news
கவிதை
இன்று தூய தெரேசா நமக்குக் கற்பிக்கும் அன்பின் மொழி!

சிறு மலரே! சின்னஞ்சிறு மலரே!

எளிய தியாகம் அன்பான சிரிப்பு!

பிறருக்குச் செய்யும் உதவிகளே

இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்

என மொழிந்த தூய கன்னிகையே!

 

எளியவையாயினும் அவை இறைவனுக்கு

ஏற்றவையே எனக் கண்டவரே!

மிஷனரிகள், பூமாலை நெய்யும் தொழிலாளர்கள்,

நோயாளிகளின்

காவல் இளவரசியே! அன்பின் பாதையில் நடந்து

ஆருயிர் வாழ்வினை ஆண்டவருக்கு அர்ப்பணித்து

சின்னஞ்சிறு சேவைகளால் உலகையே மகிழ்வித்த

உத்தமத் தாயே!

 

துன்பம் நிறைந்த உலகில் ஒரு கருணைக் கடலாகத்

திகழ்ந்த ரோஜா மலரே!

மற்றவரை நேசித்துத் தன்னை மறந்து

சேவைகள் பல புரிந்து சாதனை படைத்தாய்!

 

புனித பூவே! பரிசுத்த நறுமணமே

சிறுபிள்ளை சிரிப்பில் சிகரம் தொட்ட தாயே!

மலர் மழை பொழியும் உன் பிரார்த்தனை - அதில்

மனிதரின் கடின உள்ளமும் மாறிடுமே!

 

கொடிய நோய் கண்டபோதும்

இறைவன் மேல்

உமக்கு இருந்த

பாசப்பிணைப்பு

தீர்ந்துபோய் விடவில்லையே!

 

ஆன்மாக்களை மீட்டெடுத்த

எங்கள் அற்புதமே!

உலகிற்கு எல்லாம் உன்னதத் தாயாம்

அன்னை மரியாவின் ஆசிதனைப் பெற்று

பூரணக் குணமடைந்தவரே!

 

இன்று எங்களுக்கு

இறைவனிடம் பரிந்துபேசி

இம்மையில் நாங்கள் நலமாய் வாழ

வரமளியும்  எங்களின் தூய தெரேசாவே!

 

மன்றாடும் எங்களுக்காக மனமிரங்கி

வேண்டிக்கொள்ளும்

எங்கள் ரோஜா மலரே !

 

news
கவிதை
பொறுத்தார் இவ்வுலகை ஆள்கின்றார்!

தனை அகழும் நிலம் பொறுத்திட

தணியாத் தாகம் தீர நீர் உறைவையாகிறது!

தன்னைக் கூர்மையாக்கிடவே பென்சில்

தன்னிகரா ஓவியம் கருவாகிறது!

 

தன்னை அழித்து மெழுகுதிரி

தரணியில் தீபமாய் விழுகின்றது!

தன் சுவாசம் அடக்கிய கக்கூன்

தன்னிகராப் பல வண்ணப் பூச்சி ஆகிறது!

 

மடியாத விதை விருட்சம் ஆவதில்லை

மன்னியாத இதயம் மகிழ்வதில்லை

பண்படா நிலம் பலன் தருவதில்லை

பண்ணில்லாப் பாடல்  இனிமை இல்லை!

 

வெட்டியபோது இளநீர் சுவைத்தது

தோலுரித்த போது பழம் சுவைத்தது

உலர்ந்தபோது பூ உதிர்ந்து காய் தோன்றியது

வேனிற் முடிந்தபோது கார் வந்தது!

 

திரிபுகையும் போது நறுமணம் கமழ்ந்தது

தன் வாழ்வினைப் பிறர் பொருட்டு இழந்தபோது

இவ்வுலகில் வரலாறு படைத்து

மறுவாழ்விலும் இவ்வுலகை ஆள்கின்றனர்! 

பொறுத்தார்

இவ்வுலகை ஆள்கின்றார்!

news
கவிதை
அருள்வாழ்வில் அக அமைதி!

தன்னை மறந்த வாழ்வு வாழ்ந்தாள்!

தியாகத்தின் சின்னமாக ஒளிர்ந்தாள்

மலராய்ப் பூத்து மணம் வீசினாள்!

