news
சிறப்புக்கட்டுரை
வகுப்பறைக்குச் சிறகுகள் தருவதா? சுமை ஏற்றுவதா?

காலை மணி அடித்தது. ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் எழுந்து நின்றார்கள்.

வணக்கம், ஆசிரியரே!”

அவர் புன்னகையுடன் அவர்களைப் பார்த்தார். மேசையின்மீது பாடப்புத்தகம் இருந்தது. அருகில் கைப்பேசி இருந்தது. கணினியில் இன்னும் சில பதிவுகள் காத்திருந்தன. முடிக்க வேண்டிய படிவங்கள் இருந்தன. பதிவேற்ற வேண்டிய தரவுகள் இருந்தன. இன்னும் சில நிர்வாகப் பணிகள் நினைவுக்கு வந்தன.

சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தார். ஆனால், அவரது மனம் ஏற்கெனவே பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையானது ஓர் ஆசிரியர். ஆனால், அந்த நிமிடத்தில் ஆசிரியருக்குள் இருந்தது ஒரு கேள்வி: ‘நான் இன்று இவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேனா? அல்லது இன்னும் சில மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவுகளை முடிக்கப் போகிறேனா?’

ஆசிரியர் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரும்பலகை. கையில் சுண்ணக்கட்டி, முன்னால் மாணவர்கள், மனத்தில் ஒரு பாடம். ஆனால், இன்றைய ஆசிரியரின் நாள் அதோடு முடிவதில்லை. கைப்பேசி செயலிகளில் அன்றாடப் பதிவுகள், மாணவர்களின் பல்வேறு தரவுகள், திட்டங்களுக்கான கணக்குகள், படிவங்கள், அறிக்கைகள், நிர்வாகப் பணிகள்... ஒரு பணியை முடித்தவுடன் மற்றொரு பணி காத்திருக்கிறதுதொழில்நுட்பம் கல்வியை எளிதாக்க வந்தது. ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடும் ஆசிரியருக்கு மாணவர்களோடு பேசுவதற்கே நேரமில்லாமல் போகிறது. ஒரு மாணவனின் மதிப்பெண் பதிவாகிறது. ஆனால், அவனுடைய மனநிலை பதிவாகிறதா? ஒரு மாணவியின் வருகை பதிவாகிறது. ஆனால், அவள் ஏன் தொடர்ந்து அமைதியாக இருக்கிறாள் என்று யாராவது பதிவு செய்கிறார்களா? ஒரு பள்ளியின் தரவுகள் முழுமையாக இருக்கலாம்; ஆனால், அந்த வகுப்பறையின் மனிதத் தன்மை முழுமையாக இருக்கிறதா?

ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் கற்பிப்பவர் அல்லர். ஒரு மாணவன் தோல்வியடைந்தபோது, ‘மீண்டும் முயற்சி செய்என்று சொல்பவர். ஒரு மாணவி தன்னம்பிக்கையை இழந்தபோது, ‘உன்னால் முடியும்என்று நம்பிக்கை கொடுப்பவர். வீட்டில் சொல்ல முடியாத ஒரு பிரச்சினையை, பள்ளியில் ஆசிரியரிடம் வந்து பகிரும் குழந்தையின் மௌனத்தைக் கேட்பவர். அதனால்தான் கல்வி என்பது வெறும் தகவல்களை வழங்குவது அல்ல; ஒரு மனிதனை உருவாக்குவது. அதற்கு நேரம் தேவை, பொறுமை தேவை, உறவு தேவை, அதற்கும் மேலாக, ஆசிரியரின் மன அமைதி தேவை.

ஆனால், இன்று அந்த மன அமைதியும் பல நேரங்களில் கேள்விக்குறியாகிறது. பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம்; மறு வரையறை மற்றும் பணியிட மாற்றங்கள் குறித்த குழப்பம்; பல ஆண்டுகளாக வகுப்பறையில் அனுபவத்தோடு பணியாற்றிய ஆசிரியர்களின் தகுதி குறித்த கேள்விகள். ஒரே தேர்வு அல்லது ஒரு நிர்வாக முடிவு, பல ஆண்டுகளின் அனுபவத்தை மீண்டும் அளவிடத் தொடங்கும்போது, அது ஒரு பணியாளரின் வாழ்க்கையை மட்டுமல்ல; அவரது சுயமரியாதையையும் தொடுகிறது.

பல ஆண்டுகளாக மாணவர்களை உருவாக்கிய ஒருவர், ‘நாளை நான் இதே வகுப்பறையில் இருப்பேனா?’ என்று எண்ணிக்கொண்டே பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவருடைய மனம் முழுமையாக மாணவர்களிடம் இருக்குமா? மற்றொரு கேள்வியும் எழுகிறது. கல்வி என்பது மொழியோடு இணைந்தது அல்லவா! ஓர் ஆசிரியர் ஒரு பாடத்தைக் கற்பிக்கும்போது, அவர் வெறும் தகவலை மாணவரிடம் கொண்டு சேர்ப்பதில்லை. அவன் அறிந்த மொழியில், அவன் புரிந்துகொள்ளும் விதத்தில், அவன் வாழும் சூழலோடு இணைத்து, அந்த அறிவை அவனுடைய அனுபவமாக மாற்றுகிறார். அதனால்தான் ஆசிரியர் என்பவர் ஒரு பாடத்தைச் சொல்லும் மனிதர் மட்டுமல்லர். அவர் ஒரு பாலம்! அறிவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு பாலம். கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு பாலம். மாணவனின் இன்றைய நிலைக்கும், அவன் நாளைய மனிதனாக மாறுவதற்கும் இடையே ஒரு பாலம். அந்தப் பாலத்தின்மீது நாம் சுமைகளை மட்டுமே ஏற்றிக்கொண்டே சென்றால், அது எவ்வளவு நாள் தாங்கும்?

ஓர் ஆசிரியரின் கைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அந்தக் கைகள் தேர்வுத் தாள்களைத் திருத்துகின்றன; பாடக்குறிப்புகளை எழுதுகின்றன; மாணவனின் தவற்றைத் திருத்துகின்றன; சில நேரங்களில், அழும் குழந்தையின் தோளில் ஆறுதலாகத் தங்குகின்றன. அந்தக் கைகளில் இன்னும் எத்தனை படிவங்களை நாம் வைக்கப் போகிறோம்? எத்தனை தரவுகளை, எத்தனை அறிக்கைகளை, எத்தனை நிர்வாகச் சுமைகளை...? ஓர் ஆசிரியரின் கையில் மீண்டும் ஒரு புத்தகத்தை வைக்க வேண்டிய நேரம் இது.

