‘நம் வாழ்வின்’இரங்கற்பா
என்றும்
நினைவுகூரப்படும்!
ஆக்கவும்
வல்லது, அழிக்கவும் வல்லது
எழுத்தும்
எழுத்தன் கை ஆணியும்!
ஆயிரம்பேர்
ஆயுதம் ஏந்திவரும் போர்
ஆணையால்
நிறுத்தவும்
ஆனையாய்
உறுத்தவும்
அதிகாரம்
எடுக்கும் ‘ஆயுதம்’ பேனா!
அரசும்
ஆட்சியரும் அறம் காத்திடவே!
ஆயிரம்
கருத்துகள் ஆங்காங்கே கருக்குகள்
ஆதரிப்போ
விமர்சனமோ
அறிவுரையோ
ஆதங்கமோ
ஆக்கவும்
வல்லது, அழிக்கவும் வல்லது
உறைவெளி
வந்த ‘கூர்முனைப்’ பேனா!
பஞ்சம்
(பஞ்சபூதம்) ஆளுது; பஞ்சம் வாழுது
நெஞ்சம்
நிமிர்ந்து உண்மை சொல்லுது
பத்திரிகையாளன்
கையில் முளைத்த
‘ஆறாம் விரலாம்’ பேனா எனும் வாள்!
இவ்வரிகளைச்
சமரசமின்றி வாழ்வாக்கியவர் காலஞ்சென்ற மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.
ஜார்ஜ். சுதந்திரக் காற்று எங்கும் உலாவந்தபோதிலும் 1965-ஆம் ஆண்டில் பீகார் முதல்வர் கே.பி. சஹாயை
விமர்சனம் செய்ததற்காக, சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளர் எனும் பெருமைக்குரியவர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினைக் காக்கும் காவல் தூண்களில் கடைசியாய்ச் சேர்ந்தது ஊடகம் அன்றோ!
கருத்தியல்
என்பது கடைச்சரக்காகி, ஊடக அறம் ஊதாரியான போதும் அறநெறி வழுவாது, ஆதிக்கம் பக்கம் சாயாது உண்மையை உரக்கக் கூறியவர்களில் முன்னோடி டி.ஜே.எஸ்.
ஜார்ஜ் அவர்கள்.
மே
7, 1928 அன்று தாமஸ் ஜேக்கப் - சாச்சியம்மா ஜேக்கப் எனும் தம்பதிக்குப் பிறந்த இவர், நீதிபதியான தன் தந்தையின் மதிப்பீடுகளை வாழ்வாக்கி, தனது 97-ஆம் வயதில் தன் கடைசி மூச்சுவரை நீதியின் பக்கமே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
சென்னை
கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று The Church light,
Eastern Economic Review, Asia Week, The
New Indian Express எனப்
பல முன்னணி நாளிதழ்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியாவில்
மிகவும் மதிக்கப்படும் பத்திரிகையாளர்களில் ஒருவரான டி.ஜே.எஸ்.,
ஊழல், சமூக நீதி, மத சகிப்புத்தன்மை மற்றும்
சனநாயக அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் போது அதைத் துணிவுடன் எதிர்ப்பவராகவும் விமர்சிப்பவராகவும் இருந்தது ஒரு பத்திரிகையாளரின் நேர்மையையும் துணிவையும் எடுத்துக்காட்டியது.
“உலக அரசியலை உன்னிப்பாக அறிந்த இவர், தன் வாசகர்களைச் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் செயல்பாடுகளில் ஈடுபடவும் தூண்டியவர்” என
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கூற்றில் பேருண்மை பொதிந்திருக்கிறது. “அவரது படைப்புகளும் புத்தகங்களும் இந்திய மண்ணின் மறக்கமுடியாத கருவூலம்”
எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழ்ந்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்திய மற்றும் உலகளாவிய ஊடக நிலப்பரப்பில் டி.ஜே.எஸ்.
தந்துள்ள பங்களிப்பு கேரள மாநிலத்தின் பெருமைமிகு அடையாளம்”
எனப் புகழ்ந்திருக்கிறார். இத்தகைய சிறப்புக்குரியவருக்கு இந்திய அரசு 2011-இல் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கிப் பாராட்டியது தகுமே.
“ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் தங்களை எவரும் விமர்சிக்கக்கூடாது என்று எண்ணும்போது, நாடு இருளுக்குள் செல்வதைத் தவிர்க்க முடியாது”
எனும் சமரசமற்ற சமூகக் குரலுக்குச் சொந்தக்காரரான டி.ஜே.எஸ். ஜார்ஜ்
எனும் கூர்மையான பேனாவின் ‘மை’ தீர்ந்துவிட்டதே தவிர, இதுவரை இப்பேனா எழுதிய வார்த்தைகளின் வீரியம் குறையவே குறையாது! டி.ஜே.எஸ்.
ஜார்ஜின் ஆன்மா இறைவனில் அமைதிபெற ‘நம் வாழ்வு’ வார இதழ் தன் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறது.
முதன்மை ஆசிரியர்