மனித வாழ்வுக்கு அழகு சேர்த்தாள்!

 

அன்பு என்றால் அவளின் நினைவு!

அமைதி என்றால் அவளின் குரல்!

அருள் என்றால் அவளின் முகம்!

கருணை  என்றால் அவளின் கொடை!

 

கடவுளை மட்டும் நேசித்தாள்

ஊமை  ஆயினும் உள்ளத்தில் பேசுவாள்!

அமைதியின் அவதாரம் அவளே!

உலகின் துன்பத்தை உற்றுநோக்கி!

உலகுக்குத் தன்னை அர்ப்பணித்தாள்!

 

அகவை இருபத்தி நான்கில் உலகைப்  பிரிந்தாள்!

வானில் சென்று  புனிதம் பெற்றாள்!

லிஸ்யூ  நகரின் தேவதை அவளே!

அவளின் நூற்றாண்டைக் கொண்டாடுவோம்

நம் மண்ணிலே!

மனிதம் காப்போம் என்றென்றுமே!…

news
கவிதை
கவிதைச் சாரல்கள்

அப்போதும்

இப்போதும்

ஏன் எப்போதுமே

தெய்வ தரிசனம்

எல்லாம்

தெய்வங்கள் இல்லாக்

கோவில்களில்

மட்டுமே!

தெய்வங்களோ

வீதிகள்தோறும்

சாமானியர்களோடு

சரிசமமாய்

வீதி உலாவில்!

 

விதி விலக்குகள்

விளங்காததுதான்

விவரங்கள்

தெரியும் வரை!

 

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

பொறாமைப்பட்டால்

பொலிவிழந்து

போவாய்!

ஆணவம் கொண்டால்

அழகு இழப்பாய்!

சீறிப்பாய்ந்தால்

சீர்மை இழப்பாய்!

புறங்கூறித் திரிந்தால் 

அகம் இழப்பாய்!

திமிறினால்

திறன் இழப்பாய்!

அன்பு பொலிவாக்கும்!

தாழ்ச்சி

அழகு சேர்க்கும்!

சாந்தம் சாந்தி தரும்!

பணிவு உயர்வு தரும்!

 

நேரங்கள் எல்லாம்

எதிர்காலத்தையும்

நினைவுகள்

எல்லாம்

கடந்த

காலத்தையுமே

சுற்றிக்

கொண்டிருக்க

நிகழ்காலத்தைப்

பற்றி

நினைக்க

நேரத்திற்கே நேரமில்லை!

 

பலவீனம்

பழி வாங்கும்!

வலிமை

மன்னிக்கும்!

அறிவு

பொருட்படுத்தாது!

பிறரது

குறைகளையும்

உதாசீனங்களையும்!

 

தெய்வங்கள்கூட

அவ்வப்போது

தவறிவிடுகின்றன!

பக்தர்களின்

தீவிர அன்புக்குப்

பதில் தரத் தெரியாமல்

திணறி

விடுகின்றன!

 

விமர்சனங்களைக் கல்லாக்கி

மனத்தைக் கடலாக்கும்

நுட்பம் அறிந்தோர்

வாழ்க்கைப் பெருங்கடலின் 

சுனாமியிலும்

பெருஞ்சூழலிலும்

சிக்கிச்  சுழல்வதில்லை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்

படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்

படுவதில்லை!

news
கவிதை
காமநாயக்கன்பட்டி புதுமையின் தாய்!

கோவில்பட்டி கடந்து துறையூர் வந்ததும்

தூரத்தில் அழகிய இரு கோபுரங்கள்;

இயேசுவைக் காணச் சென்ற அரசர்களுக்கு

வழிகாட்டிய வால்நட்சத்திரம்போல் விலாசங்கள்!

 

ஆலயத்தில் நுழைந்தபோது உயரத்தில்

பரலோக அன்னை அரசியாக அரியணையில்;

செபமாலைத் தோட்டத்தின் வாயிலில்

விண்ணக மண்ணக அரசியே வாழ்க!