ஆசிரியர் தினம் வந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? மலர் கொடுக்கிறோம், வாழ்த்து சொல்கிறோம், விருது வழங்குகிறோம். ‘ஆசிரியர்கள் நாட்டின் தூண்கள்என்று மேடைகளில் பேசுகிறோம். அவை எல்லாம் நல்லவையே. ஆனால், ஆசிரியரை உண்மையாக மதிப்பது என்பது ஒரு நாளில் மலர் கொடுப்பது மட்டும் அல்ல; அவருடைய பணியைப் புரிந்துகொள்வது, தேவையற்ற சுமைகளைக் குறைப்பது, வகுப்பறைக்கான நேரத்தை மீட்டுக் கொடுப்பது, அவருடைய சுயமரியாதையைப் பாதுகாப்பது. அவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் கற்பிக்கவும், மாணவர்களோடு உறவை உருவாக்கவும் இடம் கொடுப்பது. இதுதான் உண்மையான ஆசிரியர் தின வாழ்த்து.

இறுதியில், ஓர்ஆசிரியரிடம் நாம் ஒரு கேள்வி கேட்கலாம்: “நீங்கள் எதற்காக ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

ஒருவேளை அவர் இப்படிச் சொல்லலாம்: “ஒரு குழந்தையின் வாழ்க்கையில் நான் ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக.”

இந்தப் பதிலுக்குள் கல்வியின் முழு அர்த்தமும் அடங்கியிருக்கிறது. அதனால், ஆசிரியர்களிடம் நாம் கேட்கவேண்டியது, “இன்னும் என்ன செய்ய முடியும்?” என்பது மட்டுமல்ல; சில நேரங்களில், “உங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்ய நாங்கள் என்ன சுமையை உங்களிடமிருந்து இறக்க வேண்டும்?” என்றும் கேட்கவேண்டும்.

ஏனெனில், ஓர் ஆசிரியரின் மனம் சுதந்திரமாக இருக்கும்போதுதான், ஒரு மாணவனின் சிந்தனைக்கும் சிறகுகள் முளைக்கும்.

இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களுக்குப் பாராட்டு வார்த்தைகளை மட்டும் கொடுக்காமல், அவர்களின் சுமைகளைக் குறைப்போம்; அவர்களின் நேரத்தை மீட்டுத் தருவோம்; அவர்களின் சுயமரியாதையைப் பாதுகாப்போம்; அவர்களின் வகுப்பறைக்கு மீண்டும் சுதந்திரம் கொடுப்போம்.

ஆசிரியர்களின் கைகளில் சுமைகளை ஏற்றாமல்... அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் தருவோம்.

news
சிறப்புக்கட்டுரை
ஆனால்... உதடுகளின் புன்னகைக்குப் பின்னால்! (வாழ்வின் மறுபக்கம் - 2)

ஒருவரைப் பார்க்கிறோம். முகம் முழுவதும் புன்னகை. முகத்தில் புன்னகை இருந்தால், ‘அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்என்று முடிவு செய்துவிடுகிறோம். சிரித்துப் பேசினால், ‘எந்தக் கவலையும் இல்லாதவர்என்று நினைத்துவிடுகிறோம். குடும்பத்தோடு புகைப்படம் எடுத்திருந்தால், ‘அவர்களுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறதுஎன்று சொல்லிவிடுகிறோம்.

ஆனால், ஒரு முகம் ஒரு வாழ்க்கையின் முழு கதையல்ல; ஒரு புன்னகை ஒருவருடைய மகிழ்ச்சியின் முழு அளவுகோலும் அல்ல; சில நேரங்களில் உதடுகள் சிரித்துக்கொண்டிருக்கும்; ஆனால், மனம் யாருக்கும் தெரியாமல், ஆயிரம் துண்டுகளாக உடைந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் உதடுகள் சொல்வதைவிட, கண்கள் அதிகமாகப் பேசும். சில நேரங்களில் கண்கள்கூட உண்மையைச் சொல்லாது. ஏனெனில், மனிதன் தனது வலியை மறைக்கவும் கற்றுக்கொள்கிறான். குறிப்பாக, தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காக வாழ வேண்டிய கட்டாயம். எனவே, அழுவதற்கான இடத்தையும் நேரத்தையும் வாழ்க்கை அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் வரும் ஓர் அழகிய வரி:

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே     (பாடல் 142).

அடர்ந்த இருளில் தன் தனிமையின் துயரத்தை எண்ணி கண்ணீர் வடிக்கும் தலைவி, வீட்டு வாசலில் விருந்தினர் தட்டும் சத்தம் கேட்டவுடன் தன் சோகத்தையும் குறையையும் மறைத்து முகமலர்ந்து அவர்களை வரவேற்கும் இல்லறப் பண்பை இச்சங்க இலக்கியப் பாடல் நுட்பமாகப் பதிவுசெய்கிறது.

ஒரு புன்னகை ஒரு மனிதரின் மகிழ்ச்சியை மட்டுமே சொல்லாது; சில நேரங்களில் அது அவர் மறைத்திருக்கும் கண்ணீரையும் சொல்லும். சில புன்னகைகள் மகிழ்ச்சியில் பிறக்கின்றன; சில புன்னகைகள் வலியைத் தாண்டிப் பிறக்கின்றன. இவை அன்பின் வெளிப்பாடு; இன்னும் சில நேரங்களில் அது தன்னைத்தானே தாங்கிக்கொள்ளும் மன உறுதி. நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட மனிதரைத் தினமும் பார்க்கிறோம்!

