news
சிறப்புக்கட்டுரை
பிண அரசியல்

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் பார்த்து வியந்து உள்ளேன். சில அரசியல் தலைவர்கள் தம் தொகுதியில் நடக்கும் குழந்தையருக்குப் பெயர் வைத்தல், காதுகுத்து, கல்யாணம் என அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர். அவர்களுக்குக் கட்சி வேறுபாடு கிடையாது. இறப்பு வீடுகளில் கண்ணீர் விட்டு அழுததையும் பார்த்திருக்கிறேன்.

அவர்களின் ஒரே நோக்கம் அடுத்தத் தேர்தலில்  அவ்வீட்டு ஓட்டு தமக்கு என்பதாகும். இதைபிண அரசியல்என்று கூறுவதே சரியானதாகும்.

செப்டம்பர் 27, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். அடுத்த நாள் (செப். 28) கரூர் சென்ற தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு  மற்றும் .வெ.. கட்சிமீது குற்றம் சுமத்தி சமநிலையில் பேசினார். அவர் அதில் மூச்சுக்கு முண்ணூறு முறை தான் தொலைக்காட்சியில் பார்த்துப் பேசுவதாகக் கூறினார். அவர் முதலமைச்சராக இருந்தபோதே தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் அறிந்த  அறிவாளி என மக்கள் ஏளனம் செய்தனர்.

செப்டம்பர் 30, நடிகை ஹேமமாலினி தலைமையிலான எட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கரூர் வருகிறது. மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த மேதைகள் குழுநடிகருக்குப் பிரச்சாரம் செய்ய கொடுத்த இடம் குறுகலானது; முழு தவறும் தமிழ்நாடு அரசுமீதே உள்ளதுஎனக் கண்டறிந்தது. அக்குழுவினர் பேசிய ஒருமணி நேரத்திற்குள், “நான் வீட்டில்தான் இருக்கிறேன்; முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்என நடிகரிடமிருந்து வீடியோ பதிவு  வருகிறது. கூடவே தனக்கு இந்தத் துயரநேரத்தில் ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் நடிகர் தெரிவிக்கிறார்.

41 பேர் இறந்த இழவு வீட்டில், பா...வும், .தி.மு..வும் கூட்டணி என்ற துண்டைப் போடுகிறார்கள். இதைத்தான்பிண அரசியல்என்று கூறுகிறோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்  நடிகரின் கட்சியை  விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசுதான் கரூர் சம்பவத்திற்குக் காரணம் என மறுநாள் முதல் உரக்கப்பேசுகிறார். .வெ.. சட்ட சபையில் இருந்தால் கூட இவ்வளவு பதற்றப்பட்டிருக்காது; அவ்வளவு பதற்றமும் கோபமும் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அக்டோபர் 9, ‘புரட்சித் தமிழரின்எழுச்சிப்  பயணம் திருச்செங்கோடு குமாரபாளையத்தில் நடக்கிறது. அக்கூட்டத்தில் .வெ.. கொடி பறக்கிறது. வாயெல்லாம் பல்லாக, முகம் மலர்ந்து, பெரும் மகிழ்வாய், “நமக்குக் கூட்டணிக்கு சமிச்ஞை கிடைத்தாயிற்று  என எடப்பாடி திருவாய் மலர்கிறார். இவரைவிட ஒருபடி மேலே சென்ற பா... கட்சியின் தேசிய மகளிர் பிரிவு தலைவர் வானதி சீனிவாசன், “எங்கள் கட்சியுடன் ஸ்ட்ராங்கான கட்சி கூட்டணிக்கு வரப்போகிறதுஎன முகம் மலர்ந்தார். இவர்களுக்கு ஒருபடி மேலே சென்ற எந்தப் பதவிகளும் இல்லாத தமிழிசை சௌந்தரராஜன், ‘நானும் உள்ளேன்பாணியில்கூட்டணிக்குப் பொதுவெளியில் அழைப்பு விடுவதில் தவறு ஒன்றுமில்லைஎன்றார்.

அடுத்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரிடம் பேசி துணை முதல்வர் பதவிக்கு நடிகரைச் சமாதானம் செய்ததாகத் தகவல் பரவுகிறது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் பற்றிப் பேசலாம் என அமித்ஷா கூறியதாகவும் கூறப்பட்டது. இதைவிட காங்கிரஸ் கட்சியின் மறுபக்கமும் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. நடிகர் தன் வருமான வரி பிரச்சினை மற்றும் ஜெயலலிதா நெருக்கடிகளால் முன்பே காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஆறுதல் பெற்றிருக்கிறார்.

