news-details
சிறப்புக்கட்டுரை
அகில உலகத் திரு அவையில் 10-ஆவது ஏழையர் ஞாயிறு

2016-ஆம் ஆண்டை திருத்தந்தை பிரான்சிசின் அழைப்பை ஏற்று ‘இரக்கத்தின் ஆண்டாக’ அகில உலகத் திரு அவை கொண்டாடியது. 2016-ஆம் ஆண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று ‘இரக்கத்தின் ஆண்டு’ நிறைவுக்கு வந்தபோது, “இரக்கத்தின் ஆண்டு முடிவிற்கு வருகிறது; ஆனால் திரு அவையில் இரக்கம் தொடர்கிறது” என்றார் நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ்.

2017-ஆம் ஆண்டிலிருந்து கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு முந்தைய ஞாயிறை ஏழையரின் ஞாயிறாக ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து, ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாகவும் ஏழைத் திரு அவையாகவும்’ நாம் வாழவும் பணியாற்றவும் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் நாளைத் திரு அவையில் பத்தாவது உலக ஏழையர் ஞாயிறாக நாம் கடைப்பிடிக்க திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நமக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“ஆண்டவர் எளியோருக்கு அடைக்கலமாய் இருக்கிறார்” (திபா 14:6) எனும் இறைவாக்கே இந்த ஆண்டுக்கான ஏழையர் தினத்திற்கான திருத்தந்தை லியோ அவர்களின் மையச் செய்தியாக அமைகிறது. 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் நாள் ஏழையரின் பசிபோக்க அப்பம் தரும் இயேசுவின் நற்செயலைக் கடைப்பிடித்த பதுவை புனிதர் அந்தோணியாரின் விழாவன்று இந்தச் செய்தியைத் திருத்தந்தை லியோ வெளியிட்டார். எளியோருக்கு அடைக்கலமாகும் இறைவனை இன்றைய திரு அவையும், அனைத்து நம்பிக்கையாளரும் தங்கள் வாழ்வாலும் பணியாலும் ஏழை எளியவர்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் தோழமையும் தர திருத்தந்தை லியோவின் செய்தி அழைப்புத் தருகிறது.

1. ஏழையருக்கு அடைக்கலமான ‘அனாவிம் யாவே’

இஸ்ரயேல் சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறையாலும், பிறருக்குத் தீங்கிழைப்போரின் தொடர் வன்முறையாலும் எருசலேம் கோவில் இடிக்கப்பட்டது. ‘கடவுள் இல்லை’ என்பது போல அறிவிலிகள் செயல்பட்டார்கள். உண்மை, நீதி, சமத்துவம் இவற்றிற்கு எதிரான நிலைகளாலும், தீமை செய்வோரின் இழிவான செயல்களாலும், ஏழையர் மிகவும் துன்பத்துக்கு உள்ளாயினர். கடவுளைப் பற்றிய எண்ணத்தையும் அவரின் ஏழைகளுக்கான இரக்கத்தையும் மறந்த சமூக அவலத்தால், ஏழையர் துயரத்திற்கு உள்ளாயினர். ஏழைகளைக் கொடுமைப்படுத்தி அவர்கள் நசுக்கப்பட்டு, ஆதரவற்று அலைந்து திரிந்த காலத்தில்தான் “ஆண்டவர் எளியோருக்கு அடைக்கலமாய் இருக்கின்றார்” (திபா 14:6) என்ற உயர்வான நம்பிக்கை இறைவனின் வாக்குறுதியாக இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தப்பட்டது.

திருவிவிலியத்தில் கடவுள் ஏழையரின் சார்பான கடவுள் என்றும், ஏழையரைக் கைவிடாத இரக்கத்தின் கடவுளென்றும், அடைக்கலமும் ஆதரவும் தரும் இறைவனாகவும் அவர் முன்னிறுத்தப்படுகிறார். இன்றும் ஏழைகளுக்கும் எளியோருக்கும் இறைவனே அடைக்கலம் தருகிறார். இதன் ஒளியில்தான் பத்தாவது உலக ஏழையர் தினத்திற்கான இந்தக் காலத்திற்கேற்ற செய்தியாக “ஆண்டவர் எளியோருக்கு அடைக்கலமாய் இருக்கிறார்” (திபா 14:6) எனத் திருத்தந்தை லியோ அகில உலகம் முழுவதற்கும் அறிவிப்பு செய்கிறார்.