கணவன் வேலை இழந்திருக்கலாம்; வீட்டுக் கடன் இருக்கலாம்; குழந்தையின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருக்கலாம்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்; உறவுகளுக்குள் புரிந்துகொள்ள முடியாத இடைவெளி இருக்கலாம். இருந்தாலும், காலையில் குழந்தைகளை எழுப்பி, அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து, ‘நீ நல்லா படி... நல்லா இருப்பே!’ என்று சொல்லிக்கொண்டே சிரிக்கும் ஒரு தாய்... அவரிடம்அம்மா, நீ மகிழ்ச்சியா இருக்கியா?’ என்று கேட்டால், ‘ஆமாம்எனக்கென்ன குறை?’ என்று சொல்லிக்கொண்டு, அடுத்த நாளை நோக்கி நடக்கிறார். அந்தஎனக்கென்ன குறை?’ என்பதற்குள் எத்தனை இரவுகளின் கண்ணீர் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

குழந்தைகள் தூங்கிய பிறகு தனியாக அழுதுவிட்டு, மறுநாள் காலை எதுவுமே நடக்காதது போலப் புன்னகையுடன் எழுந்திருக்கும் அன்னையர் எத்தனை பேர்! அவர்கள் பலவீனமானவர்கள் அல்லர்; உண்மையில், அவர்கள் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வலிமையானவர்கள். ஒரு தாய் தன் குழந்தையிடம், ‘நீ கவலைப்படாதே... அம்மா இருக்கேன்!’ என்று சொல்லும்போது, அந்த வார்த்தைகளில் குழந்தைக்கான ஆறுதல் மட்டுமல்ல, தன்னையே தாங்கிக்கொள்ளும் ஒரு தாயின் மன உறுதியும் இருக்கிறது.

ஒரு தந்தையை எடுத்துக்கொள்வோம்; வருமானம் போதவில்லை; மாதத்தின் கடைசி வாரம்; மளிகைக் கடைக்காரரிடம் பாக்கிப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது; வாங்கியப் பொருள்களுக்கு மாதத் தவணை (EMI) கட்டவேண்டியுள்ளது; வீட்டுக் கடனின் தொகை நெருக்குகிறது; மேலுமோர் எதிர்பாராத செலவு வந்து நிற்கிறது; அலுவலகத்தில் மேலதிகாரியின் அழுத்தம் வேறு... இத்தனைக்கும் நடுவில், இரவு வீட்டிற்குள் நுழையும்போது குழந்தை ஓடி வந்து, ‘அப்பா!’ என்று கட்டிப்பிடிக்கிறது. அந்தக் குழந்தையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன், தந்தை தன் கவலைகளை மறைத்துவிட்டுச் சிரிக்கிறார்.

ஐயன் வள்ளுவன் கூறும்,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் (குறள் 621)

என்ற வரிகள் இங்கே இன்னும் ஆழமான பொருளைப் பெறுகின்றன.

ஆயிரம் வலிகள் வந்தாலும், ‘நான் உடைந்து போகமாட்டேன்என்று ஒரு மனிதர் தனக்குள் எடுக்கும் தீர்க்கமான முடிவின் வெளிப்பாடுதான் அந்தப் புன்னகை. புன்னகை என்பது வலியை மறப்பதற்கான வழி அல்ல; வலியைத் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றல். அது மனத்தின் தீர்க்கமான உறுதிப்பாடு.

சிரிப்பு என்பது பெரும்பாலும் மகிழ்ச்சியின் அடையாளம் அல்ல; அது மனிதர் தன் கண்ணீரை மறைக்கக் கண்டறிந்த மிகச்சிறந்த கேடயம்\" என்பார்கள். அதனால்தான் சில புன்னகைகள் சாதாரணமானவை அல்ல; அவை போராடிப் பெற்றவை. வலி இல்லாத மனிதர் வலிமையானவர்கள் அல்லர்; வலி இருந்தும் விழாமல் நிற்பவர்களே வலிமையானவர்கள்.

வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒவ்வொரு வலியும் பலவீனத்தின் அடையாளமல்ல. சில வலிகள் அன்பின் காரணமாக மறைக்கப்படுகின்றன. அவை பல நேரங்களில் சத்தமாக வெடிப்பதில்லை; ஆனால், அமைதியாக வளர்கின்றன. கணவன்-மனைவிக்குள் பேசப்படாத வார்த்தைகள், பிள்ளைகளிடம் சொல்லப்படாத கவலைகள், பெற்றோரிடம் பகிரப்படாத தோல்விகள், சகோதரர்களுக்குள் உருவாகும் தூரங்கள், எல்லாரும் இருந்தும் அனுபவிக்கின்ற தனிமைகள்... இவையெல்லாம் வீட்டின் சுவர்களுக்குள் அமைதியாக வாழ்கின்றன. வெளியில் பார்க்கும்போது அந்தக் குடும்பம் மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம்; பண்டிகை நாளில் அனைவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுக்கலாம்; பிறந்தநாள் கொண்டாடலாம்; சமூக ஊடகத்தில் வாழ்த்துகளைப் பகிரலாம். ஆனால், அந்தப் புகைப்படத்திற்குப் பின்னால் யார் யாரிடம் பேசாமல் இருக்கிறார்கள்? யார் யாரை மன்னிக்க முடியாமல் இருக்கிறார்கள்? யார் யாரிடம் அன்பு கேட்டு அமைதியாகக் காத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

நாம் ஒருவரின் வாழ்க்கையின் முகப்புப் பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம். அவர்களின் அடுத்த பக்கங்களில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. “நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு இருக்கலாம். எனவே, எப்போதும் அன்போடும் இரக்கத்தோடும் இருக்கவேண்டும்என்னும் ஸ்காட்லாந்து எழுத்தாளர் இயான் மேக்லாரனின் கூற்று இதையே நினைவூட்டுகிறது.

சிலர் வலியோடு சிரிக்கிறார்கள்; சிலர் கண்ணீரோடு வாழ்கிறார்கள்; சிலர் உடைந்த இதயத்தோடு மற்றவர்களைத் தேற்றுகிறார்கள். தாங்கள் ஆறுதல் தேவைப்படுகிற நேரத்திலும், ‘பரவாயில்லை... எல்லாம் சரியாகிவிடும்என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள். இதுதான் மனித மனத்தின் அற்புதம். உலகம் பார்க்கும் மனிதனும், அவனுக்குள் வாழும் மனிதனும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பலர் உதடுகளில் புன்னகையையும், இதயத்தில் ஆயிரம் வலிகளையும் சுமந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உதடுகளின் புன்னகைக்குப் பின்னால், சொல்லப்படாத ஒரு வலி இருக்கிறது! அந்த வலிதான் மனவுறுதி; அந்த வலிதான் நம்பிக்கை! ஆனால், அந்த வலிகளில்தான், விடியலை நோக்கி நடக்கத் துணியும் ஒரு தீர்க்கமான மனமும் உறுதியும் மறைந்திருக்கின்றன!