கரூர் சம்பவங்கள் குறித்து முதல்வரிடம் பேசிய இராகுல் காந்தி அவரிடம்நான் நடிகரிடமும் பேசுகிறேன்எனக் கூறினார். நடிகரிடம் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு, “தைரியமாக இருங்கள்என நடிகரைத் தேற்றுகிறார். இதனிடையே பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுசாமியின் பேச்சுகள், தி.மு..- காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்துகிறது. கரூர் சம்பவங்களுக்குப் பிறகு நடிகருக்குமாஸ்கூடி விட்டதாக எண்ணிய காங்கிரஸ், “சாறு உங்களுக்கு, சக்கை எங்களுக்கா?” என மேனாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி மூலம் ஆட்டம் காட்டினர். எப்பொழுதும் தி.மு..வைத் திட்டும் மாணிக் தாகூர், கார்த்திக் சிதம்பரம் போன்றோரும் அதிகம் பேசினர். இராகுல் காந்தி நடிகரிடம் பேசி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு  நடிகர் கட்சி கூட்டணி என்ற தகவல் பரவியது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் காங்கிரஸ் பங்கு பெற்றுவிடும் எனப் பகல் கனவு கண்டனர்.

41 பேர் மரணமடைந்தும், 100 பேர் படுகாயமடைந்தும் நடிகருக்கு மக்கள் செல்வாக்கு கூடுகிறது எனத் தவறுதலாக அனுமானிக்கப்பட்டுப் பிண அரசியல் நடக்கிறது. கூட்டணி குறித்த பொய்கள் பரப்பப்படுகின்றன. 40 நாள்கள் மௌனம் காத்த நடிகர், மகாபலிபுரத்தில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடத்தி, கூட்டணி குறித்து முடிவுகளைத் தானே வைத்துக்கொள்கிறார். பிண அரசியலின் பலனைப் பிறருக்கு விடுவாரா? என்ன?

நவம்பர் 5-இல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய .வெ.. இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார் தெளிவாக, “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லைஎன எடப்பாடியின் கனவைப் போட்டு உடைத்தார். எடப்பாடி முட்டுச்சந்தில் நிற்கிறார். இருந்தாலும், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல, “என்றும் நாங்கள் .வெ..வுடன் கூட்டணி பேசவில்லைஎன்றார். ஆனால், நடிகர் கட்சித் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர், “நாங்கள் 40 சீட்டுகளுக்காகக் கட்சி ஆரம்பிக்கவில்லைஎன்றார். மேலும் ஆதவ், “.தி.மு.. தொண்டர்கள் .வெ..வுக்கு வந்துவிட்டதால் எங்களுக்கு .தி.மு..வுடன் கூட்டணி என்ற பேச்சே எழவில்லைஎன்றார். இதற்குப் பதிலடியாக .தி.மு..வின் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரமாயிரம் கோடிகளில் பணம் கேட்டுப் புதிதாக ஆரம்பித்த கட்சி பேரம்பேசியது என்று போட்டு உடைத்தார்.

எது எதுவாயினும், தேர்தல் வேட்பாளர் மனுத்தாக்கல் திரும்பப் பெறும் நாள்வரை கூட்டணிகள், அதற்கான பேரங்கள் பேசப்படலாம். 41 பேர் மரணத்திற்கு இன்றுவரை தார்மீகப் பொறுப்பு ஏற்காத பிண அரசியல் நடத்தும் புதிய கட்சியுடன், பிற கட்சிகளுக்கு ஏன் இந்தக் கூட்டணி மோகம் என்றால், பதவி ஆசை வெட்கம் அறியாது என்பதே பதிலாகும். புதிய கட்சியின் நடிகர் தமிழ்நாடு சிறுபான்மை மக்களின் வாக்குகளைஇந்தியாகூட்டணிக்கு விழுவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு என்றால், நாம் அவரை அடையாளம் காண்போம். நமது வாக்கு ஒன்றிணைந்த வலிமையை மீண்டும் நிரூபிப்போம். பிண அரசியலை  வீட்டிற்குள்ளேயே வைத்திருப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
கடவுளின் கைகளால் வரையப்பட்ட வரலாறு

