வான் பொய்த்தால் உலக வாழ்வு எங்ஙனம் சீர்கெடுமோ, அங்ஙனமே கல்வி வளம் குன்றினால், ஒரு சமூகத்தின் எதிர்காலக் கட்டமைப்பும், அறிவுசார் வளர்ச்சியும் அடியோடு தகர்ந்துவிடும்.
தொன்மைச்
சிறப்பும், அறிவுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ்நாட்டில், அதன் உயர்கல்வித்துறை இன்று சந்தித்து வரும் பெருஞ்சிக்கல் முன்னெப்போதும் இல்லாத ஒரு கவலைக்கிடமான நிலையை எட்டியிருக்கிறது. பாகன் இல்லாத யானை கட்டுப்பாடற்றுத் தவிப்பதைப் போலவும், புயல் நடுவே மாலுமி இல்லாத கப்பல் திசையறியாது தத்தளிப்பதைப் போலவும், தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் தலைமையின்றித் தவித்து வருகின்றன.
சென்னைப்
பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில அரசின் முதன்மையான 14 அரசுப் பல்கலைக்கழகங்கள் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் (Vice-Chancellors) இல்லாமலும், முறைப்படி அமைக்கப்பட்ட ‘சிண்டிகேட்’ ஆளுகைக்
குழுக்கள் இல்லாமலும் முடங்கிக்கிடக்கின்றன என்ற கசப்பான எதார்த்தம் நம்மை உலுக்கியெடுக்கிறது.
இச்சிக்கல்
தொடர்பாக அண்மையில் வழக்கொன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மற்றும் தலைமை அமர்வு, “மூன்று, நான்கு ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் இன்றிப் பல்கலைக்கழகங்கள் பொறுப்புக் குழுக்களாலும், பொறுப்புப் பதிவாளர்களாலும் நிர்வகிக்கப்படுவது உயர் கல்வியின் தரத்திற்கு எவ்வகையிலும் ஆரோக்கியமானதல்ல” என
மிகக் கடுமையான கண்டனத்தையும் கவலையையும் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின்
உயர்கல்வித் துறைச் செயலாளர் இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் தலைசிறந்த அறிவாலயங்கள் இத்தகைய நிர்வாக முடக்கத்தைச் சந்தித்திருப்பது, சமூக-அரசியல் அரங்கில் உடனடியாக விவாதிக்கப்படவேண்டிய தலையாய விவகாரமாகும்.
ஒரு
தனிமனிதனின் சிந்தனை ஆற்றலைச் செப்பனிடுவதிலும், அவனது பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதிலும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் மறுமலர்ச்சியிலும் உயர்கல்வி ஆற்றிவரும் பங்கு ஈடு இணையற்றது. உயர்கல்வி என்பது வெறும் பட்டங்களை வழங்கும் ஆலையன்று; மாறாக, அது வாழ்நாள் முழுமைக்குமான அறிவையும், கூர்மையான சிந்தனையையும், பகுத்தறியும் வல்லமையையும் ஊட்டும் மாபெரும் கலைக்கூடம், கல்விமாடம்.
போட்டி
நிறைந்த நவீன உலகச் சந்தையில், உயர்தரமான பல்கலைக்கழகக் கல்வி ஒருவரின் வேலைவாய்ப்புத் தகுதியை பலமடங்கு உயர்த்துகிறது. பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் சிறப்புப் பட்டம் பெறும் பட்டதாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் வல்லவர்களாக மாறுகிறார்கள். உயர்கல்வி பெறும் ஒரு நபரின் வாழ்நாள் வருவாய் ஈட்டும் திறன், பள்ளிப் படிப்போடு நிற்பவர்களைவிடப் பெருமளவில் அதிகமாக இருக்கிறது என்பது உலகளாவிய தரவுகளின் கூற்றாகும்.
சுகாதாரம்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் உலகளாவிய சவால்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களே தீர்வுகளைக் கண்டறிகின்றன. சமூக மாற்றம், சமூக நீதி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்குத் தேவையான தலைவர்களை உருவாக்கித் தருவதும் உயர்கல்வியே!
தர்க்கச்
சிந்தனை, நேர மேலாண்மை, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஆகியவை உயர்கல்வி வளாகங்களிலேயே மாணவர்களுக்குக் கைவரப் பெறுகின்றன. இத்தகைய மகத்தான நோக்கங்களைக் கொண்ட உயர்கல்வித் துறை, தனது வழிகாட்டும் தலைமைகளை இழந்து நிற்பது என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்காலத்தின் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும்.
ஒரு
பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம், ஆராய்ச்சி வழிகாட்டுதல், பேராசிரியர்கள் நியமனம், நிதி ஒதுக்கீடு, புதிய பாடத்திட்ட உருவாக்கம் மற்றும் இணைப்புப் பெற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளின் நிர்வாகம் என அனைத்து முதன்மைச்
செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் ஆளுமையாகத் திகழ்பவர் துணை வேந்தரே! ஆனால், தற்போதைய சூழலில் ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் தமது முதன்மைப் பணிச்சுமைகளுக்கு இடையே, பல்கலைக்கழக நிர்வாகக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்று, முடிவுகளை எடுப்பது என்பது ஒருபோதும் முழுமையான கல்விச் சேவையாக மாறமுடியாது. கல்விப்புலம் சார்ந்த தொலைநோக்குப் பார்வையும், உலகளாவிய ஆராய்ச்சி அனுபவமும் கொண்ட ஒரு கல்வியாளரால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை, நிர்வாக அதிகாரிகளால் செய்ய இயலாது என்பதை அரசு உணரத் தவறிவிட்டது.