 

ஆழ்ந்து செபம் செய்கையில் என்னை

ஈன்றவள் சொல்லிய வார்த்தை ஞாபகம்

உன் கையில் உள்ள இரத்தம் வழியும்

மருக்கள் சரியாகக் கும்பிடு;

சேவை செய்துவிட்டு வா!”

 

வற்றாத தீர்த்தக்கிணற்றில் தீர்த்தமெடுத்து

மூன்று முறை ஊற்றிக்கொண்டேன் தலையில்;

இருகைகூப்பி முகம் குப்புற விழுந்தேன் தரையில்!

 

வேண்டுதல் நிறைவேற்றிய சில நாள்களில்

கைகளில் மாற்றம்;

இரத்தம் வழிந்த மருக்களின் சீற்றம் 

சில்லாக உடைந்து காணாமல்போனது!

 

நலமடைந்த கைகளால் பரலோக அன்னைக்கு

என்ன காணிக்கைக் கொடுத்தால் தகும்?

அன்னையின் தேரினை தரையில் படாமல்

என் கைகளின் மேல் உருட்டி வந்தாலும் தகாதே!

 

தயங்கிக் கேட்ட வேண்டுதல்கள்

இப்போதெல்லாம் எனை

ஈன்றவளிடம் கேட்பதுபோல தயங்காமல் கேட்கிறேன்;

கேட்ட வரங்கள் எல்லாம் கிடைக்குது

கோடி மலர்கள் அவள் பாதம் தேடுது!

       

news
கவிதை
சுற்றுச்சூழல் காப்போம்! போதை ஒழிப்போம்!

புகையும் குப்பையும் இல்லாமல்

                புவியைக் காப்போம் தோழர்களே!

பகையாம் என்றும் காற்றுமாசு,

                புரிந்து வாழ்வோம் தோழர்களே!

சுத்த மான குடிநீரைக்

                சூடு படுத்திக் குடிப்போமே!

சுற்றுப் புறத்தைத் தூய்மையாய்

                சுறுசுறுப் புடனே வைப்போமே

கண்ட கண்ட இடங்களிலே

                குவியும் குப்பை வேண்டாமே!

அண்டி டாமல் கொசுக்களையும்

                அன்றா டம்நாம் ஒழிப்போமே!

தெரிவின் சுத்தம் மிகத்தேவை!

                தெளிந்த நீர்நிலை வேண்டாமோ?

அருகிச் செல்லும் நோய்நொடிகள்

                அழுகிற வீட்டை வைத்தாலே!

சத்தும் சுத்தமும் நிறைந்துள்ள

                சரிவிக தந்து உணவுகளை

முத்தாய் உண்டு முழுநலத்தை

                முறையாய் உயர்த்தி வாழ்வீரே!

சேறும் சகதியும் சேராமல்

                சிறக்கும் சுற்றுச் சூழல்கள்

மாறும் போதே நல்வாழ்வு

                மலரும் என்பதை மறவமே!

போதை இல்லா உலகத்தைப்

                புகலிடம் ஆக்கி மகிழ்வீரே!

பாதை மாறும் போக்கெல்லாம்

                படர வேண்டாம் நண்பர்களே!

உடலைக் கெடுக்கும் குடிப்பழக்கம்

                உறவைக் கெடுக்கும் போதைவழி!

விடமாய் மாறி உயிரழிக்கும்

                விட்டிடு கொடிய இப்பழக்கம்!

மனத்தின் அமைதி தனையிழந்து

                மாண்பைக் கெடுக்கும்

                போதைவழி

மனிதன் என்ற நிலைமாற்றி

                மழுங்க டிக்கும் குடிப்பழக்கம்!

போதை மருந்து ஊசிகளும்

                பொசுக்கிப் போடும்

                உடல்நலத்தை!

வேதனை தந்திடும் போதையினை

                வெறுத்து ஒழிக்க நீமுயலு!

இயற்கைப் பேணி இன்புறுவீர்

                இனிய உடல்நலம் காத்திடுவீர்!

அயர்வில் லாத நல்வாழ்வை     

                அளிக்கும் போதே விட்டிடுவீர்!

இறைவன் தந்தை இவ்வுலகை

                இனிமேல் சேர வைப்போமே!

நிறைவாய் வாழ எந்நாளும்

                நல்ல சூழல் காப்போமே!