news-details
கவிதை
சின்னத் தேரே... சித்திரமே...

அன்பே அமுதே அற்புதமே

கண்ணே கனியே கற்பகமே

பொன்னே பூவே பொற்குடமே

சின்னத் தேரே சித்திரமே!

பொங்கல் சுவையே போற்றுகின்றோம்.

பொங்கும் தமிழால் வாழ்த்துகின்றோம் அன்பே!

                                1

பூக்களால் செய்த நீ ஓவியமே

புன்னகை மல்லிகைப் பூச்சரமே

தேக்கினால் செய்த நீ கோபுரமே

தென்றலில் ஆடிடும் பூவனமே!

நதிகளைப் போலவே நடை பயின்றாய்

நாணல்கள் போலவே உடல் அசைந்தாய்

குயில்களைப் போலவே குரல் இசைத்தாய்

கிளிகளைப் போலவே மொழி வளர்த்தாய்!

பொன்னி நதியே போற்றுகின்றோம்.

வண்ண நிலவே வாழ்த்துகின்றோம் - அன்பே!

                                2

தோள்களில் உன்முகம் சாய்கையிலே

வேதனை ஓடிடும் பூமியிலே

மேனியில் உன்விரல் தேய்கையிலே

தேன்துளி ஊறிடும் மூளையிலே

கன்னத்தில் உன்னிதழ் முத்தமிட்டால்

உள்ளங்கள் ஊர்வலம் போய்வருதே

எண்ணத்தில் நீ வந்து வட்டமிட்டால்

இல்லங்கள் சொர்க்கமாய் மாறிடுதே

பன்னீர் மழையே போற்றுகின்றோம்

விண்மீன் சுடரே வாழ்த்துகின்றோம் - அன்பே

                                3

வளர்கையில் ஆயிரம் தடைக்கற்கள்

வருகையில் அவைகளைத் தகர்த்துவிடு!

வாழ்க்கையில் தோல்விகள் பெரும்சிக்கல்

எழுகையில் சுமைகளை விலக்கிவிடு!

சாதனை சாதனை என்பதையே

சரித்திரக் கடமையாய் நினைத்துவிடு

சோதனை வேதனை வருகையிலே

சூரியன் போலவே உழைத்துவிடு

பஞ்சுச் சிலையே போற்றுகின்றோம்

வெள்ளிச் சிமிழே வாழ்த்துகின்றோம்- அன்பே!

 

அன்புக் குழந்தைகளுக்கு,

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!