தமிழ்நாட்டில்
கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்திற்குப் பின்னணியில், மாநில அரசுக்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் (வேந்தர்) இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியும், சட்டப் போராட்டங்களுமே முதன்மைக் காரணமாகும்.
துணைவேந்தர்களைத்
தேர்வு செய்வதற்கான தேடல்குழு அமைப்பதில் தொடங்கி, பல்கலைக்கழகச் சட்டத் திருத்தங்கள் வரை இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இழுபறி காரணமாக, பல்கலைக்கழகங்களின் தலைவிதி கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.
அரசமைப்புச் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த இந்த மோதலில், இறுதியில் பலிகடா ஆக்கப்படுவது நமது ஏழை, எளிய மாணவர்களும் உயர்கல்வியின் தரம் மட்டுமே!
மாநிலச்
சட்டம், ஆளுநரின் அதிகாரங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டல்கள் ஆகியவற்றிற்கு இடையே ஒரு சுமூகமான உடன்பாட்டைக் காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், உயர்கல்வி அமைப்பையே சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மேலும்,
பல்கலைக்கழகங்களில் நிரந்தரத் தலைமை இல்லாததன் விளைவுகள் மிகவும் கடுமையானவை. குறிப்பாக, உலக மற்றும் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிதிகளைப் பெறுவதற்கு நிரந்தரத் துணைவேந்தரின் வழிகாட்டுதலும், நிர்வாகக் குழுக்களின் ஒப்புதலும் அவசியமாகும். இத்தடை காரணமாகப் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பணிகள்
முடங்கிக்கிடக்கின்றன.
துணைவேந்தர்கள் இல்லாததால் முறைப்படியான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமல், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது முனைவர் பட்டங்களையும், பட்டச் சான்றிதழ்களையும் பெறுவதில் பெரும் இன்னல்களைச் சந்திக்கின்றனர். இது அவர்களின் வெளிநாட்டு மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கிறது. அவ்வாறே, தேசியத் தரவரிசைக் கட்டமைப்பில் முன்னணியில் இருந்த தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், தலைமையின்மை மற்றும் போதிய பேராசிரியர்கள் நியமனமின்மை காரணமாகத் தங்களது தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. எல்லாப் பல்கலைக்கழகங்களும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளைத் தங்களின் கீழ் கொண்டுள்ளன. இக்கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், தேர்வுகள், மற்றும் அங்கீகாரங்களை அளிப்பதில் பெரும் குழப்பங்கள் நிலவுகின்றன.
‘14 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி இயங்குவது ஏன்?’ என்றும், ‘இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?’ என்றும் உயர்கல்வித் துறைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காலத்தின் எதிரொலி.
மாநில
அரசும், ஆளுநர் அலுவலகமும் சட்டப்பூர்வமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த பார்வையின் அடிப்படையில் உடனடியாகப் பேச்சுவார்த்த நடத்தி, துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைத்து, நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும். உலக அளவில் மதிப்புமிக்க, நேர்மையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தகுதி வாய்ந்த கல்வியாளர்களை மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கவேண்டும். காலியாக உள்ள அனைத்துச் சிண்டிகேட் மற்றும் செனட் பதவிகளையும் உடனடியாக நிரப்பி, சனநாயக ரீதியிலான பல்கலைக்கழக ஆளுகையை உறுதி செய்ய வேண்டும்.
இறுதியாக,
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’
என்று நாம் மார்தட்டிக்கொள்வது வெறும் வரலாற்றுப் பெருமையாக மட்டும் இருந்துவிடக் கூடாது; பாகன் இல்லாத யானை தானும் அழிந்து, தன்னைச் சுற்றியுள்ள நிலத்தையும் பாழ்படுத்துவது போல, தலைமை இல்லாத பல்கலைக்கழகங்கள் நமது இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழித்துவிடும்.
மாநிலத்தின்
வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் உயர்கல்வியே முதன்மையான உந்துசக்தியாகும். அரசியல் முரண்பாடுகளைத் தள்ளிவைத்து விட்டு, அரசு தகுதிவாய்ந்த நிரந்தரத் துணைவேந்தர்களை உடனடியாக நியமித்து, கல்வித் திருக்கோவில்களின் கதவுகளைப் புதுப்பொலிவோடு திறப்பதே தமிழ்நாடு அரசு சாதிக்கவேண்டிய ஆகச்சிறந்த அவசரப் பணியாகும்.
உயர்கல்வியைக்
காப்போம்; நமது எதிர்காலத் தலைமுறையின் நம்பிக்கையை மீட்டெடுப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்