என் குழந்தைப் பருவத்தில், மழைக்காலம் என்றாலே மகிழ்ச்சியும், மலரும் நினைவுகள் மட்டுமே உள்ளதாக என் மனம் கொள்கிறது. பள்ளிக்கு விடுமுறை. பிடித்த வீடியோ கேம்கள், திரைப்படங்கள் எனப் பொழுதைக் கழித்துக்கொண்டே எங்கள் வீட்டு வாசற்படிகளில் அமர்ந்து மழைத்துளி விழும் ஓசையையும், அதன் அழகையும் கவலையின்றி இரசித்த நாள்களை இன்னும் மறக்கவில்லை. மழையில் விளையாடுவதற்காக வெளியே ஓடும்போதெல்லாம் அம்மா என் கை, கால்களில் தாராளமாகப் பயன்படுத்திய ஓடோமாஸ் வாசனையும், மழைநீரில் குதித்து விளையாடக் கூடாது என்று அவர் கண்டிப்புடன் எச்சரித்ததும் இன்றும் என் இதயத்திலிருந்து நீங்காத நினைவுகளாக இருக்கின்றன.
ஆனால்,
இன்றைய காலத்தில் மழைக்காலம் பலருக்கு மகிழ்ச்சியுடன் மட்டுமல்ல, ஒருவித அச்சத்துடனும் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு பற்றிய செய்திகள், கொடிய நோய்கள் பரவுவதாக வரும் ‘வாட்ஸ்அப்’
தகவல்கள், நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளைக் காட்டும் காணொளிகள், அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் குறித்த கவலைகள் என எங்கும் செய்திகள்
நம்மைச் சூழ்ந்திருக்கின்றன.
இத்தகைய
தகவல்களுக்கு மத்தியில் எது உண்மை? எது தேவையற்ற அச்சம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மழைக்காலத்தில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் நோய்களிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? ஒரு நுரையீரல் மருத்துவ ஆலோசகராக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு, எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தாமதமின்றி மருத்துவ உதவி பெறுதல் ஆகியவை இதற்கான முக்கியமான வழிகள் என்று நம்புகிறேன்.
நம்மைச் சுற்றியுள்ள
தண்ணீரில்
தொடங்குவோம்!
மழைநீரானது
தாழ்வான பகுதிகள், ஏரிகள் மற்றும் சில குளங்களை நிரப்புகிறது. ஆனால், அதே தண்ணீர் உடைந்த பானைகள், பூந்தொட்டிகள், பழைய டயர்கள், திறந்த பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கும் போது கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற இடமாக மாறி விடுகிறது.
இந்தச்
சிறிய கொசுக்கள் டெங்கு, மலேரியா, சிக்குன்
குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கு முக்கியக் காரணமாகின்றன. சில நேரங்களில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் நம் வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும். வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர்த் தொட்டிகளையும் பாத்திரங்களையும் மூடி வையுங்கள். அடைப்பு ஏற்பட்ட வடிகால்களைச் சுத்தம் செய்யுங்கள். ஜன்னல்களில் உள்ள கொசுவலைகள் சேதமடைந்திருந்தால் சரிசெய்திடுங்கள். வெளியில் செல்லும்போது கொசு விரட்டி கிரீம்களைப் பயன்படுத்துவதுடன், உடலை மூடும் ஆடைகளையும் அணியுங்கள். காய்ச்சலுடன் கடுமையான உடல் வலி, தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி அல்லது தோலில் தடிப்புகள் ஏற்பட்டால், அதைச் சாதாரண பருவகாலக் காய்ச்சல் என்று அலட்சியப்படுத்தவேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
டெங்கு
பாதிப்பில் கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி, இரத்தப்போக்கு அல்லது சிறுநீர் குறைவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றினால் அவசர மருத்துவச் சேவை அவசியம். காய்ச்சல் குறையத் தொடங்கும்போதுகூட இத்தகைய அறிகுறிகள் தோன்றலாம். கொசு சிறியதுதான்; ஆனால், அது பரப்பும் நோயின் பாதிப்பு சிறியதாக இருக்கவேண்டிய அவசியமில்லை!