எனவே, வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். முகத்தை மட்டும் பார்க்காமல் மனத்தையும் பார்க்கலாம்; சிரிப்பை மட்டும் கேட்காமல் மௌனத்தையும் கேட்கலாம்அவர்களுடைய புன்னகையை மதிக்கக் கற்றுக்கொள்வோம்; அதன் பின்னால் இருக்கும் வலியையும் மதிக்கலாம். அவர் சொல்லாத கதைக்கு இடம் கொடுக்கலாம்; அவர் மறைத்த கண்ணீருக்கு மரியாதை கொடுக்கலாம். ஏனெனில், நம்மைச் சுற்றி நடமாடும் பலர் உடைந்தவர்கள் அல்லர்; உடைந்த மனங்களோடு கூட அழகாக வாழக் கற்றுக்கொண்டவர்கள்!

(பயணம் தொடரும்...)

news
சிறப்புக்கட்டுரை
படைப்பின் காலம் (Season of Creation) – வான்கொடையை வற்றாது காப்போம்!

இயற்கை என்பது வெறும் அகவமைப்போ, நாம் நுகர்வதற்கானப் பொருளோ அன்று; மாறாக, அது இறைவனின் அருள்கொடை; நாம் அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கம்!

21-ஆம் நூற்றாண்டின் மனிதச் சமூகம் தொழில்நுட்பப் புரட்சியிலும், கட்டுப்பாடற்ற நுகர்வுப் போக்கிலும் மூழ்கியிருக்கும் இக்காலகட்டத்தில், சூழலியல் சமநிலையின்றி பூமிப்பந்து தவித்துக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் பேரழிவுகள், நீர்நிலைகளின் வறட்சி, மனிதப் பேராசையால் ஏற்படும் சூழலியல் சீரழிவுகள் ஆகியவற்றிற்கு மத்தியில், கத்தோலிக்கத் திரு அவையும் உலகளாவிய கிறித்தவச் சமூகங்களும்படைப்பின் காலத்தை(Season of Creation) ஒரு புனிதமான ஆன்மிகச் சமூகப் பொறுப்பாகக் கொண்டாடுகின்றன.

2026-ஆம் ஆண்டின் படைப்பைப் பராமரிப்பதற்கான 11-வது உலக இறைவேண்டல் தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 1) திருத்தந்தை லியோ அண்மையில் சிறப்புமிக்க உரையாற்றியுள்ளார். அதன் அடிப்படையில், படைப்பின் காலத்தின் ஆழமான ஆன்மிகப் பொருள், அமைதிக்கும் சூழலியலுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும்நீரைப் பாதுகாப்போம்எனும் காலத்தின் கட்டாயக் கோரிக்கை குறித்த ஒரு விரிவான சிந்தனைப் பகிர்வு ஆகியவை இன்றைய காலத்தின் அடிப்படைத் தேவையாக உள்ளன.

படைப்பின் காலம்: தோற்றமும் ஆன்மிக அவசியமும்

வரலாற்று ரீதியாக, படைப்பின் காலம் என்பது செப்டம்பர் 1-ஆம் நாள் தொடங்கி அக்டோபர் 4-இல் வரும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழா வரை ஐந்து வாரங்கள் தொடரும் ஒரு சிறப்புமிக்கக் காலகட்டமாகும்.

1989-ஆம் ஆண்டு கீழைத் திரு அவையின் அகில உலகத் தலைவர் முதலாம் திமித்ரியோஸ் என்பவரால் செப்டம்பர் 1 ‘படைப்பிற்கான இறைவேண்டல் நாள்அறிவிக்கப்பட்டது. பின்னர் 2007-இல் ஐரோப்பியத் திரு அவைகளின் கூட்டமைப்பால் இது ஐந்து வாரக் கொண்டாட்டமாக நீடிக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கத்தோலிக்கத் திரு அவையிலும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

திருத்தந்தை லியோ அவர்கள் ‘Missa pro custodia creationis\\\' (படைப்பைப் பாதுகாப்பதற்கான திருப்பலி) எனும் புதிய வழிபாட்டு முறையை உரோமன் திருப்பலிப் புத்தகத்தில் முறைப்படி இணைத்து, அகில உலகத் திரு அவையும் சூழலியல் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செபிக்கப் பாதையமைத்துள்ளார்.

படைப்பின் காலம் என்பது ஏதோ ஓர் அரசியல் கொள்கையோ அல்லது வெறும் சமூக அமைப்புகளின் பிரச்சாரமோ அன்று; மாறாக, அது கிறித்தவ நம்பிக்கையின் மையப்பகுதியாகும். இயற்கையின் பேரழகைக் கண்டு வியப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதன் படைப்பாளராகிய இறைவனை நோக்கி நமது பார்வையை உயர்த்துவதே இக்கால கட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

நீரைப் பாதுகாப்போம்!

செப்டம்பர் மாத இறைவேண்டல் கருத்தாகத்நீரைப் பாதுகாப்போம்என்பதைத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். வத்திக்கானில் வெளியிட்ட செய்தியில், “தண்ணீர் எல்லைகளற்ற உரிமையாகும்; அது அனைவருக்கும் உரிய பொதுவான கொடைஎன்று அவர் அழுத்தம் திருத்தமாக இயம்பியுள்ளார்.

வாழ்வளிக்கும் நீர் (Living Waters) என்பது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, “நீர் என்பது வணிகப் பொருளன்று; அது உலகளாவிய மானுட உரிமைஎன்றும், “அது கிணறு மற்றும் பாத்திரங்களில் தேங்கியே இருப்பது அல்ல; மாறாக, அது தேக்கமின்றி ஓடும் வாழ்வின் ஊற்றுஎன்றும், அது நிலத்தை வளப்படுத்தி, பூக்களை மலரச் செய்து, சுழற்சியைக் காக்கும் ஜீவநதி என்றும், யோவான் நற்செய்தியில் கிறிஸ்துவே அத்தகைய தாகம் தீர்க்கும்ஜீவ தண்ணீராகதிகழ்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீரின் தத்துவமும் அசிசியின் பார்வையும்

புனித பிரான்சிஸ் அசிசியார் தனதுசூரியனின் கீதம்(The Canticle of the Sun) நூலில், நீரைத்தங்கை நீர்(Sister Water) என்று அழைக்கின்றார். அது பயனுள்ளது, தாழ்மையானது, விலைமதிப்பற்றது மற்றும் தூய்மையானது என்று அவர் போற்றுகிறார். ஆனால், இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், குடிநீர் வணிகப் பொருளாக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் தூய்மையான நீரின்றி மைல்கணக்கில் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், நீரைக் குறைவாகப் பயன்படுத்துதல், நீர்நிலைகளை மாசடையாமல் தடுத்தல் போன்ற தனிநபர் பொறுப்புகளை நாம் தட்டிக் கழிக்க முடியாது என்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டுகிறார்.