நவதுறவகத்தில் நுழைந்தது எம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. எம் பெயரைச் சொல்லி அழைத்த கடவுளின் பணிக்கு எம்மை முழுமையாக அர்ப்பணிக்க அளிக்கப்பட்ட கொடையாகும். இங்குதான் அவரின் முன்னிலையில் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினோம். பெரும் நிகழ்வுகளில் அல்ல; தினசரி வாழ்க்கையின் அமைதியான நிகழ்வுகளில் ஒவ்வொரு விடியலும் புதிய பாடங்களைக் கற்பிக்கிறது. தினசரி செபங்கள், வகுப்புகள், பன்முகத்திறன் வளர்ச்சிகள் மற்றும் சமூக வாழ்க்கை எமக்குக் கடவுளின் இதயத் துடிப்பைக் கேட்டு எம் இதயத்தை அவரைப் போல வடிவமைக்க உறுதுணையாக இருந்துள்ளன.

இந்த யூபிலி ஆண்டில் எமது சபையின் வரலாற்றின் அழகை நாங்கள் மேலும் தெளிவாக உணர்ந்தோம். நமது மூத்த அன்னையர்களின் தியாகம், எளிமையான வாழ்வு, உறுதியான இறைநம்பிக்கை, கடின உழைப்பு போன்ற வாழ்க்கைமுறை எம்முள் வியப்பையும், உற்சாகத்தையும் எழுப்புகின்றன. அவர்கள் நடந்த தடங்கள், காலத்தால் மங்கினாலும், நாங்கள் இன்று நடக்கும் பாதையை அடையாளப்படுத்துகின்றன. எமது பாதுகாவலரான புனித அலோசியஸ் கொன்சாகா, தூய்மையான இதயத்துடன் வாழவும் தன்னலமற்ற அன்புடன் சேவையாற்றவும்  எம்மை ஊக்குவிக்கிறார்.

பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்த சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்வது, விட்டுக்கொடுப்பது, மன்னிப்பது ஆகியவற்றை இந்தக் கொன்சாகா சபை எமக்குக் கற்பித்தது. எங்களின் உருவாக்கப் பொறுப்பாளர்கள் தங்கள் மென்மையான  குணத்தாலும் ஞானத்தாலும், வழிநடத்தலாலும் எங்களை வளர்த்தும், கடவுளின் சித்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் உதவினர்.

ஒவ்வோர் ஆன்மிகப் பயணமும், ஒவ்வொரு திருப்பலி அனுபவமும், ஒவ்வொரு சிந்தனையும் எம் உடலையும் ஆன்மாவையும் மெதுவாக, கடவுளின் பணிக்குத் தயாராகிய ஒரு பாத்திரமாக வடிவமைத்தன. ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோர் ஆகியோருக்குச் சேவை செய்வது எம் அழைப்பின் இதயத்துடிப்பாக மாறிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

எம் கொன்சாகா சபை இந்த 250-ஆம் ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் இந்த வேளையில், பல நூற்றாண்டுகளாக எரிந்துவரும் நம்பிக்கையின் தீப்பந்தத்தைத் தொடர்ந்து சுமக்க அழைக்கப்படுகிறோம் என்று ஆழமாக உணர்கிறோம். இந்த மகத்தான கதைப்பாகத்தின் சிறு பங்காக இருப்பதில் எமக்குப் பேரானந்தம். கடவுளின் கையால் எழுதப்பட்ட இந்த வரலாற்றில் எம் சிறு பங்களிப்பு. அவர்களின் பாரம்பரியம் எம் சுதந்திரம்; அவர்களின் தூய்மை  எம் ஊக்கம்; அவர்களின் பணியே எம் அழைப்பு!

இந்த யூபிலி ஆண்டில் நமது சபையின் சகோதரிகள் காட்டிய அதே திருப்பணித் தாகத்தை ஒவ்வோர் இதயத்திலும் மீண்டும் ஏற்றிடட்டும். நாமும், புதிய தலைமுறை சகோதரிகளும், புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் சபை நிறுவுநர் மிக்கேல் அன்சால்தோவின் கனவைத் தூய்மையுடனும் இரக்கத்துடனும் தைரியத்துடனும் வாழ்வாக்குவோம்.

ஆண்டவரே, உமது அன்பின் தாழ்மையான கருவியாக எம்மை மாற்ற அருள்தாரும்.

news
சிறப்புக்கட்டுரை
கொன்சாகாவின் தூய்மை நம்மை வழிநடத்தட்டும்!

ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை (சீராக் 11:4)

பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டின் யூபிலி விழாவைக் கொண்டாடும் இந்த மாபெரும் வேளையில், எம் கொன்சாகா பெருங்குடும்பத்தில் 50 ஆண்டுகளாக... அதாவது, அரை நூற்றாண்டுகளாக வாழக்கிடைத்த பேற்றினை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறுகிறேன்.

தாயின் கருவில் உருவாகும் முன்னரே முன்குறித்து, ‘அஞ்சாதே நான் என்றும் உன்னோடு இருப்பேன்என்று திடப்படுத்தி, ‘என் வல்லமையால் செயல்படுஎன்று கூறி, இன்றுவரை வாழவைத்த மாபெரும் கருணைக்கு இறைவா உமக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். இது ஒரு சாதாரண விழா அல்ல! இது நம் சபையின் புனித வரலாற்றைப் பெரும் மகிழ்ச்சியுடன், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தும் தருணமாகும். இந்த மாபெரும் யூபிலி நம் சபையின் நீண்ட நெடிய பயணத்தை நம் கண்முன் நிறுத்தி இறைவன்மீது கொண்ட மாறாத நம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, எளிமையான வாழ்வு, சேவை, அன்பு, தியாகம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் மாபெரும் வரலாறு ஆகும். கடந்த 250 ஆண்டுகளாகப் பல தலைமுறைகளை உருவாக்கி, பல சாதனைகளைப் படைத்து வெற்றி பாதையில் இன்று நாம் பயணிக்கிறோம். எம் முன்னோர் வாழ்வில் ஒளிர்ந்த இறைநம்பிக்கை, எனது வழியையும் ஒளிரச் செய்தது.

என்னுடைய பொன்விழா ஆண்டை இத்தனை பெருமைக்குரிய யூபிலியுடன் இணைத்து கொண்டாடுவதில், என் இதயம் நன்றியால் நிரம்புகிறது. இந்த ஐம்பது ஆண்டுகள் நான் அறிவு, ஆளுமை மற்றும் ஆன்மிகத்தில் வளரவும், சபை என்மீது முழு நம்பிக்கை வைத்து பல்வேறு பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தது. உண்மையுடனும் நேர்மையுடனும் உழைத்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக சான்று பகர்ந்து வாழ்ந்திட ஒவ்வொரு நாளும் ஓர் ஆசிர்வாதமாகவும், ஒவ்வொரு சவாலும் ஒரு கற்றல் அனுபவமாகவும் இருந்தது.

இன்று பின்னோக்கிப் பார்த்து, கடவுளின் கரங்களால் எழுதப்பட்ட இந்த அருள்மிகு பயணத்திற்காக நன்றி செலுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தை நோக்கிப் பார்த்து, நம்பிக்கை, அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றோடு தொடர்ந்து வாழ்ந்து சேவை செய்திடவும், இந்த 250-ஆம் ஆண்டு யூபிலி நம் அனைவரையும் நம் தந்தை அன்சால்தோவின் கனவைத் தொடர்ந்து நிறைவேற்ற ஓர் உந்துசக்தியாக அமையட்டும்நம் புனித தந்தை அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மை நம்மை வழிநடத்தட்டும்; கடவுளின் அருள் நம் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் வாழ்விலும் தொடர்ந்து பெருகட்டும்; இடம் மாறி வந்தாலும் இலட்சியங்கள் தடம்மாறிப் போவதில்லை. நம்மை அழைத்தவருக்கு நம்பிக்கையோடு இருந்தால், அவர் அருள் நம் வாழ்வை வழிநடத்தும்.

news
சிறப்புக்கட்டுரை
எண்ணிமத் (Digital) தொழில்நுட்ப உலகில் அச்சு இதழியலின் சவால்களும் சாத்தியங்களும்! (நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் சிறப்புக் கட்டுரை)

இன்றைய சூழலில், பொதுவாக ஊடகத்துறையின் செயல்பாடுகள் வியப்பூட்டுகின்றன. நமது கிறித்தவ அச்சு ஊடகவியலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கண்டு பெரிதும் பூரிப்படைகிறேன். அவர்களின் கூர்மையான எழுத்துகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் உண்மைக்கான அச்சமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கவை. உண்மை பெரும்பாலும் மறைக்கப்படும்- மறுக்கப்படும் காலத்தில், அவர்களின் சிறப்புக்குரிய பணிகள் நமது முன்னேற்றத்திற்கான பாதையை ஒளிரச் செய்கின்றன.