பாதுகாப்பான குடிநீரும்
சுகாதாரமான
உணவும்
அவசியம்!
கனமழை
மற்றும் வெள்ளப் பெருக்கின்போது குடிநீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அல்லது சேமிக்கப்படும் உணவுகளிலும் நோய்க்கிருமிகள் இருக்கலாம். இதனால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ
போன்ற நோய்கள் ஏற்படலாம்.
எப்போதும்
பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துங்கள். உங்கள் குடிநீர் மாசுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், தண்ணீரை நன்கு கொதிக்கவைத்துப் பயன்படுத்துங்கள். உள்ளூர் அதிகாரிகள் பரிந்துரைக்கும் நம்பகமான சுத்திகரிப்பு முறையைப் பின்பற்றுங்கள். குடிநீரைச் சுத்தமான, மூடிய பாத்திரங்களில் சேமியுங்கள்.
சாப்பிடுவதற்கு
முன்பும், கழிப்பறையைப்
பயன்படுத்திய பிறகும் சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள். பழங்கள், காய்கறிகளைப் பாதுகாப்பான தண்ணீரில் நன்கு கழுவுங்கள். புதிதாகச் சமைத்த, நன்கு வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். பச்சையாகவோ அரைகுறையாக வேகவைத்த இறைச்சி,
மீன் வகைகள், முட்டைகள், காய்ச்சப்படாத பால் மற்றும் வெள்ளநீரில் நனைந்த உணவுகளைத் தவிருங்கள்.
மழைநீர்
சொட்டும் மாலை நேரங்களில் சூடான தெருவோர உணவுகளைச் சாப்பிடுவது நம்மில் பலருக்குப் பிடித்தமான ஒன்று என்பது உண்மைதான். ஆனாலும், சுவையைவிட உடல்நலத்திற்கே எப்போதும் முதலிடம் கொடுங்கள்.
வயிற்றுப்போக்கு
அல்லது வாந்தி ஏற்பட்டால், உடலில் இழந்த நீரையும் உப்புச் சத்துகளையும் ஈடுசெய்ய, WHO-வினால் பரிந்துரைக்கப்பட்ட
ORS
கரைசலைப் பருகலாம். தொடர்ந்து வாந்தி, மலத்தில் இரத்தம் அல்லது நீர்ச்சத்து இழப்பின் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
வெள்ளநீரில் மறைந்திருக்கும்
ஆபத்துகளை
அலட்சியப்படுத்தாதீர்கள்!
மழைக்காலத்தில்
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான நோய் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ்.
பாதிக்கப்பட்ட
எலிகள் மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் கலந்த வெள்ளநீரில் இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். தோலில் உள்ள சிறிய காயங்கள், சிராய்ப்புகள் அல்லது பாதிக்கப்பட்ட தோல் வழியாக இவை உடலுக்குள் நுழையலாம். முடிந்தவரை தேங்கிய மழைநீரில் நடப்பதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழலில், நீர் புகாத காலணிகளை அணிவதன் மூலமும் அல்லது காயங்களை
நீர் புகாத கட்டுகளால் மூடுவதன் மூலமும் அல்லது வெள்ளநீர் பட்ட இடங்களைச் சோப்பும்,
சுத்தமான தண்ணீரும் கொண்டு நன்கு கழுவுவதன் மூலமும் பாதுகாப்பாக இருக்கலாம்.
இத்தகைய
தண்ணீரில் நடந்த பிறகு காய்ச்சல், கடுமையான தசைவலி, தலைவலி, கண்கள் சிவத்தல் அல்லது வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். அறிகுறிகள் தீவிரமடையும் வரை காத்திருக்காதீர்கள். அதே சமயம், மருத்துவரின் ஆலோசனையின்றி நோய் வராமல் தடுப்பதற்காக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையாகச் சிகிச்சை பெறுவது தீவிரப் பாதிப்புகளைத் தடுக்க உதவும்.
(தொடரும்)