news-details
சிறப்புக்கட்டுரை
மரப்பாச்சிப் பொம்மைகள் (நவம்பர் 14 - குழந்தைகள் தின சிறப்புக் கட்டுரை)

நம் குழந்தை பருவத்தின் அழகிய நினைவுச் சின்னம் மரப்பாச்சிப் பொம்மைகள்! மரப்பாச்சிப் பொம்மைகள்  நம் தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளம். குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மையான மரப்பாச்சிப் பொம்மைகள் குழந்தைகளுக்கு எத்தீங்கும் விளைவிக்காத மருதாணி அல்லது வேப்ப மரத்தால் செதுக்கப்பட்டிருக்கும். வீடுகளில் மரப்பாச்சிப் பொம்மைகள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படுகிறது. மரப்பாச்சிப் பொம்மைகள் பொதுவில் ஆண்-பெண் என இணையோடு  காணப்படும்.

ஒரு சமூகக் கலாச்சாரத்தில் ‘நவராத்திரிக் கொலு’ முக்கியமானது. சிறுவயதில் ஒன்பது நாள்களும் கொலுவில் வழங்கப்படும் சிற்றுண்டிகளுக்காக நாம் கொலுவை வேடிக்கைப் பார்க்கச் செல்வது வழக்கமாக இருந்தது. மரப்பாச்சிப் பொம்மைகள் இல்லாத கொலுக்களே இருக்காது. பெண்களுக்குச் சீதனமாக  வழங்கப்படும் பொருள் வரிசையில் மரப்பாச்சிப் பொம்மைகள் முதலிடம் பிடிக்கும். மரப்பாச்சிப் பொம்மைகள் கள்ளமில்லாக்  குழந்தைப் பருவத்தின் குறியீடாகும். ஆனால், மரப்பாச்சிப் பொம்மை வைத்து விளையாடும் குழந்தைகளுக்கு அன்றைய காலத்தில் குழந்தைத் திருமணங்கள் நடந்தன.

1921-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குழந்தைத் திருமணங்கள் குறித்து இப்புள்ளி விவரங்களைத் தெரிவிக்கிறது. ஒரு வயதிற்குக்  கீழ்  597, 1-2 வயதிற்குள் 494, 2-3 வயதிற்குள் 1257, 3-4 வயதிற்குள் 2837, 4-8 வயதிற்குள் 6707 என ஆக மொத்தம் 11,892 குழந்தைத் திருமணங்கள் அன்று நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

குழந்தைத் திருமணம் என்பது 18 வயதிற்கு உள்பட்ட எந்த விவரமும் அறியாத குழந்தைகளுக்குக் கட்டாயமாக மணம்  செய்து வைக்கப்படுவது. மனுஸ்மிருதி ‘ஒரு தந்தை, பருவமடைவதற்கு முன் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கத் தவறினால், அவர் தன் மகளுக்கு அநீதி இழைத்ததாகக் கருதப்படுகிறார்’ என்கிறது. குழந்தையான அப்பெண் குழந்தை பெறும் அவலமும், அவளது கல்வி மறுக்கப்பட்டதும் குழந்தைத் திருமணத்தின் மறுபக்கங்கள்.

அக்காலப் பேறுகால மரணமும், இளம் விதவைகளின் அவலமும் வார்த்தைகளால் வடிக்க இயலாததாகும். இளம் விதவை என்பவள் தன் மணமகனின் முகம் அறியாதவள்; திருமணப் பந்தம் என்பதைப் புரியாதவள். ஆனால், அவளின் 10 வயதில் கணவன் இறந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் உப்பில்லாமல் உணவு உண்ண நிர்ப்பந்திக்கப்பட்டாள். எக்காரணம் கொண்டும் மறுமணம் மறுக்கப்பட்டது. கல்வி அளிக்கப்படவில்லை.

அன்றைய சமூகத்தின் குரலாக பெரியார் பேசுகிறார்: “பெண்கள் கல்வி கற்று, சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழவேண்டும். அவர்களது கனவு களுக்கும் முன்னேற்றத்திற்கும் எல்லை இருக்கக் கூடாது.”

காலங்கள் மாறியது. 19-ஆம் நூற்றாண்டில் 18 வயது நிரம்பிய பெண்களுக்குத் திருமணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. 2025, 2026-ஆம் ஆண்டின் ‘யுனிசெப்’ தரவுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் மிகவும் குறைந்து வருவதாகத் தெரியவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளன. ஐ.நா. சபை 2030-க்குள் குழந்தைத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வருவோமென சூளுரைத்துள்ளது.

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பழங்குடி மக்களின் மரபான குழந்தைத் திருமணங்கள் நாகரிகச் சமூகத்தின் முன்னுள்ள பெரும் சவாலாகும். தமிழ்நாட்டில் சில சாதிக் குழுக்களிடம் நிலவும் குழந்தைத் திருமணங்கள் சட்டத்தால் தடுக்க இயலாத நிலையில் உள்ளன. கடந்த 100 நாள்களில் 54 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. இதற்காக 70 களப்பிரிவுகள், 15 இலட்சத்திற்கும் மேலான குழந்தைத் திருமண வாய்ப்புள்ள பகுதிகளில் தொடர் ரோந்து, கண்காணிப்பு, களப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைத் திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 14,000 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது.

நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோம். நம் சமூகத்தின் ஆணிவேரான குழந்தைகளின் மாண்பைப் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குழந்தைத் திருமணம் போலவே குழந்தைத் தொழிலாளர் முறையும் பேசவேண்டிய பெரும் பொருளாகும்.