ஒரு பத்திரிகையாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும் நமது தேசப் பிதா மகாத்மா காந்தி, “ஒரு பத்திரிகையாளரின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் நாட்டின் அன்றாடச் சூழல்களைப் படித்து, உறுதியான மனத்துடன்திட்டவட்டமான அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்கக்கூடியதாக இருக்கவேண்டும்என்று கூறினார். இக்காலத்தில் அதன் கூடுதல் பொறுப்பு என்பது, உண்மையின் குரலை உருவகப்படுத்தவும், குரலற்றவர்களின் குரல்களைப் பதிவுசெய்யவும், தளராத நேர்மை மற்றும் துணிவுடன் மனசாட்சியை வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்ட இன்றைய கிறித்தவப் பத்திரிகையாளர்களில் ஆழமாக எதிரொலிக்கிறது. அவர்கள் அரசியல் அழுத்தங்களின் கொந்தளிப்பான நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்; தவறான புனைக்கதைகளை எதிர்க்க வேண்டும்; எதார்த்தத்தைச் சிதைக்க முயலும் மறைமுக நிகழ்வுகளுக்கும் செயல்திட்டங்களுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கவேண்டும்.

இந்திய அச்சு ஊடகத்துறை, எதிர்காலத்தின் முன்னோட்டமாக அதன் புனிதமான பணிக்கும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அதிகரித்துவரும் அச்சுறுத்துதலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் தன் இருத்தலை எண்பித்துக்கொண்டிருக்கிறது. நீதி மற்றும் உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம், சக்திவாய்ந்த அரசியல் தாக்கங்களின் அழுத்தம் மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றத்தை இது அன்றாடம் எதிர்கொள்கிறது. அச்சு ஊடகம் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்குமுன் ஒருபோதும் இவ்வளவு சிக்கலானதாகவும் பன்முனைத் தாக்குதல் கொண்டதாகவும் இருந்ததில்லை.

வளர்ந்து வரும் தளங்கள்

தொழில்நுட்பக் கண்டு பிடிப்புகளின் இடைவிடாத வேகத்தால் உந்தப்பட்டு, ஊடகத்துறை பெரும் அதிர்வுக்குரிய மாற்றத்திற்கு இன்று உட்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் செய்தி பரவலின் அடிநாதமாக, மூலைக் கல்லாக விளங்கிய அச்சு ஊடகம், இன்று தொழில்நுட்பச் சமூக ஊடகங்களின் உடனடித்தன்மையுடன் போராடுகிறது. டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஒரு காலத்தில் அச்சு ஊடகத்தின் தொட்டுணரக்கூடிய பக்கங்களுக்கு விருப்பம் கொண்டிருந்த வாசகர்களின் எண்ணங்களை இன்று ஆழமாக மறுவடிவமைத்துள்ளன. இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் ஊடக நுகர்வில் பெரும் அசாதாரண எழுச்சி ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, இளையோர் இனி காலைச் செய்தித்தாளுக்காகக் காத்திருக்காமல், ‘ஆன்லைன்செய்திகளின் வேகமான நீரோட்டத்தில் பயணிக்கிறார்கள். இந்தகைய எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க  முடியுமா? என்னும் அடிப்படைக் கேள்வியும் இங்கு எழுகிறது.

கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொண்டு, கால நீரோட்டத்துடன் தங்களைத் தகவமைத்துக்கொள்வதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும். திரு அவையின் நீடித்த பலம், அதன் சமூக ஒற்றுமையின் மரபில் உள்ளது. அதாவது, ஞானத்தைப் பகிர்ந்துகொள்வதிலும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதிலும் கற்றுக்கொள்வதிலும் உறுதி கொண்டிருக்கிறது. மேலும், நாம் இயேசுவின் சீடர்களாக, ‘உலகின் ஒளியாக (மத் 5:14) வாழ அழைக்கப்படுகிறோம். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் இறைவார்த்தையால் வழிநடத்தப்பட்டு, இந்தக் குழப்பமான காலங்களில் தெளிவுடனும் உன்னத நோக்கத்துடனும் பயணிக்க நாம் துணிவுடன் இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் எதார்த்தங்கள்

இந்தியாவில் பத்திரிகையின் நெறிமுறைகள் முன்பில்லாத வேகத்தில் தற்போது மாறி வருகின்றன; கிறித்தவப் பத்திரிகையாளர்களை வலிமையான சவால்களுடன் அவை எதிர்கொள்கின்றன.

