அனைவரையும் இணைக்கும் தொலைத் தொடர்புச் சாதனங்களின் பெருக்கம், அசுர வேகத்தில் நடக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் மற்றும் பொருளாதார அதிகாரம்மீது குவிக்கப்படுகிற கவனம் இவைதான் இன்றைய உலகச் சூழலாக உள்ளது. இத்தகைய சூழலில், மனிதகுலம் ஒரு பெரிய முரண்பாட்டை எதிர்கொள்வதைக் காணமுடிகிறது. ஒருபுறம், ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்றிணைக்க இதுவரை இல்லாத அளவுக்கு நம்மிடம் பல்வேறு கருவிகள் பெருகி வருகின்றன; மற்றொருபுறம், மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் திட்டமிட்டு உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றனர்.
இந்த
வளர்ந்து வரும் ‘அலட்சியக் கலாச்சாரத்தை’ எதிர்கொள்ளும்
நோக்கத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ், 2017-ஆம் ஆண்டு உலக ஏழைகள் தினத்தை ஏற்படுத்தினார். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கிறித்தவச் சமூகங்கள், தேவையிலிருப்பவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள சாட்சிகளாக மாறவேண்டும் என்கிற நோக்கில் இது தொடங்கப்பட்டது. 2026, நவம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை (கிறிஸ்து அரசரின் பெருவிழாவிற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை) திரு அவை 10-ஆவது உலக ஏழைகள் தினத்தைக் கடைப்பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிற வேளையில், திருத்தந்தை லியோ, அழுத்தமான மற்றும் உள்ளத்தை உலுக்கக்கூடிய ஒரு சவாலானதுமான செய்தியை வழங்கியுள்ளார்.
திருவிவிலியம்,
பாரம்பரிய இறையியல் மற்றும் நவீனச் சமூகச் சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கும் பரவலாக நிலவும் சமூக அநீதியை எதிர்த்து நிற்கவும், இன்றைய டிஜிட்டல் உலகில் திட்டமிட்டு, ஏழைகளை ஓரங்கட்டும் நவீன முறைகளை அகற்றி, துன்பப்படுகிறவர்களுக்கு உண்மையான அடைக்கலமாக மாறவும் உலகிற்குத் திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.
காலங்களைக் கடந்த
ஓர்
அழுகுரல்:
திருப்பாடல்
14-இன்
பின்னணி
10-ஆம்
ஆண்டு உலக ஏழைகள் தினத்திற்கான தனது செய்தியைத் திருத்தந்தை லியோ அவர்கள் கடந்த 2026, ஜூன் 13-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இது ஏழைகளின் நலனில் சிறப்பான அக்கறை கொண்ட பாதுகாவலராக அதிகம் அறியப்படும் புனித பதுவை அந்தோணியாரின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பாடல் 14:6-இல் காணப்படும் பின்வரும் திருவிவிலிய வரிகளின் அடித்தளத்தில் திருத்தந்தையுடைய செய்தியின் கருப்பொருள் அமைந்துள்ளது: “ஆண்டவரே ஏழைகளுக்கு
அடைக்கலமாக
இருக்கின்றார்.”
ஏழைகளைக் குறித்து திருத்தந்தை தனது செய்தியில் பின்வருமாறு கூறுகிறார்: “இக்கால ஏழைகள் மறக்கப்பட்டவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாவும் இருக்கின்றார்கள்; அவர்கள் உணவை மட்டுமல்ல, தங்கள் குரலையும் முகத்தையும் ஒருசேர இழந்துள்ளனர்.”
திருவிவிலிய
வரலாற்றின் மிகத்துயரமான காலகட்டமாகக் கருதப்படும் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்ட சமயத்தில் திருப்பாடல் 14 எழுதப்பட்டது என்பதைத் திருத்தந்தை நினைவூட்டுகிறார். அந்த நேரத்தில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஒழுக்கக் கேடுகளால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தனர். அதனால் கடவுளின் உடனிருப்பைத் தாங்கள் முற்றிலும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர்.
இத்தகைய
சூழலில் திருப்பாடல் 14 எழுதப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இன்றும் ஒவ்வொரு தலைமுறையிடமும் நேரடியாகப் பேசுகிறது என்பதைத் திருத்தந்தை லியோ கவனிக்கத் தவறவில்லை. இத்திருப்பாடலின் தொடக்க வசனங்கள் இருவிதமான மனிதர்களை நமக்குத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. கடவுளோடும் பிறரோடும் மதிப்புமிக்க உறவில் ஞானத்தோடு வாழ்கிறவர்கள் ஒருபுறம், தங்களைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்பதுபோல் வாழ்பவர்கள் மறுபுறம். கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதுபோல மனிதன் வாழத் தொடங்கும்போது, மனித உறவுகள் சீர்குலைகின்றன. ‘கடவுள் இல்லை’ என்கிற மனநிலை ஒருவரையொருவர்
மதிக்கிற, சமமான நிலையில் மனிதர்களை நிறுத்துவதற்குப் பதிலாக, ஒருவரை மற்றொருவருக்கு மேலாக நிறுத்துகிறது. இதன் விளைவாக ஆதிக்கம், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவை உருவாகின்றன. இத்தகைய சூழலில்தான் சமூக அநீதி வளர்கிறது. இது வருந்தத்தக்க வகையில் மனிதர்களைப் பாகுபாட்டுடனும் அநீதியுடனும் நடத்துவதற்கு வழிவகுக்கின்றது.
