவாதிகள் கிறித்தவம் பற்றி வைக்கின்ற வசைமொழிகள் அனைத்தும் இவரிடமிருந்து பெறப்பட்டவையே.

கிறித்தவர்கள் பாரத நாட்டில் கிறித்தவச் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப முயல்கின்றனராம். கிறித்தவர்களின் நோக்கம், கிறித்தவச் சமயத்தைக் கட்டமைப்பது மட்டுமல்ல, இந்திய சமூக அமைப்பை (Social Fabric)  உடைத்தெறிந்து, அரசியல் மேலாண்மையை நிலைநிறுத்துவதாம்; இம்மதம் சார்ந்தோர் இந்திய நாட்டில் எங்கெல்லாம் செல்கின்றனரோ அங்கெல்லாம் இரத்தம் வழங்குவோராக இல்லாமல், இரத்தம் குடிப்போராகவே வாழ்கின்றனராம்!  கிறித்தவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தும் சமயங்களுக்குப் புறம்பானவைகளே (Irreligious); இவர்கள் நாட்டின் எதிரிகள் (Antinational); கிறித்தவ மிஷனரிகள் இந்து மதத்தின் புனித நூல்களையும் வேதங்களையும் அவமதித்தவர்கள்; கிறித்தவ மிஷனரிகள் இந்துமத மக்களின் சமய நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு, அங்கு உருவாகும் ‘வெறுமை’யில் (Void) கிறித்தவத்தை ஊடுருவச் செய்வதுதான் இவர்களின் நோக்கம்! கிறித்தவர் ஆற்றுவதாகக் கூறிவரும் மனிதநேயப் பணிகள் அனைத்தும் மதமாற்றுவதற்கான முகமூடிகளே. பலவேளை அச்சுறுத்தியும், சிலவேளை ஆசைகாட்டியும், இந்நடவடிக்கைகள் அமையும்; இவர்களின் அடிப்படை நோக்கமெல்லாம் எண்ணிக்கையைப் பெருக்கி, கிறித்தவருக்கென்று தனிக் கிறித்தவ அரசைக் (Christian State) கட்டுவதே” (M.S. Golwalker - ‘Bunch of thought’ பக். 190, 192, 193).

சங்கப் பரிவாரங்களின் பிதாமகன்கள் இப்படி விஷம் கக்கிதான் தமது மத அடிப்படைவாதத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

இன்று பா.ச.க. ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போல, பொது சிவில் சட்டமும்! இக்கட்சி ஆளும் மாநிலங்களில் கிறித்தவத்தின் தனித்துவமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்நாட்டு இசுலாமியர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டாலும், அரசியல் மயப்படுத்தப்பட்ட இச்சமூகம் தன் எதிர்ப்பைக் காட்டி வருதலில் தயக்கம் காட்டுவதில்லை. அனைத்து வகை உரிமை மீறல்களையும் அவமானங்களையும் சந்தித்து வந்தாலும், ஆளும் கட்சியின் உறுப்பினர் எவரும் இசுலாமியராக இல்லா நிலையிலும், ஆளும் கட்சியின் ‘ஒதுக்கு அரசியலால்’ (Exclusionary Politics) மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாயினும், இசுலாமியரின் இருப்பை (Presence) எவரும் ஓரங்கட்டிவிடமுடியாது.

கிறித்தவம் என்ன செய்யும்?

‘மதமாற்றம்’ எனும் நோக்கில் ஒரு கொள்கை இருக்கிறது; ஓர் அரசியலும் உள்ளது. மதமாற்றம் என்னும் சொல் ஒரு தீயசொல் அல்ல; மதமாற்றத்தில் சுதந்திரம், தெரிவு செய்யும் உரிமை, கருத்துரிமை என்பன அடங்கும். மதமாற்றத்தைத் தடை செய்துவிட்டு மதச்சுதந்திரம் பற்றிப் பேச முடியாது. இந்திய அரசமைப்பு ஒரு மதத்தைத் தழுவ, கடைப்பிடிக்க என்பதோடு மட்டுமல்லாமல், பரப்புரை செய்யவும் உரிமை வழங்கியுள்ளது. இப்பரப்புரையில் ஒரு கருத்தியல் இடம்பெறவே செய்யும். இக்கருத்தியலின் வடிவம் மதமாக இருக்கலாம்; அதனால் கேட்போரிடம் மாற்றம் நிகழலாம். ‘மாற்றம்’ எனும் எதிர்வினை நிகழாத போது அல்லது நிகழக்கூடாது எனும்போது பரப்பலின், பரப்புரையின் அல்லது நாள்தோறும் நிகழ்த்தப்பெறும் மறையுரைகளின் அர்த்தம்தான் என்ன?

‘மாற்றம்’ நோக்கியே நாம் ஆற்றும் அனைத்துப் பணிகளும் அமைதல்வேண்டும் என்பதே கட்டாயம். ஆனால், மறைபரப்பு ஞாயிறை ஒரு சடங்கு ரீதியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். மறைபரப்புதல் நமது அடிப்படைக் கடமையும் உரிமையுமே என்பதை நாம் புரிந்திருந்தால், இன்று மறைபரப்பு ஞாயிறை கருத்துரிமையின் நாளாக, பேச்சுரிமை காக்கும் நாளாக நாம் கொண்டாட வேண்டாமா?

கிறித்தவம் பரப்புரையின்றி உயிர் பெறவில்லை. மனித உரிமைச் சாசனங்களும் சட்டங்களும் உருவாகாத காலத்தில், மனித உரிமைகள் மானுடக் கவசமாகக் கையில் இல்லாத காலத்தில், குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாத காலத்தில் முந்தைய கிறித்தவப் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பரப்புதல் அல்லது அறிவித்தலால் நாம் இன்றும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மதமாற்றத்தைச் சுருக்கிப் பார்க்கும் பார்வையை நாம் தவிர்ப்போம்.