கேள்விக்குள்ளாகும் பத்திரிகைச் சுதந்திரம்: நுட்பமான அழுத்தங்கள், வளர்ந்து வரும் ஊடகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளால் பத்திரிகைச் சுதந்திரத்தின் புனிதத் தன்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்கள், அவர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்  உண்மைக்குச் சான்று பகர்பவர்களிடையே அச்சத்தையும் நிலையற்றத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன.

பரபரப்பின் எழுச்சி: பரபரப்பான செய்தி, உண்மையற்றத் தரவுகளை (Fake News) வெளியிடுதல் மற்றும் புனையப்பட்ட கதைகள், உண்மையான அச்சுப் பத்திரிகையின் அளவிடப்பட்ட பரவலை விட, ஆபத்தான வேகத்தில் பரவுகின்றன. இந்தச் சிதைவு உண்மையான செய்தி வெளியிடுதலின் நம்பகத் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

வாசகர் எண்ணிக்கையில் மாற்றம்: எண்ணிமத் தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் AI-ஆல் இயக்கப்படும் செய்திகளின் ஆதிக்கம், விளிம்புநிலை மற்றும் படிப்பறிவற்றவர்களுக்குக் கூட அணுகக்கூடியது; இது அச்சு ஊடக வாசகர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது; இது பாரம்பரிய ஊடகங்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.

சிறுபான்மையினரின் அடையாளங்கள்: கிறித்தவச் சமூகங்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் அடிக்கடி சிதைந்த சித்தரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு ஆளாகின்றனர்; இது தவறான எண்ணத்தையும் உண்மைக்குப்  புறம்பான தகவல்களையும் தருகிறது.

கிறித்தவ வெளியீடுகளில் நிதி நெருக்கடி: சிறிய அளவிலான கிறித்தவ வெளியீடுகள், குறைந்துவரும் விளம்பர வருவாயுடன் போராடுகின்றன. மேலும்அவை வரையறுக்கப்பட்ட ஊழியர்கள், காலங்கடந்த பழைய  தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்புகளுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வெளிப்புற அழுத்தங்கள்: கிறித்தவப் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் அரசியல்-சமூக அழுத்தங்களால் தங்கள் நம்பிக்கை, சிறுபான்மை உரிமைகள் அல்லது சமூக நீதி பற்றிய செய்திகளை மென்மையாக்குவதற்கான வெளிப்படையான சவால்களையும் ஆளும் அரசியல் கட்சிகளால்-பெரும்பான்மையினரால் எதிர்கொள்கின்றனர்; இது நேர்மையுடன் அறிக்கையிடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்கிறது.

இத்தகைய  கடினமான எதிர்மறைச் சூழலில், கிறித்தவப் பத்திரிகையாளர்கள் அசைக்க முடியாத உண்மை, அச்சமற்ற நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அறிக்கையிடுவதற்கான புனிதமான கொள்கைகளைக்  கொண்டுள்ளனர். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியது போல, தவறான முன்னெண்ணம், வெறுப்பு ஆகியவற்றின் கட்டுகளிலிருந்து தகவல்தொடர்புகளை நாம் இன்று விடுவிக்கவேண்டும்; பிளவுபடுத்தும் சொல்லாட்சிகளைப் புறந்தள்ளுவதன் மூலம் இரக்கத்தில் வேரூன்றிய உரையாடலை நாம் வளர்க்க முடியும்; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகில் உண்மையின் கலங்கரை விளக்கங்களாகவும் நல்லிணக்கத்தின் முகவர்களாகவும் இருக்கவேண்டும்

அச்சுப் பத்திரிகையின் நீடித்த பலங்கள்

எண்ணிமத் தொழில்நுட்ப ஊடகங்களின் அதி மிக வளர்ச்சியால்  ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், அச்சு ஊடகம் அதன் தனித்துவமான, ஈடு செய்ய முடியாத தாக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. கவனமாக எழுதப் பட்ட, திருத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரையின் நம்பகத்தன்மை, ஒரு சமூக ஊடக இடுகை / ‘டுவீட்களின் விரைவான தன்னிச்சையான தன்மையைவிட மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை உலகம் அறிந்துகொள்ளவேண்டும். உறுதியான பதிவுகளாகப் பாதுகாக்கப்படும் செய் தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், வரலாற்றின் ஒரு பகுதியாக மாறி, எதிர்காலச் சந்ததியினருக்கு இன்றைய காலத்தின் உண்மையின் தரவுகளைப் பதிவு செய்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே, அச்சுப் பத்திரிகையின் மரபை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்போம். எண்ணிம உலகத்தில் சவால்கள் இருந்தபோதிலும், இந்த முக்கியமான ஊடகத்தைப் பாதுகாத்து, அதைப் பின்தொடர்பவர்களுக்கு நேர்மையுடன் என்றும் வழங்க நாம் முற்படுவோம்.