 2. ஏழையரின் குரலை நசுக்க வேண்டாம்

“திருப்பாடல் 14-இன் செய்தியும் உண்மையும் இன்றும் நம் சமூகத்தில் தொடர்கிறது” என்கிறார் திருத்தந்தை லியோ. இன்றும் பொய்மையான சூழ்ச்சிகளாலும், போலியான வளர்ச்சி எனும் பிம்பத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கத்தாலும், கள்ளச் சந்தைகளின் வளர்ச்சியாலும், ஏமாற்று அரசியலாலும், அநீதியான அடக்குமுறைகளாலும் பெரும்பான்மையான ஏழை எளியவர்கள் இன்றும் பாதிக்கப்படுகின்கிறனர். இன்றைய காலகட்டத்தில், கள்ளத்தனமான சந்தைப் பொருளாதார வளர்ச்சியாலும், அணு ஆயுதப் பரவலாலும், அதன் போட்டியாலும், வளர்ச்சி என்ற மாயையில் மானிட மேன்மையையும், அதன் மாண்பையும் மானிட உழைப்பையும் கேலியாக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கத்தாலும் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுவோர் சமூகத்தின் ஏழைகளே. இவர்களை நோக்கி நம் கவனத்தையும் பணிகளையும் பார்வையையும் திருப்ப திருத்தந்தை லியோ அழைப்பு விடுக்கிறார்.

3. எளியோரின் தோழமையில் நடைபெற்ற இயேசுவின் பணிகள் தொடரட்டும்

இயேசுவின் பணியும் வாழ்வும் குறித்துப் பேசும் நற்செய்தி நூல்களும், புதிய ஏற்பாட்டின் மற்ற பிற நூல்களும் இயேசுவின் ஏழையருக்கான முன்னுரிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இயேசு தம் பிறப்பு முதல் இறப்பு வரை ஏழையாகவே வாழ்ந்தார். தம் திருமுழுக்குத் தொடங்கி, இறுதியில் மற்றொருவரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நாள்வரை ஏழையாகவே தம் மண்ணக வாழ்வை நிறைவு செய்தார். பணியிலும் வாழ்விலும் ஏழையரோடு இணைந்தே காணப்பட்டார். அவர்களையே தம் நெருங்கிய நட்பு வட்டமாகவும் தோழமைக் குழுவாகவும் பணியாளர் குழாமாகவும் இயேசு தேர்ந்து, அவர்களைத் தம் சீடர்களாக, திருத்தூதர்களாக உருவாக்கினார்.  ஏழையரின் வாழ்வு தேடும் சீடர்களை உருவாக்கினார். எளியோருக்குப் பணி செய்யவே பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசு தம் போதனையிலும் வல்ல செயல்களிலும் சமபந்தியிலும் ஏழையரின் அடைக்கலமாக, புகலிடமாக, ஆதரவாளராக, ஏழையரின் சமூக ஈடுபாட்டாளராகத் தம்மைத் தம் பணியால் வெளிப்படுத்தினார். அதற்காகத் தம்மையே அவர் இழந்தார்.  ஏழையரின் வாழ்விற்காகவே தம்மையே பலியாக்கினார்.  ஏழை மெசியா இந்த மண்ணில் தம் இறையாட்சிப் பணியில் ஏழைத் திரு அவையை உருவாக்கினார். அதே இயேசு இன்றும் ஏழைகளின் அடைக்கலமாக நற்செய்தியால் அறிவிக்கப்படுகிறார்.

4.  ஏழை எளியோரின் நலன் தேடும் திரு அவை ஏழையாகட்டும்

அகில உலகத் திரு அவையில் 2017-ஆம் ஆண்டு ‘ஏழையர் ஞாயிறை’ அறிமுகம் செய்த திருத்தந்தை பிரான்சிஸ், “இன்றைய திரு அவை ஏழைத் திரு அவையாகவும், ஏழையருக்கான திரு அவையாகவும், ஏழை எளியோருக்கு அர்ப்பணத்துடன் பணியாற்றும் திரு அவையாகவும் செயல்படவில்லையென்றால், அது உண்மையான திரு அவையாக, இயேசுவின் திரு அவையாகச் செயல்படவில்லை” என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வெளியே செல்லும் திரு அவை (Ad Gentes) பணியாளர் திரு அவையாக, ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக விளிம்புகளுக்கும் சேரிகளுக்கும் பயணித்து, வாழ்விழந்து வழி தெரியாமல் அலைந்து திரியும் மக்களையும் தேடிச்செல்லும் திரு அவையாக, தொண்டாற்றும் பணியாளர் திரு அவையாகத் தன்னையே புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆடம்பரமும் உல்லாசமும் தவறான வாழ்வு முறையும் ஏழையருக்கான எதிரான செயல்களும் போலித் திரு அவையாகவே உருவெடுக்கும் என்ற எச்சரிக்கையும் இந்த ஏழையர் ஞாயிறு தினத்தில் நமக்கு விடுக்கப்படுகிறது. கூட்டியக்கத் திரு அவைக்கான அழைப்பும் நடைமுறையும் ஏழையருக்கான நலன் தேடும் திரு அவையாக நாமும் நம் பணிகளும் அமையவேண்டும் என்ற தொடர் அழைப்பை நமக்கு இந்த ஞாயிறு விடுக்கின்றது. வருடத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையைப் போல வெறும் சடங்குடன் முடிந்துவிடும் நாளாக அல்ல, திரு அவையின் இயல்பையும் பணியையும் இயேசுவின் பார்வையில் உண்மையாக்கும் நாளாக அகில உலகத் திரு அவையின் ஏழையரின் ஞாயிறு கொண்டாடப்படவேண்டும் என்பதுதான் திருத்தந்தை லியோவின் ஏக்கமாகவும் அழைப்பாகவும் உள்ளது.

