இந்தியாவின் நடைமுறை அரசியலில் வெகுவாகப் பேசப்படும் ‘அடையாள அரசியல்’ பற்றி நாம் அறிவோம். அடையாளத்தை ஓர் அரசியல் யுக்தியாக முன்னெடுப்பதற்குப் பல்வகை நோக்கங்கள் உள்ளன. ஆட்சி அதிகாரம் பெற மதத்தைப் பேரடையாளமாகக் கையிலெடுத்த சங்கப் பரிவாரங்கள், இன்று பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளன. ‘இயல்பான’ அடையாளங்களையும், திணிக்கப்பட்டதால் வேறு வழியின்றி ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட’ சாதி போன்ற அடையாளங்களையும் பயன்படுத்தி ஆதாயம் பெறும் சக்திகளையும் நாம் அறிந்திருக்கிறோம்.
குறிப்பிட்ட
அடையாளத்தின் பெயரால் ஒரு குழு அல்லது ஓர் அமைப்பு சார்ந்த குடிமக்கள் ஒடுக்கப்படுகையில், சுரண்டப்படுகையில் அவ்வடையாளம் சார்ந்த மக்கள் அவ்வடையாளத்தையே கவசமாகக் கொண்டு போராடுவதில் தவறில்லை. இன்றைய மதவாத அரசியல் சூழலில் அடையாள அரசியல் பற்றியும், அடையாள அழிப்பு, அடையாள மறைப்பு அல்லது அடையாள மறுப்பின் தன்மைபற்றியெல்லாம் ‘நம் வாழ்வு’ இதழில் வெளிவந்த பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம்.
பட்டங்கள் மீதான
தீராக்
காதல்
மேலே
எழுதப்பெற்ற முன்னுரையைத் தொடர்ந்து, என்னுள் புதிதாக எழுந்த ஒரு புதுவகையான ஓர் அடையாளத் தேடல் பற்றிய ஒரு கேள்விக்கான விடையே இக்கட்டுரை. திரு அவையின் வேர்களாகிய ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் மிகவே படித்தவர்கள். இவ்வுயர் நிலையை இவர்கள் தம் பிறப்பின் அடிப்படையில் பெறுவதில்லை; இத்தகுதி இவர்களின் உழைப்பால் அல்லது அர்ப்பணத்தால், தியாகத்தால் பெற்றவை. வாழ்வின் ஆகப்பெரும் ஆண்டுகளை இப்பயணத்தில் செலவிட்டுக் கிடைத்த பேறு இது. இப்பேற்றினை நாம் ‘அழைத்தல்’
என்று அழைத்தாலும், இதன் பின்னே இருக்கின்ற உழைப்பு, அர்ப்பணம், உடல், உளரீதியான குமுறல்கள், சோதனைகள் என்பனவெல்லாம் எளிதாக உதறிவிட இயலாது.
உலக
ரீதியாக குடும்ப உறவு, துணை என்பனவெல்லாம் துறந்து குருவாகவோ, அருள்சகோதரியாகவோ வாழ்ந்திட எடுத்த முடிவு எளிதான ஒன்றாக நம் பொதுநிலையினருக்குத் தோன்றலாம். நம் மறையினர் வாழும் பகுதிகளிலெல்லாம் ஓர் ஆலயம் இருக்கும்; ஆலயம் ஒரு பங்கைச் சார்ந்ததாக இருக்க, பங்குக் குருவானவர் ஒருவர் அங்கிருப்பார். அங்கே துறவியருக்கான கன்னியர் மடம் இருக்கும். அங்கும் துறவற சபை சார்ந்த அருள்சகோதரிகள் இருப்பர். அவ்வூரில் நிறுவப்பட்டிருக்கும் பள்ளி கிறித்தவப் பள்ளியாயின் அங்கும் குருக்களும் அருள்சகோதரிகளும் இருப்பர்.
நம்மவர்கள்,
காணும் இடமெல்லாம் வெள்ளை உடை தரித்த அல்லது சீருடை தரித்த அருள்சகோதரிகள் மயமாயிருக்க, நாம் காணும் இவர்கள் பின்னால் மறைந்திருக்கும் அர்ப்பணம், தியாகம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. குடும்ப வாழ்வில் வாழும் நமக்கும் இவர்களின் வாழ்வு பெரிய மலைப்பைத் தருவதில்லை.