மொழியாக்கம்அருள்முனைவர் செ. இராஜசேகரன்

news
சிறப்புக்கட்டுரை
நெறி நிறைந்த வாழ்வை அளித்த கொன்சாகா

என் பெயர் ஜோதிமணி. நான் மதுரை மாவட்டம் சூரமங்கலம் இல்லத்தில் வளர்க்கப்பட்டேன். தற்போது பாத்திமா கல்லூரி, மதுரையில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.

நான் இந்தச் சபையின் வளர்ப்புப் பிள்ளைகள் சார்பாக நன்றி தெரிவிக்கவும், வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் இங்கு வந்திருக்கிறேன். இந்த அருமையான வாய்ப்பிற்காக எனது இதயப்பூர்வ நன்றி பல.

250-ஆம் ஆண்டுகளில் எமது கொன்சாகா சபை என்ன செய்தது? என்ன செய்து வருகின்றது? என்பதனை ஆவணங்களிலும் சாட்சிகளிலும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், 250 ஆண்டுகளுக்கு முன்பே எமது சபை நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்கள் கனவு கண்டஇறையாட்சி இலக்கு மக்களின் தோழமையில் மலரட்டும்என்ற நோக்கத்தை எம் சபை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான பணி - வளர்ப்புப் பிள்ளைகளை வளர்ப்பது.

நான் அவர்களால் வளர்க்கப்பட்ட வளர்ப்புப் பிள்ளை. எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்கப்படாத அரிய வரங்கள். அந்த அடிப்படையில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று கருதுகிறேன்.

கொன்சாகா சபையில் பல பள்ளிகள் இருந்தாலும், ‘அனுபவம் பல பெற வேண்டும்என்ற நோக்கில், சகோதரிகள் என்னைப் பிற சபைகள் நடத்தும் பள்ளிகளிலும், அதிகக் கட்டணமுள்ள கல்வி நிறுனங்களிலும் படிக்க வைத்தார்கள். இது எனக்கு வாழ்க்கையின் பல பரிமாணங்களில் விசாலமான பார்வையையும் புதிய அனுபவங்களையும் அளித்தன.

நான் கொன்சாகா சபையில் வளர்க்கப்பட்டவள் என்பதற்காகப் பெருமை பேசவில்லை. ஆனால், அன்பும் வாய்ப்பும் நம்பிக்கையும் அளித்த சபையைப் பற்றி உண்மையுடன் சாட்சி அளிக்கிறேன். பல துறவற சபைகள் அனாதைகள், விதவையர், கைவிடப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுகின்றன. ஆனால், கொன்சாகா சபை இந்தப் பணியை Heart of activity அதன் இதயப் பணியாகவே செய்து வருகிறது.

கொன்சாகா சபை இந்த 250 ஆண்டுகளில் தனதுதனிவரத்தைவாழ வைத்திருக்கிறதா எனில், ஆமாம் - நான், என்னைப் போன்ற வளர்ப்பு மகள்கள் அந்த வரத்தின் உயிருள்ள கனிகள். எங்களைக் குழந்தைப் பருவம் முதல் வளர்த்த எமது அருள்சகோதரிகள், தாயாகவும் அக்காவாகவும் தோழியாகவும் ஆசிரியையாகவும் பல நிலைகளில் எங்கள் வாழ்வில் பங்காற்றியுள்ளனர். கல்வியிலும் அன்பிலும் அறத்திலும் ஆன்மிகத்திலும் எங்களை உருவாக்கி நெறி நிறைந்த வாழ்வை அளித்துள்ளனர்.

எங்கள் திருமணம், குழந்தைகள், குடும்ப நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடிகள், நோய்கள், மன அழுத்தங்கள் எதிலும்நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்என்ற உறுதியை அளித்தவர்கள் எமது அன்னையர் - கொன்சாகா சகோதரிகள்.

எனவே, இந்த நேரத்தில் எமது சபைத் தலைவர்களுக்கும் மாநிலத் தலைவிகளுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் மேலும் அனைத்து அருள்சகோதரிகளுக்கும் வளர்ப்பு மகள்களின் சார்பாக இதயம் கனிந்த நன்றியும் யூபிலி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் எம் சபையின் கனவுகளை நிறைவேற்றி, அதன் பணியை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரும் ஆற்றலை அருள்வாராக!