ஆயுத மோதல்களும் சூழலியல் அழிவும்: ஒரு நச்சுச் சுழற்சி

2026-ஆம் ஆண்டின் படைப்பைப் பராமரிப்பதற்கான இறைவேண்டல் தினச் செய்தியில், திருத்தந்தை லியோ ஒரு மிக முக்கியமான உண்மையை உலகிற்கு முன்வைத்துள்ளார்: ‘ஆயுத மோதல்களுக்கும் சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் இடையிலான ஆழமான பிணைப்பு.’ இறைவாக்கினர் எசாயாவின்அவர்கள் தங்கள் வாள்களைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள் (2:4) என்ற இறைவார்த்தையை இவ்வாண்டின் மையக்கருத்தாகத் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

போரினால் ஏற்படும் காயங்கள், போர்க்களத்தைத் தாண்டி பூமியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் சேதப்படுத்துகின்றன. இது மனித இதயத்தின் ஆன்மிக மற்றும் நன்னெறி வீழ்ச்சியைக் காட்டுகிறது. பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை மற்றும் உடனடி இலாப நோக்கமே இந்த அழிவுகளுக்குக் மூலக்காரணமாகும்.

உண்மையான சூழலியல் மனமாற்றம்

படைப்பின் காலத்தில் நாம் செய்யவேண்டிய முதன்மைப் பணி, அன்றாட வாழ்வின் இரைச்சல்களிலிருந்து விலகிஅமைதி நிலைக்கு(Silent Mode)  மாறுவதாகும். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இரைச்சல்களைக் குறைத்தால் மட்டுமே, இயற்கை எழுப்பும் மெல்லிசைக் குரலையும், அதன் வழியே பேசும் இறைவனின் குரலையும் நம்மால் கேட்க முடியும். புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கை உலகை தனியான ஒன்றாகப் பார்க்காமல், மனிதர்களாகிய நாமும் அதன் குடும்பத்தில் ஒரு பகுதி என்று உணர்ந்தார். விண்மீன்கள், கதிரவன், நிலவு, நீர், நெருப்பு, தாய் பூமி ஆகிய அனைத்தும் நமக்குச் சகோதர-சகோதரிகளாகும்.

நாம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்

ஆழ்ந்த தியானம்: இயற்கை உலகைப் பார்த்து வியப்பதன் மூலமாக, அதைப் படைத்த இறைவனின் எல்லையற்ற அன்பை உணர்தல்.

தனிநபர் நுகர்வைக் குறைத்தல்: எளிமையான வாழ்முறையைக் கையாண்டு, வளங்களை வீணாக்குவதைத் தவிர்த்தல்.

வாள்களைக் கொழுக்களாக மாற்றுதல்: வன்முறையையும் பேராசையையும் கைவிட்டு, அழிவுச் சக்திகளை ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரப் பணிகளுக்குத் திருப்புதல்.

ஏழைகளின் கதறலுக்குச் செவிமடுத்தல்: சூழலியல் சீரழிவால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே. எனவே, பூமியின் கதறலையும் ஏழைகளின் கதறலையும் ஒன்றிணைத்துக் கேட்டல்.

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை!’ (It is not yet too late) என்று உரத்த குரலில் நம்பிக்கை அளிக்கிறார் திருத்தந்தை லியோ. நமது அழிவுப் பாதையிலிருந்து விலகி, வாழ்வின் பாதைக்குத் திரும்ப படைப்பின் காலம் நம்மை அன்போடு அழைக்கிறது.

பாலைவனங்களைச் சோலைகளாகவும், பிரிவினைகளைச் சமூகப் பிணைப்பாகவும், வன்முறையை அமைதியாகவும் மாற்றும்சூழலியல் மன மாற்றத்தைநாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களில் தொடங்குவோம். இயற்கையைத் தாயாகவும், அதன் வளங்களை இறைவனின் கொடையாகவும் போற்றி, ‘தங்கை நீரைமாசாக்காமல் காத்து, எக்காலமும் படைப்பின் அழகில் இறைவனைக் கண்டு இறைப்புகழ் பாடுவோம்!

என் ஆண்டவரே! உமது படைப்புகள் அனைத்திற்காகவும், சிறப்பாகச் சகோதரன் கதிரவனுக்காகவும், சகோதரி நீருக்காகவும் உமக்குப் புகழும் மாட்சியும் உரித்தாகுக!” - புனித பிரான்சிஸ் அசிசியார்.

news
சிறப்புக்கட்டுரை
கச்சத்தீவு நமதே!

கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைக்குத் தாரைவார்த்தது நம் இந்திய அரசு. ‘ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதாம்என்ற கதைபோல, கச்சத்தீவை வழங்கிய நமக்கே துரோகம் இழைக்கும் விதமாக, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வருகின்றனர் இலங்கைக் கடற்படையினர். இச்சூழலில், கொடுத்ததை எடுத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளனர் இலங்கையை ஆள்பவர்கள். கச்சத்தீவு நமக்கே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன.

இராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தம்: 1974-இல் ஜமீன்தாரி ஒழிப்புச்சட்டம் வரும் வரை இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னரின் ஆட்சியில் இருந்த கச்சத்தீவு, முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும்உமிரிமற்றும்சாயாவேர்களை மருத்துவத் தேவைகளுக்காக இராமநாதபுரம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1882-ஆம் ஆண்டிலிருந்து முறையான சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822-இல்திமிரர்சனாத்என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சத்தீவைப் பயன்படுத்திக்கொள்ளும் இசைவைப் பெற்றது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில், இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொதுஅறிவிப்பில், இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும், இராமநாதபுரம் அரசரைப் பற்றியவற்றில் கச்சத்தீவு அவருக்குரியதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை மேனாள் இலங்கை அமைச்சரவைச் செயலர் பி.பி. பியரிசே உறுதிப்படுத்தியுள்ளார். 1912-ஆம் ஆண்டிலிருந்து 1923 வரை, அதாவது 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை குத்தகையாக, இந்தியாவிற்கான அரசு செயலர் சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.