அண்மையில்,
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பயணித்து வரும் திருத்தந்தை லியோ அவர்களுக்கு மக்கள் அளித்துவரும் வரவேற்பைக் காணும்போது நமக்கு மலைப்பு ஏற்படுகிறது. நம்பிக்கையாளர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றனர் என்று சொல்லப்பெறும் பிரெஞ்சு தேசத்திலும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வெண்ணுடை தரித்த திருத்தந்தைக்கு மக்கள் அளித்து வரும் உற்சாகமான வரவேற்பு காட்டும் உண்மை என்ன? உலகப்படியான அதிகாரம் படைத்தவர் என்பதால் கிடைத்த வரவேற்பல்ல இது.
அதிகாரம்
மிக்க டிரம்ப் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கண்டிப்பான குரலை உயர்த்திய இந்தத் திருத்தந்தையின் வலு எது? வத்திக்கானை ஆண்டாலும், 140 கோடி கத்தோலிக்க மறையினரால் கொண்டாடப்படும் ஒரு துறவி என்பதனை மறந்திடல் கூடாது. செல்லும் இடங்களிலெல்லாம் இளைஞர் கூட்டம் கட்டுக்கடங்காது உள்ளது என்றால்... காரணம், அதிகாரமற்ற ‘அருள்’ எனும் அதிகாரம்; ‘துறவு’ எனும் அதிகாரம்!
இவர்
என்ன படித்தார்? எத்தனை பட்டங்கள் வாங்கினார்? என்ற கணக்கில் இவர் வாழ்த்தப்பெறவில்லை. மக்கள் இதயங்களில் இவர்களின் துறவுதான் மதிக்கப்படுகிறது. மக்கள் எப்போதும் இப்பெருமைக்குரிய காரணத்தை வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும், ஒரு குருவானவரை நம் மக்கள் பார்க்கும் போதெல்லாம் ‘சாமி’ என்றும், ‘Father’ என்றும் பணிவோடு
விளிக்கையில் நம் குருக்கள் எத்தனை பேர் இவ்வழைப்பின் மேன்மையை எண்ணி மலைத்திருப்பர்!
பல
மறைமாவட்டப் பங்குத்தளங்களில் இளங்குருக்களிடம் நடுவயது மிகுந்தோர் முழங்காலிட்டு ஆசிர் கேட்பதை இன்றும் பார்க்க முடிகிறது. பங்கின் மக்கள் பங்குப் பணியாளரின் அன்பை, அவரின் விசாரிப்பை மதிக்கின்றனர். கிடைக்கப் பெறாத பெருமையாகக் கருதுகின்றனர். நம் மக்களுக்கு, ஏன் நம் மறைசாரா மக்களுக்கும் நம் பங்குக்குரு ‘Father’ அல்லது ‘சாமி’தான்.
இவர் என்ன படித்தார்? இவர் தகுதி என்ன? என்பதை அறிவதும் இல்லை, அறியும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை.
‘அடையாள அரசியல் பற்றிப் பேசத் தொடங்கி, நம் குருக்களின் அருளடையாளம் பற்றி விவாதிக்கவா இக்கட்டுரை?’ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நம் குருக்கள் அல்லது துறவியருக்குத் தனித்த அடையாளம் எதுவும் தேவையில்லை. அன்றாட உலகின் இச்சைகளைத் துறந்து, மக்களோடு மக்களாய், மக்களுக்காக வாழும் இவர்களுக்கு உலகம் தரும் நிரந்தர அடையாளம் தேவையில்லை. அண்மையில் ஒரு மறைமாவட்டத்தின் பங்குத்தளம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பங்குக் குருவின் இல்லத்திற்குச் சென்றிருந்த எனக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது - அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த பெயர் பலகை. பங்குக் குருவின் பெயருக்குப் பின்னால் பத்திற்கும் மேற்பட்ட பட்டங்கள். அவர் அத்தனை பட்டங்களையும் பெற்றவர்தான் என்பது உண்மையே. ஆனால், அத்தனை பட்டங்களையும் பெயர் பலகையில் பதிப்பதன் நோக்கம் என்ன?