திருப்பூர், உலகத் தொழில் வரைபடத்தில் பின்னலாடைத் தொழிலால் இடம்பெற்ற நகரம். 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தொழிலாளர்களால் பின்னலாடை நிறுவனங்கள் பிதுங்கி வழியும். அரசின் கடுமையான குழந்தைத் தொழிலாளர் சட்டங்களால் இன்று இலட்சக்கணக்கான பின்னலாடைத் தொழிலாளர்களில் குழந்தைத் தொழிலாளர்கள் ஒருவரும் இல்லை. ஒரு காலத்தில் சிவகாசி தீப்பெட்டிப் பட்டாசு தொழிற்சாலைகளில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். ஆம்பூர் தோல் பதனிடும் தொழிற்சாலை களிலும் குழந்தைத் தொழிலாளர் நிலை இருந்தது. சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களில் இனிப்பு, காரம் செய்யும் தொழிற்கூடங்களுக்குச் சிறுவர்கள் குக்கிராமங்களிலிருந்து கொத்தடிமையாக அனுப்பப்பட்டார்கள் என்பது வரலாறாகும்.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடத்தப்பட்ட சிறுவர்கள் தொழிற்சாலைகளுக்கும், சிறுமிகள் பாலியல் கொடுமைக்காக விடுதிகளுக்கும் விற்கப்பட்டார்கள் என்பதும் குற்றச் சரித்திரப் பதிவுகளாகும். இன்று கடுமையான சட்டங்களால் குழந்தைத் தொழிலாளர்முறை மெல்ல அழிக்கப்பட்டுவிட்டது. 2025-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிடுவோம் என்ற ஐ.நா.-வின் சத்தியம் உலகளவில் நிறைவேறவில்லை.

2023-ஆம் ஆண்டின் ஐ.நா. புள்ளி விவரங்களின்படி, ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையால் ஐந்து குழந்தைகளில் ஒருவர் குழந்தைத் தொழிலாளியாக மாறியுள்ளனர். அவர்களுக்கு உரிய கல்வி, உடல்நலன் பேணுதல், வாழ்வுரிமை ஆகியவை மறுக்கப்படுகின்றன. இவர்கள் சுரங்கத் தொழிலிலும், முறைசாரா தொழிற்பணிகளிலும், கட்டுமானப் பணிகளிலும் உட்படுத்தப்படுகிறார்கள். சில அதிகாரப்பூர்வத் தகவல்கள் இவர்களுக்குப் பள்ளி செல்ல வீட்டருகில் பள்ளிகள் இல்லை; நீண்ட தொலைவுகளில் பள்ளிக்கூடங்கள் உள்ளன; அங்குச் சென்று கல்வி கற்க இவர்களது பொருளாதார நிலை இடம் தரவில்லை என்கின்றன. இதனாலும் இவர்கள் குழந்தைத் தொழிலாளராக மாறும் சமூகக் கொடுமை நிகழ்கிறது.

உலக வங்கியின் பொருளாதார அறிக்கையில், 1960-2003-ஆம் ஆண்டிற்குள் 25 விழுக்காடாக இருந்த குழந்தைத் தொழிலாளர் நிலை, 10 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்கிறது. ஐ.எல்.ஓ.  மற்றும் யுனிசெப் ஆகிய அமைப்புகள், 2013-ஆம் ஆண்டில் உலகளவில் 5-17 வயதிற்குள் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக அறிவித்தன.

2026-ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 138 மில்லியனாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய தகவலாகும். உலக அளவில் 18 வயதிற்குக் குறைந்த 2400 மில்லியன் குழந்தைகள் வாழ்கிறார்கள். அவர்களில் 17 பேரில் ஒருவர் குழந்தைத் தொழிலாளியாக வாழ்கிறார். உலக சராசரியைவிட 4%  அதிகமாக 21% பேர் போர் நடக்கும் நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளார்கள்.

குழந்தைகளின் மாண்பு குறித்த உலகளாவிய பிரகடனங்கள், கண்டங்களை, தேசங்களை ஒரு குடையில் இணைக்கின்றன. உலகளாவிய உடன்படிக்கை, 18 வயதிற்குட்பட்ட எவரையும் இராணுவத்தில் சேர்ப்பதையும், போர்களில் ஈடுபடுத்துவதையும் தடை செய்கிறது. குழந்தைகள் விற்பனை, விபசாரம், குழந்தைகளை ஆபாசப் படங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகள் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும். குழந்தைகள் மீதான உடல் ரீதியான தண்டனைகள் தவிர்க்கப்படவேண்டும். குழந்தைகள் தங்கள் மீதான உரிமை மீறலை ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் புகாராக வழங்க குழந்தைகளுக்குத் தனி உரிமை வழங்குகிறது.

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கலில் ஜிப்ரான் குழந்தைகள் குறித்து இவ்வாறு  கூறுவார்:

“நீங்கள் குழந்தைகளைப் போல ஆக முயலுங்கள்; அவர்களை உங்களைப் போல ஆக்க முயலாதீர்கள்” என்பார்.  ஆம், குழந்தைகளின் உலகம் தனி உலகம். அதில் அவர்கள் குழந்தைகளாகவே வாழ்வது அவர்களது தனியுரிமையாகும்.

குழந்தைகளின் கண்ணியம் காப்போம். குழந்தைகளின் தனி  உரிமையைப் பேணுவதே நாம் பெற்ற பெரும் பொறுப்பாகும்.