5. புனித பிரான்சிஸின் யூபிலி ஆண்டில் ஏழையர் ஞாயிறு அர்த்தம் பெறட்டும்

அகில உலகத் திரு அவையின் பத்தாவது ஏழையர் ஞாயிறுக்கான தன் செய்தியில், திருத்தந்தை லியோ இன்றைய சமூகத்தில் ஏழையர் சந்திக்கும் அவலங்களைப் பட்டியலிடுகிறார். அன்றாட உணவில்லாமல் வாழும் ஏழையரின் உணவு இன்று ஒருசில ஆதிக்கப் பணக்கார நாடுகளால், சுயநல வெறி கொண்ட அடக்குமுறை அமைப்புகளால், இலாப நோக்கத்தையே முன்னிறுத்தும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களால் பறிக்கப்படுகிறது.  அன்றாட உணவு மறுக்கப்படுகிறது. இலஞ்சத்தாலும் ஊழலாலும் சமூக அநீதியாலும் ஏழையரும் எளியோரும் வறியோரும் வஞ்சிக்கப்பட்டுத் தங்கள் உணவை மட்டுமல்ல, தங்கள் குரலையும் மனிதத்தையும் இழக்கும் ‘அந்நியமாக்கும் சூழல்’ மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் திருத்தந்தை லியோ.

ஆயுதப் போட்டியாலும், நில, நிற வெறியாலும் செல்வ வெறியாலும் பெரும்பான்மையான மக்கள் உலகில் தொடர்ந்து ஏழையராக்கப்படுகின்றனர். அவர்கள் அன்றாட உணவையும் உணர்வையும் உரிமைகளையும் இழந்து வாடும் சூழல் அதிகரிக்கும் இந்தக் காலத்தில், கடவுளின் சார்பான திரு அவையும் நம்பிக்கையாளர்களும் இன்று எளியோருக்கு அடைக்கலம் தர இயலும் என்பதுதான் திருத்தந்தை லியோவின் அழைப்பாக உள்ளது.

சுயபரிசோதனையும் சுத்திகரிப்பும் வாழ்வு மாற்றமும் புனித பிரான்சிசின் வாழ்வில் நற்செய்தி வாழ்வாக உருவெடுத்ததுபோல, அவரின் விண்ணகப் பிறப்பின் 800-ஆம் ஆண்டு நிறைவின் யூபிலி ஆண்டாகிய இந்தக் காலத்தில் ‘தன்னல மறுப்பு’ என்பது நம் அனைவருக்கும் அவசியமாகிறது.

பிறர் நலனுக்காக ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக உருவெடுக்க, பிறர்நலன் தேடும் இதயமும் செயல்பாடுகளும் உடனடித் தேவையாக எழுகின்றன. தன்னல மறுப்பு நம்மைச் சுயநலம் மறுத்து, பிறர் நலன் தேட, மிகக் குறிப்பாக ஏழை எளியோரின் சுமைகளைத் தீர்த்து, கண்ணீர் துடைத்து, தோழமைக் கரம் நீட்டி, உண்மையான அடைக்கலம் தரும் நம்பிக்கையாளர்களாகச் செயல்பட நம்மைத் தூண்டியெழுப்புகிறது.

இது ஏழை எளியோருக்கு நாம் செய்யும் உதவியாக அல்ல; கடமையாக மாறவேண்டுமென்ற உண்மையைத் திருத்தந்தை லியோ அவர்களின் செய்தி உணர்த்துகிறது.

ஏழையர் ஞாயிறு, எளியோருக்கு அடைக்கலமாகத் திரு அவையையும் நம்பிக்கையாளர் நம் அனைவரையும் உருவாக்கிட உறுதியேற்போம்! உண்மையுடன் செயல்படுவோம்!