ஒரு
பங்குத்தளம். வழிபாட்டுக்குரிய ஓர் ஆலயம். அருகே ஓர் உயர்நிலைப் பள்ளி. பங்கின் மக்கள் பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள். இத்தனை சிறப்புகளையும் உடைய இப்பங்குத்தளத்தின் பொறுப்பாளர் என்ற பெருமையைத் திரு அவை இவருக்கு அளித்துள்ளது. இந்தப் பெருமைமிகு ‘பொறுப்பு’
எனும் அடையாளத்தைத் தாண்டி இவருக்கு மேலும் வேண்டுவது என்ன? பங்குப் பொறுப்பாளர், பங்கு மக்களின் ஆன்மிக வழிகாட்டி எனும் பெரிய பொறுப்பைத் தமதாக்குவதில் மகிழ வேண்டாமா?
முனைவர் எனும்
புதுப்பட்டம்
‘முனைவர்’ எனும் பட்டம் உழைப்பில் பெறும் பட்டமே! அதில் சந்தேகமில்லை. தேவசகாயம் எனும் தனிமனிதருக்கு அல்லது பொதுநிலையினருக்கு இப்பட்டம் பெருமை தரலாம். என் போன்றோர் இதை விரும்பலாம், தவறில்லை. அதுபோல் இப்பட்டங்களை நம் குருக்களும் துறவியரும் படித்துப் பெறுவதில் தவறில்லை. உலகில் பணியாற்றும் இவர்கள், உலக ரீதியில் தம்மைக் காட்டிக்கொள்ள, தம் ஆளுமையைப் புலப்படுத்த இப்பட்டங்கள் தேவையே. ஆனால், நம் குருக்கள், ஆயர்களுக்கான முதல் பட்டம் அல்லது ‘Father’ என்ற பட்டத்தின்
பதிலியாய் (Substitute) மாறிப் போனமைதான் வருத்தம் அளிக்கிறது.
நம்
குருகுலம் சார்ந்த குருக்கள் பலர் பெருமைக்குரிய இப்பட்டத்தைப் பெறுவதும், பெற்ற பட் டத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் சில வேளை தேவையாகக் கூட இருக்கலாம். ஆனால், இப்பட்டம் ஏற்கெனவே அருளப்பட்ட உயரிய பட்டத்தைக் காவுகொடுத்துக் காக்கப்பெறும் பதில் பட்டமாய் இருத்தல்கூடாது.
நான்
இயேசு சபையால் வளர்க்கப்பட்டவன். இயேசு சபைக் கல்லூரியில் பணியாற்றியவன். இயேசு சபை சார்ந்த அருள்பணியாளர்கள் பலர் மிகப்பெரிய கல்வியாளர்கள். அனைத்துத் துறைகளிலும் விற்பன்னர்கள். இவர்களில் பலர் ‘சேசு சபை’
(சே.ச.) என்ற பட்டத்தை அடையாளமாகத் தரித்தவர்களே அன்றி, தம் பெயருக்கு முன்போ, பின்னோ உலகு தரும் பட்டத்தைப் போடுவதில்லை. ஆனால், அதுவும் இப்போது மாறிவிட்ட நிலை. இப்போது சேசு சபைக் குருக்களின் பெயருக்கு முன் Rev. இல்லை; Fr. இல்லை;
முனைவர் (Dr.) மட்டும் கட்டாயம்
உண்டு. இவர்கள் ‘சே.ச.’ என்ற
அடையாளம் மட்டுமே உடையவர்கள்; அதுவும் இல்லையென்றால் அடையாளமே இல்லை.
இன்று
கல்வியே வணிகமயமாக்கப்பட்ட சூழமைவில், கல்வி அமைப்பு தரும் பட்டங்களுக்கு இருக்கும் மதிப்பு என்ன?
இந்தியாவில்
கல்வியைச் சமத்துவமயமாக்க முயன்ற நம் திரு அவை, இவ்வணிகத்தின் பிரிக்க இயலாத ஓர் அங்கமாகிவிட்ட நம் கல்விப்பணி, தனித்துவத்தைக் காக்கத் தொடர் முயற்சியில் ஈடுபடுவோம்! நாம் நமது அடையாளத்தைச் சமரசமின்றி முன்னெடுப்போம்.