குத்தகை எடுத்ததற்கான ஆதாரங்கள்: சேதுபதி மன்னர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவைக் குத்தகைக்கு விட்டு, அவர்கள் வருவாய் பெற்று வந்துள்ளனர். இதற்கான சான்றுகள் பல உள்ளன. ஜனாப் முகமத் அப்துல் காதர் மரைக்காயர், முத்து சாமி பிள்ளை என்பவர்களுக்காக, கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்குக் குத்தகையாக ஒப்பாவணம் செய்துகொள்ளப்பட்டது (ஜூன் 23, 1880-ஆம் ஆண்டு இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகம், 1880, ஜூலை 2-ஆம் தேதி ஆவண எண் 510/80).

மீண்டும் இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் டிசம்பர் 4, 1885-ஆம் ஆண்டு, கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு, ஒப்பாவணம் செய்யப்பட்டது (ஆவண எண் 134/85). பின்னர் 1947-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து 1949-ஆம் ஆண்டு ஜூன் 30 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது (குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள், ஜூலை 28, 1947-ஆம் ஆண்டு ஆவண எண் 278/48).

நில வரைபடங்களில் கச்சத் தீவு: 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பர்னொப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார். இலங்கையின் தேசப்படம் ஒன்றை உருவாக்குவதில் பர்னொப் முழுமையாக ஈடுபட்டார். அவர் உருவாக்கிய அந்தத் தேசப்படத்தில் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு குறிக்கப்படவில்லை. இலங்கைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும் ஐரோப்பியர்களும் வணிகத்திற்காக வந்த வண்ணம் இருந்தனர். அவர்களைப் பின்பற்றி வந்த தாலமி, பிளினி என்ற நிலவியல் ஆய்வாளர்கள் இலங்கையின் கடற்கரைப் பகுதிகள், உள்பகுதிகள் ஆகியவற்றைத் தேசப்படங்களாக வரைந்தனர். தாலமி, பிளினி ஆகியோர் இலங்கைத் தேசப்படத்தில் கச்சத்தீவைக் குறிக்கவில்லை. அவர்கள் இருவரும் தென்னிந்தியக் கடற்கரை, தமிழ்நாடு ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு 1650-லிருந்து 1800 வரை ஆலந்து நாட்டவரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது, அவர்கள் வைத்திருந்த இலங்கைத் தேசப்படத்தில் அந்நாட்டின் வட எல்லைத் தீவாகடெல்த்தீவைத்தான் குறிப்பிட்டிருக்கின்றனர்; கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை. இலங்கையை ஆண்ட போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் தேசப்படத்தில் இலங்கையின் வட எல்லையாக டெல்த் தீவை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். கச்சத்தீவைப் பற்றி மூச்சுவிடவில்லை. சர் ஜேம்ஸ் டென்னன்ட் எனும் வரலாற்று அறிஞர், ஒரு நில நூல் அறிஞர். இலங்கையின் நாகரிகம், பண்பாடு, கலை, மொழி அனைத்தையும் தெளிவாக அறிந்த பன்மொழி அறிஞர். இவர் ஜே. ஆரோ ஸ்மித் என்பவரோடு சேர்ந்து 1857-61-ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தேசப்படங்களை வெளியிட்டார். அப்படங்களில் டென்னன்ட் கச்சத்தீவைச் சேர்க்கவில்லை.

கச்சத்தீவின் முக்கியத்துவம்: பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கடற்படை அரண் அமையும்போது, அதன் மையங்களில் ஒன்றாகக் கச்சத்தீவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஐரோப்பிய, இந்தோனேசியத் தீவுகளில் அமைக்கப்படும் ஏவுகணைத் தளங்களின் இலக்குகளுக்கு நேர் எதிராக ஏவுகணைத் தளம் அமைக்கப்படும் இடங்களில் ஒன்றாகவும் இத்தீவை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இலங்கையில் எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கமாவது மிகுந்து செயல்படும்போது, அதனால் ஏற்படக்கூடிய போர் அச்சங்களைத் தகர்க்க உதவும் இடமாகவும், இராணுவப் படைத்தளம் அமைப்பதற்கேற்ற தளமாகவும் கச்சத்தீவை ஆக்கிக்கொள்ளலாம்.

கச்சத்தீவு நம்மிடம் இருந்தால் கடற்படை, நீர் மூழ்கிக்கப்பல் படைவீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம்; இராணுவத் தளவாடங்களைச் செப்பனிடும் தொழிற்சாலைகள் அமைத்துக்கொள்ளலாம்; போர் விமானங்கள் தற்காலிகமாக இறங்குவதற்கான திட்டு அமைக்கலாம். ரேடார் நிலையம், கடல் உணவு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்.

கச்சத்தீவு நமதே: இவ்வளவு பயன்பாடுள்ள கச்சத்தீவை நாம் இலங்கைக்கு வழங்கியிருக்கிறோம். ஆனால், அதற்குரிய நன்றியுணர்வோடு இலங்கை ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை? ‘கச்சத்தீவு நமதேஎன உரக்க முழக்கமிட்டு நாம் பிடுங்கிக்கொள்ளாதவரை, ‘கொடுத்ததை முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்என்று மறைமுகமாக இலங்கை நமக்குச் சவால் விடுகிறதோ?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கொன்று குவிப்பதைப் பார்த்தால் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
எதிர்ப்பாட்டும் எசப்பாட்டும்

தமிழ்நாடு சட்டசபையின் ஒருநாள் செலவு என்னவாகும்? முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்படி, சட்டமன்றச் செயலக ஊழியர் ஊதியங்கள், காவல்துறை பாதுகாப்பு, சட்டமன்ற குளிர்சாதன மின் கட்டணம், அரசுத்துறை செயலளர்களின் பிற அலுவலகப்படி, உறுப்பினர் கேள்விகளுக்குப் பதில் பெறும் அதிகாரிகளுக்கான செலவு, கேண்டீன் என தினம் தோராயமாக ரூபாய் ஒரு கோடி செலவிடப்படுகிறது.

மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் மன்றமாக இருக்கிறதா?’ என்பதே அடிப்படைக் கேள்வியாகும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பேசாமல், தினம் அரசியல் பேச்சுகளே அதிகமாக உள்ளன. அவைத் தலைவர் நடுநிலையாக நடந்து கொள்வதாலும், நேரடி ஒளிபரப்பு நடப்பதாலும் மேலதிகக் கலவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றம் வெஸ்ட் மினிஸ்டர் மரபின்படி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முக்கியமாக, கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவனஈர்ப்புத் தீர்மானங்கள் என்ற அடிப்படையை அடக்கியதாகும். சட்டமன்றத் தலைவர் சட்டமன்ற விதிகளின்படி சட்டமன்றத்தை நடத்துவார். சட்டமன்றத்தில் அவருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் தலையிட முடியாத அதிகபட்ச அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.