எங்கள் அனைவரின் சார்பாக மீண்டும் ஒருமுறை, அன்பின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

திருமதி. ஜோதிமணி தானியேல், இயற்பியல்துறை பேராசிரியை, பாத்திமா கல்லூரி, மதுரை

news
சிறப்புக்கட்டுரை
‘காட்டில் ஊழியம் செய்யும்’ கொன்சாகா

அருள்தந்தையர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் எம் இதயப்பூர்வமான யூபிலி விழா வாழ்த்துகள்!

1977-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் நெல்லூர் மறைமாவட்டக் குருமடத்தில் இணைந்தேன். அந்த நாளிலிருந்து இன்றுவரை, கொன்சாகா சகோதரிகள் உண்மையாகவேகாட்டில் ஊழியம் செய்யும்சபையாகத் திகழ்ந்து வருகின்றனர் என்பதற்கு நான் முதல் சாட்சி.

அவர்கள் தங்கள் முதல் மிஷன் நிலையத்தை இராப்பூரில் தொடங்கினர் - அது ஒரு காட்டுப் பகுதியில் தொழுநோயாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பணி. அதிலிருந்து பொதலக்கூர், தக்கிளி, சி.எஸ்.புரம் போன்ற இடங்களிலும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அங்கிருந்து அவர்கள் விஜயவாடா, மங்கினபுடி, மோட்ட, குண்டூர், சின்னபுரி, மயிலவரம், மேலும் ஹைதராபாத் வரை தங்கள் சேவையை விரிவுபடுத்தினர். நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்ல - அதை வாழ்ந்து காட்டும் சகோதரிகள் இவர்கள். மொழி தெரியாமல் இருந்தாலும், அன்பும் அர்ப்பணிப்பும் என்ற சர்வமொழி வழியாக இயேசுவின் அன்பை வெளிப்படுத்தியவர்கள்.

அருள்பணி. விக்டர்தாஸ், நெல்லூர்

இதோ எங்களுடைய ஆயர் அவர்களின் மடல், சபைத் தலைவி சகோதரி தெரேசா ஞானமணி அவர்களுக்கு எழுதியதின் சுருக்கம்:

இந்த 250 ஆண்டுகள் யூபிலியை முன்னிட்டு, இது நன்றி செலுத்தும் நேரமாக இருக்கட்டும். கடந்த காலத்தின் ஆசிர்வாதங்களை நினைவுகூரவும், வருங்காலத்தின் நோக்கங்களைப் புதுப்பிக்கவும். உங்களில் இந்த நற்செயலைத் தொடங்கிய ஆண்டவர், உங்களுடைய சபையைப் புனிதம், ஒற்றுமை மற்றும் உண்மையான விசுவாசத்துடன் தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும்.

இராப்பூரில் முதல் மிஷன் நிலையத்தைத் தொடங்கிய தியாக மனப்பான்மைக்கும், நெல்லூர் மறைமாவட்டத்தில் காட்டிய தாராளப்பணிக்கும் நன்றி. தொழுநோயாளர்களின் மத்தியில் உருவாக்கிய வரவேற்கத்தக்க சூழ்நிலை, நெல்லூர் மறைமாவட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டியதாகும்.

சகோதரிகளே, உங்களை வாழ்த்துகிறேன், நன்றி கூறுகிறேன், பாராட்டுகிறேன். பரலோகத்தில் உங்கள் வெகுமதி பெரியதாக இருக்கும்.

மேலும், எங்களுடைய கோரிக்கையின் பேரில், சகோதரி அகஸ்டின் சகாயம் அவர்களை அனுப்பி, குழந்தை இயேசுவின் சகோதரிகளுக்கு (Sisters of Infant Jesus) உதவிய உங்களின் கருணையும் தாராளத்தையும் நினைவுகூர்கிறேன். அவர் சிறப்பாகச் சேவை செய்து வருகிறார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த 250-வது யூபிலி மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்காக எம் இதயப்பூர்வ வாழ்த்துகளும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் ஆசிர்வாதங்களும் உங்களுடன் இருக்கட்டும்.

மேதகு ஆயர் மோசஸ் டி. பிரகாசம்

மேதகு ஆண்டனிதாஸ் சி., துணை ஆயர், நெல்லூர் மறைமாவட்டம்