நவீன ஓரங்கட்டல்:
ஊழல்,
நவீன
அமைப்புகள்,
நசுக்கப்படும்
அழுகுரல்
மனித
பேராசையின் அடிப்படைக் காரணங்கள் பழமையானவையாக இருந்தாலும், இன்றைய சமூக அமைப்புகள் எவ்வாறு சமூக ஏற்றத்தாழ்வுகளை இன்னும் தீவிரப்படுத்துகின்றன என்று திருத்தந்தை லியோ எடுத்துக்காட்டுகிறார். இன்று பரவலாகக் காணப்படும் ஊழலின் விளைவாக அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள்தாம். அவர்களது எண்ணிக்கை வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரலைக் கேட்காமல் செய்யும் அதிகரித்துவரும் பல்வேறு விதமான யுத்திகளைக் குறித்தே திருத்தந்தையின் 2026-ஆம் ஆண்டுக்கான செய்தி எச்சரிக்கை விடுக்கிறது. பொதுமக்களின் கருத்துகள் கணினியின் வேகத்தில் பரவும் இக்காலத்தில்தான் ஏழைகள் சமூகத்தின் பொதுக்கவனத்திலிருந்து அடிக்கடிப் புறந்தள்ளப் படுகின்றனர்.
வேகமாக
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உலக மக்களிடையேயான இடைவெளிகளைப் பெருமளவு குறைக்கிறது. எனினும், நடைமுறையில் வசதி படைத்த வெகுசிலரின் கரங்களில் அதிகாரம் குவிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மனிதர்களிடையே உண்மையான பரிவை வளர்ப்பதற்குப் பதிலாக, முன்சார்பு எண்ணங்களை அதிகப்படுத்தி, சமூக அலட்சியத்தை மேலும் ஆழப்படுத்துகின்றன. டிஜிட்டல் மற்றும் பொருளாதார வளங்கள் அதிகரிக்கும்போது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் அடிப்படை வளங்களை மட்டுமல்லாமல், தங்கள் குரலையும் அடையாளத்தையும் இழக்கின்றனர்.
திருத்தந்தை
லியோ ‘மானிட மகத்துவம்’
(Magnifica Humanitas) என்ற
தனது முதலாவது சுற்றுமடலில் ‘ஏழைகளின் நற்பண்பு’
என்று குறிப்பிடுவதைக் குறித்து ஆழமாகச் சிந்தித்தார். அதேநேரத்தில், தொழில்நுட்ப அதிகாரம் ஒருசிலரின் கைகளில் அளவுக்கு அதிகமாகக் குவிவதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். தொழில்நுட்ப அதிகாரம் ஒருசில உயர்குடியினரிடம் மட்டுமே குவிக்கப்படும்போது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படுகிற மக்களிடமிருந்து கவனம் விலகுகிறது என்று அவர் வாதிடுகிறார். சமூகப் பிளவுகளைக் குறைப்பதற்குப் பதிலாக, நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் முன்சார்பு எண்ணங்கள் பெருகவும், பாகுபாடுகளை வலுப்படுத்தவும், துன்பப்படுகிறவர்கள் மீதான சமூக அலட்சியத்தை அதிகரிக்கச் செய்யவும் முயல்கின்றன. எனவே,
இன்றைய ஏழைகள் இரட்டைப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள். தேவையான உணவை மட்டுமல்லாமல், குரல், முகம் மற்றும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இழந்தவர்கள்.
சமூக
அமைப்புகளில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், ஒதுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளிடம்
நேரடியாகத் தங்கள் அழுகுரலை எழுப்புவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இறைவன் நம்பிக்கைக்கு உரியவரும், இரக்கத்தில் நிறைந்தவருமானதால் தங்கள் வேண்டுதலை அவர் கேட்பார் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன் அவர்கள் தங்களை அவரிடம் ஒப்படைக்கின்றனர்.
ஒரு
முக்கியமான முரண்பாட்டைத் திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டுகிறார். வசதி படைத்தவர்களை விட, ஏழைகளே வாழ்க்கையில் உண்மையில் ‘எது அத்தியாவசியமானது?’ என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அத்தியாவசியமானவற்றை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். தேவையற்ற கவனச் சிதறல்களிலிருந்து விடுபட்டிருப்பதால், கடவுளே தங்களுடைய உண்மையான அடைக்கலம் என்பதை உணரவும், அவருடைய இறை - நீதியில் முழுமையான நம்பிக்கை வைக்கவும் ஏழைகள் தனித்துவமான விதத்தில் தயாராக இருக்கின்றனர்.
(தொடரும்)