1921-இல் சென்னை மாகாண சட்டசபை தொடங்கப்பட்டது. அது 1952 முதல் தமிழ்நாடு சட்ட சபையாகத் தொடர்கிறது. எல்லாக் காலங்களிலும் சட்டசபை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனல் பறக்கும். கேள்வி-பதில்களால் கொதிக்கும். மக்கள் பிரச்சினைகள் அலசப்படும். சில நேரங்களில் அரசியல் வரும்; அது தவிர்க்க இயலாதது. ஆனால், இன்று மக்களின் விலைவாசி உயர்வு உட்பட்ட எந்தப் பிரச்சினையும் பேசப்படவில்லை! எல்லா நேரமும்  அரசியல் கூச்சல், குழப்பம்.

அவைத் தலைவர் ஐம்பது முறை எழுந்து நின்று உறுப்பினர்களை உட்கார வைக்கிறார். தினம் பத்து முறை சட்டமன்ற மரபுகள் குறித்து வகுப்பு எடுக்கிறார். தன்னைச் சமன்படுத்திகொள்ள ஏதாவது சொல்லிச் சிரிக்கிறார். ஒவ்வொரு நொடியும் வார்த்தைக்கு வார்த்தை கூர்ந்து கவனிக்கிறார். சில வேளையில் சலசலப்புகள் அதிகமானால், ‘எனது அறையில் அமர்ந்து பார்த்து முடிவெடுக்கிறேன்என விளக்கம் தருகிறார்.

சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் பேச்சுகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கம். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சு சில நேரங்களில் நீக்கப்படும். இன்றோ அமைச்சர்களின் பேச்சு அதிகமாக அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. ஆனால், அவை நேரடி ஒளிபரப்பில் மக்களிடம் சென்றுவிடுகின்றன. சபை நடவடிக்கைகள்ரீல்ஸ்ஆக மாற்றப்படுவது, வேண்டிய  பகுதிக்காக வெட்டி ஒட்டுவது என வகை தொகையில்லாமல் சட்டசபை மரபுகள் மீறப்படுகின்றன. முதல்வரோ 110 விதிகளின் கீழ் விவாதிக்க முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு, அமைதியாக அமர்ந்து விடுகிறார். அமைச்சராகி  100 நாள்களாகியும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல் வரிசை ஐந்து அமைச்சர்களே பதில் தருகிறார்கள். இது வாக்களித்த மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகும்.

சட்டமன்றம் குறித்த நமது கருத்துரை வரையறுக்கப்பட்டது என்பதால் தே.மு.தி.. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வருத்தத்துடனும் ஆவேசத்துடனும் சட்டமன்றத்தில் பேசிய வரிகளைக் காண்போம்: “அவையில் மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்படாமல், தொடர்ந்து அரசியல் சண்டைகள் நடக்கின்றன. சட்டமன்ற நேரலையைப் பார்க்கும் பொதுமக்கள்கூட அதிருப்தி அடைந்து, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது சட்டமன்றமா? சண்டைமன்றமா? ஓர் அமைச்சர் (பெயரைக் குறிப்பிடுகிறார்) எழுந்தாலே சண்டை ஆரம்பமாகிவிடுகிறது; இதனால் பல மணி நேரம் வீணாகி விடுகிறது. எனவே, இதைத் தவிர்த்து அனைத்து  உறுப்பினர்களுக்கும் பேச சமவாய்ப்பு வழங்கவேண்டும்என்றார்.

தமிழ்நாடு சட்டசபைபிக்பாஸ்நிகழ்ச்சிபோல உருப்பெற்றுள்ளதாகக் கருத்துகள் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. மூன்று அமைச்சர்களோடு அவை முன்னவரும், கடந்த காலம் 75 வருடங்கள் எனப் பேசி வம்பு இழுத்து விடுகிறார்கள். பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் பேசிய உதாரணத்தை ஆளுங்கட்சியினருக்கு நினைவூட்டுவது சாலச் சிறந்ததாகும்.

1957-1962 காங்கிரஸ் ஆளுங்கட்சியாகவும், தி.மு.. எதிர்க்கட்சியாகவும் இருந்த காலமது. ஆளும் காங்கிரஸ் கட்சியினர்தி.மு..விற்கு ஆட்சி நிர்வாகம் எதுவும்  தெரியாதுஎன்றார்கள். அண்ணா சொன்னார், “இரண்டு கரண்டிகள் இருக்கிறது; ஒரு கரண்டி சாதாரண கரண்டி; எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம்; இன்னொரு கரண்டி எண்ணெய் நிரம்பிய கரண்டி; அதை எப்படி வேண்டுமானாலும் சுற்ற முடியாது. அதுபோல எதிர்க்கட்சி  என்பது வெறும் கரண்டி. எதையும் பேசலாம், கேட்கலாம். ஆளுங்கட்சி என்பது எண்ணெய் உள்ள கரண்டி. உங்கள் கையில் அதிகாரம் என்ற எண்ணெய் உள்ளது. நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும், போடும் ஒவ்வொரு திட்டமும் பார்த்துப் பக்குவமாக இருக்க வேண்டும். பக்குவமின்றிக் கரண்டியைச் சுற்றினால் நீங்கள் சிந்துவது எண்ணெய் அல்ல; மக்களின் நம்பிக்கைஎன்றார்.

அடுத்து கேள்வி நேரம் குறித்துப் பார்ப்போம். தினமும் சட்டசபை தொடங்கியவுடன் கேள்வி நேரம் ஆரம்பமாகும். உறுப்பினர்களின் கேள்விக்குத் துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தமிழ்நாடு அரசின் அடிப்படை, அலுவலக நடைமுறை தெரிந்தோருக்குத் தெரியும். சட்டமன்றம் நடக்கும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அரசு அலுவலர் தன் அலுவலகத்தைத் தகுந்த முன்னேற்பாட்டுடன் வைத்திருப்பார். புதிய சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இல்லை என்றபோது, ‘ஏன் இல்லை?’ என எதிர்க்கேள்வி வைக்கப்பட்டது.

அரசின் துறைகளுக்கு அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு 23% அளவில்தான் பதில்கள் வந்திருக்கின்றனசட்டசபையில் அவைத் தலைவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சிறப்புக் கவனம் எடுத்து, துறை ரீதியான பதில்கள் தரவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு சட்டசபை வரவு-செலவுத் திட்ட கூட்டத் தொடர் முடியும் பத்து நாள்களுக்கு முன்பு 2026, ஆகஸ்டு 27 அன்று முதல் கேள்வி நேரம் தொடங்கியது. வழக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் பத்து கேள்விகளுக்குப் பதில் ஐந்து கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிலும் அவைத் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் வாக்குவாதம். ‘அவையின் செயல்பாட்டு நேரத்தில் குறிப்புகள் எடுக்க, நிர்வாகத் துறைச் செயலாளர்கள், அவையின் முகப்பில் நேரடியாக இல்லையேஎன்பதாகும். புதிய ஆட்சி என்பதால் அதிகாரிகள் கேள்விகளுக்குப் பதில் அனுப்புவதிலும், அவைக்கு வந்து துறை சார்ந்த கேட்புக் குறிப்புகள் எடுப்பதிலும் மெத்தனம் காட்டுகிறார்கள் என்ற ஐயப்பாடு எழுகிறது.

1960-1980-களில் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆண்டிற்கு  60 முதல் 80 நாள்கள் நடக்கும். தற்போதைய ஆண்டுகளில் 30 முதல் 35 நாள்களே சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிறது. குறைந்த நாள்களில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு குறித்துப் பேச நேரமில்லை. மேகதாது, பரந்தூர் குறித்த விரிவான விவாதங்கள், ஆக்கப்பூர்வமாகச் சட்டமன்றத்தில் நடைபெறவில்லை. புதிய உறுப்பினர்கள் மரபை மதிக்காமல் வெறுப்பு அரசியலை விதைப்பது, மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபையை  அரசியல் பொதுக்கூட்டமாக மாற்றுவது, சிறந்த சட்டசபை மரபல்ல; மாண்பிற்குரிய  செயலும்  அல்ல. அது அவர்களுக்கு மரியாதையைத் தராது. ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், இவற்றைச்  சுட்டிக்காட்டுவது நம் தார்மிகக் கடமையாகும்.

news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 11

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை (குறள் 12)

குறள் விளக்கம்: உண்பவனுக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோருக்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சிந்தனை: மழை நீரானது உயிர் அளிக்கும் ஊற்றாக இருந்து, இந்த உலகைச் செழிப்படையச் செய்கிறது. உயிர் வாழ்வுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. அதுபோல் இன்னும் பல தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களும் தன்னை முழுவதும் பிறருக்கு வழங்கி, உயிர்களை  வாழ வைக்கின்றன. நமது பிறப்பும் பிறருக்குப் பயன்படும் விதமாக அமையவேண்டும்.

சோம்பேறியான ஒருவன் திருட்டுத் தொழில் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தினான். ஒருநாள் காட்டில் அவன் ஒரு நரியைக் கண்டான். அந்த நரிக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருந்தன. ஆனாலும் அந்த நரி மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இந்தச் சோம்பேறி மனிதனுக்கோ அது ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், ‘இந்த நரி எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அது எப்படித் தன் உணவைப் பெற்றுக்கொள்ளும்? மற்ற விலங்குகளிடமிருந்து அது எப்படித் தன்னைக் காத்துக்கொள்ள முடியும்?’ என எண்ணிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் ஒன்று வாயில் இறைச்சித் துண்டுடன் நரியின் அருகில் வருவதைக் கண்டான்.

சிங்கத்தைக் கண்ட எல்லா விலங்குகளும் ஓடிவிட்டன. சோம்பேறி மனிதனும் மரத்தில் ஏறிக்கொண்டான். நரி மட்டும் ஓடாமல் அங்கேயே இருந்தது. அருகில் வந்த சிங்கம் அந்த இறைச்சித் துண்டை நரியிடம் கொடுத்தது. நரிக்கு உணவு கிடைத்த விதத்தைக் கண்ட சோம்பேறி, தனக்கும் யாராவது உணவு கொண்டு வருவர் என நினைத்து, சாலையின் ஓரத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கவில்லை. பின் அங்கு வந்த ஒரு ஞானியைப் பார்த்து, “நரிக்கு உணவளித்த கடவுள் எனக்கு உணவு தரவில்லைஎன்று புலம்பினான். அதற்கு ஞானி, “நீ கடவுளின் திட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கடவுள் உன்னை முடமான நரியாக அல்லவலிமை உடைய சிங்கமாகப் படைத்துள்ளார். நீ உழைத்துச் சம்பாதித்து மற்றவர்களுக்கு உணவளிக்கவேண்டும்என்றார்.

ஒவ்வொரு மனிதரிலும் ஓர் இறைத்திட்டம் உள்ளது. அதன் நோக்கம் பிறருக்கு நன்மை விளைவிப்பதே ஆகும். உதாரணமாக, திருத்தூதர் பணிகள் 9:36-இல் யோப்பா நகர் தபித்தா என்னும் இயேசுவின் பெண் சீடரை எடுத்துக்கொள்வோம். “நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்.”

இயேசுவின் சீடர்கள் இவ்விதம் நற்செயல்கள் செய்யும்போது, இயேசு இதற்கும் ஒரு படி மேலே சென்று, “நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்என்று லூக்கா 6:35-இல் தெளிவுபடுத்துகிறார்.

ஒருமுறை வாழும் இந்த உன்னத வாழ்வில்  அனைவருக்கும் பயன்படும் வகையில் வாழ்வோம். மேலும், “கடவுளைப் பிறரில் காணவும், நம்மை மையப்படுத்துவதிலிருந்து வெளியேறி, பிறர் நலனைக் காக்க நம்மைப் படைத்துள்ள அன்பான இறைவனுக்குத் தகுந்த பதில் தரவும் நற்செய்தி நம்மை அழைக்கிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (நற்செய்தியின் மகிழ்ச்சி:39).

எனவே நற்செய்தியை ஆழமாகப் படித்து, நமது சிந்தனையால் நன்மை செய்வோம். நமது சொற்களால் இனிமை சேர்ப்போம். நமது செயல்களால் முன்மாதிரியாவோம். நற்செயல்கள் ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாய் இந்த உலகத்தை இணைக்கட்டும்.